முன்னோக்கு

டானா ஆலையில் பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிராக சாமானிய தொழிலாளர்களின் போராட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வேலைநீக்கம் செய்யப்பட்ட டானா ஆலை தொழிலாளர்கள்.

பல நாடுகளுக்கும் உதிரிபாகங்கள் வினியோகிக்கும் அமெரிக்காவில் உள்ள உற்பத்தி நிறுவனமான டானா இன்க் தொழிற்சாலைகளில் செய்யப்பட்ட பாரிய வேலைநீக்கங்களுக்கு சாமானிய வாகனத்துறைத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பானது, தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி அடைந்துவரும் உலகளாவிய எதிர்த்தாக்குதலில் ஒரு முக்கிய அத்தியாயமாகும்.

கடந்த இரண்டு வாரங்களில், அமெரிக்காவில் உள்ள டானா உதிரிப்பாக உற்பத்தி ஆலைகளின் தொழிலாளர்கள், 19 ஆம் நூற்றாண்டை ஒத்த தொழிலாளர் நிலைமைகளுக்கு அவர்கள் உள்ளாக்கப்படுவதை அம்பலப்படுத்த உலக சோசலிச வலைத் தளத்தைப் பயன்படுத்தினர்.

பல ஆண்டுகளாக பணியாற்றி உள்ள கறைபடியாத முன்வரலாற்றை கொண்ட தொழிலாளர்கள் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டு, தசாப்தகளாக இல்லாத படுமோசமான வாழ்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் தங்களைத்தாங்களே காப்பாற்றிக் கொள்ள விடப்பட்டுள்ளனர். ஒப்பந்த மீறல்களுக்கு எதிராக பேசியதற்காகவும், பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளியிட்டதற்காகவும், இழந்த சம்பளங்களுக்காக போராடியதற்காகவும் மற்றும் அவர்களின் மேலதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதைத் தெரிவித்ததற்காகவும் அவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டு வருவதாகத் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த வேலைநீக்கங்கள் காரணமாக, பல தொழிலாளர்களினதும், அவர்களது குடும்பங்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. டானா இன்க் ஆலை அதன் தலைமை செயலதிகாரிக்கு ஆண்டுக்கு 14 மில்லியன் டொலர்களை வழங்குவதன் அதன் பணக்கார பங்குதாரர்களுக்கு 57 மில்லியன் டொலர்களை ஆண்டு பங்காதாயமாக வழங்கும் அதேவேளையில், வாகனத் தொழிலாளர்களோ அவர்களின் கார்கள் தம்மிடம் இருந்து பறிக்க்கப்படுவதாகவும், அவர்கள் வீடுகளை இழக்கும் ஆபத்தில் இருப்பதாகவும், அவர்களின் சிறு குழந்தைகள் டப்பாக்களில் அடைக்கப்பட்ட தானியங்களைச் சாப்பிட்டு வருவதாகவும், மருத்துவக் கவனிப்பு கூட இல்லாமல் விடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். முதலாளித்துவத்தின் கீழ் இது தான் வாழ்க்கையின் யதார்த்தமாக உள்ளது.

டசின் கணக்கான தொழிலாளர்கள் முன்னறிவிப்பின்றியும் எந்தவித நிஜமான ஒழுங்குகாற்று நடைமுறை இல்லாமலும் அல்லது குறைதீர்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படாமலும் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த நேரத்திற்கு வேலை வந்தோம் என்று எழுதித் தருமாறு மேற்பார்வையாளர்கள் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்துவது, பின்னர் 'நிறுவனத்தின் ஆவணங்களில் பொய் கூறியதாக' தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க அந்தக் கடிதத்தைப் பயன்படுத்துவது ஆகியவை உட்பட, அந்த நிறுவனம் அவர்களைத் தந்திரமாக வேலையில் இருந்து நீக்கி வருவதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள். இது கருத்துரைக்கவோ அல்லது தெளிவுபடுத்தவோ கோரிய பல கோரிக்கைகளுக்கு டானா பதிலளிக்கவில்லை.

டானா தொழிலாளர்களின் போராட்டத்தில் பல முக்கியமான பிரச்சினைகள் அம்பலமாகி உள்ளன.

முதலாவதாக, தொழிலாளர்கள் பலியாக்கப்படுவதும் அவர்கள் மீதான தீவிர சுரண்டலும் முதலாளித்துவ சந்தை மற்றும் ஆளும் வர்க்கத்தின் கோரிக்கைகளால் உந்தப்படுகின்றன. டானா என்பது உலகளவில் 100 தொழிற்சாலைகளைக் கொண்ட ஒரு நாடுகடந்த நிறுவனமாகும். உலகின் முக்கிய வாகனத்துறை நிறுவனங்கள் இதைக் கோருவதாலும், வாகனத்துறை நிறுவனங்கள் மீது வோல் ஸ்ட்ரீட் இதே கோரிக்கைகளை முன்வைப்பதாலும் அது சுரண்டலை அதிகரித்தே ஆக வேண்டும். டானா ஆலையும் மற்றும் அனைத்து பெருநிறுவனங்களும் முதலீட்டாளர் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளையில் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்புக்குத் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்ய முயன்று வருகின்றன.

உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் அதிகரிக்கப்படுவதானது, வெளிநாட்டில் போர் விரிவாக்கப்படுவதுடன் கைகோர்த்து செல்கிறது. அடிப்படை தேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்க பணம் இல்லை என்று டானா தொழிலாளர்களிடம் கூறப்படும் அதேவேளையில், பைடென் நிர்வாகமோ, இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு நிதியளிப்பதற்கும், சீனாவுக்கு எதிரான போருக்குத் தயாரிப்புகள் செய்வதற்கும் இராணுவத்திற்கு முன்னெப்போதும் இல்லாதளவில் 1 ட்ரில்லியன் டாலர்களைச் செலவிட முன்மொழிந்துள்ளது.

இரண்டாவதாக, ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்க (UAW) எந்திரம் தொழிலாள வர்க்கம் மீதான ஒரு பெருநிறுவன காவற்படை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை டானா ஆலையில் நிலவும் நிலைமைகள் அம்பலப்படுத்துகின்றன.

டானா தொழிலாளர்களை UAW ஆல் வெளித்தோற்றத்திற்குத் 'பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக' கூறினாலும், யதார்த்தத்தில் அது இந்த பெரும் வேலைநீக்கங்களில் உடந்தையாக உள்ளது. வேலை இழந்துள்ள சில தொழிலாளர்கள் மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறை UAW உறுப்பினர்களாவர். இவர்களின் தாத்தா-பாட்டி மற்றும் கொள்ளு தாத்தா-பாட்டி ஆகியோர் நிறுவனத்தின் குண்டர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு காவலர்களை எதிர்த்து UAW இனை கட்டியெழுப்பு முன்னணியில் நின்று போராடியவர்களாவர்.

வேலையிலிருந்து நீக்குவதற்காக போர்க்குணமிக்க தொழிலாளர்களை UAW அதிகாரிகள் சுட்டிக்காட்டி உதவுவதாக பல தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓஹியோவின் டொலெடோவில் உள்ள டானா ஆலையின் UAW அதிகாரிகள் ஒரு தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கொண்டாடியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். தங்களின் கவலைகளை UAW முன்னெடுக்கவில்லை என்றும், அவர்களின் வேலைகளைத் திரும்பப் பெறுவதில் உதவ அது அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் பெரும்பாலானவர்கள் கூறுகிறார்கள். இந்த 'பிரதிநிதித்துவப்படுத்தலுக்காக' தொழிலாளர்கள் தான் ஆண்டுக்கு சராசரியாக 800 டாலரை UAW இக்குச் சந்தாவாக செலுத்துகிறார்கள்.

ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்க அதிகாரத்துவம், அதன் தேர்தலை அதன் உறுப்பினர்களுக்கே முழுமையாக அறிவிக்காமல் ஒரு 'தேர்தலை' நடத்தியதன் மூலம் அதன் சட்டப்பூர்வத்தன்மைக்கு இப்போது முட்டுக்கொடுக்க முயன்று வருகிறது. இந்தச் சட்டப்பூர்வத்தன்மை பல ஆண்டுகால பெருநிறுவன ஆதரவு ஊழலில் அம்பலமாகி உள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில் நடந்த முதல் சுற்று தேர்தலில் சாமானியத் தொழிலாளரான சோசலிசவாதி வில் லெஹ்மன் போட்டியிட்ட போது டானா தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தது என்பதை தெரிந்த ஒரேயொரு டானா தொழிலாளரைக் காண்பதும் கூட சிரமமாக இருந்தது.

மூன்றாவதாக, விஷயங்களைத் தொழிலாளர்கள் தங்களின் சொந்தக் கைகளில் எடுத்து திருப்பிப் போராட தொடங்கி உள்ளனர் என்பதை டானா போராட்டம் எடுத்துக்காட்டுகிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் உதவியோடு சாமானியத் தொழிலாளர்கள் ஒரு சாமானியத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை உருவாக்கி இருக்கிறார்கள். இது வேலையில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் நியமிக்குமாறு கோரி வருகிறது. ஆனால் கூடுதல் துஷ்பிரயோகத்தை மட்டுமே முகங்கொடுப்பதற்காக தங்கள் வேலைகளுக்குத் திரும்ப விரும்பாத தொழிலாளர்கள், நிறுவனங்களில் வேலைக்கு கூடுதல் நியமனங்கள் செய்வது மற்றும் பணிநீக்கம் ஆகியவை உட்பட, வேலையிடங்களில் சாமானியத் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டையும் கோரி வருகிறார்கள்.

இவ்வளவு காலமாக அவர்களைப் புறக்கணித்துள்ள UAW அதிகாரத்துவவாதிகளுக்கு அவர்கள் முறையீடு செய்யவில்லை, மாறாக டானா ஆலைகளிலும் அதைக் கடந்தும் உள்ள அவர்களின் சக தொழிலாளர்களுக்கு அவர்கள் முறையீடுகள் செய்து வருகிறார்கள். வார இறுதியில், டானா தொழிலாளர்கள் அருகிலுள்ள ஸ்டெல்லண்டிஸ் டொலிடோ ஜீப் ஆலையில் ஒரு பலமான தலையீடு செய்து, அவர்களின் போராட்டத்திற்கு பரந்த ஆதரவை வென்றனர். இந்த செப்டம்பரில், ஸ்டெல்லண்டிஸ் ஆலை, ஜிஎம் மற்றும் ஃபோர்டு ஆலைகளின் 150,000 தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் முடிவடைகிறது. தற்போது, 5,000 கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் இலினொய்ஸில் ஓர் ஒப்பந்தம் மீது வாக்களித்து வருகின்றனர். இந்த கோடையில் அமெரிக்காவில் மட்டும் 350,000 UPS தொழிலாளர்கள் உட்பட பல தொழில்துறைகளிலும் உள்ள நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் முடிவடைகின்றன.  

இறுதியாக டானா ஆலை போராட்டம், அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அடிப்படை வர்க்கப் பிளவை வெளிப்படுத்துகிறது. டொலிடோவில் உள்ள டானா ஆலையில் பெரும்பாலான ஆப்பிரிக்க அமெரிக்கத் தொழிலாளர்களைப் பெரும் எண்ணிக்கையில் வேலைநீக்கம் செய்து முதல் அறிக்கை வெளியிடப்பட்டதும், பெரும்பான்மையினராக வெள்ளை இன தொழிலாளர்கள் உள்ள கென்டக்கி ட்ரை ரிட்ஜில் உள்ள டானா ஆலையின் தொழிலாளர்கள் அங்கும் அதே நிலைமைகள் இருப்பதைத் தெரிவித்து WSWS இற்கு எழுதினர்.

எழுச்சி பெற்று வரும் இந்த போராட்டமானது, வேலை வகைப்படுத்தல், பாலியல் நோக்குநிலை, பாலினம், இனம், கலாச்சார பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனமும் UAW உம் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தும் முயற்சிகளை மீறி அனைத்து வயது தொழிலாளர்களையும் அனைத்து தேசியம் மற்றும் வாழ்க்கைப் போக்குகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து வருகிறது. பலருடைய விஷயங்களில் வெள்ளை இனத் தொழிலாளர்கள் வெள்ளையின UAW நிர்வாகிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படாமல் வெள்ளை இன மனிதவளத்துறை பிரதிநிதிகளால் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதே யதார்த்தமாக உள்ளது. அதேயளவிலான எண்ணிக்கையில் கறுப்பின UAW அதிகாரிகள் கறுப்பினத் தொழிலாளர்களைத் தவறாக வேலைநீக்கம் செய்ய கறுப்பின மனிதவளத்துறை பிரதிநிதிகளுக்கு உதவி உள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் ஆதரவு டானா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தேவையாக உள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்டு சமீபத்திய நாட்களில் பல தொழிற்சாலைகளில் வினியோகிக்கப்பட்ட தொலைநோக்கு குழுவினுடைய அறிக்கையில், டானா ஆலையின் சாமானியத் தொழிலாளர்கள் நடவடிக்கை குழு அனைத்து பின்னணியைச் சேர்ந்த சாமானியத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் மற்றும் UAW அதிகாரத்துவத்தை ஒழிக்கவும், இந்தப் போராட்டத்தை டானாவைக் கடந்து அதற்கப்பால் விரிவாக்கும் அதன் நோக்கத்தைக் குறிப்பிட்டது. சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியின் (IWA-RFC) பாகமாக உள்ள இந்தக் குழு, சாமானியத் தொழிலாளர்களின் ஓர் உலகளாவிய வலையமைப்பாக 2021 இல் நிறுவப்பட்டது.

'தொழிலாளர் வர்க்கத்துடன் நம்முடைய தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும், வேலை மற்றும் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் பேச பயப்படுபவர்களுக்காக பேசுவதும்' மற்றும் 'நம்மை ஒடுக்கும் டானா நிர்வாகம் மற்றும் UAW இன் கரங்களில் இருந்து அதிகாரத்தைப் பறித்து, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதுமே' அதன் நோக்கம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தக் குழுவின் நோக்கங்கள் டானா தொழிற்சாலைகளின் சுவர்களையும் அல்லது வாகனத்துறை ஆலைகளின் வேலையிடங்களையும் கடந்து செல்கின்றன. “ஒட்டுமொத்தமாக சமூகத்திலும் வேலையிடங்களிலும் சமத்துவம் என்ற மிகப்பெரும் நோக்கத்தை நோக்கி போராடுவதே' அதன் நோக்கம் என்பதை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “இது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கான ஓர் இயக்கமாகும்.”

இது வெறுமனே நம்பிக்கை குறித்த ஒன்றல்ல, இது அவசியமான மூலோபாயமாக உள்ளது. கிரேக்கம், பிரான்ஸ், இலங்கை, பிரிட்டன் மற்றும் உலகெங்கிலும் டசின் கணக்கான நாடுகளில், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போரால் பெருமளவில் உயர்ந்துள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்புகள் மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கு எதிராக வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் எழுந்து வருகின்றன.

அமெரிக்கா உலக ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் மையமாக உள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம் உலக மேலாதிக்க சக்தியாக அதன் அந்தஸ்து சரிந்து வருவதைத் தடுக்க அது பொறுப்பின்றி முயன்று வரும் வேளையில், தற்போது அது ரஷ்யா மற்றும் சீனா இரண்டுக்கும் எதிராக உலகை அணுஆயுத போரின் விளிம்பிற்குத் தள்ளுகிறது. உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் போர்க்களத்தில் அமெரிக்க தொழிலாள வர்க்கம் நுழைவது, உலகின் ஒவ்வொரு மூலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அளவில்லா பலத்தை வழங்கும்.

டானா ஆலையின் சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுவை உலக சோசலிச வலைத் தளம் முழுமையாக ஆதரிக்கிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அதன் ஸ்தாபக அறிக்கையைப் பகிர்ந்து கொள்ளுமாறும், முடிந்தவரை பரந்தளவில் டானா போராட்டத்தைத் அனைவருக்கும் தெரியப்படுத்துமாறும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Loading