முன்னோக்கு

நேட்டோ உக்ரேனில் பெரும் மோதலுக்கு திட்டமிடுகையில், ரஷ்யா அமெரிக்காவின் ட்ரோனை வீழ்த்தியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

14ம் திகதி செவ்வாய்கிழமை அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து 6,000 மைல்கள் தொலைவில் ஓர் அமெரிக்க MQ-9 ரீப்பர் ரக இராணுவ ட்ரோன் விமானம் இரண்டு ரஷ்ய போர் விமானங்களால் தாக்கப்பட்டபோது ரஷ்ய கடற்கரைக்கு அருகில் விழுந்து நொறுங்கியது.

அமெரிக்க தரப்பில் கூறப்படுவதைப் போல, அமெரிக்க விமானம் மீது ரஷ்ய ஜெட் விமானம் தாக்கியிருந்தாலும் சரி, அல்லது ரஷ்ய தரப்பில் கூறப்படுவது போல, பின்வாங்க நிர்பந்திக்கப்பட்ட பின்னர் விபத்திற்கு உள்ளாகி இருந்தாலும் சரி, பனிப்போர் முடிந்ததற்குப் பின்னர் ரஷ்ய விமானப்படை அமெரிக்க விமானம் ஒன்றை தகர்ப்பது இதுவே முதல்முறையாகும்.

MQ-9 ரீப்பர் ட்ரோன் [credit: US Air Force]  [Photo: US Air Force]

எவ்வாறிருப்பினும் இந்த விபத்து, மிகதீவிரமடைவதும், உலகளாவியளவில் விரிவடைந்து வரும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுழற்சியாக அதிகரித்து வரும் போரில் மற்றொரு மைல்கல்லாக அமைகிறது.

பென்டகன் அதன் பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தச் சம்பவம் குறித்து எந்த அர்த்தமுள்ள விபரமும் வழங்கவில்லை. அந்த ட்ரோன் எங்கே இருந்தது, ரஷ்ய வான் எல்லைக்கு அருகில் அது என்ன செய்து கொண்டிருந்தது, அதில் ஆயுதங்கள் இருந்தனவா, அல்லது 'உளவுபார்ப்பு'க்கு அப்பாற்பட்டு அது என்ன வகையான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது என்பதை பென்டகன் விளக்க மறுத்துவிட்டது.

அந்த ட்ரோன் அதன் சமிக்ஞை அனுப்பும் சாதனத்தின் (transponder) செயல்பாட்டை நிறுத்தி விட்டு, ரஷ்ய வான் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்ததாக ரஷ்யா கூறும் வாதங்களை பென்டகன் மறுக்கவில்லை.

ஓர் அமெரிக்க அதிகாரி நியூ யோர்க் டைம்ஸிடம் கூறுகையில், அந்த விமானம் கிரிமியாவின் தென்மேற்கே 75 மைல்கள் தொலைவில் பறந்து கொண்டிருந்ததாகவும், இது ரஷ்ய நிலப்பரப்பில் இருந்து 100-150 மைல்கள் தொலைவில் இருக்கலாம் என்றும் தெரிவித்தார். 

உக்ரேனிய ஆயுதப்படைகள் அமெரிக்க இராணுவத்தின் நிதியுதவி மற்றும் ஆயுதங்களைப் பெறுகின்றன என்பது மட்டுமல்ல, மாறாக அது அமெரிக்க இராணுவத்தால் வழிநடத்தப்படுகிறது என்கின்ற நிலையில், கருங்கடல் மற்றும் நேட்டோ வான் எல்லை மீதான அமெரிக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் உக்ரேனிய ஆயுதப்படைகளின் செயல்பாடுகளுக்கான ஒரு முக்கிய அங்கமாக உள்ளன.

உக்ரேனிய இராணுவம் ஏவிய ஏறக்குறைய அனைத்து நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களும் அமெரிக்காவால்  வழங்கப்பட்ட இலக்குகளாக இருந்தன என்று பெப்ரவரியில் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.

ஒரு நேட்டோ உளவு விமானத்தில் உக்ரேனிய எல்லைக்கு அருகே பயணித்திருந்த கனேடிய ஒளிபரப்பு நிறுவனத்தின் நிருபர் டேவிட் காமன் அக்டோபர் மாதம் குறிப்பிடுகையில், நேட்டோ 'கூட்டு நாடுகள் இந்த உளவுத்தகவல்களை உடனுக்குடன் உக்ரேனியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். “உக்ரேனிய ஜெட் விமானங்களும் ஏவுகணைகளும் தாக்கிய பின்னர் ரஷ்ய ராடார் சமிக்ஞைகள் மறைந்து விடுவதைப் பார்த்து [அந்த விமானி] தகவல் அளிப்பதாகவும்' அவர் கூறினார்.

இந்த யதார்த்தம் 'உக்ரேனிய மோதலில் நேட்டோ எவ்வாறு ஈடுபட்டுள்ளது என்பதைப் பற்றிய உணர்வை உங்களுக்குத் தரும்' என்றவர் முடித்தார்.

பென்டகன் செய்தித் தொடர்பாளர்கள் கிட்டத்தட்ட அபத்தமான உளறல்களோடு இந்த செவ்வாய்கிழமை விபத்தைக் குறித்து பதிலளித்தனர். அந்த விபத்து ரஷ்ய போர்விமான குழுவினரின் தரப்பில் இருந்த 'சிறுபிள்ளைத்தனமான”, “பாதுகாப்பற்ற”, “தொழில்முறையற்ற' நடவடிக்கை என்றவர்கள் தெரிவித்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடக்கும் இந்த மிகப் பெரிய போரில் போர் துருப்புக்களுக்கு வழக்கமாக இலக்குகளைக் குறித்த தகவல் வழங்குவது போல, இந்த விமானப்பயணமும் 'வழமையானதாக' இருந்தது.

இத்தகைய அறிக்கைகள் எதையும் விளக்குவதாக இல்லை. ராண்ட் கார்ப்பரேஷன் அமைப்பின் அரசியல் விஞ்ஞானி சாமுவேல் சாரப் விளக்கியது போல், 'மாஸ்கோவுக்கு குறிப்பிட்ட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் MQ-9 செயல்பட்டு கொண்டிருந்திருக்கும் என்று என்னால் கூற முடியும்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'அவர்கள்  செய்ததற்கு ரஷ்யர்களுக்கு அதற்கான ஒரு தெளிவான இராணுவக் காரணம் இருந்திருக்கும். இது ஏதோ கண்மூடித்தனமான அதிரடி நடவடிக்கை அல்ல. ரஷ்ய விமானிகள் தாமாகவே முடிவெடுக்காது, தரைக் கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தைப் புரிந்து கொள்ள, அதன் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

உக்ரேனும் அதன் நட்பு நாடுகளும் 'ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரேனை விடுவிக்க தாக்குதலில் இறங்குவார்கள்' என்று அமெரிக்க படைகளின் தலைமை தளபதி மார்க் மில்லி ஜனவரி 20 இல் உறுதியளித்தார். இந்த கடுமையான பிரகடனம், ரஷ்யாவின் இராணுவத் தோல்விக்கு நேட்டோவையும், அமெரிக்காவையும் முழுமையாக நம்பலாம் என்று உறுதியளித்தது.

ஆனால் பாரியளவில் நிதி வழங்குவதற்கான பொறுப்புறுதிகளும், ஏற்கனவே அனுப்பப்பட்டு இருந்த இராணுவத் தளவாடங்களும் இருந்தும் கூட, இந்த மோதலில் அமெரிக்க தலையீட்டை மிகப் பெரியளவில் விரிவாக்காமல் இந்த நோக்கத்தை அடைவது சாத்தியமில்லை என்பது இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர் தெளிவானது.

திங்கட்கிழமை அந்த ஜெட் விமானத்தால் வீழ்த்தப்படுவதற்கு முந்தைய நாள், வாஷிங்டன் போஸ்ட் இன்று வரையிலான அந்த மோதலைப் பற்றிய மிகவும் அவநம்பிக்கையான அதன் மதிப்பீட்டை வெளியிட்டது.

'உக்ரேனில் திறமையான துருப்புக்களினதும், வெடிமருந்துகளின் பற்றாக்குறையால், இழப்புகளும் அவநம்பிக்கையும் அதிகரிக்கின்றன' என்று அந்தக் கட்டுரைக்குத் தலைப்பிடப்பட்டு இருந்தது. “ஒரு காலத்தில் ரஷ்யாவை விட கணிசமாக மேலானதாக கருதப்பட்ட உக்ரேனின் இராணுவப் படையின் தரம், ஓராண்டு உயிர்பலிகளால் தரம் தாழ்ந்துள்ளது. அதில் மிகவும் அனுபவம் வாய்ந்த இராணுவத்தினர் போர்க்களத்தில் இருந்து அகற்றப்பட்டு விட்டனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசந்தகால தாக்குதலை நடத்த கியேவ் தயாராக உள்ளதா என்று உக்ரேனிய அதிகாரிகளே கேள்வி எழுப்ப இட்டுச் சென்றுள்ளது.” 

'கடந்தாண்டு தொடக்கத்தில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ஏறக்குறைய 120,000 உக்ரேனிய படையினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்,' என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

உக்ரேனியப் படைகள் 'பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணை குண்டுகள் உட்பட அடிப்படை வெடிகுண்டுகள் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக களத்தில் உள்ள இராணுவச் சிப்பாய்கள் கூறுகின்றனர்.” போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டியளித்த உக்ரேனிய தளபதி ஒருவர், 'போர் அனுபவமுள்ள சில வீரர்கள்' 'அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர்' என்று கூறினார்.

அந்தத் தளபதி தொடர்ந்து கூறுகையில், 'ஓர் அதிசயத்தில் எப்போதும் நம்பிக்கை உள்ளது,' என்றதுடன், அது 'ஒரு படுகொலையாக மற்றும் சடலங்களாக' இருக்கலாம். ஆனால் 'எப்படி பார்த்தாலும் ஓர் எதிர்தாக்குதல் இருக்கும்' என்றார். அவர் படைப்பிரிவின் கையிருப்பு விபரங்களை விளக்கினார்: 'சுமார் 500 படையினரில், சுமார் 100 பேர் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர் மற்றும் 400 பேர் காயமடைந்தனர். இது முற்றுமுழுதான மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது” என்றார்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளைப் பொறுத்த வரை, ரஷ்யாவுடனான மோதலில் உக்ரேனியர்கள் பீரங்கித் தீவனம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் உக்ரேனில் அமெரிக்கா பிரமாண்டமாக இராணுவ முதலீடுகளைச் செய்திருந்தாலும் கூட, போரில் பெரும் இறப்பு எண்ணிக்கை 'முதல் உலகப் போர் மட்டங்களை' அணுகி வருவதாக பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலெஸ் கூறியவாறு, போரில் பலியானர்களின் தற்போதைய எண்ணிக்கை அளவு பலத்தின் சமநிலையை ரஷ்யா பக்கம் மாற்றி வருகிறது. ரஷ்யாவின் மக்கள்தொகை உக்ரேனிய மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

பென்டகன் ஆவணங்களின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் உள்விவகார ஆவணங்களின் தகவல்படி, வியட்நாமில் ஒரு 'அவமானகரமான தோல்வியை' தவிர்ப்பதே அங்கே அமெரிக்க தலையீட்டுக்கான முக்கிய காரணமாக இருந்தது. இந்தப் போரில் அது அதன் தலையீட்டைப் பாரியளவில் விரிவாக்கவில்லை என்றால், அதுபோன்றவொரு சாத்தியக்கூறையே அமெரிக்கா இங்கும் முகங்கொடுக்கிறது.

அத்தகைய ஒரு விரிவாக்கத்திற்குத் தான் தீவிரமாக தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த ட்ரோன் வீழ்த்தப்பட்டதாக செவ்வாய்கிழமை பென்டகன் அறிவித்து ஒருசில மணி நேரங்களில், அமெரிக்க அரசியல் கட்சிகள் இரண்டினது செனட்டர்கள் குழு ஒன்று உக்ரேனுக்கு F-16 போர் விமானங்களை அனுப்பத் தயாராகுமாறு பென்டகனுக்கு அழைப்பு விடுத்ததாக Politico பத்திரிகை அறிவித்தது.

'நாம் இப்போது இந்த மோதலின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்' என்று அறிவித்த அந்த செனட்டர்கள், 'உக்ரேனுக்கு F-16 விமானங்களை வழங்குவது குறித்து ஒரு உறுதியான முடிவெடுக்க' பென்டகனுக்கு அழைப்பு விடுத்தனர்.

இறுதியில் நேட்டோ துருப்புக்களை நேரடியாக போர் களத்திற்கு அனுப்பாமல் இந்த மோதலில் அமெரிக்காவின் இலக்குகளை அடைவது சாத்தியமில்லை.

ஆனால் அத்தகைய நடவடிக்கைக்கு முற்றிலும் மக்கள் ஆதரவு இல்லாததால், தலையீட்டுக்கு அவசியமான பொதுமக்கள் ஆதரவைத் திரட்ட ஏதாவது பெரிய சம்பவம் நடக்கும்.

அந்த அமெரிக்க கண்காணிப்பு ட்ரோன் என்ன நோக்கத்துடன் பறந்திருந்தாலும், சந்தேகத்திற்கு இடமின்றி இந்த மோதலில் வாஷிங்டனின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுடன் அது சம்பந்தப்பட்டிருந்தது. இது இதுவரை சிந்திய மொத்த இரத்தமும் வெறும் முதற்கட்டமே என்பதாக்க அச்சுறுத்துகிறது.

ஏற்கனவே முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அந்த மக்களுக்கு இத்தகைய பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் போர், வேகமாக கட்டுப்பாட்டை மீறிச் சுழன்று வருகிறது. அது நிறுத்தப்பட வேண்டும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களை நோக்கி நோக்குநிலை கொண்ட, போருக்கு எதிரான ஒரு பாரிய சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசர தேவையாகி உள்ளது.

Loading