அமெரிக்கா-இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம்: சீனாவுக்கு எதிரான போருக்கு  தயாரிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய பிரதம மந்திரிகளான ரிஷி சுனக் மற்றும் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் நேற்று சான்டியாகோவில் கூடி அவர்களது இராணுவவாத AUKUS உடன்படிக்கையின் அடுத்த கட்டத்தை அறிவித்தனர். அமெரிக்க இராணுவத் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பிரிட்டிஷ் வடிவமைத்த அஸ்டூட் கடற்படையை கட்டுவதற்கு முன்பு அமெரிக்காவிடமிருந்து அணுசக்தியால் இயங்கும் வேர்ஜீனியா-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்கும். 

பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக், மார்ச் 13, 2023 அன்று அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள பாயிண்ட் லோமா கடற்படை தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரை சந்திக்கிறார். [AP Photo/Stefan Rousseau]

இந்த அறிவிப்பு ஏறக்குறைய முழுக்க முழுக்க சாதாரணமானதாக இயற்றப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் மூன்று நாடுகளுக்கு இடையிலான 'நட்பை' பற்றியது என்று இத் தலைவர்கள் கூறினர். இந்த ஒப்பந்தம் 'ஜனநாயகம் எப்படி...பாதுகாப்பு மற்றும் செழிப்பை வழங்க முடியும் என்பதை காட்டுகிறது, அது நமக்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்கும்' என்று பைடன் அறிவித்தார்.

தீங்கற்ற மற்றும் நன்மை பயக்கும் குடிமக்களுக்கான உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப நாடுகள் ஒன்றிணைவது போல் கருத்துக்கள் ஒலித்தன. ஆனால் பைடென், சுனக் மற்றும் அல்பானீஸ் ஆகியோர் பொதுப் பள்ளிகள் அல்லது மருத்துவமனைகளைக் கட்டும் திட்டத்தைப் பற்றி விவாதிக்கவில்லை. உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல் ஆயுத அமைப்புகளில் ஒன்றான அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். 

வழக்கமாக இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் போலல்லாமல், இவை எரிபொருள் நிரப்பாமலே அதிக தூரம் பயணிக்க கூடியவை. இவை வேகமானவை, அமைதியானவை மற்றும் எதிரி படைகளைத் தவிர்க்கும் திறன் கொண்டவை ஆகும்.

நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தோ-பசிபிக் முழுவதும் தொடர்ந்து பரவி அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவை. அறிவிப்பு வெளியான சில நாட்களில், விவரங்கள் கசிந்தன. ஆஸ்திரேலிய பத்திரிகைகள், நாடு இனி ஒரு 'நடுத்தர சக்தியாக' இருக்காது என்று முன்கூட்டியே கொண்டாடின. கடந்த வாரம் சிட்னி மார்னிங் ஹெரால்டில் ஒரு இராணுவ வர்ணனையாளர், ”தங்கள் கடலோரங்களுக்கு அப்பால்” தமது 'சக்தியை எடுத்துக்காட்ட” முயலும் நாடுகள் மட்டுமே அத்தகைய கையகப்படுத்துதலை மேற்கொள்கின்றன என்று எழுதினார்.

அதே வர்ணனையாளர் குறிப்பிட்டார்: 'அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்படையை தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் வரை சென்றடைய அனுமதிக்கும். நாம் ஏன் அதை செய்ய வேண்டும்? அல்பானீஸ் அதை மிகவும் வெளிப்படையாகக் சொல்ல மாட்டார், ஆனால் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியான -சீனாவுடன் ஒரு சாத்தியமான போரில் அவர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்குதான் அதற்கு அடிப்படைக் காரணமாகும்.’’

அல்பானீஸ் அதைச் சொல்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் அதை சுனக் திறம்படச் செய்தார். ஆஸ்திரேலிய பிரதம மந்திரியை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சுனக் சீனா 'அடிப்படையில் நம்மிடமிருந்து வேறுபட்ட மதிப்புகளைக் கொண்டுள்ளது' என்றும் 'உள்நாட்டில் அதிகரித்து வரும் சர்வாதிகாரமாகவும் மற்றும் வெளிநாட்டில் பிடிவாதமாகவும் உள்ளது' என்றும் அறிவித்தார்.

சீனா 'உலக ஒழுங்கை மறுவடிவமைப்பதில் ஆர்வமாக உள்ளது, அதுவே அதன் முக்கிய அம்சம்' என்று சுனக் கூறினார். பதிலுக்கு, பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் 'நாடுகளுக்கு இடையே போட்டி மிகவும் தீவிரமடைந்து வருவதன்' காரணமாக 'எங்கள் தளத்தில் உறுதியாக நிற்கத் தயாராக' இருக்கின்றன. வரவிருக்கும் மோதல்  'நமது தேசிய பாதுகாப்புகள் பொருளாதாரப் பாதுகாப்பு முதல் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள் மற்றும் உளவுத்துறை நிபுணத்துவம் வரை' விரிவடைந்து 'சகாப்தத்தை வரையறுப்பதாக இருக்கும்' என்று மேலும் அவர் கூறினார்.

எளிமையான மொழியில் கூறுவதானால் சுனக் உலகப் போருக்கான திட்டங்களை விவரித்தார், அது தற்போதுள்ள 'உலக ஒழுங்கை', அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின் பூகோள  மேலாதிக்கத்தை பாதுகாப்பதை இலக்காகக் கொண்டது. அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த சரிவின் மத்தியில், சீனாவின் பொருளாதார எழுச்சி மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய துறைகளில் அதன் அதிகரித்து வரும் முக்கிய பாத்திரம் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தலாக வாஷிங்டன் மூலோபாயவாதிகளால் பார்க்கப்படுகிறது.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான பினாமி போர், பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் தூண்டப்பட்டு, தயார்படுத்தப்பட்டு, தீவிரப்படுத்தப்பட்டது, அது சீனாவுடனான மோதலுக்கு இன்றியமையாத முன்னோடியாக அத்தகைய மூலோபாயவாதிகளால் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் மீது ஒரு பெரிய இராணுவத் தோல்வியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும், இது சீனாவுடன் இன்னும் ஒரு பெரிய போருக்கான களத்தை நன்றாக தயார் செய்வதாக இருக்கும். இது மூலோபாய ரீதியாக முக்கியமான யூரேசிய நிலப்பரப்பு மற்றும் அதன் பரந்த இயற்கை மற்றும் மனித வளங்களின் மீது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டது.

ஐரோப்பாவில், இது நேட்டோ மற்றும் பிற அமெரிக்க தலைமையிலான கூட்டணிகளின் விரைவான விரிவாக்கத்தை உள்ளடக்கியது. இந்தோ-பசிபிக் பகுதியில், AUKUS என்பது வாஷிங்டன் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட அதன் கூட்டாளிகளால் உருவாக்கப்பட்ட முன் தாக்குதல் நடத்தும் இராணுவ ஒப்பந்தங்களின் வலையின் மையப் பகுதியாகும். இது செப்டம்பர் 2021 இல் வெளியிடப்பட்டது, இது முன்னர் ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டிஷ் பாராளுமன்றங்களில் அல்லது அமெரிக்க காங்கிரஸில் கூட பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை, அதன் வெளிப்படையான நோக்கம் மோதலுக்கு தயாராகும் வகையில் இந்தோ-பசிபிக் பகுதியை இராணுவ மயமாக்குவதாகும்.

இந்த முன்னோக்கு, அறிவிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திலேயே பிரதிபலித்தது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் மிகப்பெரிய இராணுவ மற்றும் கடற்படை தளங்கள் அமைந்துள்ளதால் சான் டியாகோ தேர்ந்தெடுக்கப்பட்டது. 32வது தெரு கப்பல் படைத் தளம் அல்லது சான் டியாகோ கப்பல் படை தளம் என்பது அமெரிக்க கடற்படையின் பசிபிக் கடற்படையின் தாயக துறைமுகமாகும், அதேவேளை பென்லெட்டன் முகாம் இராணுவ தளம் முதலாவது கடல்படை பிரிவை உபசரிக்கிறது.

ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியா மூன்று முதல் ஐந்து அமெரிக்க வர்ஜீனியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதாக உள்ளது. அவை 2030 களின் முற்பகுதியில் நாட்டை வந்தடையும். பின்னர் அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில், பிரிட்டிஷ் அஸ்டூட்-கிளாஸ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பின் கட்டுமானம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கும். அவை அமெரிக்க இராணுவ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய இராணுவ வளர்ச்சியின் முன் கண்டிராத  ஒருங்கிணைப்புக்கான வாய்ப்பாக புதிய புத்திக்கூர்மையான  கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன. பைடெனுக்கு பக்கமாக நின்றபடி அல்பானீஸ், 'அமெரிக்கா தனது அணு உந்து தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொண்டது என்பது  65 ஆண்டுகளில் முதல் தடவையாக நிகழ்ந்திருக்கிறது மற்றும் வரலாற்றில் இரண்டாவது தடவையாகும், அதற்காக நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம்' என்று கூறினார்.

இந்த அறிவிப்பு மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா  இராணுவவாத ஊடகங்களின் பேரானந்தமான பதில் ஆகியவற்றில் ஒரு வெளிப்படையான முரண்பாடு உள்ளது. உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் சீனாவுடன் ஒரு போர் பல தசாப்தங்களில் அல்ல என்றும் ஆனால் சில வருடங்களில் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க விமானப்படை ஜெனரல் மைக்கேல் மினிஹான், 2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா சீனாவுடன் போரில் ஈடுபடும் என்று கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில், தற்போதுள்ள டீசலில் இயங்கும் காலின்ஸ்-கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களின் பழங்காலத் தன்மையிலிருந்து எழுகின்ற 'திறன் இடைவெளி' பற்றிய எச்சரிக்கைகள் உள்ளன. ஆனால் தொழிற்கட்சி அரசாங்கம் அணுசக்தி துணைக்காக காத்திருக்கும் வேளையில் காலின்ஸ் கடற்படைக்கு ஒரு புதுப்பிப்பை வழங்கும் முந்தைய பரிந்துரைகளில் இருந்து பின்வாங்கியதாகத் தெரிகிறது.

அப்போது எந்த விஷயங்களாக இருந்தாலும் சரி, போர் உடனடியாக வெடிக்கும் தன்மை  அல்லது ஆஸ்திரேலியாவின் 'திறன் இடைவெளி' ஆகியவை இந்த அறிவிப்பால் தீர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அமெரிக்க அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தளமாக ஆஸ்திரேலியா மிக விரைவாக மாற்றமடையும், இது அமெரிக்க இராணுவத்திற்கான பிரமாண்டமான விமானம் தாங்கி கப்பலாக நாட்டின் மாற்றத்தை நிறைவு செய்யும் என்பதே உண்மையான தீர்வு. அதே சமயம்  மேலும் மேலும் நெருக்கடி நிறைந்த அமெரிக்க இராணுவ உற்பத்தித் தளத்திற்கு மானியம் வழங்கும்படி ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ அறிவிப்பின் கீழ், நான்கு வரைக்குமான அமெரிக்க அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு பிரிட்டிஷ் கப்பல்  2027 இல் ஆஸ்திரேலியாவிற்கு 'சுழற்சி வரிசைப்படுத்தல்களை' தொடங்கும். ஆனால் மூர்டோக்கிற்கு சொந்தமான ஆஸ்திரேலிய செய்தித்தாள் மிகக் குறைவான உண்மையான காலவரிசையைக் குறிப்பிட்டுள்ளது.

'பல கட்டத் திட்டம் இந்த ஆண்டு தொடங்குகிறது, மேலும் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தருகிறது' என்று அது கூறியுள்ளது. இது எதிர்கால ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் பணியாளர்களுக்கு 'பயிற்சி' செய்வதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இது அமெரிக்க நீர்மூழ்கி கடற்படைக்கு பயனுள்ள ஆஸ்திரேலிய தளத்தை வழங்குகிறது, இதை அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்கள் செயல்படுத்த விரும்பின.  

அவ்வாறான தளம் அமைத்தல், ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்க இராணுவ பொக்கிஷங்களை பரந்த அளவில் நிலைநிறுத்துவதற்கான ஒரு அம்சத்தை மட்டுமே உருவாக்கும். கடந்த ஆண்டின் பிற்பகுதியில், அல்பானிஸ் அரசாங்கம் அமெரிக்காவின் அணுசக்தி திறன் கொண்ட B-52 குண்டுவீச்சு விமானங்களை வடக்கு ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்த இரகசியமாக அனுமதித்தது தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பரில் நடந்த ஆஸ்திரேலியா-அமெரிக்கா அமைச்சர்களின் ஆலோசனையின் போது, தொழிலாளர் அரசாங்கம் 'ஆஸ்திரேலியாவில், காற்று, நிலம் மற்றும் கடல்சார் களங்கள் முழுவதும் அமெரிக்க திறன்களின் சுழற்சிமுறை இருப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டது. இதில் அமெரிக்க குண்டு போடும் பணியை நிறைவேற்றும் படையின் சுழற்சிகள், போர் விமானங்கள் மற்றும் அமெரிக்க கடற்படை மற்றும் அமெரிக்க ராணுவ படை திறன்களின் எதிர்கால சுழற்சிகள் ஆகியவை உள்ளடங்கும். அதாவது, இது ஒவ்வொரு இராணுவப் பகுதியிலும் உள்ளது. 

அமெரிக்காவுடன் இணைந்த சிந்தனைக் கூடங்களில் தாக்கும் சக்தி உட்பட அமெரிக்க பொக்கிஷங்களின் இந்த மறு குவிப்பு போருக்கான அவசரத்தினால் தூண்டப்பட்டது என்று வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது. கடுமையான கருவிகள் மற்றும் பணியாளர்கள் ஆஸ்திரேலியாவிற்கு இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார்கள். ஏனெனில் இது குவாம் போன்ற அமெரிக்க தளங்களை விட சீன நிலப்பரப்பில் இருந்து தொலைவில் உள்ளது. இது (குவாம் ) நடுத்தர அல்லது குறுகிய தூர ஏவுகணைகளால் அழித்து ஒழிக்கப்பட முடியும். 

இன்னும் பரந்த அளவில், பென்டகனால் வரையப்பட்ட 'வான் கடல் போர்' மூலோபாயத்திற்கு ஆஸ்திரேலியாவின் இராணுவமயமாக்கல் மையமாக உள்ளது. சீனாவுடனான ஒரு போரில், ஆஸ்திரேலியா ஒரு 'தெற்கு நங்கூரம்' என்ற பாத்திரத்தை வகிக்கும். அது சீனாவின் பிரதான நிலப்பகுதி உட்பட, பிராந்தியம் முழுவதும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இது ஒரு ஏவுதளமாக இருக்கும். மேலும் சீனா தனது பெரும்பகுதி வர்த்தகத்திற்காக தங்கியிருக்கும் முக்கிய கப்பல் பாதைகள் மீது கடற்படை முற்றுகையை  செயல்படுத்த முடியும். 

இந்த மூலோபாயத்தின் தாக்கங்கள் பற்றி ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய செய்தித்தாள்களான சிட்னி மார்னிங் ஹெரால்டு மற்றும் ஏஜ் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட 'சிவப்பு எச்சரிக்கை' தொடர் மூலம் கடந்த வாரம் தெளிவாக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நிதியுதவி பெற்ற போர் hawks பருந்துகளின் அறிக்கைகளின் அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்குள் சீனாவிற்கு எதிராக ஒரு போரை நடத்த ஆஸ்திரேலியா தயாராக வேண்டும் என்று ஒரு கட்டரைத் தொடர் அறிவித்தது. வடக்கு அவுஸ்திரேலியாவில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது மற்றும்  பெருமளவிலான கட்டாய இராணுவ சேர்ப்பை திணிப்பது மற்றும் முழு நாட்டையும் போர்க்கால அடிப்படையில் நிறுத்துவது இதற்கு அவசியமானது. 

சான்டியாகோ அறிவிப்பு இந்த திட்டத்தில் மேலும் ஒரு படியை பிரதிநிதித்துவம் செய்கிறது. போரின் ஆபத்தை அதிகரிப்பதுடன் அது  ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும், போர் எதிர்ப்பின் மீது  குறிவைக்கவும் மற்றும் தீவிர சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இது ஒரு தூண்டுதலாக இருக்கும்.

ஆஸ்திரேலியா நீர்மூழ்கிக் கப்பலைக் கையகப்படுத்துவதற்கான மொத்தச் செலவு இப்போது $268 பில்லியன் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தசாப்தத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இராணுவச் செலவினங்களுக்கும் மேலாக இது இருப்பதாகத் தோன்றுகிறது, இது அரை டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இந்த நிதியுதவியானது ஆஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து அமெரிக்க இராணுவ உற்பத்தியாளர்களுக்கு நேரடியான ரொக்கப் பணமாக மூன்று முதல் நான்கு பில்லியன்களை உள்ளடக்கியது.

ஏற்கனவே, அல்பானீஸ் மற்றும் பிற அரசாங்க மந்திரிகளும் இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான செலவின வெட்டுக்கள் பற்றி பொதுமக்களுடன் 'கடுமையான உரையாடல்' இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

அதன் சொந்த வழியில், இது தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளில் வெட்டுக்களுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்களுக்கும், போருக்கு எதிரான போராட்டத்தின் அவசியத்திற்கும் இடையிலான உறவை சுட்டிக்காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் தான் போருக்குப் பணம் செலுத்துவதாக இருக்கும், சமூக வளங்களை இராணுவ எந்திரத்திற்குப் பரந்த அளவில் திருப்புவதில் மட்டுமல்லாமல் அணு ஆயுதம் ஏந்திய அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான  ஒரு மோதல்  பூகோள பேரழிவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும். 

அத்தகைய பேரழிவைத் தடுக்க போராடுவதற்காகத்தான், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உலகளாவிய போர் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்துகின்றனர். போர்வெறியர்களைத் தோற்கடிப்பதற்கும்  ஒரு பேரழிவைத் தடுப்பதற்கும், மோதலுக்கான மூலமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பையே முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் தேவையான சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கை இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

Loading