ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்தின் (UAW) காட்டிக்கொடுப்பு ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவித்ததை அடுத்து, கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் கோபத்தில் கொந்தளிக்கின்றனர்: ‘முழு விடயத்தையும் ஒரு மோசடியாக உணர்கின்றனர்’ 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நீங்கள் கேட்டர்பில்லரில் வேலை செய்பவரா? UAW அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்பு பற்றியும் மற்றும் தொழிலாளர்கள் எதை பெறத் தகுதியானவர்கள் என்பது பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களிடம் கூற படிவத்தை கடைசியில் நிரப்பவும்.

இல்லினோயிஸ் பியோரியா இலுள்ள கேட்டர்பில்லர் Inc. மூலம் தயாரிக்கப்பட்ட டிராக்டர்களும் உபகரணங்களும் இல்லினோயிஸ் கிளின்டன் இல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன [AP Photo/Seth Perlman]

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கமானது (UAW), நிறுவனத்துடனான புதிய ஆறு ஆண்டு கால தற்காலிக ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அங்கீகரிக்கப்பட்டதாக அறிவித்ததை அடுத்து கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் அதற்கு கடும் சீற்றத்துடனும் அவநம்பிக்கையுடனும் பதிலிறுத்துள்ளனர்.  

இல்லினோய்ஸின் பியோரியாவில் உள்ள UAW பிரிவு 974 உம், டிகாட்டூரில் உள்ள பிரிவு 751 உம், இந்த ஒப்பந்தமானது 71.5 சதவீத வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளன. ஆனால், வெவ்வேறு பிரிவுகளில் பதிவாகியுள்ள வாக்குகளின் மொத்த எண்ணிக்கைகள் அல்லது வாக்குப்பதிவு முடக்கங்கள் அல்லது முழு ஒப்பந்த விபரம் என எதைப் பற்றியும் அவை தகவல் வெளியிடவில்லை. UAW ஆனது, வாக்குச்சீட்டு மோசடி மற்றும் ஜனநாயக விரோத ஒப்பந்தங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள நிலையில், கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களிலும், உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) அனுப்பிய கருத்துக்களிலும் வாக்களிப்பு முடிவுகள் பற்றி உடனடியாக தங்கள் சந்தேகங்களை பதிவு செய்துள்ளனர்.   

‘நீங்கள் அனைத்து வாக்குச்சீட்டுகளையும் கண்டுபிடித்து, அவை மாற்றப்படவில்லை என்பதை உறுத்திப்படுத்துவது நல்லது. அவர்களை நம்ப முடியாது!’ என்று ஞாயிறு இரவு டிகாட்டூரைச் சேர்ந்த ஒரு மூத்த கேட்டர்பில்லர் தொழிலாளி வெறுப்புடன் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். 

நிர்வாகமும் UAW உம் தங்கள் ஒப்பந்தத்தின் ஒப்புதலுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து தங்கள் திருப்தியை வெளிப்படுத்திக் கொண்டன. “நேர்மையான, நியாயமான மற்றும் விரிவான ஒப்பந்தம் என்று நாங்கள் நம்பக் கூடியதை அடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று நிறுவனம் அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, UAW தலைமையகம், அதன் பங்கிற்கு, மேலெழுந்தவாரியான மூன்று வாக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “UAW-கேட்டர்பில்லர் பேரம் பேசும் குழுவின் கடின உழைப்பையும், UAW உறுப்பினர்கள் இந்த செயல்முறை முழுவதும் ஒற்றுமையாக செயல்பட்டு ஆதரவளித்ததையும் நாங்கள் பாராட்டுகிறோம்” என்று இழிவாக குறிப்பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், வாக்கு முடிவுகளை ஒரு மதிப்புள்ளதாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், முழு ஒப்பந்த ‘பேச்சுவார்த்தை’ செயல்முறையும் சட்டவிரோதமானது மற்றும் ‘தொழிற்சங்க ஜனநாயகத்தை’ கேலிக்கூத்தாக்கியுள்ளது என்ற உண்மையை அது மாற்றாது. 

நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே டிசம்பரில் தொடங்கிய ஒப்பந்தப் பேச்சுக்களின் உண்மையான உள்ளடக்கம் பற்றி கேட்டர்பில்லர் தொழிலாளர்களுக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. முந்தைய ஒப்பந்தம் காலாவதியாகி சில நிமிடங்களுக்குப் பிறகு, UAW ஆனது, கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் வழங்கிய கிட்டத்தட்ட 99 சதவிகித வேலைநிறுத்த அங்கீகார வாக்கை மீறி, ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை அறிவித்தது. UAW பின்னர் தொழிலாளர்களுக்கு மூன்று முதல் நான்கு பக்கங்களில் ஒப்பந்தத்தின் ‘முக்கிய அம்சங்களை’ மட்டுமே வழங்கியதே தவிர, அனைத்து தொழிலாளர்களும் முழு ஒப்பந்த விபரத்தையும் கவனமாக படித்து தெரிந்து கொள்ளும் வகையில் அதை மின்னணு ஊடாக விநியோகிக்க மறுத்துவிட்டது.  

2029 க்குள் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தின் மதிப்பில் 20 சதவீதத்தை இழக்க வைக்கக்கூடிய இந்த ஒப்பந்தம் அவர்களின் உண்மையான ஊதியங்கள் மீது ஏற்படுத்தக்கூடிய பாரிய தாக்குதலின் முழு தாக்கத்தையும் மூடிமறைக்க தொழிற்சங்க அதிகாரிகள் முயன்றுள்ளனர். அதே நேரத்தில் தொழிலாளர்கள் UAW பிரிவுகளின் பிரதிநிதிகள் மூலம் அச்சுறுத்தப்பட்டனர். அதாவது தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், அவர்கள் 6,000 டாலர்கள் ஒப்பந்த ஒப்புதல் ஊக்க ஊதியத்தை இழக்க நேரிடும், கேட்டர்பில்லர் நிறுவனம் தனது ஆலைகளை மூடும் மற்றும் நிறுவனம் ஒரு வருடம் வரை பேச்சு வார்த்தைக்கு திரும்பாது என்பதாக தொழிலாளர்கள் பயமுறுத்தப்பட்டுள்ளனர்.

கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் சாமானியத் தொழிலாளர்கள் பாதுகாப்புக் குழு மட்டுமே, 50 சதவீத ஊதிய உயர்வு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளை உயர்த்துதல் (COLA), ஓய்வூதியங்களை மீட்டெடுத்தல், மற்றும் குறைக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு செலவுகள் மற்றும் பிற சலுகைகளை வழங்குதல் உட்பட தொழிலாளர்களின் உண்மையான அபிலாஷைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றக் கோரி குரல் கொடுத்துள்ளது. ஒப்பந்தத்திற்கு ‘இல்லை’ என்று வாக்களிக்குமாறும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரிடையே பொதுவான போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டுமாறும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு அறிக்கையை குழு விநியோகித்துள்ளது. UAW அதிகாரத்துவம் மற்றும் நிறுவனத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம் பற்றி தொழிற்சாலைத் தளத்தில் உள்ள தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கவும், கற்பிக்கவும் மற்றும் அவர்களை ஒழுங்கமைக்கவும் குழு முழுமையாக முயன்றது. 

“நாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக உணர்கிறோம்” 

பியோரியாவில் உள்ள கேட்டர்பில்லர் தொழிலாளி ஒருவர், UAW அதிகாரத்துவத்தை ‘பலவீனமானது, பரிதாபகரமானது மற்றும் முதுகெலும்பற்றது’ என்று தான் உணர்ந்ததாக கூறியுள்ளார். அவர் மேலும், “நாங்கள் எதிராக வாக்களித்தால், கேட்டர்பில்லர் ஆறு மாதங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு திரும்பாது என்று அவர்கள் எங்களிடம் கூறினார்கள்” என்றும் கூறியுள்ளார்.

டிகாட்டூரில் உள்ள ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம், “எனது அனைத்து சக தொழிலாளர்களும் இது குறித்து மகிழ்ச்சியடையவில்லை. தாம் காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டதாகவே அவர்கள் உணர்கிறார்கள். நான் பேசிய அனைவரும் இது பற்றி மிகவும் எதிர்மறையான கருத்தைக் கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். 

“‘98 இல் இருந்து மற்றும் அதற்கு முந்தைய,’ ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் உண்மையாக இல்லாத இந்த ஒப்பந்தத்தைப் பற்றி அதிகம் கூற வேண்டியதில்லை,” என்று கேட்டர்பில்லரின் மேப்பிள்டன் ஆலையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பணிபுரியும் ஒரு தொழிலாளி கூறியுள்ளார். “இது புதிய ஆயிரம் ஆண்டுகாலத்திற்கான ‘பேரம் பேசுதல் பாங்கு’ ஆகும். அதாவது, அச்சுறுத்தல்கள், தவறான சித்தரிப்புகள், வெற்று வாக்குறுதிகள், கையொப்பமிடும் ஊக்க ஊதியத்துடன் கூடிய நேரடியான கையூட்டுகள் அடங்கிய ஒப்பந்தத்தை இது குறிக்கிறது.  

“அடுத்த முறை ஒரு சிறந்த, பிரகாசமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்ற வெற்று வாக்குறுதிகளை UAW வழங்குகிறது,” என்று அவர் வெறுப்புடன் கூறினார். மேலும், “இது என்னை கீழ்த்தரமாக காட்டிக்கொடுப்பதற்கான ஐந்தாவது ‘அடுத்த முறை’ ஆகும். நாங்கள் போராடும் குணத்துடன் இல்லாத போது, அவர்கள் இந்த விடயங்களைக் கூறி அனைவரையும் காயப்படுத்துவதுடன், நாங்கள் விசுவாசமற்றவர்கள் என்று கூறி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். எங்களை குழந்தைகள் போல் பாவித்து அவர்கள் எங்களிடம் பொய் கூறியும், அவர்களது உண்மையான நோக்கத்தை மறைத்தும் பேசுகிறார்கள். நாங்கள் ‘நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை’ அல்லது ‘விசுவாசமாக’ இல்லை என்று கூறி எங்களை அவமானப்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு அவர்கள் மத மற்றும் தேசபக்தி வார்த்தையாடல்களை கலந்து எங்களை யூதாக்கள் அல்லது துரோகிகள் என்று குறிப்பிடுகின்றனர். 30 வெள்ளிக் காசுகளுடன் யார் உண்மையில் தப்பிச் சென்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்!” என்றும் அவர் கூறினார்.    

டிகாட்டூரில் உள்ள மற்றொரு மூத்த தொழிலாளி, “எனது ஊதிய இழப்பை என்னால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. 18 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாங்கள் சுகாதார காப்பீடு செலுத்த ஆரம்பித்தோம். 20 வருடங்களாக எனக்கு ஊதிய உயர்வு கிடையாது. முழு கொடுப்பனவுகளும் மோசமாக உள்ளது என்ற நிலையில், நாங்கள் ஓய்வு பெறும்போது நாங்கள் உயிர்வாழ முடியாது. எதையும் பாராட்ட முடியவில்லை. எனது காலாண்டு ஊக்க ஊதியம் கேலிக்குரியது. இது எங்களது வழமையான சம்பளத்துடன் வழங்கப்பட்டு, 30 சதவீத வரியும் அதற்கு விதிக்கப்படுகிறது! எனது ஊக்க ஊதியம் அபத்தமானது என்பதால், நான் 100 டாலர்களை இழக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“நீங்கள் இன்று அந்த வீட்டை வாங்குவீர்களோ இல்லையோ?’ அது எவ்வளவு அழகாக இருந்தது என்பது பற்றியதாகும்” 

கிழக்கு பியோரியாவில் உள்ள மற்றொரு கேட்டர்பில்லர் தொழிலாளி, நிறுவனமும் UAW உம் கையொப்பமிடும் ஊக்க ஊதியம் குறித்து தொழிலாளர்களிடம் பொய் கூறி அதை கையூட்டாக பயன்படுத்தியதாக விளக்கினார். அவர், “தொழிலாளர்கள் 6,000 டாலர்கள் ஊக்க ஊதியத்தை இழக்க பயந்தனர். அதைப் பெறாமல் இருக்க முடியாது என்று தொழிலாளர்கள் கூறுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலும் இது வரிகழிக்கப்பட்ட பிறகு 3,000 டாலர் மட்டுமே கிடைக்கும். மேலும், இரண்டு, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக என்ன நடக்கிறது? அந்த 3,000 டாலர்களும் வேகமாக காணாமல் போகும்” என்று கூறினார்.  

UAW பிரிவு 974 ஆனது வாக்கெடுப்பு நாளில் ‘தகவல் வழங்கும்’ கூட்டங்களை நடத்தியதைப் பற்றி குறிப்பிட்டு, கிழக்கு பியோரியாவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, “நான் எனது கேள்வி பதில் நேரத்திற்கு வந்தபோது, ஒரு அதிகாரி, ‘நாங்கள் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. எவரேனும் பார்க்க விரும்பினால், ஒப்பந்தப் புத்தகங்கள் இங்கே உள்ளன’ என்று கூறினார். ஆனால், நாங்கள் வாக்களிக்கும் நாள் இது! இப்போது அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை!” என்று கூறினார். 

2008-2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த வீட்டு நெருக்கடியுடன் அவர் இந்த செயல்முறையை ஒப்பிட்டார். மேலும், “நீங்கள் ஒரு வீட்டை வாங்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் கையொப்பமிடுவதற்கு முன்பு பல வாரங்களுக்கு முன்னதாகவே நீங்கள் அதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும். “‘நீங்கள் இன்று வீடு வாங்குவீர்களோ இல்லையோ?’ அது எவ்வளவு அழகாக இருந்தது என்பது பற்றியதாகும். வீட்டு சந்தையின் உடைவு போலவே, அங்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்க்கவில்லை” என்று அவர் கூறினார்.

UAW அதிகாரிகளின் மனப்பாங்கை விவரித்து, அவர்கள் உண்மையில் தொழிலாளர்களிடம் இவ்வாறு கூறியதாக அவர் கூறினார். “எவரும் அதை ஆய்வு செய்ய முடியாது என்பதை அறிந்து ‘இதோ எங்களிடம் இந்த ஒப்பந்தம் உள்ளது,’ என்கின்றனர். அதாவது, ‘முக்கிய அம்சங்களையும்’ 6,000 டாலர்கள் கையொப்பமிடும் ஊக்க ஊதியத்தையும் மட்டுமே நாங்கள் பெற முடியும்.”  

தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை நிராகரித்தால், UAW கடந்த ஆண்டு CNH தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கு செய்தது போல், பல மாதங்கள் மறியல் போராட்டம் செய்யும் வகையில் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்கு UAW அதிகாரிகள் பரிந்துரைத்ததாக அவர் கூறினார். மேலும், “ஏராளமான மேற்பார்வையாளர்கள் எங்களை Case/CNH தொழிற்சாலைகளுடன் ஒப்பிட்டு பேரம் பேசும் நிர்வாகிகளிடம் சென்றனர்,” என்று அவர் கூறினார். “அவர்கள் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வரமாட்டார்கள் என்று கேட்டர்பில்லர் கூறியுள்ளது. அதை நாங்கள் நிராகரித்தால், எட்டு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அது பற்றி திரும்பப் பேச காலம் பிடிக்கும். இப்படிக் கூறி அவர்கள் பலரையும் பயமுறுத்தியுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.   

அவர் மேலும், “கேட்டர்பில்லர் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வராது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? எத்தனை பேர் போராட விரும்புகிறார்கள் என்பதை அறியும் முன்பே UAW தொழிலாளர்களை கைவிட்டது. நீங்கள் போராடச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் மக்களை போராடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதற்கு பதிலாக, ‘நாம் இப்போதே நாம் சரணடையலாம், அதனால் அனைவரும் பயனடைவார்கள்’ என்று அவர்கள் கூறினார்கள்” என்று கூறினார்.

தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதில் உறுதியாக நிலையில் இருக்கின்றனர் என்று கூறி, “நாங்கள் வேலைநிறுத்தம் செய்தால், எங்களுக்கு பதிலாக அவர்கள் யாரைக் கொண்டு வருவார்கள்? அவர்களுக்கு உதவி கிடைக்காது. அதுதான் எனது வாதமாகும்” என்று அவர் மேலும் கூறினார். வேலைநிறுத்தத்தின் போது  தொழிலாளர்கள் வெளியேறினால் அவர்களின் இடத்திற்கு நியமிக்கப்பட்ட பயிற்சியளிக்கப்பட்ட பாரம்தூக்கி ஓட்டுநர்    காயமடைந்து மருத்துவக் குறிப்புடன் வெளியேறினார் என்று கூறினார். மேலும், “நாங்கள் பாரம்தூக்கி நபருடன் பேசுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, மருத்துவ விடுமுறையைப் பெற்ற மற்ற அலுவலக ஊழியர்களும் அங்கு இருந்தனர். எத்தனை அலுவலக ஊழியர்கள் வெளியே இறங்கிப் போராட முன்வருவார்கள்?” என்றும் அவர் கேட்டார்.  

UAW, ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டதை அறிவித்துள்ள நிலையில், கேட்டர்பில்லர் மேலதிக தாக்குதல்களுக்குத் தயாராகிவிட்டதாக அவர் எச்சரித்தார். “ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கையில், குறைந்தது ஒரு வருட காலத்திற்குள், நாங்கள் எப்போதும் ஆட்குறைப்பையும் பணிநீக்கங்களையும் எதிர்கொள்வோம்” என்றும் அவர் கூறினார். 

“நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை ஆட்களை வேலைக்கு அமர்த்துவதும், பின்னர் அவர்களை நீக்குவதும்   கேட்டர்பில்லரில் எப்போதும் உள்ள பிரச்சினையாகும். அவர்கள் இளைஞர்களிடம் வேலை கிடைக்கும் என்று உறுதியளிக்கும் நிலையில், இளைஞர்கள் ஏற்கனவே உள்ள வேலையை விட்டுவிட்டு வருகிறார்கள். ஆனால் இங்கு இறுதியில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்” என்கிறார். 

“போராட்டம் முடிவடையவில்லை. நாம் தொடர்ந்து போராடுவோம்”

டிகாட்டூரில் உள்ள கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் சாமானியத் தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினரான ஜோன் என்பவர், ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான தனது முயற்சிகளில் UAW அதிகாரத்துவம் எந்த அளவிற்கு தகவல்கள் தொழிலாளர்களைச் சென்றடையாமல் தடுத்து நிறுத்தியது என்பதை இவ்வாறு விவரிக்கிறார். “குறிப்பாக, தொழிலாளர்கள் ஒப்பந்தத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அவர்கள் வரம்பை நிர்ணயித்தனர். அதாவது, தொழிற்சங்க அரங்கில் ஒப்பந்தத்தின் இரண்டு முழு பிரதிகள் மட்டுமே கிடைத்தன என்பதுடன், அதை ‘உங்களுக்கு முடிந்த நேரத்தில்’ மதிப்பாய்வு செய்ய ஒரு வாரம் மட்டும் அவகாசம் தரப்பட்டது. தொழிலாளர்கள் அதைச் செய்வதற்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. குழந்தை பராமரிப்பு பிரச்சினைகள், முக்கிய சந்திப்புகள், மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விடயங்களையும் வைத்துப் பார்த்தால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.” 

“முழு விடயமும் ஒரு மோசடியாகவே தெரிகிறது. ஆனால் போராட்டம் முடிவடையவில்லை. மேலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

மற்றைய தொழிலாளர்களை நோக்கி அவர் இவ்வாறு தொடர்ந்தார், “நம்மிடம் ஒரு புதிய பணியும், ஒரு புதிய வழியும் உள்ளது. அந்த பணி, அந்த வழி என்னவென்றால், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்க மக்களையும் ஒருங்கிணைத்து, சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கி, நாம் விடயத்தை பேசுவோம் என்பதை இந்த நிறுவனங்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டும். மேலும், நாம் என்ன செய்தோம் என்பதை இந்த நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், நமது சொந்த ஊழல்வாத தொழிற்சங்கத் தலைமைக்கும் எடுத்துக்காட்ட வேண்டும்.”  

“நாங்கள் அனைத்து உறுப்பினர்களும் இது பற்றி கருத்து தெரிவிப்போம் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டும். எங்களின் கடின உழைப்பில் ஆதாயம் தேடும் வஞ்சக அதிகாரிகள் போதுமான அளவு இங்கு இருக்கின்றனர். மேலும் கேள்விக்குரிய தேர்தல்களையும் வாக்கெடுப்புகளையும் நாங்கள் போதுமான அளவு சந்தித்து விட்டோம். எப்போதும் வெளிப்படையாக இருக்க நாங்கள் கோருகிறோம். 

“இது நமக்கான நேரம், தொழிலாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் எழுச்சியடைந்து தங்கள் குரலை நிரந்தரமாக கேட்க வைக்க வேண்டிய நேரம் இதுவாகும். நாம் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க மக்களை உழைக்கும் வர்க்கம் என்ற ஒரே ‘கொடியின்’ கீழ் ஐக்கியப்படுத்த அயராது பாடுபட வேண்டும். நாம் நமது சகோதர சகோதரிகளை எழுச்சி பெறச் செய்வதற்கு அயராது உழைக்க வேண்டும் என்பதுடன், அவர்களிடம் ‘உங்கள் குரல் கேட்கப்படும்! உங்கள் குரல் தான் முக்கியம்!’ என்று கூற வேண்டும். 

“கேட்டர்பில்லர் மற்றும் UAW உடன் நேற்று நடந்தது மீண்டும் ஒருபோதும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய நாம் ஓயாது உழைக்க வேண்டும். என் சகோதர சகோதரிகளே ஒன்றுபட்டு வலிமையுடன் நில்லுங்கள், நாம் நேர்மையாக இருந்து போராடுவோம்!” 

“ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாம் நின்று போராடுகிறோம். ஒன்றுபட்ட தொழிலாளர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது! எனவே, சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுவிடம் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும்!” என்று அவர் தெரிவித்தார்.

Loading