முன்னோக்கு

ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கம் கேட்டர்பில்லர் நிறுவனத்தில் நிஜமான சம்பளத்தில் மிகப் பெரும் வெட்டுக்களைத் திணிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மிசிசிப்பியின் ஃப்ளோவுட் உள்ள Puckett எந்திர ஆலையில் தொழில்நுட்ப பணியாளர்கள் ஒரு கேட்டர்பில்லர் டிராக்டரில் வேலை செய்கிறார்கள். [AP Photo/Rogelio V. Solis]

கேட்டர்பில்லரில் ஐக்கிய வாகனத்துறைத் தொழிற்சங்க (UAW) அதிகாரத்துவம் கொண்டு வந்துள்ள சமீபத்திய காட்டிக்கொடுப்பு, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் முக்கியப் படிப்பினைகளைக் கொண்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய கட்டுமான மற்றும் சுரங்க உபகரண உற்பத்தி நிறுவனமான கேட்டர்பில்லருடன் ஒரு புதிய ஆறு ஆண்டுகால ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக ஐக்கிய வாகனத்துறைத் தொழிற்சங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அறிவிக்கப்பட்ட மொத்த வாக்குகள் மோசடியானவை என்ற சந்தேகங்களுடன் சேர்ந்து, தொழிலாளர்களிடையே நிலவும் உறுதியான எதிர்ப்புக்கு மத்தியில், இந்த உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக UAW இன் அறிவிப்பு வந்தது.

ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்க ஒப்பந்தத்தின் தீர்க்கமான தன்மை என்னவென்றால் நிஜமான சம்பளங்கள் மீது மிகப் பெரும் தாக்குதல் அதில் உள்ளடங்கி உள்ளது. அந்த ஒப்பந்தம் ஆறு ஆண்டுகளுக்கு மொத்தம் 19 சதவீத சம்பள உயர்வைக் கொண்டுள்ளது: இது நிறைவேற்றப்படும் போது 7 சதவீத உயர்வும், பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் 4 சதவீத உயர்வுகளும் இருக்கும். அமெரிக்காவில் தற்போதைய 6 சதவீத பணவீக்க விகிதமே தொடர்ந்தால், இது 2029 வாக்கில் தொழிலாளர்களின் நிஜமான சம்பளத்தில் சுமார் 20 சதவீத குறைவாக இருக்கும் என்பதையே இந்த ஒப்பந்தம் அர்த்தப்படுத்துகின்றது.

நிஜமான சம்பளத்தில் செய்யப்பட்டுள்ள வெட்டுக்களுக்கு அப்பாற்பட்டு, சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியம் அல்லது வேலையிட நிலைமைகள் தொடர்பான தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த ஒப்பந்தம் பூர்த்தி செய்யாது.

ஐக்கிய வாகனத்துறைத் தொழிற்சங்க எந்திரம், கடந்த வாரயிறுதியில் ஒப்புதல் வாக்குகளுக்கு முன்னதாக இந்த அடிப்படை உண்மைகளைத் தொழிலாளர்களிடம் இருந்து மறைக்க அதனால் முடிந்த அனைத்தையும் செய்தது.

பல மாதங்களாக, தொழிற்சங்க நிர்வாகிகள், நிர்வாகத்துடனான அவர்களின் விவாதங்களின் விவரங்களைத் தெரிவிக்காமல் தொழிலாளர்களை இருட்டில் வைத்தனர். தொழிலாளர்களின் 99 சதவீத வேலைநிறுத்த அங்கீகார வாக்குகள் மற்றும் வெளிநடப்புக்கான கோரிக்கைகளை மீறி, UAW, முந்தைய ஆறாண்டு கால ஒப்பந்தம் காலவதியானதும், மார்ச் 1 நள்ளிரவுக்குப் பின்னர் உடனடியாக ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை அறிவித்தது.

ஐக்கிய வாகனத்துறைத் தொழிற்சங்க எந்திரம் பின்னர் அந்த ஒப்பந்தத்தின் விபரங்களை மறைத்தும், பொய் மற்றும் அச்சுறுத்தல் மூலமாகவும் அதை நிறைவேற்றுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. வெளியான அந்த ஒப்பந்தம் சட்டத்திற்குப் புறம்பானது என்று கண்டித்து, கேட்டர்பில்லர் நிறுவன சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு செவ்வாய்கிழமை ஓர் அறிக்கையில் குறிப்பிடுகையில், “இந்த உடன்படிக்கை தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக நிர்வாகத்தின் சார்பில் UAW நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கையின் விளைவாகும்,” என்று குறிப்பிட்டது.

தொழிலாளர்களுக்கு அந்த ஒப்பந்தத்தின் வெறும் நான்கு பக்க 'சிறப்பம்சங்கள்' மட்டுமே வழங்கப்பட்டன. இது 100 இக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட அந்த உடன்படிக்கையை சிறப்பானதாக காட்ட முயன்றது. UAW இன் ஐக்கிய பணிமனை (Solidarity House) தலைமையகங்கள் அந்த உடன்படிக்கையின் மின்னணு நகல்களைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டாமென உள்ளூர் கிளைகளுக்கு உத்தரவிட்டதுடன், அவற்றை தொழிற்சங்க வளாகத்தில் அவர்கள் நேரடியாக வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்தன. இது அந்த ஒப்பந்தத்தைப் படித்து முழுமையாக புரிந்து கொள்வதில் இருந்து பரந்த பெரும்பான்மை தொழிலாளர்களைத் தடுக்கும் என்பது அவற்றுக்கு நன்றாகவே தெரியும்.

இந்த ஒப்பந்தமே 'அவர்கள் பெறக்கூடிய சிறந்த' ஒன்றாக தொழிற்சங்க அதிகாரிகள் தொழிலாளர்களை நம்ப வைக்க முயன்றனர். தொழிலாளர்கள் இந்த உடன்படிக்கையை நிராகரித்தால், அவர்கள் ஒரு மோசமான ஒப்பந்தத்தையோ, ஆலை மூடல்களையோ அல்லது ஒரு நீண்டகால தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தத்திற்கான சாத்தியத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.

ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்க எந்திரம், ஆளும் வர்க்கத்தின் ஒரு பரந்த கொள்கையின் பாகமாக அதன் சமீபத்திய இந்தக் காட்டிக்கொடுப்பை நடத்தியது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், முதலாளித்துவ அரசாங்கங்கள் அவற்றின் பொருளாதார நெருக்கடி மற்றும் போர்களின் செலவுகளைத் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முற்பட்டுள்ளன.

2022 இன் முதல் பாதியில், உலகளவில் நிஜமான சம்பளங்கள் 0.9 சதவிகிதம் சரிந்தன. இது தான் இந்த 21 ஆம் நூற்றாண்டில் இத்தகைய முதல் சரிவு என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நவம்பர் மாத அறிக்கை தெரிவிக்கிறது.

'முன்னேறிய' மற்றும் 'வளர்ந்து வரும்' பொருளாதாரங்களில், சம்பளங்கள், கடந்த இரண்டாண்டுகளாக வேகமாக அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுகளுக்கு நிகராக அதிகரிக்கப்படவில்லை. இந்த விலைவாசி உயர்வுகள் பெருநிறுவன இலாபவெறியாலும், சந்தைகளுக்குள் பணத்தைப் பாய்ச்சும் நடவடிக்கைகள், பெருந்தொற்றின் பேரழிவுகரமான தாக்கம், உக்ரேனில் ரஷ்யாவுடன் விரிவடைந்து வரும் போர் ஆகியவற்றால் உந்தப்பட்டுள்ளன.

ஜப்பானில், நிஜமான சம்பளங்கள் இந்த ஜனவரியில் ஓராண்டுக்கு முன்னர் இருந்ததை விட 4.1 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. இது அண்மித்து ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சியாகும். பிரிட்டனில், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் டிசம்பரில் 3.2 சதவீதம் சரிந்தன. அமெரிக்காவில், கடந்தாண்டுடன் ஒப்பிட்டால் ஜனவரியில் நிஜமான சராசரி ஒரு மணிநேர வருமானம் 1.2 சதவீதம் சரிந்திருந்தது.

பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் அடிப்படை தேவைகளுக்காக கூட போராடி வருகின்ற நிலையில், 1970களில் போலவே, வானளாவிய விலைவாசி உயர்வுகள் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டி வருகின்றன.

பெடரல் ரிசர்வும் பிற மத்திய வங்கிகளும் வட்டி விகித உயர்த்துவதன் மூலம் வேலைவாய்ப்பின்மையை அதிகரித்து தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்கலாம் என்ற நம்பிக்கையில், வேகமாக வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் அதிக சம்பளங்களுக்காக தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு விடையிறுத்துள்ளன. இந்தக் கொள்கையானது, வேலைநிறுத்தங்களை முடக்குவதில் அல்லது தனிமைப்படுத்துவதில், பெருநிறுவன-சார்பான ஒப்பந்த வரையறைகளைத் திணிப்பதில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முன்பினும் அதிக நம்பிக்கைக்குரிய ஆதரவுடன், குறிப்பாக பைடென் நிர்வாகத்தின் தரப்பில், சேர்ந்துள்ளது. 

ஆனால் குறைந்த வட்டிவிகித பணக் கொள்கைகளில் இருந்து அதிக வட்டி விகிதங்களை நோக்கிய இந்த திடீர் மாற்றம், மிகச் சமீபத்தில் சிலிக்கன் வெலி வங்கியின் தோல்வியிலும் உலகளாவிய நிதியச் சந்தைகளில் நடந்து வரும் வெடிப்பார்ந்த ஏற்ற இறக்கங்களிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளவாறு, முன்பினும் பெரிய பொருளாதார நெருக்கடியைத் தூண்ட அச்சுறுத்தி வருகிறது. புதன்கிழமை, அமெரிக்க கருவூல பத்திரச் சந்தைகளின் பணப்புழக்கம் மார்ச் 2020 இல் பெருந்தொற்றின் ஆரம்ப நாட்களில் இருந்ததற்கு நெருக்கமாக வந்து, 'பெரும் அழுத்தத்திற்கு உள்ளானது' என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.

ஆளும் வர்க்கம் ஒரு தீர்க்க முடியாத நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதால், அது வெளிநாட்டில் ஏகாதிபத்திய போரைக் கொண்டும், உள்நாட்டில் வர்க்கப் போர் மூலமாகவும் விடையிறுத்து வருகிறது. 

அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளும், ரஷ்யா மீது ஒரு மூலோபாய தோல்வியை ஏற்படுத்துவதற்காக உக்ரேனுக்குள் இராணுவ உதவியாக பல பில்லியன் டாலர்களைக் கடந்தாண்டு செலவிட்டுள்ளன. அதே நேரத்தில், வாஷிங்டன் சீனாவுடன் போருக்குச் செல்லத் தயாராகி வருகிறது. பைடென் நிர்வாகம் முந்தைய அதிகபட்ச இராணுவ வரவு செலவுத் திட்டக்கணக்கை எல்லாம் முறியடிக்கும் விதமாக  இந்தாண்டு 1 ட்ரில்லியன் டாலர் இராணுவ வரவு செலவுத் திட்டக்கணக்கை முன்மொழிந்துள்ளார். இது அமெரிக்கா நாடாளுமன்ற வழிவகைகள் மூலமாக வரும் போது நிச்சயம் இன்னும் அதிகரிக்கப்படும்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், சமூக செலவினங்களில் வெட்டுக்கள், சம்பளக் குறைப்புகள், சுரண்டலை அதிகரிப்பது மூலம் அவற்றின் சூறையாடும் போர்களுக்கான செலவைத் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முயன்று வருகின்றன.

'தேசிய நலன்' என்பதை ஒரு மோசடியான நியாயப்பாடாகப் பயன்படுத்தி, வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதன் மூலமும் உழைப்புக்கட்டுப்பாடுகள் மூலமும் ஒரு 'போர்கால பொருளாதார' நிலைமைகளை ஏற்படுத்துவதே நிதியத் தன்னலக்குழு மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் நோக்கமாக உள்ளது. குறிப்பாக இது கேட்டர்பில்லர் விஷயத்தில் முக்கியமாக உள்ளது. அது அமெரிக்க இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் ஈட்டுவதுடன், பென்டகனுக்கு டிராக்டர்களும் பிற உபகரணங்களும் வினியோகிக்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது.

ஆனால் ஆளும் வர்க்கத்தைப் போர் மற்றும் அடக்குமுறையை நோக்கி செலுத்தும் அதே நிகழ்வுபோக்குகள், தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகரப் போராட்டங்களுக்கான பாதையில் நிறுத்தியுள்ளன.

ஐரோப்பாவில் வேலைநிறுத்தங்களும் பிற போராட்டங்களும் திரண்டு வருகின்றன. இந்த வாரம் பிரிட்டனில் 400,000 இக்கும் அதிகமான ஆசிரியர்களும், பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் மற்றும் இளநிலை மருத்துவர்களும், சம்பள உயர்வுகள் கோரி வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான ஜனாதிபதி மக்ரோனின் முயற்சிகளுக்கு எதிராக, சமீபத்திய வாரங்களில் பிரான்ஸ் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைக் கண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனங்களில் சுமார் 170,000 வாகனத்துறைத் தொழிலாளர்கள், ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்தாண்டு மிகப் பெரும் போராட்டங்களை முகங்கொடுக்கிறார்கள். அத்துடன் இந்தாண்டு கோடையில் நூறாயிரக் கணக்கான UPS தொழிலாளர்களும் இதையே எதிர்கொண்டிருக்கிறார்கள்.

கேட்டர்பில்லரில், நிறுவனம் சார்ந்த மற்றொரு ஒப்பந்தத்தை சுமத்த UAW இன் முயற்சிகளுக்கு மிகவும் உறுதியான மற்றும் நனவான எதிர்ப்பு, போர்க்குணமிக்க ஒரு தொழிலாளர்கள் குழுவால் பெப்ரவரியில் உருவாக்கப்பட்ட கேட்டர்பில்லர் சாமானியத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவிடம் இருந்து வந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களால் வாசிக்கப்பட்ட அறிக்கைகளில், சாமானியத் தொழிலாளர்களின் இந்த நடவடிக்கைக் குழு 50 சதவீத சம்பள உயர்வு, பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு, சுகாதாரக் கவனிப்புச் செலவுகள், ஓய்வூதியங்கள் மற்றும் இன்னும் பலவற்றில் பாரியளவிலான குறைப்பு ஆகியவை உட்பட தொழிலாளர்களின் தேவைகளின் அடிப்படையில் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்தது.

இந்தப் போராட்டம் நெடுகிலும் இந்த நடவடிக்கைக் குழு நிர்வாகத்தினதும் ஊழல்பீடித்த UAW அதிகாரத்துவத்தினதும் பிரச்சாரத்தை எதிர்கொண்டதுடன், உண்மையில் என்ன நடந்து வருகிறது என்பதைத் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்க ஓர் ஒழுங்கமைக்கும் மையமாகச் செயல்பட்டது.

முக்கியமாக, கேட்டர்பில்லர் சாமானியத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு தொழிலாளர்களை ஒருவரையொருவர் எதிராக நிறுத்துவதற்குப் பயன்படுத்தும் செயற்கையான பிளவுகளை நிராகரித்து, நிர்வாக பிரிவு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கம் சாராத தொழிலாளர்கள், அத்துடன் டீர் ஆலை, CNH மற்றும் வாகனத்துறை தொழிலாளர்களின் ஆதரவுக்கு முறையிட்டது. அனைத்திற்கும் மேலாக, சாமானியத் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியுடன் தன்னை இணைத்துள்ள இந்தக் குழு ஒரு சர்வதேச முன்னோக்கை முன்வைத்தது. கேட்டர்பில்லர் தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களை உலகளவிலான தொழிலாளர்களுடன் ஒருங்கிணைத்து ஐக்கியப்பட்டால் மட்டுமே அவர்களால் நாடுகடந்த இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று அது வலியுறுத்தியது.

கேட்டர்பில்லர் சாமானியத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு செவ்வாய்கிழமை அதன் அறிக்கையில் விளக்கியவாறு, “இந்த வாரயிறுதி வாக்குகளோடு இந்தப் போராட்டம் முடிந்துவிடாது, மாறாக இது அதன் தொடக்கம் மட்டுமே ஆகும்.” ஒவ்வொரு ஆலையிலும் வேலையிடத்திலும் சாமானியத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை விரிவாக்கி, சமூகத்தின் ஆதாரவளங்களைத் தனியார் இலாபத்திற்காக அல்ல தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுக்காக ஒழுங்கமைப்பதை உறுதிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்துடன் இத்தகைய போராட்ட அமைப்புகளை ஆயுதபாணியாக்குவதே முக்கிய பணியாகும்.

Loading