முன்னோக்கு

அமெரிக்காவில் பிரசவக்கால இறப்பு விகிதம் அதிகரிக்கிறது: முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இப்போது கிடைக்கும் சமீபத்திய ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, 2021 இல் அமெரிக்காவில் தாய்மார்களின் பிரசவக்கால உயிரிழப்புகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) ஒரு புதிய அறிக்கை குறிப்பிடுகிறது. 2019 இல் 754 ஆக இருந்த பிரசவக்கால இறப்பு எண்ணிக்கை 2020 இல் 861 ஆகவும், 2021 இல் 1,205 ஆகவும் உயர்ந்துள்ளது. 100,000 பிறப்புகளுக்கு கிட்டத்தட்ட 32 ஆக இருந்த பிரசவக்கால இறப்பு விகிதம் 1965 நிலைமைக்குத் திரும்பி உள்ளது. இது  அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான ஓர் அதிர்ச்சியூட்டும் விதமாக பின்னடைவாகும்.

அமெரிக்காவில் இன்று குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள், அவர்கள் பிறந்த போது அவர்களின் தாய்மார்கள் எதிர்கொண்டிருந்ததை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உயிரிழப்புக்கான சாத்தியக்கூறைக் கொண்டுள்ளனர். அமெரிக்காவில் பிரசவக்கால இறப்பு விகிதம் 1987 இல் தான் 100,000 க்கு 6.6 ஆக எல்லா காலத்தையும் விடவும் மிகக் குறைவாக இருந்தது. 1978 இல் இருந்து 2002 வரையில் அது ஓர் இலக்கத்தில் இருந்தது. 2017 இல் இரட்டை இலக்கத்திற்கு வந்த பின்னர் கோவிட்-19 பெருந்தொற்றின் போது மீண்டும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்தது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) ஒரு பிரிவான தேசிய சுகாதாரத்துறை புள்ளிவிபரங்களுக்கான மையம் வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் வெளிவந்துள்ள இந்த புள்ளிவிபரங்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் மீதும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட சுகாதாரக் கவனிப்பு அமைப்புமுறையின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும். இவை, ஏழைகள் அல்லது காப்பீடு செய்யாதவர்கள் என்ற காரணத்திற்காக மில்லியன் கணக்கான பெண்களுக்குப் போதுமான பிரசவக்கால மருத்துவ சிகிச்சை மற்றும் குழந்தைப் பிறப்புக்குப் பிந்தைய மருத்துவ சிகிச்சைகளை மறுக்கின்றன.

தொழிற்துறைமயமான நாடுகளில், பிரசவக்கால உயிரிழப்புகளில், அமெரிக்கா மிக மோசமாக காணப்படும் நாடாக மட்டுமல்லாது, மற்ற நாடுகளுடனான வித்தியாசமும் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் ஜேர்மனி, பிரான்ஸ் அல்லது பிரிட்டனை விட நான்கு மடங்கு அதிகமாகவும், நெதர்லாந்து மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளை விட 10 மடங்கு அதிகமாகவும் உயிரிழப்புக்கான சாத்தியக்கூறைக் கொண்டுள்ளனர். அவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு சீனாவை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி, இந்த வித்தியாசங்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தையவை: 2000 மற்றும் 2020 இக்கு இடையில் அமெரிக்காவில் தாய்மார்களின் பிரசவக்கால இறப்பு விகிதம் 78 சதவீதம் உயர்ந்த அதேவேளையில், மற்ற நாடுகளில் குறைந்து வந்தன.

CDC இன் தகவல்படி, இந்த உயிரிழப்புக்கான குறிப்பிட்ட காரணங்கள் வேறுபடுகின்றன. இருப்பினும் கார்டியோமையோபதி எனப்படும் இருதய தசை நோய் 11 சதவீதம்; 9 சதவீதம் இரத்தம் உறைவு; 8 சதவீதம் உயர் இரத்த அழுத்தம்; 7 சதவீதம் பக்கவாதம்; 15 சதவீதம் பிற இருதய பாதிப்புகள் உட்பட பெரும்பான்மை இருதய இரத்த நாளங்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளன. பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு மற்றும் நோய்தொற்று ஆகியவை மற்றுமொரு 24 சதவீதமாக உள்ளது, அதேவேளையில் அதீத போதைப்பொருள் பாவனை மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய மனஅழுத்தத்தால் ஏற்படும் தற்கொலை உட்பட பிற உளவியல்ரீதியான மருத்துவப் பிரச்சினைகளும் ஒரு காரணியாக உள்ளன.

ஆனால் சமூக காரணங்களே இறப்புக்கான முக்கியமான பிரச்சினை உள்ளன. CDC மற்றும் பிற சுகாதார அதிகாரிகளினது மதிப்பீடுகளின்படி, பிரசவக்கால உயிரிழப்புகளில் 80 சதவீதத்தை முறையான சிகிச்சை மூலம் தடுக்க முடியும். ஆனால் பல கர்ப்பிணிப் பெண்களும் இன்னும் அதிகமான பெண்களும் பிரசவத்திற்குப் பிந்தைய வாரங்கள் மற்றும் மாதங்களில், முறையான சிகிச்சை பெறுவதில்லை.

இந்த கவனிப்பின்மைக்கு இரண்டு அடிப்படை காரணங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பிரசவ ஆஸ்பத்திரியில் இருந்து 25 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் 'மகப்பேறு பாலைவனங்கள்' (obstetric deserts) என்று அழைக்கப்படும் இடங்களில் வாழ்கிறார்கள். CDC இன் தகவல்படி, குழந்தைப் பெறும் வயதுடைய சுமார் 2 மில்லியன் பெண்கள் இத்தகைய நிலைமைகளில் வாழ்கிறார்கள். இது, சமீபத்திய தசாப்தங்களில் கிராமப்புற சுகாதாரப் கவனிப்புகள் குறைக்கப்பட்டதால் பெரிதும் மோசமாகி உள்ளது. பொதுவாக சிறிய மற்றும் குறைவான நிதி ஒதுக்கீடுகள் பெறும் நூற்றுக்கணக்கான கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை மையங்களை மூடப்பட நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

சிறப்பான மருத்துவமனைகள் அல்லது நிபுணத்துவம் மிக்க சிகிச்சை மையங்களில் இருந்து ஒரு சில மைல்கள் தொலைவில் வாழும் நகர்புற மற்றும் புறநகர பெண்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லாததாலும் செலவுகளை ஏற்க முடியாததாலும் அவர்களால் சிகிச்சையை அணுக முடியாமல் உள்ளனர் என்றளவுக்கு, மொத்த அமெரிக்க சமூகத்தில் ஒட்டுமொத்தமாக வறுமையின் அதிகரிப்பும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள சமூக தனிமைப்படலும் அதிக முக்கியத்துவம் கொண்டுள்ளது.

லூசியானா, ஜோர்ஜியா, அலபாமா, ஆர்கன்சாஸ், மிசிசிப்பி மற்றும் டெக்சாஸ் போன்ற ஏழ்மையான கிராமப்புற மக்களைக் கொண்ட தெற்கு மாநிலங்களின் சராசரி புள்ளிவிபரங்களை விட இவ்விரு காரணிகளும் மிகவும் மோசமாக பங்களிப்பு செய்கின்றன. அதிகபட்ச தனிநபர் வருமானங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றும் ஆனால் 50 மாநிலங்களில் நான்காவது மோசமான பிரசவக்கால இறப்பு விகிதம் கொண்ட மாநிலமாகவும் உள்ள நியூ ஜெர்சி போன்ற பெரிய நகர்புற மாநிலத்தில் தெளிவாக வறுமையும் சமத்துவமின்மையுமே முக்கிய காரணிகளாக உள்ளன.

நோய் மற்றும் கட்டுப்பாடு மையங்களும் பிற அமைப்புகளும் பிரசவக்கால இறப்பில் இன பாகுபாடுகளை வலியுறுத்துகின்றன. இவை குறிப்பிடத்தக்கவை தான். வெள்ளையினப் பெண்களின் 100,000 பிரசவங்களில் 26.6 பிரசவக்கால மரணங்கள், ஹிஸ்பானிய பெண்களில் 28 மரணங்களுடன் ஒப்பிடுகையில், கறுப்பின பெண்களின் பிரசவக்கால இறப்பு விகிதம் 69.9 ஆக உள்ளது. பூர்வீக அமெரிக்க மற்றும் பூர்வீக அலாஸ்கா பெண்களின் பிரசவக்கால இறப்பு விகிதம் 50 க்கும் அதிகமாக உள்ளது. அவர்களின் இறப்புகளில் 90 சதவீதம் தடுக்கக்கூடியதாக கருதப்பட்டது.

கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக, Healthy Waltham அமைப்பு தேவையானவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய போது, மாசசூசெட்ஸின் வால்தம் நகரின் செயிண்ட் மேரி தேவாலயத்தில் ஒரு கர்ப்பிணி பெண் நூற்றுக்கணக்கானவர்களுடன் உணவுப் பொருட்களுக்காக வரிசையில் நிற்கிறார். [AP Photo/Charles Krupa]

ஆனால் வெள்ளையினப் பெண்களை மட்டுமே கருத்தில் கொண்டாலும் கூட, தாய்மார்களின் பிரசவக்கால மரணங்களில் எந்தவொரு மேற்கத்திய ஐரோப்பிய நாட்டை விடவும் மூன்று மடங்கு அதிகமாக தொழிற்துறைமயமான நாடுகளிலேயே அமெரிக்கா ஏன் இப்போதும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதற்கு, 'அமைப்புரீதியான இனவெறி' பற்றிய கருத்துக்கள் விளக்கமளிக்கவில்லை. அமெரிக்காவில் வெள்ளையினப் பெண்களின் விகிதம், சீனப் பெண்களின் விகிதத்திற்கு நிகராக உள்ளது. அதுவும் குறிப்பாக நூறு மில்லியன் கணக்கான சீனப் பெண்கள் இப்போதும் பெரும் வறுமையில் உள்ள கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள்.

கர்ப்ப காலத்தின் போது, பிரசவத்தின் போது அல்லது அதற்கடுத்த ஆண்டில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையில் ஏற்கனவே படுமோசமான மட்டங்களில் இருந்த கருப்பினப் பெண்களை விட, வெள்ளையின மற்றும் ஹிஸ்பானிய பெண்களின் பிரசவக்கால இறப்பு விகிதம் கோவிட் பெருந்தொற்றின் போது மிக வேகமாக அதிகரித்துள்ள விஷயமும் உள்ளது.

அமெரிக்காவில் பல சமூகப் புள்ளிவிபரங்களைப் போலவே, இதுவும் வர்க்கக் நிலைப்பாடுகளில் அடிப்படையில் பிரித்துக் காட்டப்படுவதில்லை. ஆனால் வருமானத்திற்கும் பிரசவக்கால இறப்புக்கும் இடையே ஒரு நேரடியான தொடர்பு உள்ளது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆளும் உயரடுக்கில் உள்ள தாய்மார்களின் பிரசவக்கால உயிரிழப்புகள், மிகவும் அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே ஏற்படுகின்றன. அதுவும் பணத்தைக் கொண்டு சிறந்த மருத்துவக் கவனிப்பு வசதிகளைப் பெற்றாலும் கூட தீர்க்க முடியாத மிகவும் சிக்கலான அல்லது புதிய மருத்துவப் பிரச்சினைகளின் போதே ஏற்படுகின்றன.

மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் பிற்போக்குத்தனமான சமூகக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள வருமான இடைவெளியின் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறைந்த வருமானக் குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீடு வழங்கும் மத்திய-மாநில அரசு திட்டமான அரசு மருத்துவ உதவித் திட்டம் (Medicaid), பிரசவத்திற்குப் பின்னர் அதிக காலத்திற்கு கூடுதல் சிகிச்சை மற்றும் கவனிப்புக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் கூட, பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 60 நாட்களுக்கு மேலான கவனிப்பை வழங்குவதாக இல்லை.

ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களின் கோவிட் 'பரவவிடும்' கொள்கை இந்த நெருக்கடியை இன்னும் மோசமாக்கி உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கு உள்ளானால் கடுமையாக நோய்வாய்ப்படும் பெரும் ஆபத்தில் உள்ளனர். அனைத்திற்கும் மேலாக, இந்தப் பெருந்தொற்றை அகற்றவதற்கான எந்தத் தீவிர முயற்சியும் நிராகரிக்கப்பட்டிருப்பதால், இது நீடித்திருப்பது கோவிட் நோயாளிகளால் மருத்துவ சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிவதை அர்த்தப்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள் அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய பெண்களுக்கான கவனிப்பு போன்ற அவசரகால சிகிச்சை அல்லாதவற்றுக்கான ஆதாரவளங்களைக் குறைத்து விடுகிறது.

கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாசிசவாத பிரச்சாரத்தின் காட்டுமிராண்டித்தனமான விளைவுகளாலும், ஏழை மற்றும் தொழிலாள வர்க்கப் பெண்கள் மீதான அமைப்புரீதியிலான புறக்கணிப்பு மிகப் பெரியளவில் அதிகரிக்க உள்ளது. பிரசவக்காலம் மிகவும் உயிருக்கு ஆபத்து காலமாக மாறி வரும் நிலைமைகளின் கீழ், அதிதீவிர வலதுசாரிகளோ, பெண்களின் உடல்நலனுக்கு பெரும் ஆபத்து இருந்தாலும் கூட, பிரசவத்தைக் கட்டாயமாக்கும் புதிய சட்டங்களையும் நடைமுறைகளையும் கோரி வருகின்றனர்.

Roe v. Wade வழக்கை உச்சநீதிமன்றம் இரத்து செய்து, கர்ப்பத்தைக் கலைப்பதற்கான அரசியலமைப்பு உரிமையை அது பெண்களிடம் இருந்து பறித்து சில மாதங்களுக்குப் பின்னர், பல மாநிலங்கள் கருக்கலைப்புக்குத் தடைவிதிக்கும் அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களை நிறைவேற்றி உள்ளன, அல்லது அதைச் செய்வதை மிகவும் கடினமானதாக ஆக்கி உள்ளன.

அமெரிக்காவில் நடக்கும் மொத்தக் கருக்கலைப்புகளில் பாதி இரண்டு மாத்திரை ஒழுங்குமுறையின் ஒரு முக்கிய அம்சமான மைஃபெப்ரிஸ்டோன் (mifepristone) மருந்து விற்பனைக்கு நாடுதழுவி தடை விதிக்கும் ஒரு முயற்சியே சமீபத்திய சட்டப்பூர்வத் தாக்குதலாக உள்ளது.

இங்கே இலாபநோக்கத்திற்கான மருத்துவத்தின் கொடூரமான விளைவுகள், “கர்ப்பிணிகளை வெறுங்கால்களோடு' வைத்திருக்க வேண்டும் என்ற  அந்த நாட்களை நினைவூட்டும் விதமாக வேண்டுமென்றே செய்யப்படும் ஒரு சமூகக் கண்ணோட்டத்தின் காட்டுமிராண்டித்தனத்துடன் ஒன்றிணைகின்றன.

பிரசவக்கால இறப்பு விகிதம் அதிகரிப்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அரசியல் எச்சரிக்கை மணியாகும். மிகவும் அடிப்படை சமூக செயல்பாடுகளாக இருந்தாலும் கூட, மனிதகுல இனப்பெருக்கத்தை மிகவும் பயங்கரமான விளைவுகளுடன் முதலாளித்துவ நெருக்கடி அச்சுறுத்துகிறது. குழந்தைப் பிறப்பு மற்றும் பிரசவக்கால பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும், தாய், குழந்தை மற்றும் அதற்குப் பின்னர் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சமூக ஆதரவை வழங்கவும் அவசியமான ஒரு கொள்கைக்காக தொழிலாள வர்க்கம் மட்டுமே போராடும். இதில் அதிநவீன இலவச மருத்துவக் கவனிப்பு மட்டுமல்ல, மாறாக பிரசவக்காலத்தின் போது வருமான உதவிகள் மற்றும் சம்பளத்துடன் கூடிய பிரசவக்கால விடுப்பு மற்றும் அதற்குப் பின்னர் அவர்களைக் கவனித்துக் கொள்ள தந்தையருக்கான விடுப்பு ஆகியவையும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.

Loading