முன்னோக்கு

ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ பிரச்சார நடவடிக்கையின் பாகமாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புட்டினுக்கு எதிராக கைது பிடியாணைப் பிறப்பிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வெள்ளிக்கிழமை ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC), போர்க் குற்றங்கள் புரிந்ததாக கூறி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் குழந்தைகள் உரிமைகளுக்கான ரஷ்யாவின் ஆணையர் மரியா லவோவா-பெலோவாவுக்கும் கைது பிடியாணைகள் பிறப்பித்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் இருந்து குழந்தைகளைக் கடத்துவதில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவதால் அவருக்கு ஒரு கைது பிடியாணை பிறப்பித்துள்ளதாக வெள்ளிக்கிழமை, மார்ச் 17, 2023 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது. [AP Photo/Gavriil Grigorov, Sputnik, Kremlin Pool Photo via AP]

இது வெளிப்படையாகவே ஒரு அரசியல் நகர்வாகும். அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரின் ஒரு பாரியளவிலான விரிவாக்கத்தை முடுக்கி விட்டு வருகின்ற நிலையில், மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்தை செய்வதே இந்தப் போரின் நோக்கம் என்று அரசாங்க அதிகாரிகள் முன்பினும் பகிரங்கமாக அறிக்கைகள் வெளியிட்டு வருவதற்கு மத்தியில், இது நடக்கிறது.

புட்டின் மற்றும் லவோவா-பெலோவாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள், 1998 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ரோம் சட்ட சாசனத்தின் ஷரத்து 8 இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. “ஜெனீவா ஒப்பந்தங்களின் கடுமையான மீறல்கள்' மற்றும் சர்வதேச சட்டத்தின் 'பிற தீவிரமான மீறல்களும்' இந்த ரோம் சட்ட சாசனத்தில் உள்ளடங்குகின்றன. “மக்களை (குழந்தைகளை) சட்டவிரோதமாக நாடு கடத்தும் போர் குற்றம், அதாவது உக்ரேனின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து ரஷ்ய கூட்டமைப்புக்குள் சட்டவிரோதமாக மக்களை (குழந்தைகளை) கொண்டு செல்லும் போர் குற்றம்' என்று அந்த கைது பிடியாணைகள் குறிப்பாக குற்றஞ்சாட்டுகின்றன.

தாக்கல் செய்யப்பட்ட உத்தியோகபூர்வ பிடியாணைகளுக்குச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர். ஒரு பிரிட்டிஷ் வழங்குரைஞரும் ICC இன் தலைமை வழக்குதொடுனருமான கரீம் ஏ.ஏ.கான் அதை அறிவித்தார். இது, ரஷ்ய அரசாங்கத்தின் தரப்பில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' மற்றும் 'இனப்படுகொலை' நடத்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, பல மாதங்களாக பைடென் நிர்வாகம் முன்னெடுத்த பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறது.

பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள வேளையில், அவற்றுக்கு அடித்தளத்தில் இருக்கக்கூடிய ஆதாரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குழந்தைகளை 'சட்டவிரோதமாக நாடுகடத்துவது' பற்றிய குறிப்பிட்ட கருத்துக்கள், பைடென் நிர்வாகம் மற்றும் உக்ரேனிய அரசாங்கத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நியூ யோர்க் டைம்ஸ் உட்பட அமெரிக்க ஊடகங்களில் பரப்பப்பட்டன.

பெப்ரவரியில் யேல் பல்கலைக்கழகம் வெளியிட்ட மற்றும் பெருமளவில் மேற்கோள் காட்டப்பட்ட ஓர் ஆய்வு, 6,000 குழந்தைகள் ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறுகிறது. இந்த ஆய்வை நடத்திய அமைப்பானது, அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் போர் பிரச்சாரத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக நிறுவப்பட்ட 'மோதல் கண்காணிப்பு' (Conflict Observatory) அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த 'கண்காணிப்பு' அமைப்புக்கான முதல் 6 மில்லியன் டாலர் நிதியை வெளியுறவுத்துறையின் 'மோதல் மற்றும் ஸ்திரப்படுத்தும் செயல்பாடுகளுக்கான ஆணையம்' வழங்கியது. “அமெரிக்க தேசிய நலன்களுக்குக் குழிபறிக்கும் மோதலை எதிர்நோக்கி, தடுத்து, பதிலளிப்பதே' அதன் இலக்கு என்பதாக அவ்வமைப்பு குறிப்பிடுகிறது.

உக்ரேனில் போரால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பகுதிகளில் இருந்து, குறிப்பாக அனாதை இல்லங்களில் இருந்து குழந்தைகள் உட்பட மக்கள் ரஷ்யாவுக்கு நகர்ந்திருக்கிறார்கள் என்பதை ரஷ்யா அதன் தரப்பில் ஒப்புக் கொண்டுள்ளது. ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இன்னமும் தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு தொழிலாளர்கள் உட்பட அனைவருமே உடந்தையாளர்களாக குற்றஞ்சாட்டப்பட்டு அதிவலது உக்ரேனிய படைகளால் கொல்லப்படும் ஆபத்தில் உள்ளனர்

போர்க்குற்றங்கள் பற்றிய முந்தைய குற்றச்சாட்டுகளைப் போலவே, அமெரிக்கா தலைமையிலான இந்தப் பிரச்சாரமும் அதிர்ச்சியூட்டும் மட்டத்திற்கு பாசாங்குத்தனத்தால் நிறைந்துள்ளது. எந்தவொரு சட்டப்பூர்வ மதிப்பீட்டின்படி பார்த்தாலும், இரண்டாம் உலகப் போர் முடிவில் இரண்டு ஜப்பானிய நகரங்களை அணுஆயுதங்களைக் கொண்டு அழித்ததில் இருந்து, 1950-1953இக்கு இடையே ஒரு கட்டிடம் கூட விடுபடாமல் வடகொரியாவை தரைமட்டமாக்கியது வரையில், அமெரிக்கா தலைமையிலான வியட்நாம் போரில் நடத்தப்பட்ட பாரிய வெகுஜன படுகொலைகள் மற்றும் பைரோகெமிக்கலைக் (pyrochemical) கொண்டு நாசமாக்கியது வரையில், புட்டினுக்கு எதிராக கூறப்படும் எந்தவொரு குற்றங்களை விடவும் சோவியத் ஒன்றிய கலைப்புக்குப் பின்னர் முடிவின்றி விரிவாக்கப்பட்டு வந்த முப்பதாண்டு கால போர்கள் மூலமாக சமீபத்திய நினைவுகளில் உள்ள படுமோசமான குற்றங்களுக்கு ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகமும் குற்றவாளியாக உள்ளது.

புட்டினுக்கு எதிரான போர் குற்றங்கள் பற்றி குற்றஞ்சாட்டும் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கும் இந்த அரசு தான், ஈராக்கின் அபு கிரைப் சித்திரவதைகளுக்கும், ஆப்கானிஸ்தானில் திருமண விழாக்களிலும் பொதுமக்கள் ஒன்றுகூடிய பிற இடங்களிலும் குண்டுவீசியதற்கும், குவாண்டனாமோ வளைகுடா சிறை மற்றும் ட்ரோன் படுகொலைகளுக்கும் பொறுப்பானது.

குழந்தைகளைத் தவறாக நடத்தியது குறித்த பிரச்சினை இந்தக் கைது பிடியாணைகளில் இருப்பதால், நாம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் மேடலின் ஆல்பிரைட்டின் இழிவான அறிக்கையை நினைவு கூர்ந்தாக வேண்டும். ஈராக்கிற்கு எதிராக அமெரிக்க ஆதரவிலான தடையாணைகளால் ஓர் அரை மில்லியன் குழந்தைகள் இறந்ததைக் குறித்து 1996 இல் அவர் கூறுகையில், “நாங்கள் இதற்கு கொடுக்கப்பட்ட விலையை மதிப்புடையதாக நினைக்கிறோம்,” என்றார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு ஒரு கட்டத்தில் அமெரிக்க அரசு அதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுக்களைச் சுமத்தவும் வழக்கிற்கு இழுக்கவும் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையில், அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கூட அங்கீகரிப்பதில்லை. புட்டினுக்கு எதிராக ரோம் சாசனத்தின் கீழ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரோம் சாசனத்தில் பில் கிளிண்டன் கையெழுத்திட்டிருந்தார் என்றாலும், அது ஒப்புதலுக்காக ஒருபோதும் செனட் சபைக்கு அனுப்பப்படவில்லை. 'முன்கூட்டிய போர்' மற்றும் சித்திரவதைகளை நியாயப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் வழக்கறிஞர்கள் 2002 இல் வரையறைகளை எழுதிக் கொண்டிருந்த போது தான், அமெரிக்காவுக்கு அந்த சாசனத்தை அங்கீகரிக்கும் உத்தேசம் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு அவர் தகவல் அனுப்பினார்.

ஆப்கானிஸ்தானில் சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை உட்பட அமெரிக்க இராணுவம் மீதான போர் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் கிழக்கு ஐரோப்பாவில் சிஐஏ சித்திரவதை மையங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையாளர்கள் கவனிக்கத் தொடங்கியதும், 2020 இல் ட்ரம்ப் நிர்வாகம், அவர்களுக்குப் பொருளாதார தடையாணைகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பதாக அறிவித்தது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் புதிய வழக்குதொடுனராக கான் 2021 இல் நியமிக்கப்பட்ட உடனேயே, அமெரிக்க சித்திரவதை மீதான விசாரணையை நிறுத்தினார்.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை இன்னும் பெரியளவில் விரிவாக்குவதற்கான இந்தப் பிரச்சார தாக்குதலுக்கு எரியூட்டுவதே இந்த பிடியாணைகளின் மைய நோக்கமாகும். இது வெளியிடப்பட்ட நேரம், திங்கட்கிழமையில் இருந்து மாஸ்கோவுக்கான சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணத்துடன் தெளிவாக ஒத்துப்போகும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஒரு போர் நிறுத்தம் உட்பட போரைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான ஒரு முன்மொழிவை விவாதிப்பதே சீன அதிபர் பயணத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக உள்ளது.

ஆனால் அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பவில்லை மாறாக அதை விரிவாக்க விரும்புகின்றன. வெள்ளிக்கிழமை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழுவில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கெர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நிச்சயமாக நாங்கள் ஒரு போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை ஆதரிக்க மாட்டோம்' என்றார். உக்ரேனியப் படைகளின் பேரழிவுகரமான உயிரிழப்புகளுக்கு மத்தியிலும், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு மிகப் பெரிய தாக்குதலுக்கான தயாரிப்பில், அந்நாட்டுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்பி வருகின்றன.

ரஷ்யாவை உடைக்கும் நோக்கில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரை நியாயப்படுத்தி, புட்டின் அரசாங்கத்தை ஒரு சட்டவிரோத ஆட்சி என்று முத்திரை குத்துவதற்கான முயற்சியின் பாகமாக போர் குற்றங்கள் பற்றிய இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கான ஒரு ஊடகமாக செயல்படும் நியூ’யோர்க் டைம்ஸ், “குற்றவியல் நீதிமன்றத்தின் கைது பிடியாணை புட்டினின் சட்டவிதிவிலக்கு வட்டத்தை ஊடுருவுகிறது' என்ற தலைப்பில் இந்த பிடியாணைகள் குறித்த அதன் கட்டுரையில் எழுதுகையில், அவர்கள் 'டர்ஃபூர் (Durfur) அட்டூழியங்களுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட சூடானின் பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிபர் ஒமர் ஹாசன் அல்-பஷீர்; பால்கன் போர்களின் போது துஷ்பிரயோகங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட சேர்பிய தலைவர் ஸ்லோபோடன் மிலோசெவிக்; இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நூரெம்பேர்க்கில் தூக்கிலிடப்பட்ட நாஜிக்கள் என இவர்களின் வரிசையில் திரு. புட்டினை' நிறுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டது.  

அதில் உள்ளடங்கியுள்ள விஷயம் என்னவென்றால், குற்றச்சாட்டுகளின் உடனடி தாக்கம் என்னவாக இருந்தாலும், மிலோசெவிக் இக்கு ஏற்பட்டதைப் போலவே புட்டினின் தலைவிதியும் அவ்வாறே முடியும் வரையில் இந்தப் போர் விரிவாக்கப்படும் என்பதே புட்டினுக்கு மட்டுமல்ல மாறாக ஜி க்கும் சமிக்ஞை அளிப்பதாக உள்ளது.

அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் இந்த மோதலுக்குள் நேட்டோ துருப்புக்களைக் கொண்டு செல்வதற்கான திட்டங்களைத் தற்போது திரைக்குப் பின்னால் விவாதித்து வருகின்றன. போர் குற்றங்கள் மற்றும் 'இனப்படுகொலை' பற்றிய இந்தப் பிரச்சாரம், போருக்கான ஒரு நியாயப்படுத்தலாக பயன்படுத்துவதற்கான எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் அல்லது இட்டுக்கட்டப்பட்ட சம்பவத்திற்கும் ரஷ்யா மீது பழி போட பயன்படுத்தப்படும்.

இது எதுவுமே உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கோ அல்லது ரஷ்யத் தன்னலக்குழுவின் ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புட்டின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கோ ஆதரவை வழங்கவில்லை. உக்ரேன் மீதான படையெடுப்பானது, ரஷ்யாவை அமெரிக்காவும் நேட்டோவும் சுற்றி வளைத்ததற்கு இந்தத் தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான மற்றும் திவாலான ஒரு விடையிறுப்பாகும். ஆனால் அமெரிக்கா தான் திட்டமிட்ட முறையில் இந்தப் போரைத் தூண்டி விட்டது. இந்தப் போர் தொடங்கி ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், இப்போது, அது இன்னும் மிகப் பெரியளவில் பேரழிவுகரமான விரிவாக்கத்திற்குத் தயாரிப்பு செய்து வருகிறது.

Loading