பிரித்தானியாவில் 400,000 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், இலண்டனில் பல்லாயிரக்கணக்கானோரின் பேரணி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை இலண்டனில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் தேசிய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50,000 பேர் பங்கேற்றனர்.

ட்ராபல்கர் சதுக்கத்திற்கு அணிவகுத்துச் செல்வதற்கு முன், பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் நிலத்தடித் தொடர்வண்டி தொழிலாளர்கள், அத்துடன் இளநிலை மருத்துவர்கள் ஆகியோர் ஹைட் பூங்காவில் ஒன்றுதிரண்டனர். பிரதான பேரணியில் இணைவதற்கு முன், அரசு ஊழியர்கள் Embankment நிலத்தடித் தொடர்வண்டி நிலையத்தில் ஒன்றுதிரண்டு தங்கள் சொந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  

மார்ச் 15, 2023 அன்று, இலண்டனில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

நாடு முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்ற மறியல் போராட்டங்கள் உட்பட, பிரித்தானியாவின் மற்ற முக்கிய நகரங்களில் அதிகமான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தற்போது, 400,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் தேசிய கல்வி சங்கத்தில் (NEU) உள்ள 200,000 ஆசிரியர்கள் அரசாங்கத்தால் கடந்த ஆண்டு திணிக்கப்பட்ட அவமதிக்கும் 5 சதவீத ஊதிய ஒப்பந்தத்திற்கு எதிராக மேம்பட்ட ஊதிய உயர்வைக் கோருகின்றனர். இதற்கு முழு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதும், ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட பள்ளி வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அது பெறப்படவில்லை. மேலும், நீடித்த பணியாளர் பற்றாக்குறை, அதிக வேலை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் ஆசிரியர்களை பதவியில் தக்கவைப்பது ஆகியவற்றால் பாதிக்கப்படாத ஒரு கல்வி முறைக்காகவும் அவர்கள் போராடுகிறார்கள்.  

PCS தொழிற்சங்கத்தில் உள்ள 100,000 இற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் கடந்த ஆண்டு சுமத்தப்பட்ட 2 சதவீத ஊதிய உயர்வுக்கு எதிராக 10 சதவீத ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்தனர். சுமார் 70,000 இளநிலை மருத்துவர்கள் 3.5 சதவீத ஊதிய உயர்வுக்கு எதிராக போராடுகின்றனர். அவர்கள் 2008 முதல் உண்மையான ஊதியத்தில் 26 சதவீத சரிவைச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், 70,000 பல்கலைக்கழக ஊழியர்களும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஒன்றியத்தின் (UCU) உறுப்பினர்களும், குறைவான ஊதியம், வேலைப் பாதுகாப்பின்மை மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து வேலையை விட்டு வெளியேறினர்.

இலண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் உயிரோட்டமாகவும் உறுதியானதாகவும் இருந்தது. “எனது மாணவர்களுக்காக நான் வேலைநிறுத்தம் செய்கிறேன்-அவர்கள் சிறப்பானதைப் பெற தகுதியுடையவர்கள்”, “100 புதிய ஆசிரியர்கள் வாரந்தோறும் வெளியேறுகிறார்கள்-ஊதியத்தை உயர்த்துங்கள்”, “எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நிதியளியுங்கள்-மாறாக உங்கள் நண்பர்களின் நிதிக்கு அல்ல”, “சிறந்த ஊதியத்தை பெறும் உரிமைக்காக நீங்கள் போராடத்தான் வேண்டும்”, “கடைசியாக 2008 இல் பார்த்த எனது சம்பளத்தில் 26 சதவீதத்தை காணவில்லை”, “மருத்துவர்கள் பராமரிக்கின்றோம்– எனவே எங்களுக்கு நியாயமான ஊதியத்தை அளியுங்கள்”, “கைதட்டுவதால்   கட்டணங்களை செலுத்தமுடியாது”, “அதிக வேலை செய்கிறோம், குறைத்து மதிப்பிடப்படுகிறோம், குறைவான ஊதியம் பெறுகிறோம்”, மற்றும் “இறப்பிற்கான காரணம்: இரத்தப்போக்கு –கற்பித்தல் அமைதியாக தூங்கட்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய சுயமாகத்தயாரிக்கப்பட்ட பதாகைகளுடன் ஏராளமான தொழிலாளர்கள் அங்கு கூடியிருந்தனர்.  

ஒரு வருட காலத்திற்கு அதிகமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் மறைக்கப்பட்ட  தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள மோசமான நிலைக்கு எதிரான மிகப்பெரியளவில் போராடும் குணத்தின்  கண்ணோட்டத்தை இந்தக் காட்சிகள் வழங்கியுள்ளன. பெப்ரவரி 1 இல் பல துறைகளைச் சேர்ந்த அரை மில்லியன் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு வேலைநிறுத்தம் செய்ததை அடுத்து, கடந்த கோடையில் இங்கிலாந்தில் வேலைநிறுத்த அலை தொடங்கியதிலிருந்து, புதன்கிழமை நடந்த வேலைநிறுத்தம் மட்டுமே இரண்டாவது முறையாக மிகப்பெரியளவில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்துறை நடவடிக்கையாகும்.   

வேலைநிறுத்தத்தை அங்கீகரிப்தற்கு தேவையான நேரடி வாக்குச் சீட்டைக் கொண்ட அனைத்துத் தொழிலாளர்களும் உறுதியாக ஒருங்கிணைக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு  கொண்டுவரப்பட்டால், ஒரு பிரபல கால்பந்து நிபுணரின் ட்வீட்டுகளைக் கூட கையாள முடியாத கோடீஸ்வரர் ரிஷி சுனாக்கின் வெறுக்கப்பட்ட கன்சர்வேடிவ் அரசாங்கத்தை மண்டியிடச்செய்ய முடியும். மாறாக, தொழிற்சங்கத் தலைவர்களால் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நசுக்கப்படும் நிலையில், இந்த அரிதான பாரிய தொழிலாளர் நடவடிக்கைகள் என்பது ஒரு தற்காலிய நடவடிக்கையாக பயன்படுத்தப்படுகின்றது.  

பெப்ரவரி 1 ஆம் தேதிக்கும் இந்த மாதம் 15 ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒன்றரை மாத காலத்தில், இளநிலை மருத்துவர்களின் ஒவ்வொரு சுகாதார வேலைநிறுத்தப் போராட்டங்களும் Royal College of Nursing, Unite, GMB மற்றும் Unison ஆகிய தொழிற்சங்கங்களால் இடைநிறுத்தப்பட்டு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் அவை ஈடுபடுவதுடன், நூறாயிரக்கணக்கான ஊழியர்களை போராட விடாமல் கலைக்கின்றன. TSSA தொழிற்சங்கமானது, ஆயிரக்கணக்கான இரயில் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட துணை பணவீக்க ஊதிய ஒப்பந்தத்தின் மூலம் அதன் மோதலை தீர்த்து வைத்துள்ளது. இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கமானது, Network Rail நிறுவனத்தில் அதன் 20,000 உறுப்பினர்கள் செய்த வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தி வைத்துள்ளது. 

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் கிட்டத்தட்ட அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்தின் கல்வி நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான பள்ளி ஊழியர்கள் பணவீக்கத்திற்குக் குறைவான ஒப்பந்தம் தொடர்பாக  வாக்களிக்க எடுத்த நடவடிக்கையை இரத்து செய்தது. வேல்ஸில் உள்ள ஆயிரக்கணக்கான NEU உறுப்பினர்கள் புதன்கிழமை நடவடிக்கையில் சேரவிடாமல் தடுக்கப்பட்டனர். இதற்கு, வேல்ஸ் அரசாங்கம் இந்த ஆண்டு 6.5 சதவீதம், அதாவது அடுத்து 5 சதவீதம், மேலும் இந்த ஆண்டு கூடுதலாக 1.5 சதவீதம் என மொத்த தொகை ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை வழங்கியது தான் காரணமாகும். இருப்பினும், இது பணவீக்கத்திற்கு கணிசமாக குறைவானதே. இரயில் துறை மோதல்கள் ஏற்கனவே இரு நாடுகளிலும் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களில் சென்று முடிவடைந்தன என்பதுடன், சுகாதாரத் துறை வேலைநிறுத்தங்கள் இதேபோன்ற துணை-பணவீக்க முன்மொழிவுகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் புதைக்கப்பட்டன.   

இலண்டனில் மார்ச் 15, 2023 அன்று நடந்த வேலைநிறுத்தப் பேரணியின் ஒரு பகுதி

கடந்த 15ம் திகதி, பேரணியில் வழங்கப்பட்ட உரைகளானது, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இதேபோன்ற காட்டிக்கொடுப்புகளையே நாடுகின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன. 

NEU இன் இணைப் பொதுச் செயலாளர் மேரி பூஸ்டெட், டோரி கல்விச் செயலாளர் கில்லியன் கீகனிடம் இவ்வாறு முறையிட்டு நடவடிக்கைகளைத் தொடங்கினார், “தேசிய கல்விச் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து நீங்கள் பல வாரங்களாக நேரத்தை வீணடிப்பதோடு, பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு முன்பே நீங்கள் கடுமையான நிபந்தனைகளை முன்வைக்கிறீர்கள்.  

“ஆச்சரியம் என்னவென்றால் கில்லியன், பேச்சுவார்த்தைகள் எந்தளவிற்கு வேலை செய்கின்றன என்பது பற்றி  உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? அதுபற்றி வேல்ஸ் அரசாங்கம் புரிந்துகொள்கின்றது, ஸ்காட்லாந்து அரசாங்கம் புரிந்துகொள்கின்றது”.

“கதவைத் திறந்து, பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம்” என்று அவர் முடித்தார்.

சக இணைப் பொதுச் செயலாளரான கெவின் கோர்ட்னி நிறைவுரை நிகழ்த்தி, இதேபோல் டோரி அரசாங்கம் ‘வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தை பார்க்க வேண்டும்’ என்று கூறினார்.  

ட்ராபல்கர் சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் கெவின் கோர்ட்னி பேசுகிறார்

கோர்ட்னி பேரணியின் பொதுவான கோரிக்கையை சுருக்கமாகக் கூறி, டோரி அரசாங்கம் NEU நடவடிக்கையின் ‘உயர்ந்த தார்மீக நோக்கத்தை’ ‘காது கொடுத்துக் கேட்க வேண்டும்’ என்று மன்றாடினார். Royal Marines இல் 28 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு சிப்பாய், “உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நாளை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு முன், நாட்டிலுள்ள ஒவ்வொரு டோரி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற தலைவரின் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்… ஒவ்வொரு டோரி நாடாளுமன்ற உறுப்பினரையும் நீங்கள் தன்னை தொடர்பு கொள்வார்கள் என்று அவர்கள் பயப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியது உட்பட, பல ஆண்டுகளாக டோரி ஆதரவு வாக்காளர்கள் வேலைநிறுத்தத்தை ஆதரித்தது தொடர்பாக அவர் பல உதாரணங்களை வழங்கினார்.   

வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு உரிமையை குறிவைக்கும் சர்வாதிகார சட்டத்தினை நிறைவேற்ற முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அரசாங்கம் முனைவதாகக் கூறப்படுகிறது. இது, அதிகரிக்கும் பணவீக்க விகிதங்களின் விலையை தொழிலாளர்கள் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்தின் புதிய வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் தொழிற்சங்க அதிகாரத்துவம் கைவிடுவதைக் கருத்தில் கொண்டு, அதன் தலைவரால்  சட்டம் நிறைவேற்றப்படுவதுபற்றி ஒருமுறை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது: அதாவது, “அவர்கள் திசை திருப்புவதை நிறுத்த வேண்டும், குறைந்தபட்ச சேவை நிலைமைகளுடன் [(வேலைநிறுத்தங்கள்) மசோதாவை] நிறுத்த வேண்டும்” என்றது.

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டத்தால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலைக் குறைத்துக்காட்டுகின்றன. இதனால் அது தொழிலாள வர்க்கத்தில் இன்னும் கூடுதலான போர்க்குணத்தை தூண்டிவிடாதிருக்க உதவுவதுடன், மீதமுள்ள வேலைநிறுத்தங்களைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்குகின்றன. எனவே, தொழிற்கட்சி அரசாங்கம் வந்து, அதை இரத்து செய்யும் வரை காத்திருக்கும் திவாலான கொள்கையை அவர்கள் ஊக்குவிக்கின்றனர். 

மேலும், கடந்த ஆண்டு பதவிக்கு வந்த சுனாக் அரசின் முதல் முழு வரவு செலவுத் திட்ட தாக்கல் நாளன்று வேலைநிறுத்தம் நடைபெற்றது. சான்சிலர் ஜெர்மி ஹன்ட் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 11 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான இராணுவச் செலவுகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில், தொழிலாளர்கள் குறைந்த ஊதியம், ஓய்வூதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றைத் தாங்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை வரவு செலவுத் திட்டம் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. இதை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடந்து வரும் இளநிலை மருத்துவர்களின் ஊதியம் அரிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் 25 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வை வழங்குவதற்கு செலவாகும் வெறும் 2 பில்லியன் பவுண்டுகளுடன் ஒப்பிடுகிறது. பிரிட்டன், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் தீவிரமாக சிக்கியுள்ள நிலையிலும், சீனாவுடன் மோதுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்திய திட்டங்களில் நெருக்கமாக ஈடுபட்டுள்ள நிலையிலும், ஹன்ட் அறிவிப்பின் இந்த ஆரம்பகட்ட பில்லியன்கள் ஒரு முன்பணம் மட்டுமே, அதாவது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஒவ்வொரு சதமும் மறைமுகமாக பிடுங்கப்பட்டு போர் இயந்திரத்தை நோக்கிச் செலுத்தப்படவுள்ளது.    

பேரணியில் தீவிரமான வணிக சார்புள்ள, போருக்கு ஆதரவான மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சேர் கெய்ர் ஸ்டார்மரின் வலதுசாரி கட்சிக்கு அதிக மாயைகள் விதைக்கப்பட்டன. இருப்பினும் சிலர் கூட்டத்தின் முன் நேரடியாக தொழிற்கட்சியை குறிப்பிடுவதை வசதியானதாக உணர்ந்தனர். UCU இன் பொதுச் செயலாளர் ஜோ கிரேடி கூட்டத்திடம், “நேரம் வரும்போது டோரிகளை அகற்ற நீங்கள் வாக்களிப்பீர்களா?” என்று கேட்டார். இதற்கு தொழிற்சங்க காங்கிரஸின் (TUC) பொதுச் செயலாளர் பௌல் நோவாக், “அடுத்து தேர்தலில் அவர்களை வெளியேற்ற வாக்களிக்க விடுவோம்” என்று ஊக்கப்படுத்தினார்.  

ட்ராபல்கர் சதுக்கத்தில் நடந்த பேரணியில் தொழிற்சங்க காங்கிரஸின் தலைவர் பௌல் நோவாக் பேசுகிறார் 

நோவாக், “ஒற்றுமை என்பது இதுதான் என்று தோன்றுகிறது, உணர வைக்கிறது,” என்று உரக்கக் கூறி “அனைவரும் ஒன்றாக நிற்போம், ஒன்றாகப் போராடுவோம், ஒன்றாகச் செயல்படுவோம். அப்படித்தான் நாங்கள் வெற்றி பெறுகிறோம்” என்ற வாயடிப்புடன் கூறி முடித்தார். ஆனால் தன்னுடன் இணைந்த தொழிற்சங்கங்களில் உள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க காங்கிரஸானது அப்படியான எதையும் ஒழுங்கமைக்கவில்லை. பொது வேலைநிறுத்தம் பற்றிய தொழிற்சங்கத் தலைவர்களின் முன்னைய வாய்வீச்சுக்கள் கடந்த காலத்தில் நடந்த ஒரு விடயம் அவ்வளவுதான். தொழிற்கட்சி போன்ற மாற்றீட்டிற்கு அவர்கள் காத்திருக்கும் அதேவேளை, டோரி அரசாங்கத்தின் கேட்காத காதுகளிடம் முறையிடுமாறு தொழிலாளர்களை ஊக்குவிப்பதே அவர்களின் கொள்கையாக இருக்கிறது.  

பல தொழிலாளர்கள் தங்களின் உடனடி கோரிக்கைகளை கூட இந்த அடிப்படையில் வென்றெடுக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க, பல தசாப்தங்களாக தங்களின் வாழ்க்கைத் தரம் அரிக்கப்பட்டதையும் அவர்களால் மாற்றியமைக்க முடியாது என்பதையும் அறிவார்கள். என்றாலும் அவர்கள் தங்கள் போராட்டங்களை நசுக்கும் தொழிற்சங்க எந்திரத்தின் கட்டமைப்பிற்குள்ளேயே கட்டுப்பட்டு நிற்கின்றனர். தொழிற்சங்க அதிகாரத்துவமானது, ஒரு சில வரையறுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட நாட்களுக்கு மட்டும் நடவடிக்கை எடுத்து, பின்னர் அவற்றை முழுவதுமாக இரத்து செய்கிறது. காட்டிக்கொடுப்பு ஒப்பந்தங்களை அது பரிந்துரைப்பதற்கு எதிராகப் போராடுவதற்கு தொழிலாளர்கள் அவற்றிலிருந்து உடைத்துக்கொண்டு, சுயாதீனமான தங்கள் சொந்த சாமானிய தொழிலாளர் நடவடிக்கை அமைப்புகளை உருவாக்குவதற்கு ஒன்றுபட வேண்டும்.   

டோரி (கன்சர்வேட்டிவ்) அரசாங்கத்தையும் அதன் தொழிற்கட்சி ஆதரவாளர்களையும் கவிழ்க்கும் போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைத்து துறைகளுக்கும் வேலைநிறுத்தங்களை பரப்ப வேண்டும். மேலும், தொழிலாளர்களின் தேவைகளின் அடிப்படையில் ஊதியமும் நிபந்தனைகளும் செயல்படுத்தப்பட வேண்டுமே தவிர, பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாபங்களை பெருக்கும் நோக்கில் அல்ல. இந்த அவசர பணிக்கு சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP), சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC) அனைத்து உதவிகளையும் வழங்கும். 

Loading