உக்ரேன் போரில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், புதிய தாக்குதலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ரஷ்யாவுடனான போரில் 100,000 க்கும் மேற்பட்ட உக்ரேனிய படையினர் இறந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, அரசியல் செய்தித்தாளான பொலிரிக்கோ புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

21 ஆம் நூற்றாண்டின் பிற போர்களின் முன்னுதாரணத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து மொத்த உக்ரேனிய இறப்புகள் (கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்) அரை மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்டவையாக இருக்கின்றன என்பதே இதன் பொருளாகும்.

இந்த எண்ணிக்கையானது 100,000 உக்ரேனிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக அல்லது காயமடைந்ததாக நவம்பரில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்க் மில்லி அறிவித்தது போன்ற முந்தைய அறிக்கைகளை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

செப்டம்பர் 25, 2022 ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனின் ஷ்ச்சுரோவ் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பிராந்தியத்தில், எதிர்த்தாக்குதலில் பங்கேற்ற காயமடைந்த வீரர்களை வெளியேற்றும் போது உக்ரேன் சிப்பாய் ஒருவர் படகில் அமர்ந்திருக்கிறார்.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் உக்ரேனிய சிப்பாய்கள் முதலாம் உலகப் போருடன் ஒப்பிடக்கூடிய விகிதத்தில் கொல்லப்படுகிறார்கள் என்பதையே இது குறிக்கிறது, முதலாம் உலகப் போரின் போது, நான்கு ஆண்டுகளில் 450,000 உக்ரேனிய  இராணுவ சிப்பாய்கள் இறந்தனர்.

பக்முத்தின் (Bakhmut) இரத்தம் தோய்ந்த போரை விவரித்த பொலிரிகோ பின்வருமாறு  எழுதியது: 'அமெரிக்கா மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதாத ஒரு தென்கிழக்கு நகரத்திற்கான போரில் மாஸ்கோவும் கியேவும் தொடர்ந்து பிணங்களை குவித்து வருகின்றன.'

பக்முத்தில் பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய சிப்பாய்கள் இறந்த போதிலும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த நகரம் 'மூலோபாய மற்றும் செயற்பாட்டு மதிப்பை விட ஒரு குறியீட்டு மதிப்பு அதிகம்' என்றார்.

உண்மையில், இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை பொதுமக்களால் அறிய முடியாது, ஏனென்றால் உக்ரேனிய மற்றும் ரஷ்ய அரசாங்கங்கள் இரண்டும் உண்மையான இறப்பு எண்ணிக்கையை தங்கள் மக்களிடமிருந்து மறைக்கின்றன.

இறப்பு எண்ணிக்கை மற்றும் களத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அரைகுறை பயிற்சி பெற்ற உக்ரேனிய கட்டாய இராணுவ சிப்பாய்கள் நிலையெடுத்துள்ள ரஷ்ய முன்னரங்குகளுக்கு எதிரான தாக்குதலில் மீண்டும் ஈடுபட கட்டாயப்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

பொலிரிகோ இவ்வாறு தெரிவிக்கிறது:

அமெரிக்க அதிகாரிகள் உக்ரேனை ஒரு பெரிய வசந்தகால தாக்குதலுக்கு தயார்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர், இது மே மாதத்திற்குள் தொடங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நூற்றுக்கணக்கான மேற்கத்திய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள், முதல் முறையாக பாலங்களை போடக்கூடிய மற்றும் துருப்புக்கள் நதிகளைக் கடக்க அனுமதிக்கும் எட்டு கவச வாகனங்கள் உட்பட, தாக்குதலுக்காக உக்ரேனுக்கு செல்கின்றன...

அமெரிக்க உதவி பொதிகள் 'நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பின்னோக்கிச் செல்கின்றன, இந்த எதிர்த்தாக்குதலுக்கு உக்ரேனுக்கு என்ன தேவை என்பதை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன' என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார்.

உக்ரேனியப் படைகளுக்கு நிதியளித்தல், ஆயுதமளித்தல் மற்றும் வழிநடத்துதல் ஆகியவற்றின் போது, 'அமெரிக்க அதிகாரிகள் போரை எப்படி நடத்தவேண்டும் என்பதை கியேவ்விடம் சொல்லாமல் கவனமாக உள்ளனர்' என்று பொலிரிகோ எழுதுகிறது.

இரத்தம் சிந்துவதை இயக்குவதற்கு அவர்கள் 'தலையிடக்கூடாது' என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள்தான். போரின் இலக்குகள் மற்றும் விளைவுகள் 'உக்ரேனியர்களால்' தீர்மானிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தும் அதே வேளையில், உக்ரேனின் அரசியல் கட்டமைப்புகளை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளதோடு, அவை அனைத்து போர்-எதிர்ப்பு கட்சிகளையும் தடை செய்துள்ளன.

அமெரிக்காவும் நேட்டோவும் பெருமளவிலான ஆயுதங்களை நாட்டிற்குள் குவித்து வந்தாலும், உக்ரேனியப் படைகள் தொடர்ந்து பலத்தை இழந்து வருகின்றன. உக்ரேனிய இராணுவம் பக்முத்தில் ஏராளமான அனுபவமற்ற ஆட்களை போரில் ஈடுபடுத்தி வருகிறது, அங்கு போர்முனையில் சராசரி ஆயுட்காலம் நான்கு மணித்தியாலத்திற்கு குறைவாக இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

திங்களன்று, வாஷிங்டன் போஸ்ட் ஆனது ஒரு உக்ரேனிய தளபதியுடன் ஒரு நேர்காணலை வெளியிட்டது, அவர் 500 படையினர்களைக் கொண்ட அவரது முழு கட்டளைப் பிரிவும் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை விவரித்தார், மேலும் அவர் மட்டுமே எஞ்சியிருந்தார்.

வரவிருக்கும் தாக்குதல் 'ஒரு படுகொலை மற்றும் பிணக்குவியலாக  மாறினாலும் ... எப்படியும் எதிர்த்தாக்குதல் இருக்கும் என்று இவ்வாறு அவர் கூறினார். 

'போர் அனுபவம் கொண்ட ஒரு சில சிப்பாய்கள் மட்டுமே உள்ளனர்' என்று அந்தத் தளபதி போஸ்ட்டிடம் கூறினார். 'துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர்.'

போஸ்ட்டின் வார்த்தைகளில், அத்தளபதி, 'ஒருபோதும் கையெறி குண்டு வீசி அனுபவமற்ற, துப்பாக்கி சமரின் கீழ் தங்கள் நிலைகளை உடனடியாக கைவிட்ட மற்றும் துப்பாக்கிகளைக் கையாள்வதில் நம்பிக்கை இல்லாத புதிதாக நியமிக்கப்பட்ட படையினர்களுடன் போருக்குச் செல்வதை விவரித்தார்.'

ஊகிக்கத்தக்கபடி, 'தவறான தகவல்களைப் பரப்பியதற்காக' குபோல் என்று குறியிட்டு அழைக்கப்படும் அத் தளபதி, பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், 'வான்வழி தாக்குதல் துருப்புக்களின் 100% படையினர்கள், அணிதிரட்டலுக்காக அழைக்கப்பட்டு, இராணுவப் பிரிவுகளில் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு அடிப்படை மற்றும் தொழில்முறை பயிற்சி பெற்றனர்' என்று அறிவித்தார்.

'உக்ரேனிய பாராசூட் படையினர் முறையான பயிற்சியும் அவர்களின் உந்துதலும் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டன' — அநேகமாக அமெரிக்காவிலிருந்து வந்திருக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆனால், போரின் இரத்தக்களரியின் அளவு தெளிவாகி வரும் நிலையில், அமெரிக்காவும் நேட்டோவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேரடி தலையீட்டிற்கான தங்கள் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

வியாழனன்று, போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா, உக்ரேனுக்கு மிக் போர் விமானங்களை 'அடுத்த சில நாட்களில்' அனுப்புவதாக அறிவித்தார்.

நேட்டோ தரத்திலான ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்காக மேம்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மிக்ஸ், எஃப் -16 போன்ற நவீன நேட்டோ தரத்திலான போர் விமானங்களை அனுப்புவதற்கான அமெரிக்காவின் முடிவானது ஒரு முக்கியமான படியாகும்.

போலந்தின் இந்த அறிவிப்பானது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரேனில் தலையீடு செய்ய மாட்டோம் என்று உறுதியளித்ததன் மற்றொரு எல்லையைத் தாண்டுகிறது.

மார்ச் 2022 இல், பென்டகன் 'உக்ரேனுக்கு மிக் -29 களை கையளிப்பது அதிக ஆபத்து என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்' என்றும் 'நேட்டோவுடன் ஒரு இராணுவ விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும்' என்றும் அறிவித்தது.

உக்ரேனுக்கு எஃப்-16 போர் விமானங்களை அனுப்புமாறு அழைப்பு விடுக்கும் செனட்டர்கள் குழுவானது செவ்வாயன்று ஒரு கடிதம் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

'நாம் இப்போது மோதலில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்' என்று அறிவித்த செனட்டர்கள் பென்டகனை 'உக்ரேனுக்கு எஃப்-16 விமானங்களை வழங்குவதில் கடுமையான கவனம் செலுத்த வேண்டும்' என்று அழைப்பு விடுத்தனர்.

இறுதியாக, நேட்டோ தரைப்படைகளை நேரடியாக மோதலுக்குள் நிலைநிறுத்தாமல் அமெரிக்காவின் பரந்த போர் நோக்கங்களை அடைவது சாத்தியமில்லை.

இந்த வார தொடக்கத்தில் ரஷ்ய போர் விமானம் ஒன்றால் அமெரிக்க ரீப்பர் ட்ரோன் வீழ்த்தப்பட்டமையானது, இரு தரப்பிலும் பயங்கரமான உயிரிழப்புகளுக்கு மத்தியில், இந்த மோதல் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதலாக இன்னும் வெளிப்படையாக வெளிப்பட்டு வருகிறது என்பதற்கான சான்றாகும்.

Loading