ஜூலியன் அசாஞ்சின் துரோகிகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோன் பில்கர் ஒரு விருது பெற்ற ஆஸ்திரேலிய புலனாய்வு நிருபரும் ஆவணப்பட தயாரிப்பாளரும் ஆவார். 1970 முதல் அவர் 60 ஆவணப்படங்களை உருவாக்கியுள்ளார். இதில் Breaking the Silence: Truth and Lies in the War on Terror (2003), The War You Don’t See(2010), Utopia(2013) மற்றும்

The Coming War on China (2016) ஆகியவை அடங்கும் .

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை தீவிரமாக பாதுகாத்து, இங்கிலாந்தின் பெல்மார்ஷ் சிறையில் இருந்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிய சர்வதேசரீதியான ஒரு சில ஊடகவியலாளர்களில் பில்கரும் ஒருவராவார். சிட்னியில் (ஜூன் 2018 மற்றும் மார்ச் 2019இல்) சோசலிச சமத்துவக் கட்சியால் ஜூலியன் அசாஞ்சை விடுதலை செய்ய அழைப்பு விடுத்த பேரணிகளில் பில்கர் உரையாற்றினார்.

ஜோன் பில்கர் யூன் 17, 2018 உரையாற்றுகின்றார்

பில்கரின் வேண்டுகோளின் பேரில், மார்ச் 10 அன்று ஆஸ்திரேலியாவில் டேவிட் டார்மினோவினால் உருவாக்கப்பட்ட ஜூலியன் அசாஞ்ச், செல்சியா மேனிங் மற்றும் எட்வர்ட் ஸ்னோடென் ஆகியோரின் சிற்பத்தை 'தைரியத்தின் உருவங்கள்' என அறிமுகப்படுத்திவைப்பதைக் குறிக்கும் வகையில் அவர் சிட்னியில் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட பதிப்பை உலக சோசலிச வலைத்தளம்  கீழே வெளியிடுகிறது.

ஜூலியன் அசாஞ்சை நான் 2010 இல் லண்டனில் முதன்முதலில் நேர்காணல் செய்ததில் இருந்தே அவரை அறிவேன். அவரது வறண்ட, இருண்ட நகைச்சுவை உணர்வு எனக்கு உடனடியாக பிடித்திருந்தது. இது அடிக்கடி ஒரு தொற்றக்கூடிய சிரிப்புடன் கூடிவந்தது. அவர் வேறுபட்ட முறையில் ஒரு பெருமைமிக்க கூர்மையான மற்றும் சிந்தனைமிக்கவர். நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். பல நீதிமன்ற அறைகளில் அமர்ந்து அரசின் தீர்ப்பாயங்கள் அவரையும், ஊடகத்துறையில் அவர் செய்த தார்மீகப் புரட்சியையும் மௌனமாக்க முயற்சிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அரச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது மேசை மீது குறுக்கே சாய்ந்து என்னைப் பார்த்து: 'நீங்கள் அசாஞ் போன்ற ஒரு அலைந்துதிரியும் ஆஸ்திரேலியன் என உறுமினார். ஜூலியனுக்கு பிணை வழங்குவதற்கான தன்னார்வத் தொண்டர்களின் பட்டியலில் எனது பெயர் இருந்தது. வெளியேற்றப்பட்ட சாகோஸ் தீவுவாசிகளால் தொடரப்பட்ட இழிபுகழ்பெற்ற வழக்கில் அவரது பங்கு தொடர்பாக புகாரளித்த ஒருவராக நீதிபதி என்னைக் கண்டுகொண்டார். தற்செயலாக, விருப்பமில்லாது அவர் எனக்கு ஒரு பாராட்டு தெரிவித்தார்.

நான் ஜூலியனை பெல்மார்ஷில் வெகு காலத்திற்கு முன்பு பார்த்தேன். நாங்கள் புத்தகங்கள் மற்றும் சிறைச்சாலையின் சுவர்களில் மகிழ்ச்சி-கைதட்டல் முழக்கங்கள், சிறிய தண்டனைகள், அவர்கள் இன்னும் அவரை உடற்பயிற்சி அறையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள் போன்ற அடக்குமுறையின் முட்டாள்தனம் பற்றி பேசினோம். புல்வெளியை மிதிக்கக்கூடாது என எச்சரிக்கும் சின்னங்கள் இருக்கும் கூண்டு போன்ற பகுதியில் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் அங்கு புற்கள் இல்லை. நாங்கள் சிரித்தோம்; சிறிது நேரத்திற்கு, சில விஷயங்கள் மிகவும் மோசமாகத் தெரியவில்லை.

நிச்சயமாக சிரிப்பு ஒரு கவசமாக இருந்தது. சிறைக் காவலர்கள் தங்கள் சாவியைத் தட்டத் தொடங்கியபோது, அவர்கள் விரும்பியபடி, அது எங்கள் நேரம் முடிந்துவிட்டதைக் குறிக்கிறது. அவர் அமைதியாகிவிட்டார். நான் அறையை விட்டு வெளியேறியதும் அவர் எப்போதும் செய்வது போல் முஷ்டியை உயர்த்தி பிடித்துக் கொண்டார். அவர் தைரியத்தின் ஒரு உருவமாகும்.

ஜூலியனுக்கும் அவருடைய விடுதலைக்கும் இடையில் நிற்பவர்களுக்கு தைரியம் இல்லை, கொள்கை இல்லை மற்றும் மரியாதை இல்லை. நான் வாஷிங்டனில் உள்ள மாபியா ஆட்சியைக் குறிப்பிடவில்லை. அவர்கள் ஒரு நல்ல மனிதனை துன்புறுத்துவது நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவில் இன்னும் நியாயமான ஜனநாயகம் இருப்பதாக கோருபவர்களுக்குமாகத்தான் கூறுகின்றேன்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அந்தோனி அல்பானீஸ் தனக்குப் பிடித்தமான வார்த்தைகளான ‘போதும் அனைத்தும் போதும்’ என்று கூறிக் கொண்டிருந்தார். ஜூலியனின் குடும்பம் உட்பட எங்களில் பலருக்கு அவர் விலைமதிப்பற்ற நம்பிக்கையைக் கொடுத்தார். ஒரு பிரதம மந்திரியாக ஜூலியன் செய்தவற்றிற்கு அவர் 'அனுதாபம் காட்டவில்லை' என்று தூற்றும் வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டார். வாஷிங்டன் அவரை எச்சரித்ததால், அவர் கூறிய கருத்துக்களை மறைக்க வேண்டிய அவசியம் இருந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அல்பானீஸ் எழுந்து நிற்பதற்கு தார்மீக தைரியம் இல்லாவிட்டாலும் விதிவிலக்கான அரசியல் தைரியம் தேவைப்படும். அதுவும் அதே நாடாளுமன்றத்தில் மே மாதம் “பிரதமர் என்ற முறையில், ஒரு பெரிய, பழிவாங்கும் அநீதிக்கு ஆளான ஒரு ஆஸ்திரேலிய குடிமகனை வீட்டிற்கு அழைத்து வருவது எனது அரசாங்கத்தின் பொறுப்பாகும். உண்மையான பொதுச் சேவையாக இருக்கும் ஒரு வகையான ஊடகத்துறைக்காக துன்புறுத்தப்பட்ட ஒரு மனிதனாக அவர் பொய் சொல்லவில்லை அல்லது ஏமாற்றவில்லை. ஆனால் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய உண்மையை மக்களுக்குச் சொல்லியிருக்கிறார்” என ஜோ பைடெனுக்கு முன்பாக கூற இந்த தைரியம் வேண்டும்.

ஒரு தைரியமான மற்றும் தார்மீக பிரதம மந்திரி அல்பானீஸால் “அமெரிக்காவிடம் அவரைக் கையளிக்குமாறு கேட்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்பப் பெற வேண்டும்: பிரிட்டனின் ஒரு காலத்தில் போற்றப்பட்ட நீதி மன்றங்களை கறைபடுத்திய கேலிக்கூத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், ஜூலியன் அசாஞ்சை அவருடைய குடும்பத்திடம் நிபந்தனையின்றி விடுவிக்க அனுமதிக்கவும். ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் கூறியதுபோல் ஜூலியன் பெல்மார்ஷில் உள்ள தனது சிறை அறையில் இருப்பது ஒரு சித்திரவதைச் செயலாகும். சர்வாதிகாரம் இப்படித்தான் நடந்து கொள்கிறது” எனக்கூறவும் முடியும்.

துர்ரதிஸ்டவசமாக, ஜூலியனை ஆஸ்திரேலியா சரியாக கையாளும் என்ற எனது பகல் கனவு அதன் எல்லையை எட்டிவிட்டது. அல்பானிஸில் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் ஏமாற்றம் இப்போது ஒரு துரோகத்திற்கு அருகில் உள்ளது. அதற்காக வரலாற்று நினைவு அவரை மறக்காது, பலர் அவரை மன்னிக்க மாட்டார்கள். அப்படியானால், அவர் எதற்காகக் காத்திருக்கிறார்?

2013 இல் ஜூலியனுக்கு ஈக்குவடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியது, பெரும்பாலும் அவரது சொந்த அரசாங்கம் அவரைக் கைவிட்டதால்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது மட்டுமே அதற்கு பொறுப்பான ஜூலியா கில்லார்ட்டின் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு அவமானத்தை ஏற்படுத்த வேண்டும்.

அது உண்மையை கூறவதற்காக விக்கிலீக்ஸை மூடுவதில் அமெரிக்கர்களுடன் ஒத்துழைக்க கில்லார்ட் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவரது 'சட்டவிரோத' வெளியீட்டிற்காக ஆஸ்திரேலிய மத்திய போலீஸ் அசாஞ்சை கைது செய்து அவரது கடவுச்சீட்டை எடுக்கவேண்டும் என்று விரும்பினார். அசான்ஜ் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால் அவர்களுக்கு அத்தகைய அதிகாரங்கள் இல்லை என்று ஆஸ்திரேலிய மத்திய போலீஸ் சுட்டிக்காட்டியது.

ஜூலியன் அசாஞ்சை நடத்தும் விதத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் அசாதாரணமான இறையாண்மையை நீங்கள் அளவிட முடியும் என்பது போல் உள்ளது. அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளின் முன் கில்லார்டின் கேடுகட்ட மண்டியிடல், யூ டியூப்பின் பதிவுகளில் கோமாளிக் கூத்தாகியுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் 'பெரிய துணை' என்று அவர் மீண்டும் கூறினார். அல்லது அது ‘சின்ன துணையா?

அவரது வெளியுறவு மந்திரி பாப் கார், மற்றொரு தொழிற்கட்சி அமைப்பின் அரசியல்வாதி ஆவார். விக்கிலீக்ஸால் ஒரு அமெரிக்க தகவல் கொடுப்பவர் என்று அம்பலப்படுத்தப்பட்ட அவர் ஆஸ்திரேலியாவில் வாஷிங்டனின் பயனுள்ள பையன்களில் ஒருவர். அவரது வெளியிடப்பட்ட நாட்குறிப்புகளில், ஹென்றி கிஸ்ஸிங்கரைப் பற்றி பாப் கார் பெருமையாகக் கூறினார். உண்மையில் இந்த பெரும் யுத்த வெறியரரான கிஸ்ஸிங்கர் வெளியுறவு மந்திரியை கலிபோர்னியா காடுகளில் முகாமிட அழைத்ததாக நாங்கள் அறிகின்றோம்.

ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் ஜூலியன் முழு தூதரக ஆதரவையும் பெற்றுள்ளார், அது அவருடைய உரிமை என்று பலமுறை கூறி வருகின்றன. அவருடைய வழக்கறிஞர் கரேத் பீர்ஸும் நானும் லண்டனில் உள்ள ஆஸ்திரேலிய தூதர் கென் பாஸ்கோவைச் சந்தித்தபோது, ‘அசாஞ்சின் வழக்கைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்’ என்று கேட்டேன். ‘நான் பத்திரிகைகளில் படித்தது மட்டும்தான்’ என்று அவர் சிரித்தபடி பதிலளித்தார்.

இன்று, பிரதம மந்திரி அல்பானீஸ் இந்த நாட்டை சீனாவுடன் அமெரிக்க தலைமையிலான அபத்தமான போருக்கு தயார்படுத்துகிறார். சீனாவை அடையக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றின் போர் இயந்திரத்திற்காக பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட உள்ளன. நாட்டின் மிகப் பழமையான செய்தித்தாள், சிட்னி மார்னிங் ஹெரால்ட் மற்றும் மெல்போர்ன் ஏஜ் ஆகியவற்றில் 'நிபுணர்கள்' போர் வெறியை உமிழ்வது ஒரு தேசிய அவமானம் அல்லது அவ்வாறனதாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா எதிரிகள் இல்லாத நாடு மட்டுமல்லாது சீனா அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும்.

அமெரிக்க-ஆஸ்திரேலியா படை இருத்தல் ஒப்பந்தம் எனப்படும் ஒரு அசாதாரண ஆவணத்தில் ஆக்கிரமிப்பிற்கான இந்த சீர்குலைந்த அடிமைத்தனம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புப் போரில் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மற்றும் பொருட்களை அணுகுவதற்கும், பயன்படுத்துவதற்கும் அமெரிக்க துருப்புக்கள் பிரத்தியேகக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன என்று இது கூறுகிறது.

இதில் கிட்டத்தட்ட அணு ஆயுதங்களும் அடங்கும். அல்பானீஸின் வெளியுறவு மந்திரி பென்னி வோங், இதை அமெரிக்காவை 'மதிக்கின்றார்', ஆனால் ஆஸ்திரேலியர்கள் இதைப்பற்றி தெரிந்துகொள்ளும் உரிமைக்கு எந்த மரியாதையும் கொடுக்கவில்லை.

இத்தகைய அடிமைத்தனம் எப்பொழுதும் இருந்தது. ஒரு குடியேற்ற தேசத்திற்கு இது வழமைக்குமாறான ஒன்றல்ல. அது இன்னும் பழங்குடியினருடன் சமாதானம் செய்துகொள்ளாதிருப்பதுடன் மற்றும் அவர்கள் வசிக்கும் இடத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றது. ஆனால் இப்போது அது ஆபத்தானது.

மஞ்சள் அபாயமாக சீனாவை காட்டுவது ஆஸ்திரேலியாவின் இனவெறி வரலாற்றிற்கு ஒரு கையுறை போல பொருந்துகிறது. இருப்பினும், அவர்கள் குறிப்பிட விரும்பாத மற்றொரு எதிரி இருக்கிறார். அது நாம் தான், பொதுமக்களாகும். தெரிந்து கொள்வது நமது உரிமை. மற்றும் இல்லை என்று சொல்வது நமது உரிமை.

2001 ஆம் ஆண்டு முதல், ஆஸ்திரேலியாவில் சில 82 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவை கருத்துச்சுதந்திரம், மாறுபட்ட கருத்தை தெரிவிக்கும் உரிமை போன்றவற்றை இல்லாதொழிக்கும் மற்றும் பெருகிய முறையில் இரகசிய அரசின் பனிப்போர் சித்தப்பிரமையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவையாகும். முக்கிய புலனாய்வு அமைப்பான ASIO இன் தலைவர் 'ஆஸ்திரேலிய மதிப்புகள்' குறித்து விரிவுரை நிகழ்த்துகின்றார். அதில் இரகசிய நீதிமன்றங்கள் மற்றும் இரகசிய ஆதாரங்கள் மற்றும் நீதியின் இரகசிய உருச்சிதைவுகள் உள்ளன. பசிபிக் முழுவதும் உள்ள ஆட்சியாளர்களுக்கு ஆஸ்திரேலியா இதற்கு ஒரு உத்வேகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பேர்னாட் கோலாறே, டேவிட் மக்பிரைட் மற்றும் ஜூலியன் அசாஞ் ஆகியோர் உண்மையை கூறிய ஆழமான தார்மீக மனிதர்களாவர். இவர்கள் இந்த சித்தப்பிரமையின் எதிரிகளும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுமாவர். மன்னருக்காக அணிவகுத்துச் சென்ற எட்வேர்டியன் படையினர் அல்ல. மாறாக, அவர்கள்தான் நமது உண்மையான தேசிய வீரர்கள்.

ஜூலியன் அசாஞ்சேயைப் பொறுத்தவரை, பிரதமருக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஜூலியனின் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் பைடெனுடன் அவர் தலையிடுவார் என்ற நம்பிக்கையுடன் ஒரு முகம் நம்மை ஏமாற்றுகிறது. மற்றொரு முகம் 'POTUS' உடன்படிக்கையினால் பூசிமெழுகிக்கொண்டு, அமெரிக்கர்களை அதன் இலக்குகளுக்காக அதன் அடிமைகளுடன் அவர்கள் விரும்பிய எதையும் செய்ய அனுமதிக்கிறது. இது நம் அனைவருக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது.

ஜூலியன் அசாஞ் தொடர்பாக அல்பானிஸ் ஆஸ்திரேலியாவையா அல்லது வாஷிங்டனையா ஆதரிப்பார்? அவர் 'உண்மையானவர்' என்றால், அப்பாவித்தனமான கண்களைக் கொண்ட தொழிற்கட்சி ஆதரவாளர்கள் கூறவது போல், அவர் எதற்காகக் காத்திருக்கிறார்? அவர் ஜூலியனின் விடுதலையைப் பெறத் தவறினால், ஆஸ்திரேலியா இறையாண்மையை இழந்துவிடும். நாங்கள் உத்தியோகபூர்வமாக சிறிய அமெரிக்கர்களாக இருப்போம். 

இது சுதந்திரமான ஊடகத்தின் உயிர்வாழ்வு பற்றியது அல்ல. இனி ஒரு சுதந்திர ஊடகம் இருக்கப்போவதில்லை. இந்த வலைத்தளம் போன்ற சுயமான வெளியீட்டு புகலிடங்கள் உள்ளன. மிக முக்கியமான பிரச்சினை சுதந்திரமாக இருப்பதற்கான நீதி மற்றும் நமது மிக மதிப்புமிக்க மனித உரிமையாகும்.

Loading