தொழில்நுட்பத் துறையில் வேலைகள் அழிப்புகள் பெருகி வருகையில் அமேசான் நிறுவனம் மேலும் 9,000 வேலை வெட்டுக்களை அறிவிக்கிறது 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அமேசான் திங்களன்று மேலும் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த நிறுவனம் குறைத்த ஊழியர்களின் எண்ணிக்கை 27,000 ஆயிரமாகும். பணிநீக்கங்கள் நிறுவனத்தின் உலகரீதியான பணியாளர்களில் 8 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. வேலை வெட்டு அறிவிப்பைத் தொடர்ந்து அமேசான் பங்குகள் திங்கள்கிழமை 1.25 சதவீதம் சரிந்தன.

அமேசானின் சமீபத்திய சுற்று வெட்டுக்கள், தொழில்நுட்பத் துறையில் வேலைகள் அழிக்கப்படுவது தடையின்றி தொடர்கின்றன என்பதைக் சமிக்ஞை செய்கின்றன. மார்ச் 14 அன்று, மேலும் 10,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவம் அதன் பணியாளர்களில் 13 சதவீதமான 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

மார்ச் 20 வரை 500க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 140,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன. டொட்-காம் செயலிழப்பிற்குப் பிறகு தொழில்நுட்பத் துறையில் இது மிகப்பெரிய சுருக்கமாக உள்ளது, கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் வெட்டுக்களை அறிவித்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை குறிப்பிடத்தக்க வேலைக் குறைப்புக்கள் கூகுள், மைக்ரோசொப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ், ட்விட்டர் மற்றும் ஐபிஎம் ஆகியவற்றில் வந்துள்ளன, அவை தொழில்நுட்பத்துறை பணிநீக்கங்களில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளன.

இரட்டை நகரங்கள் பிராந்தியத்திலுள்ள மினசோட்டாவின் ஷகோபீயில் (MSP1) அமேசான் பூர்த்தி செய்யும் மையம் (FC). [Photo by Tony Webster / CC BY 2.0]

ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, சமீபத்திய  வேலை வெட்டுக்கள் முக்கியமாக அமேசான் இணைய சேவைகள், PXT, மனித வளங்கள், விளம்பரம் மற்றும் ட்விட்ச் லைவ்ஸ்ட்ரீமிங் பிரிவைக் கையாளும் தொழிலாளர்களை பாதிக்கும் என்றார். எந்தெந்த வேலைகள் நீக்கப்படும் என்பது பற்றிய இறுதி முடிவு ஏப்ரல் நடுப்பகுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்றார். தற்போதைய பொருளாதார 'நிச்சயமற்ற தன்மையை' மேற்கோள் காட்டி, நிறுவனம் 'எங்கள் செலவுகள் மற்றும் ஆட்களின் எண்ணிக்கையை மிகவும் ஒழுங்குபடுத்துவதை தேர்ந்தெடுத்துள்ளது' என்று ஜாஸ்ஸி கூறினார்.

வழக்கமான கார்ப்பரேட் பேச்சில், கடிதம் தொடர்ந்தது, 'இந்த ஆண்டு எங்கள் வருடாந்திர திட்டமிடலின் மேலோட்டமான கொள்கையானது, மெலிந்ததாக இருக்க வேண்டும், இது முக்கிய நீண்ட கால வாடிக்கையாளர் அனுபவங்களில் இன்னும் வலுவாக முதலீடு செய்ய உதவுகிறது. 'அது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைகள் மற்றும் ஒட்டுமொத்தமாக  அமேசானை அர்த்தமுள்ளதாக முன்னேற்றும் என்று நாம் நம்புகிறோம்.' வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போன தொழிலாளர்களுக்கு இது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. 

சமீபத்திய சுற்று வெட்டுக்கள், நிறுவனத்தின் செயல்பாட்டுத் தளமாக இருக்கும் சியாட்டிலில், வாஷிங்டன் பகுதியில் உள்ள 2,300 அமேசான் தொழிலாளர்களை பாதிக்கும். இந்த மாதம் எட்டு Go கன்வீனியன்ஸ் ஸ்டோர்களை மூடுவதாக அமேசான் அறிவித்தது. வாஷிங்டன் D.C. பகுதியில் அது உச்சந்தலையில் வைத்து கொண்டாடிய HQ2 திட்டத்தின் கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த கோடையில், வேர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ள வளாகத்தில் சுமார் 8,000 தொழிலாளர்கள் வேலை செய்யத் தொடங்கியிருக்க வேண்டும். இதற்கிடையில், ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று அமேசான் கடந்த மாதம் ஒரு உத்தரவை வெளியிட்டது, 

கடந்த ஆண்டு, பணிநீக்கங்கள் அமேசானின் அலெக்சா குரல் அங்கீகாரம் செயல்படுத்தும் பிரிவில் உள்ள தொழிலாளர்களை பாதித்தன, பின்னர் தானியங்கி கடைகள், டுரோன்கள் மற்றும் நுகர்வோர் சில்லறை விற்பனை பிரிவு மற்றும் வேலைக்கு  ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு பரவியது. நிறுவனத்தின் சேமிப்பு கட்டிட பிரிவை இதுவரை வேலை வெட்டுக்கள் பாதிக்கவில்லை.

அந்த நேரத்தில் நிர்வாகம் அதன் செலவு மதிப்பீட்டை பூர்த்தி செய்யாத காரணத்தினால் ஜனவரி மாதம் அனைத்து திட்டமிட்ட பணிநீக்கங்களையும் நிறுவனம் அறிவிக்கவில்லை என்று ஜாஸ்ஸி கூறினார். 'தகுந்த விடாமுயற்சியின்றி இந்த மதிப்பீடுகளை விரைந்து மேற்கொள்வதற்குப் பதிலாக நாங்கள் எடுத்த இந்த முடிவுகளை பகிர்ந்து கொள்ள நாங்கள் தேர்வுசெய்துள்ளோம், எனவே மக்களுக்கு வெகு விரைவில் தகவல் கிடைக்கும்' என்று குறிப்பிட்டார்.

கோவிட் பெரும் தொற்றுநோய் காலத்தின்போது ஆன்லைன் விற்பனை அதிகரித்ததால் அமேசான் விற்பனைகள் மற்றும் லாபங்களில் குதூகலித்தது. இருப்பினும், கடந்த ஆண்டு ஆன்லைன் விற்பனை வருவாய் சரிந்ததாலும், எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் ரிவியன் மோட்டார்ஸில் முதலீடு செய்ததாலும் நிறுவனம் நஷ்டத்தைக் கண்டது. வாகன நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தபோது அமேசான் $5.4 பில்லியன் இழப்பை சந்தித்தது. அமேசான் ரிவியனிடமிருந்து (Rivian) 100,000 விநியோக வாகனங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

layoffs.fyi என்ற இணையதளத்தின்படி, மார்ச் மாதத்தில் 67 தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை 26,910 பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. இதில்  ஜனவரியில் 84,714 தொழில்நுட்ப பணிநீக்கங்களும் பிப்ரவரியில் 36,491 பணிநீக்கங்களும் நடந்துள்ளது. .

மார்ச் மாத பணிநீக்கங்களில் அடங்குவது:

• Better.com — 3,000 பணிநீக்கங்கள்.

• ஜெராக்ஸ் — உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் திறமைக் குழுக்களில் 800 பணிநீக்கங்கள்.

• Go to Group — கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட 1,300 பணியிடங்களைத் தொடர்ந்து 600 வேலை வெட்டுக்கள்.

• அட்லாசியன் — 500 வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன வணிக மென்பொருள் தயாரிப்பாளர் அதன் பணியாளர்களில் 5 சதவீதத்தை குறைத்துள்ளார்.

• சிந்தனை வேலைகள் — 500 பணிநீக்கங்கள், மென்பொருள் ஆலோசனை நிறுவனம் அதன் பூகோள பணியாளர்களில் 4 சதவீதத்தை பணிநீக்கம் செய்கிறது.

• சிரியஸ் எக்ஸ்எம் — 475; அதன் பணியாளர்களில் 8 சதவீதம்.

• இன்ஃபர்மேட்டிகா- 450; அதன் பணியாளர்களில் 7 சதவீதம்.

• பைக்கோ இன்டராக்டிவ் — 400; அதன் பணியாளர்களில் 20 சதவீதம்.

• Alerzo — 400 வேலை வெட்டுக்கள், முழுநேர மற்றும் பகுதி நேர ஊழியர்களைப் பாதிக்கும்.

• Docusign - 680; அதன் பணியாளர்களில் 10 சதவீதம்.

இந்த வார இறுதியில் Credit Suisse நிறுவனத்தை கையகப்படுத்தியதை அடுத்து உலக நிதிய அமைப்பில் தொடரும் நெருக்கடிக்கு மத்தியில் சமீபத்திய பணிநீக்கங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சிலிக்கான் வெலி (Silicon Valley ) வங்கியின் சரிவு மற்றும் கையகப்படுத்துதல் நடந்தது, இது தொழில்நுட்பத் துறையை மேலும் சீர்குலைத்தது.

வங்கி நெருக்கடி மற்றும் தொழில்நுட்ப பணிநீக்கங்கள் ஆகியவை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் ஏற்பட்ட இடைவிடாத அதிகரிப்பின் விளைவாகும், இதன் காரணமாக தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியைத் தூண்டிய எளிதான (குறைந்த வட்டிக்கு கிடைக்கும்) பணம் நிறுத்தப்பட்டது. வட்டி விகித உயர்வுகள் வேலையின்மையை அதிகரிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்தை பலவீனப்படுத்துவதற்கான ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.

தொழில்நுட்ப துறையில் பணிநீக்கங்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் பரந்த பிரச்சனைகளை முன்னறிவிக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் தகவல் துறையானது அமெரிக்கப் பொருளாதாரத்தில் 10 சதவிகிதம் மற்றும் 8 சதவிகித வேலைகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் அதிக எண்ணிக்கையிலான வேலைகள் ஆகியவற்றை உள்ளடக்கும். வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தொழில்நுட்ப பணிநீக்கங்கள் மற்றும் சிலிக்கான் வெலி வங்கியின் சரிவின் பின்விளைவுகள் பற்றி எழுதுகையில், 'உலகப் பொருளாதாரத்தை உயர்த்திய அதே தொழில்நுட்பத் துறை சார்ந்த பொருளாதார இயந்திரம் –ஒவ்வொரு முதலீடு செய்யப்பட்ட டொலரையும்  ஒன்றரையாக மாற்றியது போல் இருந்தது–  அது இப்போது கீழே செல்லும் வழியில் அதற்கு நேர்மாறாகச் செய்கிறது.' என்று குறிப்பிட்டது. அது தொடர்ந்தது, “வட்டி விகிதங்கள் அதிகரித்தபோது சிலிக்கான் வெலி வங்கியின் சிக்கவிழ்ப்பு தொடங்கியது, 'இலவச பணம்' முடங்கியது மற்றும் ஸ்டார்ட் அப்களில் (start-ups) முதலீடுகள் செயலிழந்தது. இதன் விளைவாக முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் வங்கியிலுள்ள தங்கள் கணக்குகளுக்கான ஆபத்தை கணிக்கத் தொடங்கினர். 

அமேசான் நிறுவனம் தனது சேமிப்பு கட்டிடங்களில் உள்ள  தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தி மற்றும் லாபத்தை பிழிந்தெடுக்க முயற்சிப்பதால், அமேசான் நிறுவனத்தில் தொழில்நுட்பத் துறையில் வெட்டுக்கள் வந்துள்ளன. கார்டியனில் வெளிவந்த சமீபத்திய அறிக்கையின்படி, அமேசான் சேமிப்பு கட்டிடங்களில் விபத்தினால் ஏற்படும் காயங்கள் அதன் முக்கிய போட்டியாளர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆறு சேமிப்பு கட்டிடங்களில் அமேசானுக்கு எதிராக அமெரிக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (OSHA) மேற்கோள்களை வெளியிட்டது. இந்த மேற்கோள்களில் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், பணிச்சூழலியல் மற்றும் காயங்களைப் புகாரளிக்கத் தவறியது ஆகியவை அடங்கும்.

பிப்ரவரி 1 அன்று, OSHA ஒரு அறிக்கையை வெளியிட்டது, அது தசைக்கூட்டு காயங்களுக்கான பல ஆபத்து காரணிகளைக் கண்டறிந்தது, இதில் அடிக்கடி தூக்குவது, பொருட்களின் அதிக எடை, பொருட்களை தூக்குவதற்காக பணியாளர்கள் தம்மைத் தாமே மோசமாக வளைவது மற்றும் தங்களை நீட்டிப்பது' மற்றும் பணிகளை முடிப்பதற்கு நீண்ட நேரத்தை செலவிடுவது ஆகியவை அடங்கும். நிறுவனத்தின் பதிவு புத்தகங்களை ஆய்வு செய்ததில், அமேசான் ஊழியர்களுக்கு தசைக்கூட்டு கோளாறுகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும், பல முறைகேடுகள் இருந்தபோதிலும், OSHA குறைந்தபட்ச அபராதங்களை இந்த நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. மிக சமீபத்திய மீறல்களின் விஷயத்தில், இல்லினாய்விலுள்ள அரோரா, இடாஹோவிலுள்ள நம்பா மற்றும் நியூயோர்க்கிலுள்ள கேஸில்டன் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் $46,875 அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. 

Loading