அணுசக்தி திறன் கொண்ட B-52 ரக போர் விமானங்கள் ரஷ்ய வான்பகுதிக்கு அருகில் பறந்ததை அடுத்து, பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் போர் விமானங்கள் பால்டிக் பகுதியில் ரஷ்ய ஜெட் விமானத்தை இடைமறித்தது 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த செவ்வாய்க்கிழமை, செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்து கலினின்கிராட் பகுதிக்கு பால்டிக் கடல் பகுதி ஊடாக வழமையாக செல்லும் ரஷ்ய எரிபொருள் நிரப்பும் விமானத்தை மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் போர் விமானங்கள் இடைமறித்தன. அதே நாளில், அமெரிக்க ஆளில்லா விமானத்தை ரஷ்ய விமானம் இடைமறித்து வீழ்த்தியதுடன், எஸ்தோனிய வான்பகுதியை நெருங்கியமையால் இந்நடவடிக்கை பிரிட்டனின் விமானப்படையால் நியாயப்படுத்தப்பட்டது. இது, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டங்கள் பால்டிக் பிராந்தியத்திலும் உக்ரேனிலும் முறிவுப்புள்ளிக்கு நீட்டித்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  

பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் போர் விமானங்கள் ரஷ்ய விமானத்தை அதன் வழியில் செல்ல அனுமதிப்பதற்கு முன்னர் பல நிமிடங்களுக்கு அதனுடன் இணைந்து பறந்ததாகக் கூறப்படுகிறது. பால்டிக் ஆகாய கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் போர் விமானங்கள் இணைந்து செயல்படுவது இதுவே முதல் முறையாகும். இது எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு பிரிட்டனால் வழிநடத்தப்படும்.  

ஒரு B-52 குண்டுவீச்சு விமானம் ஒரு பயிற்சி நடவடிக்கையின் போது ஒரு குண்டை வீசுகின்றது [Photo: US Department of Defense]

இந்த இடைமறிப்புக்கு 72 மணி நேரத்திற்குள், ஒரு அமெரிக்க அணுசக்தி திறன் கொண்ட B-52 ரக குண்டுவீச்சு விமானம் பின்லாந்து வளைகுடாவில் உள்ள ரஷ்ய வான்பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவுக்குள் வந்தது. இந்த சம்பவம் தெளிவாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மற்றும் குறிவைக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தும் நடவடிக்கையாக இருந்தது. B-52 ஆனது, பின்லாந்து வளைகுடாவில் உள்ள, பின்னிஷ் மொழியில் சுர்சாரி என்றழைக்கப்படும் ரஷ்ய தீவான கோக்லாந்தை அடைவதற்கு சற்று முன்னரே திரும்பி, போலந்திலிருந்து சுவீடன் மற்றும் பின்லாந்து வான்பகுதி வழியாக வடக்கு நோக்கி பறந்தது. பின்லாந்து கடற்கரையிலிருந்து வெறும் 40 கிலோமீட்டர் தொலைவிலும், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு மேற்கே 200 கிலோமீட்டருக்கு குறைவான தொலைவிலும் அமைந்துள்ள இந்த தீவில், ரஷ்ய ரேடார் நிலையமும் ஹெலிகாப்டர் தளமும் உள்ளன. B-52 விமானம் திரும்புகையில், பால்டிக் குடியரசுகளைக் கடந்து சென்றது.  

இந்த சம்பவம் பற்றி சுவீடன் மற்றும் பின்லாந்து ஊடகங்களில் தவிர ஏனையவற்றில் அரிதாகவே செய்திகள் வெளியாகின என்றாலும், பிராந்தியத்தில் உள்ள இராணுவ ஆய்வாளர்கள் அதன் முக்கியத்துவம் பற்றி கூறத் தயங்கவில்லை. சர்வதேச விவகாரங்களுக்கான பின்லாந்து நிறுவனத்தின் இயக்குனரான மிகா அல்டோலா ட்விட்டரில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார், “பின்லாந்து வளைகுடா ஐரோப்பாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீரிணைகளில் ஒன்றாகும் என்பதுடன், உதாரணத்திற்கு சுர்சாரி உட்பட அங்கு ரஷ்யா தனது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. இப்படித்தான் நடைமுறையில் கூட்டாளிகள் பராமரிக்கப்படுவதுடன் மற்றும் அச்சுறுத்தும்  தகவல்கள் எதிர்த்தரப்பிற்கு  அனுப்பப்படுகிறது”. 

B-52 இவ்வாறு பறந்ததானது மிக உயர்ந்த மட்டங்களில் விவாதிக்கப்பட்ட ஒரு கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டல் நடவடிக்கை எனக் கூறப்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. B-52 விமானம் பறப்பதற்கு சற்று முன்பு, பின்லாந்து ஜனாதிபதி சௌலி நினிஸ்டோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுடன் பின்லாந்து நேட்டோவில் உறுப்பினராவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டனில் இருந்தார். அவர்கள் மார்ச் 9 அன்று சந்தித்தபோது, பின்லாந்து அரசு ஒளிபரப்பு நிறுவனமான YLE ஆல் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், 2014 முதல் கோக்லாந்தில் ரஷ்யா அதன் இராணுவ நடவடிக்கைகளை கணிசமாக முடுக்கிவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.

மிகுந்த வழமைக்கு மாறான இந்த விமானம் பறத்தல் சம்பவம் பற்றி எந்த ஊடகத்திலும் செய்திகள் வெளிவராதது அதை மேலும் ஆபத்தானதாக்குகிறது. விமானத்தைப் பற்றி அறியப்பட்டவற்றின் அடிப்படையில் பார்த்தால், அது ஒரு ரஷ்ய எதிர்வினையைத் தூண்டும் வகையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்தது என்பதில் சந்தேகம் இல்லை. B-52 விமானம் ரஷ்ய வான்பகுதிக்குள் அல்லது அதற்கு மிக அருகில் சென்றிருந்தால் துல்லியமாக என்ன நடந்திருக்கும்? ரஷ்யா அதன் கோக்லாந்து தளத்தில் இருந்து அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்குமா? மேலும், நேட்டோ மற்றும் ரஷ்யாவின் தரை, வான் மற்றும் கடற்படைப் படைகள் சம்பந்தப்பட்ட இந்த பிராந்தியத்தில் நிலவும் மிகவும் பதட்டமான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டால், அத்தகைய சம்பவத்திற்கு என்ன பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும்? 

நேட்டோவில் இரு நோர்டிக் நாடுகளை இணைப்பது குறித்து பின்லாந்து, சுவீடன் மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி சிறிது நேரத்திலேயே இந்த விமானம் பறந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. வெள்ளியன்று, அங்காரா பின்லாந்தை நேட்டோவில் உறுப்பினராக்குவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளபோதிலும், அங்காரா பயங்கரவாதிகளாகக் கருதும் PKK போன்ற அமைப்புகளுக்கு சுவீடன் ஆதரவளிப்பதைக் காரணம் காட்டி ஸ்டாக்ஹோமின் விண்ணப்பத்தை அங்கீகரிக்க துருக்கி தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில், சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன், ஸ்டாக்ஹோமின் விண்ணப்பத்தை அங்கீகரிக்க துருக்கி தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், சுவீடனுக்கு முன்னதாக பின்லாந்து நேட்டோவில் உறுப்பினராகலாம் என்று பகிரங்கமாக முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். பின்லாந்து நேட்டோவில் சேரும்போது, பின்லாந்துடன் 1,300 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ரஷ்யாவுடன், நேட்டோ இராணுவக் கூட்டணியின் எல்லை கணிசமாக நீட்டிக்கப்படும். 

வெள்ளிக்கிழமை எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்த பின்லாந்து ஜனாதிபதி நினிஸ்டோ துருக்கியில் இருந்தார். அவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து எர்டோகன் நேட்டோவில் பின்லாந்து சேருவதற்கு துருக்கி ஒப்புதல் அளிக்கும் என்று அறிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஒரு வடக்கு முன்னணியை திறக்கும் வகையில், பின்லாந்து மற்றும் சுவீடனை நேட்டோவில் உறுப்பினராக்குவதற்கு நேட்டோவிற்குள் உள்ள முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் முழுமையாக அங்கீகரித்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஏற்கனவே நோர்டிக் பிராந்தியத்தில் அதன் இருப்பை பரந்த அளவில் விரிவுபடுத்தும் செயல்பாட்டில் உள்ளது. இது பால்டிக் கடல் பகுதியையும், நோர்வே மற்றும் பின்லாந்துடனான ரஷ்யாவின் எல்லைகளையும் அமெரிக்கா அதிகம் அணுகுவதற்கு வழி உருவாக்கும். கடந்த ஜூன் மாதம், அமெரிக்கா மற்றும் நோர்வேக்கு இடையேயான புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இது அமெரிக்க துருப்புக்களுக்கு ‘ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளை’ (“agreed areas”) தடையின்றி அணுக அனுமதிப்பதுடன், அமெரிக்க படையினரை நோர்வே சட்டத்தின் கீழ் அல்லாது, அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கிறது. இதே போன்ற ஒப்பந்தங்கள் பின்லாந்து மற்றும் சுவீடனுடன் மேற்கொள்ளப்படவுள்ளன. பால்டிக் கடல் தீவான கோட்லாந்து மற்றும் பின்னிஷ் ஆர்க்டிக்கில் உள்ள ஒரு விமானத் தளம் போன்ற மூலோபாய இடங்கள் ஸ்டாக்ஹோம் மற்றும் ஹெல்சின்கி உடனான ஒப்பந்தங்களில் ‘ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளாக’ மாறும்.   

வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் உக்ரேன் போரில் தங்கள் ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கு களத்தை தயார்படுத்தி வரும் நிலையில், பால்டிக் மற்றும் ஹை நோர்த் பகுதிகளில் பதட்டங்கள் அபாயகரமானதாக அதிகரித்துள்ளன. செவ்வாயன்று அமெரிக்க ஆளில்லா விமானத்தை ரஷ்யா வீழ்த்தியதைத் தொடர்ந்து, போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரே டுடா, வார்சோ உக்ரேனுக்கு 12 MIG-29 ரக போர் விமானங்களை வழங்குவதாகவும், அதில் 4 உடனடியாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஸ்லோவாக்கியாவும் இதைப் பின்பற்றி, குறைந்த எண்ணிக்கையிலான MIG-29 போர் விமானங்களை உக்ரேனுக்கு அனுப்ப உறுதியளித்துள்ளது. இந்த அறிவிப்புகள் நவீன நேட்டோ போர் விமானங்களை கியேவிற்கு அனுப்புவதை குறிக்காவிட்டாலும், இப்போது அதிகமான போர் விமானங்களை அனுப்புவதற்கு ஒரு முன்மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.  

சமீபத்திய Politico அறிக்கையின்படி, போர் தொடங்கியதில் இருந்து 100,000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் மரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேன் எதிர்கொள்ளும் அதிகரித்தளவிலான பரிதாபகரமான இராணுவ நிலைமையானது, அணுவாயுத சக்திகளுக்கு இடையேயான ஒரு நேரடி மோதலில் உச்சகட்ட பேரழிவை விளைவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளும் ரஷ்யாவை பேரழிவுகரமான இராணுவத் தோல்வியை அடைய வைப்பதில் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால், அவர்கள் விரைவில் தங்கள் சொந்த துருப்புக்களை அங்கு நிலைநிறுத்துவதையும், நவீன நேட்டோ போர் விமானங்களை கியேவிற்கு அனுப்புவதையும் தவிர வேறு வழியில்லை. 

நேட்டோ ஐரோப்பா முழுவதும் பல ஆயிரக்கணக்கான சிப்பாய்களை ஈடுபடுத்தியுள்ள பல இராணுவ பயிற்சிகளுக்கு மத்தியில் உள்ளது. மார்ச் 13 செய்திக்குறிப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது: “மார்ச் மாதம், 20,000 நேட்டோ படையினருக்கும், அத்துடன் பின்லாந்து மற்றும் சுவீடன் படையினருக்கும் இந்த ஆண்டு ஐரோப்பாவின் ஆர்க்டிக்கில் நடக்கும் ‘Joint Viking’ மற்றும் ‘Joint Warrior,’ போன்ற மிகப்பெரிய பயிற்சிகளில் நோர்வேயை பாதுகாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மத்தியதரைக் கடலில், ஒன்பது நேட்டோ நட்பு நாடுகளின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ‘Dynamic Manda’ பயிற்சியின் போது நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் பயிற்சிகளை மேற்கொண்டன. மூன்று மாதங்களில் நட்பு நாடுகளின் 19,000 படையினரை உள்ளடக்கிய ‘Orion 23’ பயிற்சியின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் பல தசாப்தங்களில் தனது மிகப்பெரிய இராணுவ ஒத்திகையை நடத்துகிறது. சுமார் 600 ஜேர்மன் படையினர், ‘Griffin Lightning’ பயிற்சியின் போது லித்துவேனியாவைப் பாதுகாப்பதில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பெயினில் இருந்து பறக்கும் அமெரிக்க B-52 குண்டுவீச்சு விமானங்கள் ஐரோப்பா முழுவதும் நட்பு நாட்டு விமானப்படைகளுடனான கூட்டுப் பயிற்சிகளை நடத்துகின்றன.    

ஜூன் மாதத்தில், ஜேர்மன் விமானப்படை Air Defender 2023 பயிற்சியை வழிநடத்தும். இது நேட்டோ நிறுவப்பட்டதிலிருந்து வானில் நடத்தப்படும் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாகும். 210 போர் விமானங்கள் உட்பட, 18 நாடுகளைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட படையினர் ஐரோப்பிய வான்பகுதியில் போர்ப் பயிற்சிகளை நடத்தவுள்ளனர். ஜூன் 12 மற்றும் 23 திகதிகளுக்கு இடையில் ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு முழுவதும் உள்ள தளங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படும்.  

இந்த ஒருங்கிணைந்த கண்டம் முழுவதும் பரந்தளவிலான இராணுவ அணிதிரட்டலை தனி ‘பயிற்சிகள்’ என்று கூறுவது யதார்த்தத்தை சிதைப்பதாகும். இச்சூழ்நிலையில், உக்ரேனில் தீவிர வலதுசாரி ஆட்சியின் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கமாக கொண்டுவரப்பட்டுள்ள ரஷ்யாவுடனான ஒரு நேரடி போருக்கான அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு இராணுவக் கூட்டணியின் வெளிப்படையான தயாரிப்புகள் தான் பெருகிய முறையில் கவனத்திற்கு வருகின்றன. 

Loading