மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும், சமீபத்தில் மத்திய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியாவில் உள்ள மஸ்கெலியா பேருந்து நிலையத்தில் ஒரு திறந்தவெளி பொதுக்கூட்டத்தை நடத்தியது. முன்னதாக திட்டமிடப்பட்ட மார்ச் 9 உள்ளூர் அரசாங்கத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
கொழும்பில் உள்ள கொலன்னாவ நகர சபை, யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் பிரதேச சபை மற்றும் நுவரேலியாவில் உள்ள மஸ்கெலியா பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கு 53 வேட்பாளர்களை சோ.ச.க. நிறுத்தியிருந்தது.
இத் தேர்தலில் படுதோல்வி அடைய நேரிடும் என்ற அச்சத்தில், கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தலை நடத்த பணம் இல்லை என்றும், அவை ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவித்தார். புதிய தேர்தலுக்கான தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
கிளுனூகி (Glenugie) தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் தலைவரும், சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான K. காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டமானது, விக்கிரமசிங்கவின் ஜனநாயக விரோதச் செயலைக் கண்டனம் செய்தது.
விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கும் தேர்தல் நிதிப் பணப் பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை எனவும், மாறாக, இது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்றும் காண்டீபன் கூட்டத்தில் தெரிவித்தார்.
இப்போது தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சமூக நிலைமைகளை பேச்சாளர் மதிப்பாய்வு செய்து, 'தோட்டத் தொழிலாளர்களின் வறுமை-மட்ட ஊதியம் என்பது ஒரு நாளைக்கு ஒரு ஆரோக்கியமான உணவைக் கூட அவர்கள் பெறுவதற்கு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது' என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசும் (CWC) ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்திற்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் எவ்வாறு ஆதரவளிக்கின்றன என்பதை விளக்கிய காண்டீபன் 'அதனால்தான் தொழிலாளர்களும் தங்கள் உரிமைகளுக்காக போராட ஒவ்வொரு பகுதியிலும், பணியிடத்திலும் தொழிற்சங்கங்களை சாராமல், சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்' என்று அவர் கூறினார்.
அடுத்த பேச்சாளர், சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், நுவரேலியாவில் மஸ்கெலியா பிரதேச சபைக்கான கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு தலைமை தாங்கியவருமான M.தேவராஜா பின்வருமாறு குறிப்பிட்டார்.
‘’இந்த உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள் அரசாங்கத்தை மாற்றாது என்றாலும், விளைவுகள், அதன் அரசியல் உறுதியற்ற தன்மையை ஆழமாக்கி, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய ஊக்குவிக்கும். அரசாங்கம் தேர்தலை நடத்த விரும்பாததற்கு இதுவே உண்மையான காரணமாகும்” என்று குறிப்பிட்டார்.
“எதிர்கால இலங்கை அரசாங்கமானது – சஜித் பிரேமதாசவின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜி ஜன பலவேகயா (SJB) அல்லது ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) தலைமையிலான அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தலைமையில் இருந்தாலும் – சர்வதேச நாணய நிதியம் கட்டளையிடும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும்.
'இலாப நோக்குடைய முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை. தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும், சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும்” என்று கூறிய தேவராஜா, இந்த முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சிதான் என்றும் கூட்டத்தில் விளக்கினார்.
அப்கோட்டில் உள்ள அல்டன் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியும், அல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினருமான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஏ. பரிமளாதேவி கூட்டத்தில் உரையாற்றினார். பிப்ரவரி 2021 இல் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக தோட்ட நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட 38 தொழிலாளர்களில் இவரும் ஒருவர் ஆவர்.
'நானும் ஆல்டன் தோட்டத்தைச் சேர்ந்த இதர 37 தொழிலாளர்களும் நிர்வாகத்தால் வேட்டையாடப்பட்டோம். நாங்கள் மேலாளரை தாக்கி, அவரது பங்களாவை சேதப்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற வழக்கு உட்பட, காவல்துறையினரால் வேட்டையாடப்பட்டபோது, எங்களைப் பாதுகாக்க முன்வந்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சிதான்' என்று அவர் கூறினார்.
'எங்கள் நடவடிக்கைக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் எங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் மற்றும் எங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிலாளர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று பரிமளாதேவி கூறினார்.
இறுதிப் பேச்சாளரான, சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன, சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கை, வரலாறு பற்றிய சுருக்கமான விளக்கத்தை முன்வைத்து தனது பேச்சை தொடங்கினார்.
'சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), உலக ட்ரொட்ஸ்கிசக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக 1968 இல் நிறுவப்பட்டது.
“இது 1964 இல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியில் இணைந்துகொண்ட லங்கா சமசமாஜக் கட்சியின் பெரும் துரோகத்திற்கு ஒரு கொள்கை ரீதியான பதிலாக சோ.ச.க. இருந்தது. பு.க.க./சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாக சளைப்பின்றி போராடி வருகிறது” என்று அவர் கூறினார்.
ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை சுற்றி சிங்கள மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த அதன் வரலாறு முழுவதும் போராடிய ஒரே ஒரு அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும் என்று விஜேசிறிவர்தன சுட்டிக்காட்டினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இலங்கை அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. ஒருபுறம், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதலைத் தொடுக்கிறது. மறுபுறம், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் மோசமடைந்துள்ள முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடியின் ஒரு பகுதியே இலங்கையின் பொருளாதார சரிவுக்கு காரணம் என விஜேசிறிவர்தன சுட்டிக்காட்டினார்.
“மக்களால் ஆழமாக வெறுக்கப்படும் தனது அரசாங்கம், உள்ளூராட்சித் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியை சந்திக்கும் என்றும், நாட்டின் அரசியல் உறுதியற்ற தன்மையை மேலும் மோசமாக்கும் என்றும், மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கனக் கொள்கைகளை அமுல்படுத்துவதை கடினமாக்கும் என்றும் விக்கிரமசிங்க கணக்கிடுகிறார். உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய அவர் நடவடிக்கை எடுத்ததற்கு இதுவே காரணமாகும்’’ என்று விஜேசிறிவர்தன கூறினார்.
தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்கள் கடந்த ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும், அவரது அரசாங்கத்தையும் கவிழ்த்த வகையிலான வெகுஜன எழுச்சியாக மாறிவிடும் என்று அரசாங்கமும் முழு ஆளும் வர்க்கமும் அஞ்சுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
'நாடு ஒருபோதும் அராஜகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாது' என்று விக்கிரமசிங்க மீண்டும் மீண்டும் சபதம் செய்வதின் அர்த்தம், பொலிஸ், இராணுவம் மற்றும் அனைத்து ஜனநாயக விரோத சட்டங்கள் உட்பட முழு அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த எழுச்சிமிக்க போராட்டங்களை நசுக்க அவர் முயற்சிப்பார்’’ என்று அவர் விளக்கினார்.
நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்துவதை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் மிருகத்தனமான சமூக நடவடிக்கைகளுக்கு எதிராக போராட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் தேவை என்று விஜேசிறிவர்தன கூறினார். 'இந்த இயக்கம், கிராமப்புற ஏழைகளை ஒன்று திரட்டி, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு அரசியல் எதிர் தாக்குதலை நடத்த வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார்.
தொழிற்சங்கங்களும், முன்னிலை சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி-இடது கட்சிகளும் இந்த வேலைத்திட்டத்திற்கு விரோதமாக இருப்பதாக விஜேசிறிவர்தன கூறினார். மிகப் பெரிய தோட்டத் தொழிற்சங்கமான இ.தொ.கா மற்றும் அதன் தலைவர் ஜீவன் தொண்டமானின் துரோகப் பாத்திரத்தை அவர் பின்னர் மீளாய்வு செய்தார். விக்கிரமசிங்க அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக இருந்த தொண்டமான், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமூக தாக்குதலில் நேரடியாகப் பங்குபற்றியவர் என்று அவர் விளக்கினார்.
'மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் போராட்ட எழுச்சியில் கலந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் பதவியில் இருந்து தூக்கியெறிந்து தங்கள் மகத்தான சமூக சக்தியை வெளிப்படுத்தினர். ஆனால், அந்த எழுச்சி ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதால், அது இறுதியில் வெகுஜனங்கள் விரும்பிய இலக்குகளை அடையத் தவறிவிட்டது.’’
கடந்த ஆண்டு எழுச்சியின் போது, சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கையை விஜேசிறிவர்தன மேற்கோள் காட்டினார். அந்த அறிக்கை, தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச காங்கிரஸைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுத்தது.
'ஜனநாயக மற்றும் சோசலிச காங்கிரசுக்கான அடித்தளம், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களால், தீவு முழுவதிலும் உள்ள பணியிடங்கள், தொழிற்சாலைகள், தோட்டங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தங்கள் வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கான நடவடிக்கை குழுக்களை நிறுவுவதன் மூலம் அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்கள் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளுக்கு உண்மையான குரல் கொடுக்க வேண்டுமானால், அவை முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அதன் தொழிற்சங்க கூட்டாளிகளில் இருந்து சுயாதீனமாக இருப்பது அவசியமாகும்' என்று அறிக்கை குறிப்பிட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் தோட்ட நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள், கடந்த மாதம் பல வாரங்களாக அப்கோட்டை சுற்றியுள்ள தோட்டங்களிலும் மஸ்கெலியா நகரத்திலும், இந்த திறந்தவெளி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக பிரச்சாரம் செய்தனர். உள்ளாட்சி தேர்தல்கள் இரத்து செய்யப்பட்டதைக் கண்டிக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. அத்துடன் அல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டைக்கு எதிராக போராடும் தோட்ட நடவடிக்கைக் குழுவின் அறிக்கையும் அங்கு விநியோகிக்கப்பட்டன.
கூட்டத்துக்கு பின்னர், மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், “நாங்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து பேச்சாளர்கள் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர்கள் கொடுத்ததெல்லாம் வெளியில் மருந்து வாங்குவதற்கான மருந்துச் சீட்டு மட்டுமே. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, பள்ளிக்கூடம் எல்லாவற்றுக்கும் பணம் கேட்கிறது. இந்த நிலையில் நாம் எப்படி வாழ முடியும்? உங்கள் கட்சியிடம் இருந்து தீர்வை எதிர்பார்க்கிறோம். கூட்டத்தில் பேசிய இறுதிப் பேச்சாளரின் பேச்சை நான் கவனமாகக் கவனித்தேன், எங்கள் பிரச்சனைகளைப் பற்றி அவரிடம் பேச விரும்புகிறேன்’’ என்று அவர் குறிப்பிட்டார்.
மஸ்கெலியாவில் உள்ள லங்கா தோட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயக மற்றும் சோசலிச காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையின் பிரதியை வாங்கி வாசித்தார். 'இலங்கையிலும் உலக நாடுகளிலும் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் பற்றிய இந்த வகையான விரிவான விளக்கத்தை நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை,' என்று அவர் தெரிவித்தார்.
