இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுக்கள், சம்பள உயர்வுகளுக்காக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தை ஒடுக்கும் அவற்றின் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி இருப்பதால், அமெரிக்காவில் தொடர்ந்து வரும் வேலை வெட்டுக்கள் கடந்த வாரம் அதிகரித்துள்ளன. வியாழக்கிழமை மட்டும், இன்னும் கூடுதலாக ஆயிரக் கணக்கான வேலைநீக்கங்கள் அறிவிக்கப்பட்டன:
- ஆடை விற்பனை நிறுவனமான Gap, 1,800 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் பிராந்திய கிளைகளின் தலைமைப் பதவிகளை அது இலக்கில் வைத்திருந்தது. இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி பொப் மார்ட்டின் கூறுகையில், அந்நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 300 மில்லியன் டாலர் சேமிப்பதற்காக இந்த பாரிய வேலைநீக்கங்கள் செய்யப்படுவதாக தெரிவித்தார். Gap, Old Navy, Banana Republic மற்றும் Athleta உட்பட நிறுவனங்களது பிராண்டுகளுக்கு “கண்டறியப்படாத வாய்ப்புகளை” அவை திறந்துவிடும் என்றவர் வாதிட்டார்.
- பகிர்வு-போக்குவரத்து சேவை நிறுவனமான Lyft குறிப்பிடுகையில், அதன் பணியாளர்களில் கால்வாசிக்கும் அதிகமானவர்களைக் குறைக்கும் வகையில், அது 1,072 வேலைகளை வெட்டுவதாக அறிவித்ததுடன், நியமிக்கப்பட இருந்த 250 பணியிடங்களையும் நீக்குவதாக குறிப்பிட்டது. இது தவிர, அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயலதிகாரி டேவிட் ரிஷர் வெள்ளிக்கிழமை எஞ்சிய பணியாளர்களிடம் கூறுகையில், அவர்கள் வாரத்திற்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது அலுவலகங்களுக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்றார். இதன் மூலம் அது நிறுவனத்தின் இலகுவான தொலைதூர வேலைமுறை கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருகிறது.
- கணினி கோப்புகள் சேமிப்பு மற்றும் பகிர்வு சேவைகள் வழங்கும் தொழில்நுட்ப நிறுவனமான Dropbox, 500 தொழிலாளர்களை அல்லது அதன் பணியாளர்களில் 16 சதவீதத்தினரை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை வெளியான அறிவிப்புகள், அமெரிக்காவில் கட்டவிழ்ந்து வரும் வேலைநீக்க கொடூரங்களில் வெறும் சமீபத்தியவை மட்டுமே ஆகும். பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலைநீக்கங்கள் குறித்து சமீபத்திய வாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன அல்லது அறிவிக்கப்பட உள்ளன. அமெசன் (9,000), பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 11,000 இக்கு கூடுதலாக, 10,000), டிஸ்னி (7,000), 3M (6,000), வோல்மார்ட் இணையவழி தீர்வு மையங்கள் (2,000) புதிதாக தொடங்கப்பட்ட மின்வாகன நிறுவனங்கள் லூசிட் (1,300) மற்றும் ரிவியன் (840) ஆகியவை இதில் உள்ளடங்கும். உலகின் நான்காவது மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ், பங்கு கொள்முதல்கள் மூலமாக 3,500 மணிநேர வேலைகளையும் முன்கூட்டிய ஓய்வுக்கான ஊக்கத் தொகைகளையும் குறைக்க நோக்கம் கொண்டுள்ளது.
இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் 270,416 வேலை வெட்டுக்கள் செய்யப்பட்டிருந்ததாகவும், இது 2022 இல் இதே காலக்கட்டத்தை விட அண்மித்து நான்கு மடங்கு அதிகம் என்றும் வேலைவாய்ப்பு நிறுவனமான சேலஞ்சர், கிரே & கிறிஸ்மஸ் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கை குறிப்பிட்டது. அதற்குப் பின்னர் இந்த எண்ணிக்கை இன்னும் கணிசமாக அதிகரித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் ஏற்படும் விளைவுகள், பேரழிவுகரமாக இருக்கும். இன்னும் அதிக பட்டினி மற்றும் வீடற்ற நிலைமை, மது மற்றும் போதைக்கு அடிமையாதல், மற்றும் வறுமையின் அதீத அழுத்தத்தால் ஏற்படும் முன்கூட்டிய மரணங்கள் ஆகியவற்றையே இது அர்த்தப்படுத்துகிறது.
ஆனால் ஆளும் வர்க்கத்தின் பார்வையில், வேலைகள் மீதான இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சரமாரியான மிகப் பெரிய தாக்குதலின் ஆரம்பம் மட்டுமே ஆகும்.
சம்பளங்கள் பற்றிய தொழிலாளர் துறையின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் மீது வெள்ளிக்கிழமை முக்கிய செய்தி ஊடகங்கள் குறிப்பிடத்தக்க செய்திகளை வழங்கியுள்ளன. “வேகமான” மற்றும் “அதிகரிக்கப்பட்ட” சம்பள உயர்வானது நீண்டகாலத்திற்கு வட்டி விகித உயர்வுகளைப் பேணுவதற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என்று அவை அறிவிக்கின்றன.
சான்றாக, 'சம்பளங்களும் விலைவாசியும் ஒரேசீராக குறையவில்லை, இது ‘இறுக்கமான மற்றும் கரடுமுரடான’ பொருளாதாரத்தைக் காட்டுகிறது” என்ற தலைப்பில் நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரை, ஓராண்டுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் மார்ச்சில் தனியார்துறை தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 5.1 சதவீதம் உயர்ந்திருப்பதைக் காட்டும் தொழிலாளர் துறை புள்ளிவிபரங்களை மேற்கோளிட்டது. 'வேகமான ஊதிய அதிகரிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஈடுகொடுக்கும் வகையில், தொழிலாளர்களுக்கு, குறிப்பாக வருவாய் படிநிலையில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு, உதவி உள்ளது,' என்று டைம்ஸ் குறிப்பிட்டது.
ஆனால், ஒப்பீட்டளவில் இந்த அதிக ஊதிய உயர்வுகளைப் பணவீக்கமே விழுங்கிவிட்டது என்பதை டைம்ஸூம் மற்ற செய்தி நிறுவனங்களும் குறிப்பிடவில்லை. இது டைம்ஸ் தரப்பில் வேண்டுமென்ற மேற்கொள்ளப்பட்ட சாதுர்யமாகும். உண்மையில் அதே தொழிலாளர் துறை அறிக்கை வெள்ளிக்கிழமை குறிப்பிடுகையில் தனியார்துறை இழப்பீடு ஆண்டுக்கு ஆண்டு மாறா டாலர் மதிப்பில் (அதாவது பணவீக்கத்திற்கு ஏற்ப ஈடுகட்டப்பட்ட மதிப்பில்) 0.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதை எடுத்துக்காட்டியது. மார்ச் மாதம் நிஜமான சராசரி ஒரு மணிநேர வருமானம் ஓராண்டுக்கு முந்தைய அளவை விட 1.6 சதவீதம் குறைந்திருப்பதாக ஏப்ரல் மாத ஆரம்பத்தில் தொழிலாளர் துறை குறிப்பிட்டது.
பெடரல் இன்னும் கூடுதலாக நிதிக் கொள்கையை இறுக்குவதை நியாயப்படுத்தும் விதத்தில், சம்பளங்கள் தான் பணவீக்கத்திற்குக் காரணம் என்ற பொய்யான கட்டுக்கதையைத் சுழற்றி விடுவதை, இவற்றில் எதுவுமே டைம்ஸையோ, அத்துடன் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் வாஷிங்டன் போஸ்டில் வெளியான இதேபோன்ற கட்டுரைகளையோ தடுத்துவிட வில்லை. “குறிப்பாக சம்பளங்கள் பற்றிய புள்ளிவிபரங்களில் பெடரல் அதிகாரிகள் ஒருமுனைப்பட்டுள்ளனர், தொழிலாளர் சந்தையில் தொழிலாளர்களை நியமிக்க இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அது தாங்கொணா விகிதத்தில் சம்பளத்தை அதிகரிக்கச் செய்து வருகிறது. இது பணவீக்க அதிகரிப்புக்குப் பங்களிக்கின்றன,” என்று டைம்ஸ் எழுதியது.
ஆனால் சம்பள உயர்வுகள் அல்ல மாறாக இலாபத்திற்காக செய்யப்படும் ஏய்ப்புகள் தான் பணவீக்கத்தை அதிகரிப்பதில் முக்கிய உந்து சக்தியாக இருக்கிறது என்பது டைம்ஸிற்கு நன்றாகவே தெரியும். “உணவு விலை உயர்வு அதிக இலாபங்களைத் தருகிறது, ஆனால் வாடிக்கையாளர்கள் எதிர்க்கிறார்கள்,” என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை மற்றொரு கட்டுரையில் டைம்ஸ் குறிப்பிடுகையில், மிகப் பெரும் உணவுத்துறை பெருங்குழுமங்கள் எப்படி கூர்மையாக விலைகளை அதிகரித்து, இலாபங்களைக் குவித்தன என்று குறிப்பிட்டது. பெப்சிகோ நிறுவனம் 16 சதவீதம் விலைகளை உயர்த்தி, கடந்த காலாண்டில் 16 சதவீதம் இலாப அதிகரிப்பைக் கண்டது. நெஸ்லெ 9.8 சதவீதம் விலைகளை உயர்த்தியது. அதன் வருவாய் 5.6 சதவீதம் அதிகரித்து 26.48 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. கோகோ-கோலாவும் விலைகளை அதிகரித்தது, அதன் இலாபங்கள் 3.1 பில்லியன் டாலர் அளவுக்கு, 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
உணவுத் துறைக்கு அப்பாற்பட்டு, எக்ஸான்மொபில் மற்றும் செவ்ரான், அமெசன் மற்றும் கேட்டர்பில்லர் உட்பட முன்னணி பெருநிறுவனங்கள் ஒன்று மாற்றி ஒன்று பகுப்பாய்வாளர்களின் மதிப்பீடுகளையும் கடந்து இந்த வாரம் அவற்றின் வருவாய் அறிக்கைகளை வெளியிட்டன.
அமெரிக்காவில் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்கள், ஒரு சர்வதேச நிகழ்வுபோக்கின் பாகமாக உள்ளன. வெள்ளிக்கிழமை ஜேர்மனியின் Frankfurter Allgemeine Zeitung உடனான ஒரு நேர்காணலில், ஸ்டெல்லன்டிஸ் தலைமை செயலதிகாரி கார்லொஸ் தவாரெஸ் கூறுகையில், ஐரோப்பா எங்கிலுமான வாகனத்துறை தொழிலாளர்கள் அதிக “செயல்திறன்” மற்றும் செலவினக் குறைப்பு கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அவர்களின் வேலைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றார்.
“இன்று இந்த உலகில் பாதுகாப்பானது என்று எதையாவது உங்களால் கூற முடியுமா? என் பார்வையில், தற்போது ஒட்டுமொத்த ஐரோப்பிய கார் தொழிற்துறையும் அபாயத்தில் உள்ளது,” என்று கூறிய தவாரெஸ், “நாம் இன்னும் அதிக கவனமாக இருக்க வேண்டும். நாம் நம்மிடம் இருந்தே இன்னும் அதிகமானதைக் கோரி, நம்மைநாமே இன்னும் கடுமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
தொழிலாளர்கள் மீது சாட்டையைச் சுழற்றவும் “கடுமையான” நடவடிக்கையை கோரவும் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டுக்குப் பறந்து கொண்டிருக்கும் தவாரெஸ், 2022 இல் அண்மித்து 25 மில்லியன் டாலர் சம்பளம் பெற்றிருந்தார். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகமாகும்.
முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அடிப்படை நோக்கங்களும் கொள்கைகளும் முன்பினும் அதிக அப்பட்டமாக வெளிப்பட்டு வருகின்றன. உலகெங்கிலும் அதிகரித்து வரும் வர்க்கப் போராட்ட எழுச்சியால் சுற்றி வளைக்கப்பட்டு இருப்பதாக உணர்ந்து முதலாளித்துவம் பீதியடைந்துள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் உட்பட, பணவீக்க தாக்கத்திற்கு எதிராகவும் ஊதியங்கள் குறைக்கப்படுவதற்கு எதிராகவும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை நடத்தி வருகின்றனர். இலங்கையில் தொடர்ந்து அரசுக்கு எதிரான பாரிய போராட்டங்கள் நடக்க உள்ளன. கனடாவில் 100,000 இக்கும் அதிகமான பொதுச்சேவைத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவிலும் கனடாவிலும் ஃபோர்டு, ஜிஎம், ஸ்டெல்லன்டெஸ் நிறுவனங்களில் 160,000 இக்கும் அதிகமான வாகனத் தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் செப்டம்பர் மாத மத்தியில் காலாவதியாக இருக்கின்ற நிலையில், அவர்களிடையே எதிர்ப்புக்கள் வளர்ச்சியடைந்து வருகிறது.
பெடரல் ரிசர்வ் மற்றும் பிற மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வுகள் 1980 களுக்குப் பின்னர் மிக வேகமான விகிதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்காக கூறப்படுவதைப் போல அது “பணவீக்கத்தை” குறைக்க நோக்கம் கொண்டதல்ல, மாறாக அது வேலையின்மையை அதிகரித்து வருவதுடன், சம்பள உயர்வுகளுக்காகவும் பெருநிறுவன சுரண்டலுக்கு எதிராகவும் போராடுவதற்கான தொழிலாளர்களின் திறனை எதிர்கொள்வதற்காக செய்யப்படுகின்றன.
ஆனால், முதலாளித்துவ பொருளாதாரத்தின் பரந்த பிரிவுகள் இலவசப் பண விநியோகத்தையே சார்ந்துள்ள நிலையில், அதை மாற்றுவதில் பெடரல் வங்கியும் மற்ற மத்திய வங்கிகளும் இன்னும் மிகப்பெரிய பொருளாதார உருகுதலைத் தூண்டிவிடும் அபாயத்தை ஏற்று வருகின்றன. இது வங்கியியல் துறையில் தொடர்ந்து கொண்டிருக்கும் தடுமாற்றங்களில் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டப்படுகிறது. தனியார் நிதியுதவியைக் கொண்டு First Republic வங்கியை மீட்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததும், அமெரிக்க பெடரல் நிதி காப்பீட்டு ஆணையம் (FDIC) அந்த வங்கியை பணம் பெறுவதற்குரிய ரிசீவர்ஷிப் முறையில் (Receivership) வைக்கும் திட்டங்களை வகுத்து வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. அது அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டால், First Republic வங்கி கடந்த இரண்டு மாதங்களில் தோல்வியடைந்த மூன்றாவது அமெரிக்க வங்கியாக இருக்கும்.
ஆளும் வர்க்கம் அதன் பொருளாதார நெருக்கடியின் சுமையைத் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தி, உக்ரேனிய போர் மற்றும் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளுக்காக செலவிடப்படும் பெரும் தொகைகளுக்குத் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்ய தீர்மானகரமாக உள்ளது.
ஆனால் இந்த உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு நனவுப்பூர்வமான அரசியல் மற்றும் அமைப்புரீதியான விடையிறுப்பை நெறிப்படுத்த தொடங்கி உள்ளதால், ஒரு எதிர்சக்தி உருவெடுத்து வருகிறது.
வேலை மீதான தாக்குதல்களை எதிர்த்து போராடுவதற்காக, ஒவ்வொரு ஆலையிலும் வேலையிடத்திலும் சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை உருவாக்கவும் அனைத்து வாகனத்துறை தொழிலாளர்களை அணித்திரட்டவும் அழைப்புவிடுத்து சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஓர் அறிக்கை வெளியிட்டது. பெருநிறுவன-சார்பு ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உதவியோடு, மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான செலவைத் தொழிலாளர்கள் மீது சுமத்தி, வாகனத்துறையை மூர்க்கமாக புதிதாக மறுகட்டமைப்பு செய்ய பெருநிறுவனங்கள் முயன்று வருகின்றன என்பதை அந்த அறிக்கை விளங்கப்படுத்தியது.
இதற்கு விடையிறுப்பாக, IWA-RFC, மின்சார வாகனங்களுக்கு மாறுவதைத் தொழிலாளர்களின் நலன்களுக்கு இணங்க செய்வதை உறுதிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்தை விவரித்தது:
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய 40 சதவீதம் குறைவான உழைப்பு நேரமே தேவைப்படுகிறது என்றால், பின் வார வேலை நேரமானது வழக்கமாக தொழிலாளர்களைச் சோர்வடைய செய்யும் அளவிலான வாரத்திற்கு 40, 50 மற்றும் 60 மணி நேர வேலை நேரத்தில் இருந்து சம்பளக் குறைப்பின்றி வாரத்திற்கு 30 மணி நேரமாக குறைக்கப்பட வேண்டும். நுகர்வு பண்டங்களின் விலை உயர்வுகளுக்கு ஏற்ப தானாகவே சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும். இருக்கும் வேலையை எல்லா தொழிலாளர்களுக்கும் சம்பளக் குறைப்பின்றி பகிர்ந்தளிக்கும் விதத்தில் வேலை நேரங்களின் எண்ணிக்கை ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
பாரிய வேலையின்மைக்குப் பதிலாக, தொழிலாளர்களின் வேலைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை IWA-RFC உம் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் 2023 சர்வதேச மே தின இணையவழி பேரணியை இணைந்து நடத்தியுள்ளன. இந்த பேரணி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேறு எங்கும் கிடைக்காத முக்கிய தகவல்களை வழங்கியுள்ளது. அவர்கள் எதிர்கொண்டிருக்கும் பாரிய வேலையின்மை, வறுமை, உலகப் போர் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவைத் தவிர வேறொன்றையும் வழங்க முடியாத இந்த முதலாளித்துவ நெருக்கடிக்கு அடித்தளமாக இருக்கும் தர்க்கத்தை இக்கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உலகெங்கிலும் வெடித்து வரும் தொழிலாள வர்க்க போராட்டங்களை வழிநடத்த சர்வதேச சோசலிச இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கை இக்கூட்டத்தில் வழங்கியுள்ளார்கள்.
இந்தப் பேரணியைக் குறித்த தகவல் பரந்தளவில் சாத்தியமான வாசகர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு நாம் நம் வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்துகிறோம்.
