முன்னோக்கு

கடலில் இரண்டு அத்தியாயங்கள்: டைட்டன் நீர்மூழ்கியும், மத்தியதரைக் கடலில் மூழ்கிய நூற்றுக்கணக்கான அகதிகளின் உயிரிழப்பும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

தொலைவில், வடக்கு அட்லாண்டிக்கில் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காணாமல் போன, நீர்மூழ்கி கப்பல் டைடன் (Titan) தொடர்பான நாடகத்தை, உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் கவனித்து வருகிறார்கள். அந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து பயணிகளும், ஏப்ரல் 1912 இல் மூழ்கிய, கடலுக்கடியில் சுமார் 12,500 அடி ஆழத்தில் (3,800 மீட்டரில்) கிடக்கும், டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்க்க பயணித்திருந்தனர். டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதில் சுமார் 1,500 பேர் பலியானார்கள்.  

டைட்டானிக் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனமான OceanGate Expeditions இன் தலைமை செயலதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பணக்கார பிரிட்டிஷ் தொழிலதிபரும் சாகச செயல் ஆர்வலருமான ஹாமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் பெருநிறுவன இயக்குனர் ஷாஜதா தாவூத் மற்றும் அவர் மகன் சுலைமான், கடலில் மூழ்கும் சாகசத்தில் பிரெஞ்சு நிபுணரான பௌல் ஹென்றி நார்ஜியோலெட் ஆகிய அந்த ஐந்து பேரின் தலைவிதி, என்ன ஆனதென்று இதுவரை தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை அந்த நீர்மூழ்கி கப்பல் புறப்பட்ட போது அதில் 96 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் இருந்ததாக செய்திகள் குறிப்பிட்டன.

நீர்மூழ்கி கப்பல் டைடன். [Photo: OceanGate Expeditions]

காலத்திற்கும் கூறுபாடுகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகைய ஒரு சம்பவம், பத்து மில்லியன் கணக்கானவர்களின் ஆர்வத்தையும் அக்கறையையும் ஈர்ப்பது தவிர்க்க முடியாதது தான். உயிராபத்தான நிலைமைகளில் சிக்கியவர்களுக்காக மக்கள் மனதின் ஆழத்தில் இருந்து உணர்வுகளைக் காட்டுகிறார்கள், அதுவும் தற்போதைய விசயத்தில், டைட்டன் பயணிகளை அவர்களின் பயங்கரமான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று தொடர்ந்து மிகவும் உறுதியான நம்பிக்கையில் இருப்பார்கள்.

தனிநபர்களின் சமூக நிலைப்பாடு, நம் மனோபாவத்தைப் பாதிப்பதில்லை. ஒரு சில பில்லியனர்களின் மரணம் உலகைச் சிறந்த இடமாக மாற்றிவிடும் என்ற பரிதாபகரமான கற்பனையில், அவர்கள் இறந்தால் பெருமகிழ்ச்சி அடையும் யாருக்கும் சோசலிச இயக்கத்தில் இடமில்லை. யதார்த்தத்தில், சமூகப் புரட்சியின் நிகழ்வுபோக்கு, பொதுவான இரக்க வளர்ச்சியோடு பிணைந்துள்ளது, லியோன் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டவாறு, “உள்ளம் நன்கு வளர்ச்சியடைந்தவர்கள்” (highly developed psyche) அவசியப்படுகிறார்கள்.

இருப்பினும், துயரகரமான இந்த அத்தியாயத்தைக் குறித்து காட்டப்படும் போதுமான எச்சரிக்கையும் அச்சமும், தீவிர சமூகப் பிரச்சினைகள் அனைத்தையும் முற்றிலும் மறைத்து விடாது.

அனைத்திலும் முதலாவதாக, சில வேதனையான ஆனால் குறிப்பிடத்தக்க வரலாற்று எதிர்முரண்கள் நினைவுக்கு வருகின்றன. அசல் RMS டைட்டானிக் முழ்கியதற்கும் அதன் இன்றைய நாள் நிழல், அதாவது டைட்டன் மூழ்கியதற்கும் இடையே, இப்போது சிறியளவில் இருந்தாலும், ஒற்றுமைகள் உள்ளன. அந்த மூழ்கிய கப்பலில் வியாபார அதிபரும் மிகப் பெரிய செல்வந்தருமான நான்காம் ஜேகப் ஆஸ்டர், மற்றும் பென்சில்வேனியாவின் இரயில்வே நிறுவன செயலதிகாரி ஜோன் தாயர் உட்பட, அந்த 1912 விபத்திலும் முக்கியமான செல்வந்தர்கள் பலியாகி இருந்தார்கள்.

பல விசாரணைகள் எடுத்துக்காட்டி உள்ளவாறு, 1912 இல் அந்தக் கப்பல் மூழ்கிய சம்பவமும் பெரும் மரண எண்ணிக்கையும் முற்றிலும் தவிர்த்திருக்கக் கூடியவையே. அவை, பெருநிறுவன இலாப வேட்கை, தவறான திட்டமிடல்கள், எண்ணற்ற பிழைகள் மற்றும் சாதாரண முட்டாள்தனங்களின் ஒருமித்த விளைவாக இருந்தன. 'பெருமைக்கும் பகட்டாரவாரத்திற்கும், பேராசைக்கும் ஆடம்பரத்திற்குமாக அது இல்லாது இருந்திருந்தால், டைட்டானிக் ஒருபோதும் கடலுக்கடியில் சென்றிருக்காது,” என்று அதிபர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் அமெரிக்க சோசலிச கட்சித் தலைவர் ஏகின் வி. டெப்ஸ் அப்போதே குறிப்பிட்டார். அந்தத் தேர்தலில் அவர் சுமார் 1 மில்லியன் வாக்குகள் பெற்றிருந்தார்.

அதே போல, OceanGate நிறுவனத்தின் செயல்பாடுகளைத் துருவி ஆராய தகுதி உடையவை என்று நம்புவதற்கு அங்கே காரணங்கள் உள்ளன. 2018 இல், அந்நிறுவனத்தின் கடல்சார் செயல்பாடுகளின் இயக்குனர் டேவிட் லோக்ரிட்ஜ், 'ஒரு மோசமான தரக் கட்டுப்பாட்டு அறிக்கை' என்று ஊடகங்களில் விவரிக்கப்பட்ட ஒன்றை தலைமை செயலதிகாரி ஸ்டாக்டன் ருஷ் உட்பட மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கினார், அதற்காக அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். “அதில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களைச் சரிவர நிவர்த்தி” செய்ய இதுவே சரியான நேரம் என்றும், “பல்வேறு பிரச்சினைகள் … தீவிரமான பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்துவதாக” லோக்ரிட்ஜ் அவர் அறிக்கையின் முன்னுரையில் வலியுறுத்தி இருந்தார்.

மேலும் மீட்பு முயற்சிகள் சம்பந்தமாகவும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் உள்ளன. பிரபலமாக அறியப்பட்டவாறு, டைட்டானிக் கப்பலில் வெறும் 20 ஆபத்துதவி படகுகளே (lifeboats) இருந்தன. வரையறைகளின்படி பார்த்தால், அவற்றில் 1,178 பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும், அதாவது கப்பலில் இருந்த 2,200 பேரில் பாதி பேருக்கும் சற்று அதிகமானவர்களை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும். கடலுக்குள் இறக்கி விடப்பட்ட அவற்றில் பலவற்றில் பாதியளவுக்கே ஆட்கள் ஏற்றப்பட்டிருந்தார்கள்.

நீர்மூழ்கி கப்பல் டைட்டன் இருக்கும் இடம் கண்டறியப்பட்டாலும் கூட, நடைமுறையளவில் குறைந்தபட்சம் அரசாங்கத்தின் கரங்களில் எந்த “மீட்பு திறன்களும்” தற்போது இல்லை என்பதால் உயிர்களைக் காப்பாற்றும் முயற்சிகள் தடைபடும். “தீவிர சாகச சுற்றுலாக்களுக்கான உலகளாவிய சந்தை உருவாகி இருப்பதால்”, கடலுக்குக்கடியில் மீட்பு நடவடிக்கைகள் என்பது இப்போது “பெரிதும் தனியார் முயற்சியாக” ஆகியுள்ளது மற்றும் “கடலுக்கடியில் செல்பவர்கள் அங்கே சிக்கிக் காணாமல் போனால், அவர்களுக்கு உதவ பெரும்பாலான அரசாங்கங்களிடம் எதுவும் இல்லை,” என்று Forbes பத்திரிகை கருத்துரை ஒன்று வியக்கத்தக்க வகையில் சுட்டிக்காட்டியது. அமெரிக்காவின் மீட்பு திறன்கள் “வியத்தகு அளவில்” மோசமாக உள்ளன. 1960 இல், அமெரிக்கக் கடற்படை இதற்காகவே ஒதுக்கப்பட்ட ஒன்பது மீட்பு நீர்மூழ்கிக் கப்பல்களும், கடலுக்கடியில் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு கடற்படை இழுவை கப்பல்களும் இருப்பதாக பெருமைப்பீற்றியது. இன்றோ, கடலுக்குக்கடியில் இந்த மீட்பு பணி சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட கப்பல் ஒன்று கூட இல்லை.”

அமெரிக்காவின் பரந்த இராணுவத்திற்கும், பாதுகாப்பு மற்றும் 'பயங்கரவாத எதிர்ப்பு' எந்திரத்திற்கும் உயிர்களைக் காப்பாற்றும் திறமை இல்லை, அவை உயிர்களை அழிக்க மட்டுமே திறன் கொண்டவை என்பதை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகின்றன.

தற்போதைய இந்த துயரம், 'தீவிர சாகச சுற்றுலாவை' நேர்மறையான வெளிச்சத்தில் காட்டவில்லை. ஐந்து நபர்களை உயிருடனும் நலமுடனும் பார்க்க வேண்டுமென்ற விருப்பம், அவர்களின் முட்டாள்தனமான “சாகசங்களை” ஆமோதிப்பதாக ஆகாது. மொத்தத்தில் பெரும்பாலான நேரங்களில், நிறைய பண வசதியோடு, மிதமிஞ்சிய ஓய்வு நேரத்தோடு, ஆனால் அவர்களின் தலையில் மூளையில்லாமல், வெறுப்பூட்டும் அளவுக்கு மிதமிஞ்சி தற்பெருமையோடு அவர்களின் உயிரையும் மற்றவர்களின் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். பெசோஸ், பிரான்சன், முஸ்க் மற்றும் அவர்களின் வகையறாக்கள் யாருக்கும் எந்த சமூகப் பயனும் இல்லாத ஒட்டுண்ணிக்களாக உள்ளனர்.

வர்க்கம் சம்பந்தப்பட்ட கேள்வி, கத்தி முனை போல இவ்விரு துயரங்களிலும் ஊடுருவுகிறது. மூன்றாம் வகுப்பில் (வசதி குறைந்த இடம்) இருந்த சுமார் 709 டைட்டானிக் பயணிகளில், 537 பேர் இறந்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. மூன்றாம் வகுப்பில் இருந்த சுமார் 80 சதவீத ஆண் பயணிகள் உயிரிழந்த அதேவேளையில், முதல் வகுப்பில் இருந்த 3 சதவீத பெண்கள் மட்டுமே அந்த கதிக்கு ஆளானார்கள். நன்கு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளவாறு, டைட்டானிக் கப்பலின் வசதி குறைந்த மூன்றாம் வகுப்பில் இருந்தவர்கள் கீழ் தளங்களில் கம்பி கதவுகளுக்குள் அடைக்கப்பட்டார்கள், அந்தக் கப்பலில் தண்ணீர் பரவிய போதும் கூட அந்தக் கம்பிக் கதவுகளில் சில திறக்கப்படவில்லை.

நூற்றுப் பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னர், வர்க்கப் பிரிவுகள் இன்னும் உயர்ந்த மிகவும் வீரியம் மிக்க நிலையை எட்டியுள்ளன. உண்மையில் இப்போது இது, இரண்டு தனித்துவமான கப்பல்களின் ஒரு கதையாகவும் ஆகியுள்ளது, ஒருபுறம், டைட்டன், மறுபுறம் ஜூன் 13 இல் மத்தியத் தரைக்கடலில் மூழ்கிய மீன்பிடி படகு, அதில் பெரும்பிரயத்தனத்தில் இருந்த நூற்றுக் கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.

புதன்கிழமை, ஜூன் 14, 2023 இல் கிரேக்க கடலோரக் காவல்படை வழங்கிய ஒரு புகைப்படம், ஒரு சேதமடைந்த மீன்படி படகு முழுவதிலும் நடைமுறையளவில் ஒவ்வொரு இடத்திலும் பலர் அடைந்து கிடப்பதைக் காட்டுகிறது. இந்தப் படகு பின்னர் தெற்கு கிரீஸில் கவிழ்ந்து மூழ்கியது. அதில் குறைந்தபட்சம் 79 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காணாமல் போயுள்ளனர். [AP Photo/Hellenic Coast Guard via AP]

ஒரு டிக்கெட்டுக்கு 25,000 டாலர் கொடுத்து செல்லும் பணக்கார சாகச சுற்றுலா பயணிகளின் ஒரு குழுவை அழைத்துச் சென்ற ஒரு நீர்மூழ்கிக்கு அருகில் வைத்து அந்த துரதிருஷ்டவசமான அகதிகளை நினைத்து பார்ப்பதை விட, அந்த நீர்மூழ்கியில், மேல் தளத்தில் இருந்தாலும் கூட, ருஷ் மற்றும் மற்ற செல்வந்தர்களை அதே கப்பலில் அகதிகளாக கற்பனையும் செய்துப் பார்ப்பது சாத்தியமில்லை. இவை இரண்டும் இப்போது ஒன்றுக்கொன்று எதிர்விரோதமான, தொலைதூரத்தில் நிற்கும், ஒன்றோடொன்று ஊடுருவ முடியாத முற்றிலும் இரண்டு தனித்தனி சம்பவங்களாகும்.

வடக்கு அட்லாண்டிக் அத்தியாயத்தைக் குறித்த இடைவிடாத ஊடக செய்திகள், கிரேக்க கடற்கரையை ஒட்டி கடந்த வாரம் நடந்த பயங்கர சோகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட செயல்பாடுகளில் இருந்து பரந்தளவில் வேறுபட்டுள்ளது. அங்கே பாகிஸ்தானியர்களும், எகிப்தியர்கள், சிரியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களும், பெரும்பாலும் கேட்பாரற்று, ஈமச்சடங்குகள் இன்றி இறந்தனர். அவர்களில் சிலரை அடையாளம் காண்பதே சாத்தியமில்லாமல் போகலாம்.

மற்றொரு மிகப் பெரிய எதிர்முரணும் உள்ளது. இரண்டு செல்வந்த பாகிஸ்தானியர்கள் அந்த டைட்டன் நீர்மூழ்கியில் பயணிகளாக இருந்தனர், அதேவேளையில் நூற்றுக் கணக்கான வறிய பாகிஸ்தானிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியத் தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர், இது அவர்களின் சொந்த நாட்டில் சீற்றத்தையும் போராட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மீட்பு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதற்குப் பதிலாக, பல்வேறு ஐரோப்பிய அரசாங்கங்கள், முக்கியமாக கிரேக்கம் தான், இந்தப் பெருந்திரளான மக்கள் மூழ்கி இறப்பதற்கு வழிவகுத்த நிலைமைகளுக்கு நேரடியாக பொறுப்பாகிறது. இதில் அதிகாரிகள் கொண்டுள்ள பாத்திரம் குறித்து அவர்கள் பொய்யுரைத்து மூடிமறைத்ததுடன், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மீது பழி தூற்றினர். உயிர்பிழைத்த அகதிகள் அசுத்தமான கிடங்கு வளாகத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்த உண்மைகளை எடுத்துரைக்க ஊடக பிரமுகர்கள் விழித்திருக்கப் போவதில்லை. இவர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான மரணங்கள் இப்போது வழமையான விஷயமாகி விட்டது. பாதிக்கப்பட்ட அகதிகள் அவர்கள் தலைவிதியை அவர்களே ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது தான் செய்திகளின் தெளிவான உட்பொருளாக இருந்தது. “சுவர் எழுப்பப்பட்ட அமெரிக்கா” போலவே, “ஐரோப்பிய கோட்டையின்” யதார்த்தமும் பேசப்படாத உத்தியோகப்பூர்வ மனிதாபிமற்றத்தன்மை ஆகும்.

எந்தவொரு அரசாங்கமோ அல்லது கடற்படையோ கிரேக்கத்துக்கு அருகே மீன்பிடிக் கப்பலில் தெளிவாக ஆபத்தில் சிக்கிய நூற்றுக் கணக்கானவர்களைக் காப்பாற்ற நினைத்திருந்தால், அவ்வாறு செய்வது கடலுக்கடியில் சிக்கிய ஒரு கப்பலை மீட்பதை விட மிகவும் சுலபமாக இருந்திருக்கும். ஐரோப்பிய அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட மனிதப் படுகொலை முன்வரலாறை வைத்து பார்க்கையில், மற்ற அகதிகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கவும் மற்றும் மிரட்டவும் ஒரு வழிவகையாக, இந்த அகதிகளின் மரணங்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்புவது நியாயமாகவே இருக்கும். 

நிச்சயமாக, உயிர்பிழைக்க வந்தவர்களைக் கண்ணியத்தோடு இடம்பெயரவும் மற்றும் ஒரு கண்டத்தில் இருந்து அல்லது ஒரு நாட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு தடையில்லாமல் உள்ளே அனுமதித்திருந்தால் இந்த ஒட்டுமொத்த துயரமும் தடுக்கப்பட்டிருக்கும், ஏனென்றால் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் இந்த கதி பெரிதும் ஏகாதிபத்திய போர்களாலும், மேற்கத்திய சக்திகள் நடத்துகின்ற பிற நடவடிக்கைகளாலும் ஏற்படுத்தப்பட்டதாகும், இதே ஆட்சிகள் இப்போது கடலில் அவர்களின் மரணங்களுக்கும் தலைமை தாங்குகின்றன.

சமூக சமத்துவமின்மை, நவ-காலனித்துவ போர், எதேச்சாதிகாரம் மற்றும் புலம்பெயர்வு-விரோத விஷமப் பிரச்சாரத்தின் வளர்ச்சி, உத்தியோகப்பூர்வ அரசியல் மற்றும் ஊடகங்களின் மதிப்பிழப்பு ஆகியவற்றோடு, இந்த இரண்டு எதிர்முரணான அத்தியாயங்களின் “துயரகரமான சூழல்களில்… ஓர் அர்த்தம்” (டெப்ஸ்) உள்ளது. ஆனால் தவறுக்கிடமின்றி, ஒரு நிலைக்குலைந்த குற்றகரமான சமூக ஒழுங்கின் முன்னால், பெருந்திரளான மக்களின் பொதுவான இயக்கம் இடதை நோக்கி, சமூக புரட்சியை நோக்கி உள்ளது.

Loading