இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஏப்ரல் மாதம், நகைச்சுவை நிகழ்ச்சியான “மோடிபிமானயா” (முட்டாள்களின் பெருமை) என்ற நிகழ்ச்சியின் மூலம் “பௌத்த மதத்தை இழிவுபடுத்தினார்” என்று குற்றம் சாட்டப்பட்ட, இலங்கையின் நகைச்சுவை பேச்சாளர் ஜெயனி நடாஷா எதிரிசூரிய, மே 28 அன்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், அவரைக் கைது செய்யக் கோரி ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்தன. இது பௌத்தத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும்.
எதிரிசூரிய பொலிசின் இணைய குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரிக்கப்பட்ட பின்னர், மறுநாள் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். நீதவான் அவரை ஜூன் 7 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். எதிரிசூரியவின் நடிப்பிற்காக “வசதி செய்து கொடுத்தவர்கள் மற்றும் அனுசரணை செய்தவர்கள்” மற்றும் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் என எல்லோரைப் பற்றியும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, மே 31 அன்று, எதிரிசூரியவின் வீடியோவை அவரது “SL VLOG” YOU TUBE வீடியோ சேவையில் வெளியிடுவதற்கு உதவியதற்காக சமூக ஊடக ஆர்வலர் புருனோ திவாகராவை பொலிசார் கைது செய்தனர். இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் “பல்வேறு சமூகத்தினரிடையே மத நல்லிணக்கத்தை சிதைப்பதற்கு” வழி வகுத்ததாக திவாகர மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜூன் 7, எதிரிசூரிய, திவாகர ஆகிய இருவரையும் ஜூன் 21 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நடாஷா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிரிசூரியவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கான உடனடி காரணம், அவர் பௌத்த இலக்கியங்களில் புத்தரின் பிறப்பு மற்றும் சிறுவர் பருவ வாழ்க்கை, பின்னர் இளவரசர் சித்தார்த்தர் என அழைக்கப்பட்டது பற்றியும் மற்றும் நாட்டின் பௌத்த பெண்கள் பாடசாலைகளில் பின்பற்றப்படும் நெறிமுறைகள் குறித்தும் கிண்டல் செய்து பேசியதாகக் கூறப்படுகிறது.
பௌத்த இலக்கியங்களின்படி, சித்தார்த்தர் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் கோசல இராச்சியத்தின் (தற்கால நேபாளம்) சாக்கியக் குடியரசின் கபிலவஸ்துவுக்கு அருகிலுள்ள சாக்கிய குலத்தைச் சேர்ந்த மன்னன் சுத்தோதனனின் மகனாகப் பிறந்தார். பிறந்தவுடன், சித்தார்த்தர் எழுந்து நடந்தது மட்டுமின்றி, அவர் உலகின் தலைசிறந்த மனிதராக ஆவேன் என்றும் கூறினார்.
தனது உரையின் போது, சித்தார்த்தாவின் பிறப்பைக் பற்றி குறிப்பிட்ட எதிரிசூரிய, சமகால பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நடக்கவும் பேசவும் தொடங்குவதில் தாமதமாவது குறித்து கவலை தெரிவிப்பதை சுட்டிக்காட்டி சில விமர்சனக் கருத்துக்களைப் பேசியதாகக் கூறப்படுகிறது.
“இந்த விஷயங்களை நான் கேட்கும் போது, குழந்தை சித்தார்த்தாவின் அதே வயதுடைய குழந்தைகள் மீது மிகப்பெரிய அழுத்தம் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். சுத்தோதனின் குழந்தையைப் பாருங்கள், அவன் பிறந்த உடனேயே நடந்தார்... அந்த சுத்தோதனின் சிறுவன் பிறந்தவுடன் ஒரு கவிதையை மேற்கோள் காட்டினான், ஆனால் நம் குழந்தைகளின் நிலை என்ன!… அவர்களுக்காக நாங்கள் அனைத்தையும் செய்யும் வரை காத்திருக்கிறார்கள்,” என இந்த நகைச்சுவை நடிகை பேசியதாகக் கூறப்படுகிறது.
சிங்கள பௌத்த ஆத்திரமூட்டல்காரர்களும், முதலாளித்துவ ஊடகங்களும் பௌத்தத்தை “இழிவுபடுத்தும்” கருத்துக்கள் என பற்றிக்கொண்டுள்ள வரிகள் இவையே ஆகும். எதிரிசூரியவின் கருத்துக்களை பற்றிய இத்தகைய பண்புமயப்படுத்தல் அபத்தமானதாகும்.
எவ்வாறாயினும், இனவாத ஆத்திரமூட்டலை எதிர்கொண்ட எதிரிசூரிய தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டார். அவரது கருத்துகள் அடங்கிய வீடியோவும் சமூக ஊடக தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்தக் கைதுகளை கண்டிப்பதுடன் எதிரிசூரிய மற்றும் திவாகரவும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியது.
பௌத்த விவகார ஆணையாளர், எதிரிசூரியவுக்கு எதிராக எழுத்துமூல முறைப்பாடு செய்துள்ளதாகவும், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சி.ஐ.டி.) சுமார் எட்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தல்தூவ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகளில் ஒன்று பலாங்கொட கஸ்ஸபா என்ற பௌத்த பிக்குவினால் தாக்கல் செய்யப்பட்டது. அவர் “புத்தரின் குணாதிசயங்கள் குறித்து அவதூறான அறிக்கைகளை வெளியிட்டவர்கள் வெளிப்படையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று பகிரங்கமாக கோரினார். பல வருடங்களுக்கு முன்னர் சிங்கள பௌத்த பேரினவாத பிரச்சாரங்களில் முன்னணியில் இருந்த ஒரு அமைப்பான சிஹல ராவய அமைப்பிடமிருந்து மற்றுமொரு முறைப்பாடு வந்தது.
இந்த பிரச்சாரத்தின் மத்தியில், “மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் அல்லது குழுக்கள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு சிறப்பு பொலிஸ் பிரிவை நிறுவுமாறு” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்ஸிற்கு மே 29 அன்று அறிவுறுத்தினார். சிறப்புப் பொலிஸ் பிரிவை ஸ்தாபிப்பது என்பது அடிப்படை ஜனநாயக உரிமையான பேச்சுச் சுதந்திரத்தை இராணுவ-பொலிஸ் சப்பாத்துக்களால் மிதிப்பதாகும்.
மே மாதம், நிரம்பிய சபைக்கு முன்பாக, விக்கிரமசிங்க தனது பிரிவை உயர்த்துவதற்காக நிகழ்த்திய மத விரிவுரையின் போது பௌத்தம், இந்து மதம், இஸ்லாம் ஆகிய மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பிரிவின் முன்னணி போதகரான ஜெரோம் பெர்னாண்டோவை விசாரிக்குமாறு பாதுகாப்புத் தலைவர்களுக்கு உத்தரவிட்டார். எனினும், தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு பெர்னாண்டோ மன்னிப்பு கோரினார்.
மே 14 அன்று, சி.ஐ.டி. அவருக்கு எதிராக பயணத் தடையைப் பெறுவதற்கு முன்பு பாதிரியார் நாட்டை விட்டு வெளியேறினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், பெர்னாண்டோ இலங்கை திரும்பியதும் கைது செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பௌத்தம் மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி பல அரசாங்க அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஜனரஞ்சக பேச்சு அரசியல்வாதிகள், அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் இரத்தக்களரியாக நசுக்குவதாக சபதம் செய்து, ஒட்டுமொத்த இனவாத பதட்டங்களையும் வேண்டுமென்றே தூண்டிவிடுகின்றனர். ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினரான ஓய்வுபெற்ற கடற்படை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, “அரகலயாவிலும் [கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சி] புத்தபெருமானையும் பௌத்தத்தையும் எவ்வாறு இழிவுபடுத்தினார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம்,” என ஊடகங்களிடம் கூறினார்.
மக்கள் எழுச்சியைக் கொச்சைப்படுத்த முனைந்த வீரசேகர, “இலங்கை ஒரு பௌத்த நாடாக இருப்பதையிட்டு வருந்துகின்ற மேற்கத்திய நாடுகளாலேயே இது முழுவதுமாக ஒழுங்கமைக்கப்பட்டது,” எனக் கூறினார். அவர், பௌத்த மதத்தை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் எதிரிசூரிய மற்றும் மற்றவர்கள் அரசியலமைப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் “கடுமையாக” தண்டிக்கப்பட வேண்டும் என்றார். “இல்லையெனில் பௌத்தர்கள் இந்த சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வார்கள்” என்று வீரசேகர மிரட்டல் விடுத்தார்.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ள விக்கிரமசிங்க அரசாங்கமும் முழு ஆளும் வர்க்கமும் கடந்த ஆண்டு போல் மற்றொரு வெகுஜன எழுச்சியைப் பற்றி பீதியடைந்துள்ளனர். விக்கிரமசிங்க, எதேச்சதிகார ஜனாதிபதி அதிகாரங்களைப் பயன்படுத்தும் அதே வேளையில், அடக்குமுறைச் சட்டங்களை மேலும் இறுக்கி, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களில் குதிக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ்-இராணுவ நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளார். இந்நிலையில் எதிரிசூரியவின் நகைச்சுவை பற்றிக்கொள்ளப்பட்டது தற்செயலானது அல்ல.
மத மற்றும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதாக அரசாங்கமும் ஊடகங்களும் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவினருக்கும் அத்தகைய வரலாறு கிடையாது. 1948ல் சுதந்திரம் என்று அழைக்கப்பட்டது கிடைத்ததில் இருந்தே, தொழிலாளர்களின் போராட்டங்களால் சவால்களை எதிர்கொண்ட போதெல்லாம், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதன் மூலம் தங்கள் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக அடுத்தடுத்த அரசாங்கங்கள் சிங்கள-பௌத்த பேரினவாதத்தைத் தூண்டிவிட்டு வந்துள்ளன.
1948 இல் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் இந்திய வம்சாவளி தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமைகளை இரத்து செய்தது. 1956 இல், மேலும் முன் சென்று, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அரசாங்கம், தமிழர்களுக்கு எதிரான தெளிவான பாரபட்சத்துடன் சிங்களத்தை மட்டுமே அரச கரும மொழியாக அறிவித்தது. 1972 இல், ஸ்ரீ.ல.சு.க., லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.), ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கம், பௌத்தத்தை அரச மதமாக அங்கீகரிப்பதற்கான அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி இனப் பிளவுகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இனவாத ஆத்திரமூட்டல்களை ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு சென்று, 1983 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க. அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 26 வருடங்கள் நீடித்த தமிழர்-விரோத இனவாத யுத்தத்தை ஆரம்பித்தது. இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சமீபத்திய வாரங்களில், அரசாங்கத்தின் ஆதரவுடன் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகளும் பௌத்த பிக்குகளும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும் இனவாத பதட்டங்களைத் தூண்டியுள்ளனர்.
எதிரிசூரிய ஒரு மத மற்றும் இனவாத வேட்டையாடலின் சமீபத்திய பலிகடா மட்டுமே. எழுத்தாளர் சக்திக சத்குமார தனது முகநூல் கணக்கில் வெளியிடப்பட்ட சிறுகதையின் மூலம் பௌத்த மதத்தை இழிவுபடுத்தியதாக பௌத்த தீவிரவாத குழுக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து 2019 ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். அதேபோன்று, திரைப்பட இயக்குநரும் நாடக ஆசிரியருமான மாலக தேவப்பிரியவிடம், “பௌத்த மதத்தை இழிவுபடுத்திய” குற்றச்சாட்டின் பேரில், சி.ஐ.டி. விசாரணை செய்தது.
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பொய்யான குற்றச்சாட்டின் பேரில், அஹ்னஃப் ஜசீம் என்ற கவிஞர், 2020 மே மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 19 மாதங்களுக்குப் பிறகே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பௌத்த பேரினவாதிகளின் முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய கைதுகள், தீவிரமடைந்துவரும் இனவாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த பிற்போக்கு மத சித்தாந்தவாதிகள் மற்றும் அவர்களின் பிளவுபடுத்தும் வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டியது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஒரு தீர்க்கமான அரசியல் பணியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சிக்கு மட்டுமே இத்தகைய தாக்குதல்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அரச அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய கறைபடியாத வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் வர்க்கங்கள் சர்வாதிகார மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கு மாறி, தொழிலாள வர்க்கத்தைத் தாக்க தீவிர வலதுசாரி மற்றும் பாசிச அமைப்புகளை ஊக்குவித்து வருகின்றன. இந்த பிற்போக்கு போக்குகளை வளர்க்கும் முதலாளித்துவத்தை ஒழிக்க, தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழான புரட்சிகர போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இதை தோற்கடிக்க முடியும்.
இலங்கை ஆளும் கட்சி கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியை வெறுப்புக்குரியதாக காட்டுகிறது