இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் பலியான உக்ரேனிய சிப்பாய்களின் உண்மையான எண்ணிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளன. இந்த சிப்பாய்களில் பலர் பலாத்காரமாக இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் ஆவர்.
செவ்வாயன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், உக்ரேனிய துருப்புக்களில் பெருந்தொகையானோர் பயங்கரமாக காயமடைந்திருப்பதை விவரிக்கும் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
50,000 அல்லது அதற்கும் அதிகமான உக்ரேனியர்கள் ஊனமுற்றவர்களாக மாறியுள்ளனர் என்று கூறிய அந்தக் கட்டுரை, உலகின் மிகப்பெரிய செயற்கைக் கருவி உற்பத்தியாளரான ஜேர்மனியின் ஓட்டோபாக் நிறுவனத்தின் தரவை மேற்கோள் காட்டியது. கட்டுரை விளக்குவது போல், உக்ரேன் போரில் உறுப்பு அகற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை, முதல் உலகப் போரில் போராடிய சிப்பாய்களின் எண்ணிக்கையை ஒத்ததாக இருக்கும்.
“முதல் உலகப் போரின் போது 67,000 ஜேர்மனியர்களதும் 41,000 பிரித்தானியர்களதும் உடற்பாகங்கள் துண்டிக்கப்பட வேண்டியிருந்தது. அப்போது இது மரணத்தைத் தடுப்பதற்கான ஒரே ஒரு வழிமுறையாக மட்டுமே இருந்தது” என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.
போரில் இறந்த உக்ரேனிய துருப்புக்களின் எண்ணிக்கை மோதலின் மிக இறுக்கமாக பாதுகாக்கப்பட்ட இரகசியங்களில் ஒன்றாகும். இந்த எண்ணிக்கை உக்ரேனிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களுக்குத் தெரிந்த போதிலும், பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட தரவுகளைப் பயன்படுத்தி, சில முடிவுகளை எடுக்க முடியும்.
முதலாம் உலகப் போரின்போது, 880,000 பிரிட்டிஷ் படைகள், அல்லது பணியாற்றியவர்களில் 12.5 சதவீதம் பேர் இறந்தனர். உடற்பாகம் அகற்றப்பட்ட உக்ரேனிய துருப்புக்களின் எண்ணிக்கை, இந்த நடைமுறை இப்போது இருப்பதை விட மிகவும் பொதுவானதாக இருந்த, முதல் உலகப் போரில் பிரித்தானிய சிப்பாய்களின் எண்ணிக்கையை விஞ்சியிருந்தால், உக்ரேனிய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை இலட்சக் கணக்கில் இருக்கும் என்பதை இது குறிக்கின்றது.
அந்தக் கட்டுரையில் இன்னொரு பயங்கரமான தரவு உள்ளது. “அமெரிக்க இராணுவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட உக்ரேனிய இராணுவ மதிப்பீடுகளின்படி, நிலைநிறுத்தப்பட்ட அனைத்து சிப்பாய்களிலும் 5% முதல் 10% வரை கொல்லப்பட்டுள்ளனர்” என்று ஜேர்னல் தெரிவிக்கிறது. “ஒப்பிடுகையில், சமீபத்திய மோதல்களில் நிறுத்தப்பட்ட அமெரிக்க துருப்புக்களில் 1.3% முதல் 2% பேர் மட்டுமே மோதலின் போது இறந்தனர்,” என அது மேலும் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உக்ரேனிய துருப்புக்களின் இறப்பு விகிதம் சமீபத்திய போர்களில் அமெரிக்க படைகள் அனுபவித்ததை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
அமெரிக்க இராணுவமும் அரசியல் ஸ்தாபனமும் உக்ரேன் தனது தாக்குதலை புதுப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகளை விடுக்கும் சூழலேயே இது நடந்துள்ளது. “மேற்கிடம் பயிற்சி பெற்ற உக்ரேனிய துருப்புக்கள் போரில் தடுமாறுகின்றன” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், வியாழன் அன்று மற்றொரு பாதி மூடி மறைக்கப்பட்ட வடிவத்தில் விளக்கிய நியூ யோர்க் டைம்ஸ், நன்கு பாதுகாக்கப்பட்ட ரஷ்ய நிலைகள் மீது அடுத்தடுத்த தாக்குதல் அலையை உக்ரேன் முன்னெடுக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தல் ஒரு பிரதான ஊக்கமளிக்கும் காரணி, எனக் கூறியது.
“’தரைப்படை, கவச வாகனம் மற்றும் பீரங்கிப் படைகளின் ஒத்துழைப்புடனான ஒருங்கிணைந்த ஆயுதத் தந்திரோபாய தாக்குதல்களுக்கு’ அமெரிக்கர்கள் அழைப்பு விடுத்தனர்,” என டைம்ஸ் எழுதியது. “மேற்கத்திய அதிகாரிகள் ரஷ்யப் படைகளை சிதைத்து வீழ்த்தும் விலையுயர்ந்த மூலோபாயத்தை விட மிகவும் திறமையானது என அந்த அணுகுமுறையை தூக்கிப் பிடித்தனர், இது உக்ரேனின் வெடிமருந்து இருப்புக்களை குறைக்க அச்சுறுத்துகிறது,” என அது மேலும் கூறியது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெடி பொருட்களின் பற்றாக்குறை நிலையிலும், அமெரிக்க அதிகாரிகள் ரஷ்ய அரன்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்தன் விளைவாக, பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். தெளிவாக, குண்டுகளை விட உக்ரேனிய உயிர்கள் அதிகமாக செலவழிக்கக்கூடியவை என்று அமெரிக்க ஜெனரல்கள் நம்புகிறார்கள்.
உக்ரேனிய எதிர்த்தாக்குதல் மற்றும் கியேவின் “ஒருங்கிணைந்த ஆயுத” தாக்குதல்கள் பற்றிய அமெரிக்க ஊடகங்களின் கற்பித்தல்கள், சுய-ஏமாற்று பிரச்சாரமே தவிர வேறொன்றுமில்லை. உண்மையில், அமெரிக்க ஊடகங்களில் சமீபத்திய அறிக்கைகள் வெளிப்படுத்தியபடி, விமான ஆதரவின்றி நடத்தப்படும் இந்த அதிநவீன இராணுவ நடவடிக்கைகள், முதலாம் உலகப் போரின் பாணியிலான போர்முனைத் தாக்குதல்களாக இருப்பதோடு முதலாம் உலகப் போர் மட்டத்திலான படுகொலைகளை விளைவாக்கும் என்பதையிட்டு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அறிந்திருந்தனர்.
எதிர் தாக்குதலின் மொத்த தோல்வியை அமெரிக்க செய்தி ஊடகத்தின் தொனியில் இருந்து ஊகிக்க முடியும்: அதாவது, போரின் அலையானது, வெற்றி ஆரவார அறிவிப்புகளில் இருந்து, மொத்தத்தில் அனைவரும் இழக்கப்படமாட்டார்கள் என்ற அவநம்பிக்கையான வலியுறுத்தலின் பக்கம் திரும்பும்.
கார்டியனில் எழுதுகையில், ஜூலியன் போர்கர் “வலுவான பாதுகாப்புகளை எதிர்கொள்வதில் நன்நம்பிக்கையை விட துரிதமாக தடைதகர்ப்பது பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது,” என்று ஏற்றுக்கொண்டார். “உக்ரேனிய எதிர்த்தாக்குதலின் முதல் உயிரிழப்பு விருப்பமான எதிர்பார்ப்பு சிந்தனைதான். ரஷ்ய துருப்புக்கள் தங்கள் அரண்களை கைவிட்டு ஓடிவிடுவார்கள் என்ற எந்த நம்பிக்கையும், இப்போது போர்க்களத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது,” என அவர் தொடர்ந்து கூறினார்.
இது போன்ற “விருப்ப சிந்தனையின்” மைய ஆதரவாளராக இருந்த ஒரு செய்தித்தாளில் இருந்து இந்த வார்த்தைகள் வருகின்றன. திமோதி கார்டன் ஆஷ் என்பவர் மே மாதம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், கார்டியன் பத்திரிகையானது வரவிருக்கும் காலத்தை, “ஒரு தீர்க்கமான உக்ரேனிய வெற்றியை” கொண்டுவரும் “எதிர் தாக்குதலை உருவாக்குதல் அல்லது முறியடித்தல்” என்று அழைத்தது.
இப்போது பிரமையாக ஒலிக்கும் வார்த்தைகளில், ஆஷ் இந்த தாக்குதலை, நாஜி ஜேர்மனிக்கு எதிரான வெற்றிகரமான நோர்மண்டி படையெடுப்புடன் ஒப்பிட்டார். “தீர்மானமான உக்ரேனிய வெற்றியானது இப்போது நீடித்த அமைதி, சுதந்திர ஐரோப்பா மற்றும் இறுதியில் சிறந்த ரஷ்யாவுக்கான ஒரே உறுதியான பாதையாகும். இதுவே புதிய VE (ஐரோப்பாவில் வெற்றி) தினமாக இருக்கும்.
அவர் இவ்வாறு ஆலோசனை கூறினார்: “உக்ரேனிய இராணுவம் அசோவ் கடலுக்கு தெற்கே வேகமாக முன்நகர்ந்தால், மனச்சோர்வடைந்த அதிக எண்ணிக்கையிலான ரஷ்யப் படைகளைச் சுற்றி வளைத்து, கிரிமியன் தீபகற்பத்திற்கான விநியோகப் பாதைகளைத் துண்டித்தால், தரையில் ரஷ்ய இராணுவத்தினத்தினதும் மொஸ்கோவில் உள்ள ஆட்சியினதும் மன உறுதியில் நேரிடியாக அல்லாத சில சரிவு ஏற்படலாம்.”
இத்தகைய கூற்றுக்கள் அமெரிக்க ஊடகங்கள் முழுவதும் நிலவியது. வாஷிங்டன் போஸ்ட்டில் எழுதுகையில், டேவிட் இக்னேஷியஸ், “இரண்டாம் உலகப் போரின் பாதையை நோர்மண்டி கடற்கரைகளில் நேச நாடுகளின் தாக்குதல் மாற்றியமைத்தது போல், இந்தத் தாக்குதல் உக்ரேனுக்கான போரின் அலையை மாற்றக்கூடும்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த மாயைகள் உடைந்துவிட்டன. “ஆரம்ப உக்ரேனிய தாக்குதல்கள் அடர்ந்த, கண்ணிவெடி அடுக்குகளில் சிக்கின. “ஜூன் 4 அன்று தாக்குதல் தொடங்குவதற்கு முன்னதாக லெபர்ட் ரக மற்றும் பிற மேற்கத்திய ரக டாங்கிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்ட அளவுக்கு, உக்ரேனிய கவச வாகனங்கள் எல்லைகளை தாண்டுவதற்குத் தேவையான உந்துதலை வழங்கத் தவறிவிட்டது,” என்று கார்டியனில் போர்கர் எழுதுகிறார்.
“சுய நிர்ணயத்தை” பாதுகாப்பது பற்றிய அவர்களின் அனைத்து பேச்சுகளையும் பொறுத்தளவில், அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள், உக்ரேனியர்களை ரஷ்யாவுடனான மோதலில் பீரங்கிக்கு இரையாகக் கருதுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வார்த்தைகளில், “ரூபிளை சிதில்களாக்கும்” நோக்கத்துடன், இரத்தக்களரி போரில் ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா முயன்றது. இது ஒரு முழு தலைமுறை உக்ரேனிய இளைஞரை அழிப்பதன் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த இளைஞர்களின் வாழ்க்கை அரசர் டொலர் என்ற பெயரில் துவம்சம் செய்யப்படுகின்றது.
