மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், கடந்த வியாழன் அன்று காங்கிரஸிடம், உக்ரேன் போருக்கு கூடுதலாக 24 பில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த 'கூடுதல் நிதி கோரிக்கையில்' 14.1 பில்லியன் டொலர்கள் நேரடி இராணுவ உதவிக்கும், 8.5 பில்லியன் டொலர்கள் பொருளாதாரக் கொடுப்பனவுகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
இன்றுவரை, காங்கிரஸ் 113 பில்லியன் டொலர்களை போருக்காக செலவழிக்க ஒப்புதல் அளித்துள்ளது, இதில் 70 பில்லியன் டொலர்கள் நேரடியாக ஆயுதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் காணப்படாத இரத்தக்களரியை உக்ரேன் போர் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த மோதலில் சுமார் 50,000ம் உக்ரேனியர்கள் கைகால்களை இழந்துள்ளனர், இது உயிரிழப்பு மற்றும் இறப்பு விகிதத்தின் அடிப்படையில், நூறாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் பீரங்கித் தீவனமாகக் கருதும் உக்ரேன் மக்களின் வாழ்க்கையைப் பற்றி முற்றிலும் அலட்சியமாக இருக்கிறது. பைடென் அனுப்பத் திட்டமிட்டுள்ள கூடுதல் பல்லாயிரக்கணக்கான பில்லியன்கள் டொலர்கள், ஏற்கனவே வரலாறு காணாதளவில் பாரியளவு படுகொலையை நிரந்தரமாக்குவதற்கு இத்தொகை பயன்படுத்தப்படும்.
இந்த கோரிக்கை, காங்கிரஸ் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்திக்கு கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ளது:
முதலாவதாக, உக்ரேனின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வரை நாங்கள் உக்ரேனுடன் நிற்போம் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார், இது நமது நட்பு நாடுகளையும் பங்காளிகளையும் வெற்றிகரமாக ஒன்றிணைத்து, ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்ரேனைத் தற்காத்துக் கொள்ள அதனைத் தயார்படுத்தியுள்ளது. நேரடி இராணுவ உதவி, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பிற ஆதரவுக்கான முந்தைய துணை ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்படுகின்றன, அல்லது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளன. நிர்வாகம் உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் கூடுதல் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவி நிதியைக் கோருகிறது.
இந்தப் பத்திக்கு அப்பால், அந்தக் கடிதத்தில் பணம் ஏன் தேவைப்படுகிறது அல்லது அதைக் கொண்டு என்ன செய்யப்படும் என்பதற்கான விளக்கங்கள் எதுவும் இல்லை.
கடந்த வியாழன் அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், பென்டகன் பத்திரிகை செயலாளர் விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர், அமெரிக்கா“தேவைப்படும் வரை போருக்கு நிதியளிக்கும்”என்று மீண்டும் வலியுறுத்தினார்.
“உக்ரேனுக்கான பொதுவான ஆதரவைப் பொறுத்தவரை, நாங்கள் கடந்த காலத்தில் கூறியது போல், உக்ரேனுக்கு தேவையான அளவுவரை தொடர்ந்து ஆதரவளிப்போம்”என்று ரைடர் கூறினார்.
உக்ரேன் இராணுவத் தோல்வியின் அளவு தெளிவாகி வருவதால், பாரிய புதிய செலவுத் திட்டம் வந்துள்ளது. ஒரு படைப்பிரிவின் முழு அமைப்பும் மூன்று முறை கொல்லப்பட்ட அல்லது காயம் அடைந்தது, இதனால் மூன்று முறை அதனை மாற்ற வேண்டியிருந்தது என்று இந்த வாரம் வெளியான ஒரு கட்டுரையில், நியூயார்க் டைம்ஸ் ஒப்புக்கொண்டது.
“பெரும் இழப்புகள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான தளபதிகள் கடந்த 16 மாத கால சண்டையில் சில சமயங்களில் தங்களின் சொந்த பிரிவுகள் உட்பட பல பிரிவுகள் அழிக்கப்பட்டதைக் கண்டதாகக் கூறினர். ஒரு பட்டாலியன் கமாண்டர் ஒலெக்சாண்டர், கடந்த ஆண்டு கெர்சனில் நடந்த எதிர்த்தாக்குதலின் போது உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன, அதனால் அவருக்கு தனது பிரிவின் உறுப்பினர்களை மூன்று முறை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”என்று டைம்ஸ் மேலும் குறிப்பிட்டது.
உக்ரேனிய இராணுவம் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலை மற்றும் அதன் எதிர் தாக்குதலின் மொத்த தோல்வி குறித்து அமெரிக்க செய்தி ஊடகங்களில் அதிகளவில் வெளிப்படையான அறிக்கைகள் வெளிவருகின்றன. CNN இந்த வாரம் அமெரிக்க கூட்டாளிகள் உக்ரேனின் அதிக நிலப்பரப்பைக் கைப்பற்றும் திறனைப் பற்றிய“நிதானமான”மதிப்பீடுகளைப் பெற்றுள்ளதாக அறிவித்தது.
“இன்னும், அடுத்த இரண்டு வாரங்களில், முன்னேற வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஆனால் இந்த மோதலின் சமநிலையை மாற்றும் வகையில் அவர்கள் உண்மையில் முன்னேற்றம் அடைவது மிகவும் சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று ஒரு “மூத்த மேற்கத்திய இராஜதந்திரி ” CNN இடம் கூறினார்.
“ரஷ்யர்களுக்கு பல தற்காப்பு முன்னரங்க எல்லைகள் இருப்பதாகவும், உக்ரேன் படையினர் உண்மையில் அதில் ஒன்றையும் உடைக்கவில்லை” என்றும் அந்த இராஜதந்திரி தெரிவித்தார். “அடுத்த சில வாரங்களுக்கு அவர்கள் தொடர்ந்து போராடினாலும், கடந்த ஏழு அல்லது எட்டு வாரங்களில், அவர்களால் அதிக முன்னேற்றங்களைச் செய்ய முடியவில்லை. ஆதலால், மிகவும் சோர்வடைந்த நிலையில் இருக்கும் அவர்களது படைகள் திடீரென்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன? ஏனெனில் நிலைமைகள் மிகவும் சவாலானவை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதே போன்ற கருப்பொருளில், “உக்ரேனின் எதிர்த்தாக்குதலின்போது எச்சரிக்கை அதிகரிக்கிறது” என்ற தலைப்பில் தி ஹில் பத்திரிகை ஒரு அறிக்கையை வெளியிட்டது. “உக்ரேனின் எதிர் தாக்குதலின் வேகம் மற்றும் வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், சமீபத்திய வாரங்களில் முன்னேற்றத்தின் சில அறிகுறிகளும் மற்றும் ரஷ்ய முன்னரங்க பாதுகாப்பு எல்லைகள் வலுவாக இருப்பதாகவும்” எச்சரித்தது.
உக்ரேனிய இராணுவத்தை ஒரு கல்லூரி அணிக்கு எதிராக விளையாடும் உயர்நிலைப் பள்ளி அணியுடன் ஒப்பிட்டுப் பேசிய செனட்டர் ரோமி டூபர்வில்லியேவை மேற்கோள் காட்டிய அந்தக் கட்டுரை: “அவர்களால் வெற்றி பெற முடியாது” என்று குறிப்பிட்டது.
இந்த தாக்குதலில் உக்ரேன், இதுவரை போரில் இறந்த மில்லியன் கணக்கான சிப்பாய்களுடன் சேர்த்து, பல்லாயிரக்கணக்கான படையினர்களை இழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன், சமீபத்திய தாக்குதலில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் வழங்கப்பட்ட டசின் கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களையும் உக்ரேன் இழந்துள்ளது.
இந்த நிலைமைகளின் கீழ், சாத்தியமான உக்ரேனிய வீழ்ச்சியை தடுப்பதற்கு, மோதலில் தங்கள் ஈடுபாட்டை அதிகரிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஜூன் மாதம், முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் ஆண்டர்ஸ் ராஸ்முசென், நேட்டோ உறுப்பினர்கள் உக்ரேனில் “தரையில் துருப்புக்களை” நிலைநிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பை எழுப்பினார்.
அப்போது ராஸ்முசென் கூறியதாவது, “உக்ரேனுக்கான தெளிவான வழியை நேட்டோ ஏற்றுக்கொள்ளத் தவறினால், சில நாடுகள் தனித்தனியாகச் செயல்படுவது முற்றிலும் சாத்தியமாகும். உக்ரேனுக்கு உறுதியான உதவிகளை வழங்குவதில் போலந்து மிகவும் ஈடுபட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இந்த சூழலில் தேசிய அடிப்படையில் போலந்து இன்னும் வலுவாக, ஒருவேளை தரையில் துருப்புக்கள் ஈடுபடுத்துவதோடு, அது பால்டிக் நாடுகளால் பின்தொடரப்படும் சாத்தியக்கூறுகளை நான் நிராகரிக்கவில்லை.”
“போலந்து உள்ளே செல்வதையும் விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை அமைப்பதையும் தீவிரமாக பரிசீலிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்,
இந்த வார்த்தைகள், தற்போதைய மோதலில் ரஷ்யாவுடன் இணைந்துள்ள பெலாரஸ் அரசாங்கத்துடனான அதன் எல்லையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் போலந்து துருப்புக்களின் கட்டமைப்புக்கு ஒரு அச்சுறுத்தும் தொனியை கொடுக்கிறது.
வியாழனன்று, போலந்தின் பாதுகாப்பு மந்திரி மரியஸ் பிலாஸ்சாக், போலந்து 2,000ம் துருப்புக்களை எல்லைக்கு அனுப்பும் என்று அறிவித்த ஒரு நாள் கழித்து, அதே பகுதிக்கு நாடு மேலும் 10,000ம் துருப்புக்களை எல்லைக்கு அனுப்பும் என்று கூறினார்.
“இந்த 10,000ம் படையினர்களில் 4,000 பேர் எல்லைப் பொலிஸாருக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவார்கள் என்றும், மேலும் 6,000 பேர் இவர்களுக்கு வலுவூட்டுவதற்கு இருப்பார்கள்” என்றும் பிலாஸ்சாக், போலந்து பொது வானொலியில் தெரிவித்தார்.
இராணுவக் கூட்டணியின் கிழக்கு எல்லைகளுக்கு துருப்புக்களின் வருகையை எடுத்துக்காட்டி, நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஓனா லுங்கெஸ்கு திங்களன்று, “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இராணுவக் கூட்டணியின் கிழக்குப் பகுதியில் நேட்டோ அதன் தற்காப்பு இருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது, மேலும் தேவையானதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம், எந்தவொரு அச்சுறுத்தலையும் கண்டறிந்து, நட்பு பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்பது அவசியம்” என்று கூறினார்.
