முன்னோக்கு

பைடெனின் ஐ.நா. போர் உரை ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு வழி வகுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் செப்டம்பர் 19, 2023 செவ்வாய்க்கிழமை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் உரையாற்றினார். [AP Photo/Mary Altaffer]

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தை பைடென் நிர்வாகம் தனக்கு சாதகமாகவும், போரை அறிவிப்பதற்கு முன்பு, நாடுகளை ஏற்க வைத்து, ரஷ்யாவிற்கு எதிரான ஒரு முழு மூர்க்கத்தனமான அட்டூழியத்தைத் தொடங்குவதற்கான ஒரு தளமாகவும் பயன்படுத்தியது.

செவ்வாயன்று ஐ.நா.வில் பைடெனது உரையில், “உலகெங்கிலும் உள்ள எங்கள் நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் சேர்ந்து, உக்ரேனின் துணிச்சலான மக்கள் தங்கள் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போது அமெரிக்கா அவர்களுடன் தொடர்ந்து நிற்கும்” என்று அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உக்ரேனில் நடந்துவரும் போருக்கு ரஷ்யா மட்டுமே முழுப் பொறுப்பு. இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் சக்தி ரஷ்யாவுக்கு மட்டுமே உள்ளது. ரஷ்யாவுக்கு மட்டுமே அமைதிக்கான வழி உள்ளது, ஏனென்றால் ரஷ்யாவிற்கு அமைதியின் விலை உக்ரேன், உக்ரேனிய பிரதேசம் மற்றும் உக்ரேனிய குழந்தைகளின் சரணடைதல் ஆகும்” என்று பைடென் வலியுறுத்தினார்.

இது வெற்றுப் பேச்சு அல்ல; இந்தப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்ற எந்தக் கருத்துக்கும் இடைவிடாத தாக்குதலாக இருந்தது.

வெள்ளை மாளிகை, ரஷ்யா நிபந்தனையின்றி சரணடைவதைக் கோருகிறது. அதனுடன் ரஷ்ய அரசாங்கத்தை தூக்கி எறிந்து அதன் பிராந்திய துண்டாடுதலைக் கோருகிறது. இந்த இலக்கை அடைவது அமெரிக்காவின் நேரடி தலையீடு இல்லாமல் சாத்தியமற்றது. இது, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு நேரடி மோதலாக இந்த பினாமிப் போரை மாற்றுகிறது.

உக்ரேனில் நடந்துவரும் மோதல் ஏற்கனவே ஒரு அமெரிக்கப் போராகும், இதற்காக அமெரிக்காவும் நேட்டோவும் ஆயுத தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறையை வழங்குகின்றன. ஆனால் உக்ரேனின் எதிர் தாக்குதலின் தோல்வி, தற்போதைய பினாமிப் போரை அமெரிக்க-நேட்டோ துருப்புக்களை நிலைநிறுத்துவதை உள்ளடக்கிய முழு அளவிலான மோதலாக மாற்றாமல், அதன் இலக்குகளை அடைவது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு பைடென் நிர்வாகத்தை இட்டுச் சென்றுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமெரிக்க அரசாங்கத்தில் மாற்றம் கொண்டு வருவதால் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என அமெரிக்க ஊடகங்களில் பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 2024 தேர்தலுக்கு முன்பே மோதலை அதிகப்படுத்துவதன் மூலம் அத்தகைய கொள்கை மாற்றத்தை முன்கூட்டியே தடுப்பது பைடென் நிர்வாகத்தின் நோக்கமாகும். இந்த யுத்தமானது, அமெரிக்காவின் கௌரவம் மற்றும் மனிதவளம் உட்பட வளங்களின் அர்ப்பணிப்பை உள்ளடக்கியிருக்கியிருக்கிறது, இது இராஜதந்திரம் மற்றும் இராணுவம் அல்லாத தீர்வை சாத்தியமற்றதாக்குகிறது.

பைடெனின் கருத்துக்கள் அவரது தாக்குதல் நாயான உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் கருத்துக்களால் பின்பற்றப்பட்டன. செலென்ஸ்கியின் அறிக்கைகள் முழு பைத்தியக்காரத்தனத்தின் எல்லையாக இருந்தன. செலென்ஸ்கி ரஷ்யாவையும் ரஷ்யர்களையும் “தீயவர்கள்” என்றும் “பயங்கரவாதிகள்” என்றும் குறிப்பிட்டு அவர்கள் உக்ரேனுக்கு எதிராக “இனப்படுகொலை”  நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

அணுவாயுதப் போரைக் கண்டு அஞ்சுகின்ற ஐக்கிய நாடுகள் சபையை செலென்ஸ்கி கண்டனம் செய்தார். “பல சந்தர்ப்பங்களில், போர் பயம், இறுதி யுத்தம், அதன் பிறகு யாரும் பொதுச் சபை மண்டபத்தில் கூட மாட்டார்கள் என்று இங்கு வலுவான குரல் ஒலித்தது” என்று செலன்ஸ்கி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “மூன்றாம் உலகப் போர் அணு ஆயுதப் போராகப் பார்க்கப்பட்டது. ஒரு அணுவாயுத வழியில் அரசுகளுக்கு இடையேயான மோதல், பெரும் வல்லரசுகள் என்று அழைக்கப்படுபவை தங்கள் அணுசக்தி கையிருப்புகளை பாவிக்கும் என்ற அச்சுறுத்தலுடன் ஒப்பிடும்போது, இதர போர்கள் குறைவான பயமாகத் தோன்றின.

“முழுமையான அணு ஆயுதக் குறைப்பை ஊக்குவிக்கும் முயற்சி மட்டுமே இந்த இறுதிப் போரிலிருந்து உலகைக் காக்கும் உத்தியாக இருக்கக் கூடாது.”

பைடென் மற்றும் செலென்ஸ்கி இந்த திடுக்கிடும் அறிக்கைகளை வெளியிட்டபோது, ​​ அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் மார்க் ஏ மில்லி, ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில், அமெரிக்க போர் முயற்சிக்கான முக்கிய தளவாட மையத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

“அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பணக்காரர்களாகவும், சக்திவாய்ந்தவர்களாகவும், குறிப்பிடத்தக்க … இராணுவ வளங்களைக் கொண்டவையாகவும் உள்ளன, அவை இந்த சண்டையைத் தாங்கும் திறன் கொண்டவை, ஜனாதிபதி பைடெனின் வார்த்தைகளில், போர் நீடித்து இருக்கும்வரை” என்று மில்லி அறிவித்தார்.

உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகள் முக்கிய செய்தித்தாள்களில் இதற்கு சமமான பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் வலியுறுத்தல்களுடன் சேர்ந்துள்ளன. “பைடென் உக்ரேனுக்காக நிறைய செய்துள்ளார்” என்று ஒரு தலையங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் போதுமானதாக இல்லை என்று, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையானது, “திரு. பைடென் மெதுவாக செய்வதை நிறுத்திவிட்டு, கியேவுக்கு ATACMS ஐ வழங்க வேண்டும்” என்று எழுதியது, ரஷ்ய எல்லைக்குள் ஆழமாகத் தாக்கப் பயன்படுத்தப்படும் நீண்ட தூர ஏவுகணை அமைப்பைப் பற்றி பத்திரிகை குறிப்பிடுகிறது.

அமெரிக்காவும் நேட்டோவும் ஏற்கனவே அறிவிக்கப்படாத போரில் ஈடுபட்டு, ஆயுத தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறையை வழங்குகின்றன. உக்ரேன் வழங்கும் ஒரே விஷயம் மனித உடல்களை ஆகும். இதற்கு அடுத்த கட்டம், அமெரிக்க துருப்புக்களின் நேரடியான ஈடுபாடாகும்.

இதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராணுவப் படைகளின் பாரிய அணிதிரட்டல் தேவைப்படும். அத்தகைய போருக்கு அமெரிக்க இராணுவம் தீவிரமாக தயாராகி வருகிறது. அமெரிக்க ராணுவப் போர்க் கல்லூரியின் காலாண்டு இலையுதிர் 2023 பதிப்பில், “நடவடிக்கைக்கான அழைப்பு : உக்ரேனில் இருந்து எதிர்காலப் படைக்கான பாடங்கள்” என்ற கட்டுரையில் கூறியிருப்பதாவது:

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர், இராணுவத்தின் மூலோபாய பணியாளர்களின் வலிமை மற்றும் உயிரிழப்புகளைத் தாங்கி, படைகளை இட்டுநிரப்பும் திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை வெளிப்படுத்துகிறது. இராணுவ யுத்த மருத்துவ திட்டமிடுபவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 3,600 உயிரிழப்புகளின் நிலையான விகிதத்தை எதிர்பார்க்கின்றனர்….. 25 சதவீதம் கணிக்கப்பட்ட படைகளை இட்டு நிரப்பும் விகிதத்துடன், பணியாளர் அமைப்பிற்கு ஒவ்வொரு நாளும் 800 புதிய பணியாளர்கள் தேவைப்படும். சூழலைப் பொறுத்தவரை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்தங்களாக நடந்த போரில் அமெரிக்கா தோராயமாக 50,000ம் உயிரிழப்புகளை சந்தித்தது. பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளில், அமெரிக்கா இரண்டு வாரங்களில் அதே எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சந்திக்கலாம்.

உக்ரேன் போரைத் தீவிரப்படுத்துவதில் அமெரிக்காவின் பாரிய பொறுப்பற்ற தன்மை, அமெரிக்காவைப் பற்றிக்கொண்டிருக்கும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஒரு சான்றாகும். அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் செல்வம், கடன் பணமாக்குதலால் நிதியளிக்கப்படும் தொடர்ச்சியான அரசாங்க பிணையெடுப்புகளைச் சார்ந்து, அது “டொலர் மேலாதிக்கத்தின்” அரிப்பு என்று அழைக்கப்படும் வாய்ப்பால் வேட்டையாடப்படுகிறது.

உள்நாட்டில், ஆளும் வர்க்கம் வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தை எதிர்கொள்கிறது. ஆளும் வர்க்கத்தின் போர்த் திட்டங்களை அதிகரிப்பதில் உள்நாட்டு எதிர்ப்பின் வளர்ச்சி, ஒரு முக்கிய காரணியாக மாறுவது இது முதல் முறையல்ல.

போருக்கு எதிரான போராட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சமூகப் போராட்டங்களை இணைப்பதன் மூலம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களின் சமூகக் கோரிக்கைகள் சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading