முன்னோக்கு

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு படைகளை அனுப்ப பிரிட்டிஷ் அரசாங்கம் தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் அருகே 'இரும்பு வாள் 2014' என்ற இராணுவப் பயிற்சியில் பிரிட்டிஷ் படையினர்கள் கலந்துகொள்கின்றனர்.

சனிக்கிழமையன்று, பிரிட்டிஷ் பாதுகாப்பு மந்திரி கிராண்ட் ஷாப்ஸ், உக்ரேனியப் படைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக பிரிட்டிஷ் துருப்புக்களை நேரடியாக உக்ரேனுக்கு அனுப்புவதற்கான சாத்தியத்தை எழுப்பியுள்ளார்.

குறிப்பாக நாட்டின் மேற்குப் பகுதியில், “நாட்டிற்குள் மேலும் பல விஷயங்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இப்போது இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று அவர் டெலிகிராப் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

“நாட்டில் போருக்கான பயிற்சி மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் போக்கு இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறிய ஷாப்ஸ், “ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் ரோயல் கடற்படை நேரடியாக ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் அவர் எழுப்பினார். பிரிட்டன் ஒரு கடற்படை நாடு, எனவே எங்களால் இதற்கு உதவ முடியும்“ என்று அறிவித்தார்.

ஷாப்ஸின் கூற்றுக்களை திறம்பட உறுதிப்படுத்திய பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக், “பாதுகாப்புச் செயலர் என்ன சொல்கிறார் என்றால், உக்ரேனில் இந்த பயிற்சியில் சிலவற்றைச் செய்வது எதிர்காலத்தில் ஒரு நாள் சாத்தியமாகும்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு ஒரு எச்சரிக்கை செய்யப்பட வேண்டும்: உக்ரேனுக்கு நேட்டோ துருப்புக்களை அனுப்பும் திட்டங்கள் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டால், அது ஏற்கனவே அதன் அரசியல் மற்றும் இராணுவக் குழு இரகசியமாக வேலை செய்து முடிவெடுத்துவிட்டது என்று அர்த்தமாகும். அவர்கள் ஆரம்பத்தில் “ஆலோசகர்கள், கருத்தாளர்கள் அல்லது காவலர்கள்” என்று அழைக்கப்படலாம், ஆனால், அவர்களின் மூலோபாயம் வெளிப்படையானது: உக்ரேனில் பிரிட்டிஷ் “ஆலோசகர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்”  கொல்லப்படுவார்கள். மேலும் சுனக் அரசாங்கம் இந்த உண்மையை பயன்படுத்தி, மேலும் போரை விரிவாக்குவதற்கு இதனை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தும்.

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மக்கள் ஆதரவின்றி நடத்தப்படுகிறது. மக்களின் முதுகுக்குப் பின்னால் மோதலை அதிகரிக்கும் சதியில் ஈடுபட்டுள்ள நேட்டோ அரசாங்கங்கள், பகிரங்கமாக ரஷ்யாவுடன் போரில் ஈடுபடவில்லை என்றும், மோதலில் தங்கள் ஈடுபாட்டைக் கண்டிப்பாகக் குறைக்க விரும்புவதாகவும் அறிவிக்கிறார்கள். தனிப்பட்ட முறையில், அணுஆயுத சக்திகளுக்கு இடையே, ஒரு முழு அளவிலான போராக மோதலை அதிகரிக்க அவர்கள் சதி செய்கிறார்கள்.

மீண்டும் மீண்டும், தாங்கள் கடக்காத “சிவப்புக் கோடுகள்” இருப்பதாகத் திட்டவட்டமாகக் உறுதிப்படுத்தி வந்த நேட்டோ அரசாங்கங்கள், தற்போது அவற்றைக் கடக்க முடிவு செய்துள்ளன. முதலில், அது நீண்ட தூர ஏவுகணைகளையும் பின்னர் டாங்கிகளையும், அதற்குப்பின்னர் மேம்பட்ட போர் விமானங்களையும் உக்ரோனுக்கு அனுப்பியது. ஒவ்வொரு முறையும், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என பொதுமக்களிடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேட்டோ அரசாங்கங்கள் அவற்றைச் செயல்படுத்துகின்றன என்பதை பல மாதங்களுக்குப் பிறகுதான் தெரிவிக்கின்றன.

“இப்போது ரஷ்யாவிற்குள் தாக்குதலுக்கு நேட்டோ ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால், அதன் நடவடிக்கையை முடுக்கிவிட அமெரிக்காவிற்கு இன்னும் எவ்வளவு காலத்துக்கு இடம் கொடுக்கும்? இதற்கு அடுத்த கட்டமாக அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்களை அனுப்புவதாகும்” என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு, உலக சோசலிச வலைத் தளம் கேட்டது.

ஷாப்ஸ் மற்றும் சுனக்கின் அறிக்கைகள் கடந்த மாதம் Foreign Affairs பத்திரிகையில் “அமெரிக்கா ஏன் இராணுவ ஆலோசகர்களை உக்ரேனுக்கு அனுப்ப வேண்டும்” என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரையைத் தொடர்ந்து, “உக்ரேனில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க அரசாங்க பணியாளர்களின் எண்ணிக்கை மீதான கடுமையான கட்டுப்பாடுகளை வாஷிங்டன் நீக்கி, நாட்டிற்குள்ளும் அதன் பாதுகாப்பு அமைப்பு முழுவதும் இராணுவ ஆலோசகர்களை நிறுத்த வேண்டும்” என்று அவர்களின் அறிக்கை அறிவித்தது.

நூற்றுக்கணக்கான சுறுசுறுப்பான நேட்டோ துருப்புக்கள் ஏற்கனவே உக்ரேனில் இருப்பதுடன், மேலும் ஆயிரக்கணக்கான முன்னாள் நேட்டோ இராணுவ உறுப்பினர்களும் கூலிப்படையாக பணியாற்றி வருகின்றனர். கடந்த நவம்பரில், பென்டகன், சுறுசுறுப்பான இராணுவப் பணியாளர்களின் “சிறிய குழுக்கள்”நாட்டின் “பல்வேறு இடங்களில்”இருப்பதை உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கசிந்த பென்டகன் ஆவணங்கள், இங்கிலாந்தைச் சேர்ந்த 50 பேர் உட்பட கிட்டத்தட்ட 100 நேட்டோ சிறப்புப் படைகளும், மேலும் 100 அமெரிக்க அரசாங்க ஊழியர்களும் உக்ரேனில் இருப்பதாக காட்டுகின்றன.

நேட்டோ உக்ரேனுக்குள் துருப்புக்களின் இருப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ரஷ்யாவிற்கு எதிராக நேரடியான துப்பாக்கிச் சூடு போரில் நேட்டோ துருப்புக்களின் பங்கேற்பையும் திட்டமிட்டுள்ளது.

இந்த யதார்த்தம் ஷாப்ஸ் அல்லது சுனக்கின் அறிக்கைகளிலிருந்து மட்டுமல்ல, நிலைமையின் இராணுவ தர்க்கத்திலிருந்தும் எழுகிறது. அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனில் நடந்துவரும் போரின் முடிவில் தங்கள் நம்பகத்தன்மையை பணயம் வைத்துள்ளன.

கடந்த ஜனவரியில், “ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரேனையும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும்”விடுவிப்பது அமெரிக்காவின் இலக்குகள் என்று அமெரிக்க கூட்டுப் படைத் தளபதி மார்க் மில்லி கூறினார். கடந்த ஏப்ரலில் பாதுகாப்புச் செயலர் லோயிட் ஆஸ்டின், “நாங்கள் ரஷ்யா பலவீனமடைவதைப் பார்க்க விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார். அதே மாதம், நேட்டோவின் முன்னாள் உச்ச நேசப்படைத் தளபதி பென் ஹோட்ஜஸ், இந்த மோதலில் நேட்டோவின் இலக்கு ரஷ்யாவின்“முதுகை உடைப்பதாக” இருக்கும் என்று வலியுறுத்தினார்.

இந்த நோக்கங்கள் அனைத்திலும் நேட்டோ சக்திகள் தோல்வியடைந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது நோர்மண்டி படையெடுப்பிற்கு நிகரான போரில், ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமெரிக்க ஊடகங்களில் பல மாதங்களாக கட்டமைக்கப்பட்ட உக்ரேனிய தாக்குதல் இரத்தக்களரி பேரழிவை அதற்கு உருவாக்கியுள்ளது. “உக்ரேன் ஒரு நீண்ட போரை எதிர்கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், திசை மாற்றம் அவசியம்”என்று தி எகனாமிஸ்ட் பத்திரிகை எழுதுகிறது:

“எதிர் தாக்குதல்... வேலை செய்யவில்லை... ஜூன் மாதம் ரஷ்யா ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்பில் 0.25%க்கும் குறைவான பகுதியையே உக்ரேன் விடுவித்துள்ளது. 1,000-கிமீ போரின் முன்னரங்க வரிசை இன்னும் நகரவில்லை... உக்ரேனின் படையினர்கள் தீர்ந்துவிட்டனர், அதன் சிறந்த சிப்பாய்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டாயப்படுத்தி நிரந்தரமான பெரிய அளவிலான எதிர்த்தாக்குதலைத் தக்கவைக்க அதற்கு ஆள்பலம் இல்லை. அது, தனது வளங்களை நிர்வகிக்க வேண்டும் மற்றும் நிலைமையை மாற்ற வேண்டும்.”

ரஷ்யாவுடனான மோதலில் உக்ரேன் பீரங்கிக்கு தீவனமாக, மனித உயிர்கள் இல்லாமல் போன நிலையில், இதுவரை ஆயுதங்கள், உளவுத்துறை, தளவாடங்கள் மற்றும் உக்ரேனிய இராணுவத்திற்கு கட்டளை கட்டமைப்புகளை வழங்கி வரும் நேட்டோ படைகள் நேரடியாக தலையிடுவதால் மட்டுமே, இப்போரை மாற்றுவதற்கான ஒரே வழியாகும்.

கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவது பற்றிய வெளிப்படையான பேச்சில், அவர்கள் அனைவரும் அமைதியான முறையில், போருக்கான தீர்வுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். “அமைதிக்கான ரஷ்யாவின் விலை உக்ரேனின் சரணாகதி, உக்ரேனின் பிரதேசம் மற்றும் உக்ரேனின் குழந்தைகள்”என்று பைடென் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கனேடிய பாராளுமன்றத்தில் செலென்ஸ்கி ஆஜரானார். அப்போது அனைத்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூத்த கனேடிய அரசாங்க அதிகாரிகளும் முக்கிய நேட்டோ நாடுகளின் தூதர்களும், 98 வயதான உக்ரேனிய நாஜி போர்க் குற்றவாளிக்கு எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அதே வாரம், ஆப்ராம்ஸ் யுத்த டாங்கிகள் ஏற்கனவே உக்ரேனுக்கு வந்துவிட்டன என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியது, மேலும் உக்ரேனுக்கு நீண்ட தூர ATACMS ஏவுகணைகளை அனுப்ப வெள்ளை மாளிகை ஏற்கனவே ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் வெளிப்படுத்தின. பைடெனின் உரைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, உக்ரேன், நேட்டோ உளவுத்துறை மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி, ரஷ்ய கருங்கடல் கடற்படையின் தலைமையகத்திற்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்தியது, இதன் விளைவாக உயர் பதவியில் இருந்த டஜன் கணக்கான படையினர்கள் இறந்தனர்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பாவில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றன. முழுத் தலைமுறை இளைஞர்களும் போர்க்களங்களில் அழிக்கப்பட்டனர். இன்று, வாஷிங்டனுடன் இணைந்து செயல்படும் ஐரோப்பிய அரசாங்கங்கள், இன்னும் பத்து மில்லியன் மக்களைக் கொல்ல அச்சுறுத்தும் ஒரு புதிய உலகப் போரைத் தூண்டிவிட சதி செய்கின்றன.

பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் இந்தப் பேரழிவை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரிட்டன் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது போரை நடத்தி வரும் வெறுக்கத்தக்க ஒரு அரசாங்கத்தால், உக்ரேனுக்கு பிரிட்டிஷ் துருப்புக்களை அனுப்பும் சதிக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை விடுக்க வேண்டும். வெளிநாடு மீதான போர் விரிவாக்கமானது, அனைத்து நேட்டோ நாடுகளிலும் ஊதியங்கள், சமூக வேலைத்திட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுடன் தொடர்புடையதாகும்.

தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் சமூக இயக்கம் போருக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகள் சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading