முன்னோக்கு

மெக்கார்த்தியின் வீழ்ச்சி, ஜனநாயகக் கட்சியும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் விரிவாக்கமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

குடியரசுக் கட்சியின்-கலிபோர்னியா பிரதிநிதி கெவின் மெக்கார்த்தி, சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அமெரிக்க மாமன்றத்தில் உள்ள சபை தளத்தை விட்டு வெளியேறுகிறார். [AP Photo/J. Scott Applewhite]

கடந்த செவ்வாயன்று, சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி பிரதிநிதிகள் சபையிலிருந்து நீக்கப்பட்டது என்பது அமெரிக்காவில் ஒன்றோடொன்று தொடர்புடைய தொடரான நெருக்கடிகளுக்கு மத்தியில் வந்துள்ளது. அங்கே வளர்ச்சி அடையும் பொருளாதார நெருக்கடியுடன் சேர்ந்து, டாலரின் ஆபத்தான பூகோளரீதியான நிலை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. 2024 தேர்தலுக்கு முன்னதாக அரசியல் அமைப்பு மிகவும் நிலையற்றதாக மற்றும் அதிகமாக செயலிழந்தும் வருகிறது. சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சியானது 1970 களுக்குப் பிந்தைய மிக முக்கியமான வேலைநிறுத்த இயக்கத்திற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தொழிற்சங்க எந்திரம் தீவிரமாக முயன்று வருகிறது.

எவ்வாறெனினும், 'வசந்தகாலத் தாக்குதலின்' தோல்வியைத் தொடர்ந்து உக்ரேன் குறித்து ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ யுத்தமே எல்லாவற்றையும் முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது.

செவ்வாயன்று மெக்கார்த்தியை 'வெளியேற்றுவதற்கான தீர்மானத்திற்கான' வாக்கெடுப்பில் 216க்கு 210 என்றவாறாகி, அவர் வெளியேற்றப்பட்டார். இது முதல் முறையாக ஒரு அவைத் தலைவர் இந்த வழியில் வீழ்த்தப்பட்டார்.

செப்டம்பர் 30 சனிக்கிழமை இரவு, அரசாங்கத்திற்கு நிதி அளிப்பதற்கும் 47 நாட்களுக்கு பணிநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்கும் மக்கள் சபை மற்றும் செனட்டில் நிறைவேற்றப்பட்ட இருகட்சிகளும் இணைந்த தொடர் தீர்மானத்தில் (CR) பைடென் கையெழுத்திட்டார். வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினருடன் திரைமறைவில் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து மெக்கார்த்தி இந்த நடவடிக்கையை முன்மொழிந்தார். இருப்பினும், முக்கியமாக CR உக்ரேனுக்கான கூடுதல் நிதியை ஒதுக்கவில்லை.

இது பைடென் நிர்வாகம் மற்றும் இராணுவம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் மேலாதிக்க பிரிவுகளால், குறிப்பாக செனட்டில் உள்ள பெரும்பான்மையான உயர்மட்ட குடியரசுக் கட்சியினர் உள்ளிட்டோரால் ஒரு பெரிய பின்னடைவாகவும் சங்கடமாகவும் பார்க்கப்பட்டது. வார இறுதியில், பைடென் மெக்கார்த்தியுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக அறிவித்தார், அது போருக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதை உறுதி செய்யும்.

மெக்கார்த்தி, அபாரமான இராணுவ செலவினங்களுக்கு தனது சொந்த ஆதரவை அறிவித்த அதேவேளை, வெள்ளை மாளிகையுடன் எந்தவொரு திட்டவட்டமான ஏற்பாடும் செய்யப்பட்டது என்ற கூற்றுக்களை நிராகரித்தார்.

இதற்குப் பின்னர், செவ்வாய்கிழமை மதியம், மெக்கார்த்தியை பதவி நீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாக, பென்டகன் ஒரு அறிக்கையை வெளியிட்டது.  அதில், 'குறிப்பாக எங்கள் துறை கையிருப்புகளை நிரப்ப முற்படும்போது, (உக்ரேனுக்கான) எங்கள் ஆதரவில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டது.

அதே நாளிலும், வாக்கெடுப்புக்கு முன்னரும் நேட்டோ, ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய கவுன்சில் மற்றும் கனடா, ஜேர்மனி, போலந்து, ருமேனியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைவர்களுக்கு பைடென், ஒரு அசாதாரண அழைப்பை விடுத்து, மோதலை பாரிய அளவில் விரிவுபடுத்துவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்பதை உறுதியளித்தார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பியின் கூற்றுப்படி, பைடென் 'எந்த சூழ்நிலையிலும், உக்ரேனுக்கான அமெரிக்காவின் ஆதரவில் குறுக்கிட அனுமதிக்க முடியாது என்பதை [அழைப்பின் போது] தெளிவுபடுத்தினார்.' நீண்ட தூர ஏவுகணைகள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை அனுப்புவதன் மூலம் அமெரிக்கா ரஷ்யாவுடனான மோதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இருகட்சிகளும் இணைந்த தொடர் தீர்மானத்திலிருந்து விலக்கப்பட்ட நிதி மட்டுமல்ல, கூடுதல் இராணுவ உபகரணங்களில் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களும் இதில் அடங்கும்.

ஒரே ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்ட, புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த ராபர்ட் கேட்ஸ், செப்டம்பர் 29 அன்று Foreign Affairs பத்திரிகையின் ஒரு தலைப்புச் செய்தியில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில், 'செயலற்ற பெரும் வல்லரசு: பிளவுபட்ட அமெரிக்கா சீனாவையும் ரஷ்யாவையும் தடுக்க முடியுமா?' என்று கவலைப்பட்டார். குறிப்பாக, ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பது பற்றி அல்ல, மாறாக முன்னுரிமைகள் எங்கே உள்ளன என்பது குறித்து — நிச்சயமாக, உக்ரேன் தொடர்பாக குடியரசுக் கட்சியில் கடுமையான பிளவுகள் உள்ளன.

அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்வுகள் வந்தன. 'வெளியேற்றுவதற்கான தீர்மானம்' திங்களன்று ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான பாசிசவாத குடியரசுக் கட்சியின் பிரதிநிதி மாட் கெய்ட்ஸால் கொண்டுவரப்பட்டது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு மெக்கார்த்தி முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது கொண்டுவரப்பட்ட ஒரு விதி மாற்றத்தை அவர் இதற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார், அது எந்தவொரு தனிப்பட்ட பிரதிநிதியும் சபாநாயகரை நீக்குவதற்கான வாக்கெடுப்பை கட்டாயப்படுத்த அனுமதித்தது.

இருப்பினும், அவருடன் மேலும் ஏழு குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் மட்டுமே இருந்தனர், அவர்களில் மூன்று பேர் டிரம்பை ஆதரித்துள்ளனர்.

மீதமுள்ள 208 வாக்குகள் ஜனநாயகக் கட்சியினரால் வழங்கப்பட்டன, அவர்கள் இந்த ,தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒரு தொகுதியாக வாக்களித்தனர். ஜனநாயகக் கட்சியினர் அதன் உறுப்பினர்கள் சிலர் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதன் மூலமோ அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதன் மூலமோ மெக்கார்த்தி நீக்கப்படுவதைத் தடுத்திருக்கலாம். செவ்வாயன்று பிற்பகல் அமர்வுக்கு முந்தைய நாட்களில், ஜனநாயகக் கட்சியினர் கெய்ட்ஸ் தனது தீர்மானத்தை முன்மொழிந்தால் அவர்களின் நோக்கங்கள் குறித்து கலவையான சமிக்ஞைகளை அளித்திருந்தனர்.

வெளியேற்றுவதற்கான தீர்மானத்திற்கு வாக்களிப்பதற்கான முடிவு, மெக்கார்த்தி மற்றும் குடியரசுக் கட்சியின் தலைமையின் வலதுசாரி நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான எதிர்ப்பால் உந்தப்படவில்லை. அதற்கு பதிலாக, ஜனநாயகக் கட்சியினர் மெக்கார்த்தியை மாற்றும் செயல்முறையில் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு, அது போருக்கான நிதியுதவியை தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது என்பதை உறுதிப்படுத்த, அவையில் அரசியல் ஏற்பாடுகளை மறுகட்டமைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்று நம்பினர்.

நியூயோர்க் டைம்ஸ் புதன்கிழமை தனது தலையங்கத்தில், 'ஒரு சில தீவிரவாதிகளின் தயவில் பொதுமக்களின் விவகாரங்கள் ஏன் உள்ளது?' என்ற தலைப்பில் இதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், 'எந்தவொரு புதிய சபாநாயகரும்.. ஜனநாயகக் கட்சி சகாக்களுடன் வெளிப்படையாக நடந்து கொள்வதற்கு உறுதியளிக்கவும், மற்றொரு கவிழ்ப்பு சதியை தடுக்கவும் அவர்கள் தேவைப்படலாம்' என்று டைம்ஸ் குறிப்பிட்டது.

ஒரு புதிய சபாநாயகர் பதவியேற்றவுடன், தொடர்ச்சியான தீர்மானம் முடிவடைவதற்கு 40 நாட்களுக்கும் குறைவான நாட்களே இருக்கும் என்றும், அரசாங்க நிதி தொடர்பாக மற்றொரு மோதல் இருக்கும் என்றும் டைம்ஸ் தொடர்ந்து கூறியது. அந்த நேரத்தில், 'இரு கட்சிகளிலும் உள்ள நல்லெண்ணம் கொண்ட உறுப்பினர்கள் மீண்டும் சமரசம் செய்ய தயாராகவும் திறமையாகவும் இருப்பதைக் காட்ட வேண்டும்; ஜனநாயகக் கட்சியினர் எல்லைப் பாதுகாப்பிற்காக அதிக செலவினங்களை அனுமதிக்கலாம், குடியரசுக் கட்சியினர் உக்ரேனுக்கான முக்கிய உதவி பொங்கி வழிவதை தொடர வேண்டும்' என்று அது மேலும் குறிப்பிட்டது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், டைம்ஸ் மூலம் பேசும் ஜனநாயகக் கட்சியினர், உக்ரேனுக்கான நிதி தீண்டத்தகாதது என்ற உத்தரவாதங்களுக்கு ஈடாக குடியரசுக் கட்சியினரின் உள்நாட்டு நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துழைக்க உறுதியளிக்கின்றனர். குடியரசுக் கட்சியில் உள்ள பாசிஸ்டுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் ஜனநாயகக் கட்சியினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் உக்ரேனில் உள்ள பாசிஸ்டுகளுடன் கூட்டணியில் உள்ளனர். 'சமூக பாதுகாப்பு வலையின் நிலைத்தன்மையை' நிவர்த்தி செய்ய, சமூக திட்டங்களில் பாரிய வெட்டுக்களை நடைமுறைப்படுத்த, இருகட்சி முறையில் சில உடன்பாடுகள் அவசியமாக வேண்டும் என்று டைம்ஸ் மேலும் கூறியது.

உக்ரேன் போரின் முழுமையான மையத்தன்மையை அதன் அனைத்து அரசியல் கணக்கீடுகளிலும் வலுப்படுத்திய பைடென், 'எங்கள் உறுதிப்பாட்டைக் காப்பாற்றுவது அமெரிக்காவிற்கும் எங்கள் கூட்டாளிகளுக்கும் மிகவும் முக்கியமானது' என்று அமெரிக்க மக்களை நம்பவைக்கும் நோக்கத்துடன், போர் குறித்து விரைவில் ஒரு 'முக்கிய' உரையை நிகழ்த்தப்போவதாக புதன்கிழமை அறிவித்தார். உக்ரேனுக்கு நிதி மற்றும் ஆயுத ஏற்றுமதி அபாரமாக அதிகரித்திருப்பதற்கு அப்பால், அமெரிக்க -நேட்டோ துருப்புக்களை நிலைநிறுத்துவது உட்பட, போரில் இன்னும் நேரடியான தலையீட்டை மேற்கொள்ள பைடென் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அரசு எந்திரத்திற்குள் நடக்கும் மோதல் 'இடது' மற்றும் 'வலது' இடையேயான போர் அல்ல. ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் முற்றிலும் பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலையே பின்பற்றுகின்றன. குடியரசுக் கட்சி ஒரு பாசிசக் கட்சியாக மாற்றப்பட்டு வருகிறது, ஜனவரி 6, 2021 அன்று மாமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை பகிரங்கமாக பாதுகாத்து, அதே நேரத்தில் அபார சமூக வெட்டுக்கள் மற்றும் இராணுவவாதத்தை ஆதரிக்கிறது. ஜனநாயகக் கட்சி ரஷ்யாவிற்கு எதிரான ஒரு போரை அதன் மைய அக்கறையாக அரவணைத்துள்ளது. இது அணுஆயுத மூன்றாம் உலகப் போரின் அபாயத்தை அதிகரித்து வருகிறது.

தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளுக்கும் ஏகாதிபத்திய அரசியலின் முழு கட்டமைப்பிற்கும் எதிராகவும் இயக்கப்பட வேண்டும். இதன் பொருள், போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்புடன், தொழிலாள வர்க்கத்தின் முன்னெப்போதையும் விட பரந்த அடுக்குகளை உள்ளடக்கிய ஒரு மகத்தான சமூக இயக்கத்தை தெளிவாக ஒன்றிணைக்க, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதாகும்.

Loading