முன்னோக்கு

நெதன்யாகு அரசை வீழ்த்து! காஸா மீதான ஏகாதிபத்திய ஆதரவு சியோனிச தாக்குதலை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அக்டோபர் 7, 2023 சனிக்கிழமையன்று, காஸா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீன அடுக்குமாடிக் கோபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலிருந்து தீ மற்றும் புகை எழுகிறது. [AP Photo/Adel Hana]

1. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக காஸாவில் எழுந்த எழுச்சியைத் தொடர்ந்து, பாலஸ்தீன மக்கள் மீதான நெதன்யாகு அரசாங்கத்தின் போர்ப் பிரகடனத்தை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. நாஸிக்களை நினைவுபடுத்தும் வகையில், இஸ்ரேலிய ஆட்சியின் வெறித்தனமான ஆவேசம், காஸா மக்களில் பெரும் பகுதியினரை அழிப்பதற்கான அழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்று விளக்கலாம். இப்போது இஸ்ரேலிய ஆயுதப் படைகளால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலை நடவடிக்கைக்கு பைடென் நிர்வாகமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசாங்கங்களும் முழுமையான ஆதரவு வழங்குவது பற்றிய பிரகடனங்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சற்றும் குறைவில்லாமல் ஆணித்தரமாக கண்டிக்கிறது. இந்தப் பிராந்தியத்திற்கு ஒரு அமெரிக்க விமானத் தாங்கிக் கப்பலை அனுப்பியமையானது, பாலஸ்தீன மக்கள் மீதான பாரிய தாக்குதலுக்கு ஏகாதிபத்திய உடந்தையின் இழிவான வெளிப்பாடாகும்.

2. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீன தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பாதுகாப்பது சர்வதேச அளவிலும், இஸ்ரேலிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பாகும். ஏகாதிபத்திய மையங்களிலும் உலகெங்கிலும், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு ஆயுதங்களை அனுப்புவதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும், காஸா மற்றும் மேற்குக் கரை ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

3. குறிப்பாக இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திற்கும் யூத மக்களில் உள்ள அனைத்து முற்போக்கான சக்திகளுக்கும் ஆட்சியின் நச்சுத்தனமான பேரினவாதத்தை நிராகரிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். இஸ்ரேலிய தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களைத் தாங்களே அரசாங்கத்திடம் இருந்து வேறுபடுத்திக்கொள்வதோடு அவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத நெதன்யாகு அரசாங்கத்தின் குற்றச் செயல்களைக் கண்டிக்க வேண்டும்.

4. வரலாறு நெடுகிலும் எப்போதும் போலவே, வெகுஜனங்களின் ஒவ்வொரு எதிர்ப்பு நடவடிக்கையும் ஆளும் உயரடுக்கினரிடமிருந்து வெறித்தனமான சீற்றத்தைத் தூண்டுகிறது. பைடென், ஷூல்ஸ், மக்ரோன் மற்றும் மற்றவர்கள் மனம் தளராமல் அதை ‘பயங்கரவாதம்’ என்று மீண்டும் மீண்டும் கூச்சலிடலாம். ஆனால் இடைவிடாத சியோனிச-சார்பு பிரச்சாரம் இருந்தபோதிலும், பாலஸ்தீனியர்கள் மீது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் அனுதாபம் உள்ளது. நடப்பது ஒரு கொடூரமான ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஒரு வெகுஜன எழுச்சி என்பதும், ஆளும் வர்க்கம் அதன் நலன்கள் மற்றும் கொள்கைகளுக்கு விரோதமான எதிர்ப்பின் எந்தவொரு வெளிப்பாட்டையும் “பயங்கரவாதம்” என அர்த்தப்படுத்துகிறது என்பதும் புரிந்துகொள்ளப்படுகிறது.

5. முதலாளித்துவ ஊடகங்களில், உக்ரேனில் நடந்துவரும் போரைப் போலவே, பாலஸ்தீனத்தில் நடந்துவரும் நிகழ்வுகளும், அவற்றின் முழு வரலாற்றுச் சூழலிலிருந்தும் கிழித்து அகற்றப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய அரசால் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து, அங்கு வசிப்பவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்து இணைக்கத் தொடங்கிய 1967ஆம் ஆண்டு ஆறு நாள் யுத்தம் தொடங்கி 55 ஆண்டுகள் ஆகின்றன. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் வார்த்தைகளில் கூறுவதானால், காஸாவை ஒரு “திறந்தவெளி சிறைச்சாலையாக” மாற்றிய 2006ம் ஆண்டு காஸா மீதான இஸ்ரேலிய போரும் அதைத் தொடர்ந்து அதன்மீதான முற்றுகையும் நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. பல தசாப்தங்களாக, லெபனானில் உள்ள சப்ரா மற்றும் ஷாதிலா அகதி முகாம்களில் 1982 ஆம் ஆண்டு பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் போல, பாலஸ்தீனியர்கள் குவிந்துள்ள சிறிய நிலப்பரப்புகளிலும், அவர்கள் தப்பிச் சென்ற பகுதிகளிலும் எண்ணற்ற கொலைகள் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

6. இவை அனைத்தும், இஸ்ரேல் ஏகாதிபத்திய சக்திகளால், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவினால் ஆதரிக்கப்படுகிறது, இதற்காக இஸ்ரேல் மத்திய கிழக்கில் அதன் பிரதான பினாமியாக செயல்பட்டு வருகிறது. அரபு முதலாளித்துவ ஆட்சிகளானவை ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களை செய்து, பாலஸ்தீனிய மக்களை படுகொலை செய்யவும், தாக்கவும் விட்டுவிட்ட நிலையில், ஐக்கிய நாடுகள் சபை தனது சொந்த தீர்மானங்களை செயல்படுத்த மறுத்துவிட்டது. எவ்வாறெனினும், எல்லாவற்றையும் மீறி, இஸ்ரேலிய அரசாலும் அதன் ஆதரவாளர்களாலும் பாலஸ்தீனியர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான முயற்சிகளை நசுக்க முடியவில்லை.

7. இது ஒரு தீர்க்கமான தருணம். பல மாதங்களாக நெதன்யாகுவும் அவரது பாசிசவாத கூட்டணி பங்காளிகளும், பசலேல் ஸ்மோட்ரிச் (Bazalel Smotrich) தலைமையிலான மத சியோனிசமும், இடமார் பென் கிவிர் (Itamar Ben Gvir) தலைமையிலான யூத சக்தியும் (Jewish Power) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தாக்குதலை மேற்பார்வை செய்து வருகின்றன. மேற்குக் கரை, காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது போலீசாரும் குடியேற்றக் குழுக்களும் தினசரி தாக்குதல்களை நடத்தி வருகின்றன, அத்துடன் அல் அக்ஸா மசூதியில் ஆத்திரமூட்டல்களும் நடந்து வருகின்றன.

8. பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பு போராட்டமானது, இஸ்ரேலிய சட்டத்தில் கூட ஒரு குற்றவாளியாக கருதப்படும் நெதன்யாகுவுக்கு ஒரு அரசியல் தோல்வியாகும். இந்த நேர்மையற்ற காடையர் சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிக்க அதிகாரத்தில் ஒட்டிக் கொள்கிறார் என்பது இஸ்ரேலின் அரசியல் வாழ்க்கையில் உண்மையாக இருக்கிறது. உள்நாட்டு எதிர்ப்பை திசைதிருப்ப பயன்படுத்தக் கூடியவாறு ஒரு வன்முறை பதிலைத் தூண்டுவதற்காக நெதன்யாகு பாலஸ்தீனியர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டல்களை அரங்கேற்றியுள்ளார் என்பதையும் மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் அங்கீகரித்துள்ளனர். எவ்வாறெனினும், அவரது குற்றவியல் திட்டங்களுக்கு பாலஸ்தீனிய மக்களது எதிர்வினையானது, நெதன்யாகுவின் கணக்கீடுகளை விட அதிகமாக உள்ளது.

9. ஊடுருவ முடியாத மோசமான சேரிகளில் (ghetto) எதிரிப் படைகளால் சூழப்பட்டு, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், ஆயிரக்கணக்கானவர்களை உள்ளடக்கிய ஒரு இராணுவத் தாக்குதலை ஹமாஸ் தொடங்கியுள்ளது. காஸாவின் இரண்டு மில்லியன் குடியிருப்பாளர்களின் அபரிமிதமான ஆதரவு காரணமாக மட்டுமே இந்த அளவிலான ஒரு நடவடிக்கையை திட்டமிட்டு இரகசியமாக வைத்திருக்க முடியும். இது பாரிய ஆயுதமேந்திய ஒடுக்குமுறையாளருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒரு உண்மையான மக்கள் எழுச்சியாகும். இது ஜேர்மன் நாஜி ஆக்கிரமிப்பிற்கு எதிராக, 1943ல் வார்சோ சேரிகளில் (ghetto) யூத கைதிகளின் எழுச்சி மற்றும் 1944ல் வார்சோ தொழிலாள வர்க்கத்தின் பாரிய கிளர்ச்சியினதும் உதாரணத்தை காட்டுகிறது.

10. இஸ்ரேலிய ஆளும் வர்க்கமானது, இப்போது பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம், ஒரு பிரத்தியேக யூத அரசைப் பாதுகாக்கும் பிற்போக்கு முன்னோக்கை, பாரிய படுகொலைகள் மற்றும் இனச் சுத்திகரிப்பை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் மட்டுமே பராமரிக்க முடியும் என்ற கட்டத்தில் உள்ளது. 43 கிலோமீட்டர் நீளமும் 10 கிலோமீட்டர் அகலமும் கொண்ட காஸா பகுதியை “இடித்துத் தரைமட்டமாக்கி” நாசமாக்குவோம் என்று நெதன்யாகு உறுதியளித்துள்ளார். மேலும் அவர்களால் முடியாது என்று தெரிந்தும், சிறைபிடிக்கப்பட்ட மக்களை “அங்கிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகிறார்.

11. கொடூரமான இராணுவ பதிலடித் தாக்குதல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. “இரும்பு வாள்கள் நடவடிக்கை” (“Operation Iron Swords”) இன் இரண்டாவது நாளில் இஸ்ரேல், காஸாவில் உள்ள 800 இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியது, அதன் மின்சார விநியோகத்தை நிறுத்தியது, முற்றுகையிடப்பட்ட பகுதியிலிருந்து உள்ளேயும் வெளியேயும் பொருட்களின் வருகையை நிறுத்தியது மற்றும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பற்ற பொதுமக்கள் வசிக்கும் மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. வான்வழி குண்டுவீச்சில் இருந்து உயிர்தப்புவதற்கு தஞ்சம் கோரி பாலஸ்தீனியர்கள், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (UNRWA) நடத்தும் பள்ளிகளில் குவிந்துள்ளனர்.

12. நெதன்யாகுவின் போர்ப் பிரகடனத்திற்கு அமெரிக்காவின் பைடென் நிர்வாகம் மற்றும் உலகின் அனைத்து பெரும் வல்லரசுகளின் தலைவர்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் உலகளாவிய ஆதரவு அளித்ததன் பின்னணியில் உள்ள அப்பட்டமான உண்மை இதுதான். அதாவது உலகெங்கிலும் சமூக அமைதியின்மை மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகள் வளர்ந்து வரும் நேரத்தில், எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கம் வெகுஜன எதிர்ப்பின் எந்தவொரு வெளிப்பாடும் ஏற்படுத்தக்கூடிய முன்மாதிரியைக் கண்டு அஞ்சுகிறது.

13. ஏகாதிபத்திய தலைவர்களும் அவர்களின் ஊடக ஊதுகுழல்களும் “பயங்கரவாதத்தை” எதிர்க்கவில்லை. ஆனால் ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்ரேலால் தினசரி திணிக்கப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை எதிர்க்கின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பது மற்றும் ஈரான், சிரியா மற்றும் லெபனானுக்கு எதிரான பிராந்திய போருக்கு இதை விரிவுபடுத்துவது வரை அவர்கள் அவ்வாறு அதைச் செய்வார்கள். வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் தலையங்கம் இவ்வாறு எழுதியது.

தயவுசெய்து இஸ்ரேலின் “முற்றுகை” அல்லது “ஆக்கிரமிப்பை” இனி கண்டிக்க வேண்டாம்... இஸ்ரேலுக்கு ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட கால அவகாசம் கொடுத்துவிட்டு, நெதன்யாகு அரசாங்கத்தை நம்பி நின்றுவிட வேண்டும் என்பதே வெள்ளை மாளிகையின் தூண்டுதலாக இருக்கும். இது எப்போதும் அமெரிக்க பாணி, ஆனால் இந்த முறை அப்படி இருக்கக்கூடாது. ஒரு பரந்த போர் வெடித்தால், ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாவின் இராணுவ திறனை அழிக்க தேவையான ஆயுதங்கள் மற்றும் இராஜதந்திர ஆதரவை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்க வேண்டும்.

14. பைடன் நிர்வாகத்தின் இதுபோன்ற பின்வாங்கல் குறித்து ஊடகங்கள் இனி அஞ்சத் தேவையில்லை. நேற்று, பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபோர்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட ஒரு தொகுதி தாக்குதல் கப்பல்களை இப்பிராந்தியத்திற்கு அமெரிக்கா அனுப்புவதுடன் “வரவிருக்கும் நாட்களில்” ஆயுதங்களை வழங்கும் என்பதை உறுதிப்படுத்தினார். இது வெறுமனே இஸ்ரேலுடன் “ஒற்றுமையைக்” காட்டுவது அல்ல, மாறாக இப்போரில் பங்கேற்பதற்கான தயாரிப்பு ஆகும். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு முழுத் தொண்டை கிழிய ஆதரவு தெரிவிக்கும் நிலையில், பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. போர் நிறுத்தம் ஒருபுறம் இருக்க, சுய கட்டுப்பாட்டிற்கு கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. இப்போது ஏகாதிபத்திய வட்டாரங்களில் வெளிப்படுத்தப்படும் ஒரே கவலை என்னவென்றால், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போருக்கு தேவையான ஆயுத வெடிபொருட்களின் விநியோகத்தை குறைக்கக்கூடும் என்பதாகும்.

15. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான எந்தவொரு மற்றும் அனைத்து வெளிப்பாட்டையும் மதிப்பிழக்கச் செய்வதற்காக, ஏகாதிபத்திய அரசாங்கங்களும் ஊடகங்களும் தவிர்க்கவியலாமல் “யூத-எதிர்ப்பு” என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இந்த இழிவான அவதூறு பாசாங்குத்தனத்தால் நனைந்துள்ளது. அது அவர்களின் நலன்களுக்கு சேவை செய்யும் போது, ஆளும் உயரடுக்குகள் ஹிட்லரின் ஆதரவாளர்கள் மற்றும் நவ-நாஸிக்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. நாஸி ஆட்சியின் குற்றங்களை நியாயப்படுத்தவும் மூடி மறைக்கவும் வலதுசாரி கல்வியாளர்களின் முயற்சிகளை ஜேர்மன் அரசாங்கம் அங்கீகரிக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், முழு கனேடிய பாராளுமன்றமும், பிரதமர் ட்ரூடோ மற்றும் ஜேர்மன் தூதருடன் சேர்ந்து, வெகுஜன யூதப் படுகொலையில் பங்கேற்ற நாஸிக்களின் வாஃபென்-எஸ்எஸ் (Nazi Waffen-SS) இன் முன்னாள் உறுப்பினரான யாரோஸ்லாவ் ஹுங்காவுக்கு உற்சாகமாக எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தது.

16. நெதன்யாகு ஆட்சியானது எந்தக் குற்றத்தையும் செய்யக் கூடியது. ஆனால், அது வெல்ல முடியாதது அல்ல. அதன் போர்க் குரல்களின் இரத்தம் தோய்ந்த மூர்க்கத்தனத்தைக் கொண்டு, அரசாங்கத்தின் அச்சத்தையும் விரக்தியையும் மறைக்க முடியாது. இது பாலஸ்தீனிய வெகுஜனங்களின் எதிர்ப்பை மட்டுமல்ல, இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பையும் எதிர்கொள்கிறது. நெதன்யாகு அரசாங்கத்திற்கும் அதன் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கும் எதிராக ஆண்டு முழுவதும் இஸ்ரேலிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீனியர்கள் மீதான ஒடுக்குமுறை பிரச்சினையை எழுப்ப மறுத்த உத்தியோகபூர்வ தலைமையால், இந்த ஆர்ப்பாட்டங்கள் கீழறுக்கப்பட்டன. நெதன்யாகுவின் போர்ப் பிரகடனம் பிரதான சியோனிச எதிர்க் கட்சித் தலைவர்களான யாயர் லாபிட்டின் (Yair Lapid) யேஷ் அதிட் (Yesh Atid - “There is a Future”) மற்றும் தேசிய ஒற்றுமைக் கட்சியின் (National Unity Party) பென்னி காண்ட்ஸ் (Benny Gantz) ஆகியோரையும் மீளமுடியாத வகையில் அம்பலப்படுத்தியுள்ளது. இவர்கள் நெதன்யாகுவுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்க தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

17. இஸ்ரேலிலுள்ள பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிரிகள், பாலஸ்தீனியர்கள் அல்ல, மாறாக நெதன்யாகு அரசாங்கமும் இஸ்ரேலிய ஆளும் வர்க்கமுமே எதிரிகள் ஆவர். இஸ்ரேலுக்குள் ஜனநாயக ஆட்சி வடிவங்களை கவிழ்ப்பதற்கான நகர்வுகள், சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சியுடனும் சமூக வேலைத்திட்டங்கள் மீதான கடுமையான தாக்குதலுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

18. தற்போதைய நிலைமையின் மிகப்பெரிய வரலாற்று மற்றும் அரசியல் முரண் இதுதான்: அதாவது சியோனிச ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலஸ்தீனிய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடாமல் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தால் தங்கள் சொந்த ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது. இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்துடன் ஒரு போராட்டக் கூட்டணியை உருவாக்காமல் பாலஸ்தீனியர்கள் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான தங்கள் அபிலாஷைகளை அடைய முடியாது. ஒரே சாத்தியமான முன்னோக்கு ஒரு மாயையான “இரு-அரசு தீர்வு” அல்ல, மாறாக யூத மற்றும் அரேபிய தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட சோசலிச அரசு ஆகும்.

19. பாலஸ்தீனியர்களின் போராட்டம் எவ்வளவு வீரமிக்கதாக இருந்தாலும், சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்யாமல் அவர்கள் எதிர்கொள்ளும் சகிக்க முடியாத நிலைமைகள் தீர்க்கப்படாது. இது இஸ்ரேலிலுள்ள யூத தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சற்றும் குறையாமல் பொருந்தும். யூத-எதிர்ப்பின் புதுப்பிக்கப்பட்ட வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்து மிகவும் உண்மையானது. ஆனால் அது காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை வெகுஜனங்களின் ஜனநாயக போராட்டங்களிலிருந்து உருவாகவில்லை, மாறாக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்ட பிற்போக்கு தேசிய பேரினவாதத்திலிருந்து வெளிப்படுகிறது.

20. பாலஸ்தீனத்தின் எழுச்சியானது, உலகெங்கிலும் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் வடிவத்தில் வளர்ந்துவரும் கோபம் மற்றும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த சமூக இயக்கமே, ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கினால் வழிநடத்தப்பட்டு ஏகாதிபத்திய போர், சமத்துவமின்மை மற்றும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக அணிதிரட்டப்பட வேண்டும். இதுவே அனைத்துலகக் குழுவின் தலைமையிலான ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்தின் முன்னோக்கும் வேலைத்திட்டமும் ஆகும்.

அக்டோபர் 9, 2023

Loading