மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்கா மற்றும் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன், காஸாவில் இஸ்ரேலிய ஆட்சியினால் நடத்தப்படும் படுகொலை வெறியாட்ட போர்க்குற்றங்களை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு கண்டனம் செய்கிறது. இந்த போர்க்குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டங்களை அணிதிரட்ட உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அறை கூவல் விடுக்கின்றோம்.
இஸ்ரேலிய தாக்குதலின் நோக்கம் முடிந்தவரை பல பாலஸ்தீனியர்களைக் கொல்வதும், காஸாவை செயலற்றதாகவும், வாழத்தகாத இடமாக மாற்றுவதும் ஆகும். நெதன்யாகு ஆட்சி காஸாவை பூமியின் வரைபடத்திலிருந்து துடைக்கக் கட்ட விரும்புகிறது, இந்த உண்மை வடக்கு காஸாவில் வசிக்கும் 1.1 மில்லியன் மக்களை 24 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்த அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அது காஸா மக்களை ஒரு மரண அணிவகுப்புக்கு அனுப்புகிறது.
இது ஒரு பரந்த இனப்படுகொலைத் திட்டம் ஆகும். உலகிலேயே அதிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதியான காஸாவில் 2.2 மில்லியன் மக்கள் உள்ளனர். மக்கள்தொகையில் பாதி பேர், சுமார் ஒரு மில்லியன் மக்கள், 18 வயதிற்கும் குறைவானவர்கள். இஸ்ரேல் மற்றும் எகிப்துக்குள் நுழைந்து செல்ல முடியாமல் எல்லைக் கதவுகள் மூடப்பட்டதால் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் அவர்கள், திட்டமிட்ட பட்டினி, தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் உடனடி படையெடுப்புக்கான சாத்தியத்தை எதிர்கொள்கின்றனர்.
சனிக்கிழமை காசா மீதான அதன் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் சுமார் 4,000 டன் எடையுள்ள 6,000 குண்டுகளை முற்றுகையிடப்பட்டுள்ள பகுதிக்குள் வீசியுள்ளன. பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, 1,417 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள், ஆனால் இறப்பு எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி மிக அதிகம். 116,000 மக்கள்தொகை கொண்ட வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமின் வீடியோவை AP வெளியிட்டது. வான்வழித் தாக்குதல்களால் இந்த முகாம் 'தரைமட்டமாக்கப்பட்டுள்ளது' என்று AP குறிப்பிட்டது.
நெதன்யாகு ஆட்சி காஸாவுக்கான மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகங்கள் அனைத்தையும் துண்டித்துள்ளது, இது ஒரு கூட்டு தண்டனை நடவடிக்கையாகும், இதுவே ஒரு போர்க்குற்றமாகும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வியாழனன்று, 'மருத்துவமனைகள் பிணவறைகளாக மாறும் அபாயம் உள்ளது' என்று எச்சரித்தது, ஏனெனில் அவற்றின் எரிபொருளால் இயங்கும் ஜெனரேட்டர்கள் தீர்ந்துவிட்டன, மேலும் கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை வெளியேற்ற மனிதாபிமான தாழ்வாரங்களை திறக்க இஸ்ரேல் மறுக்கிறது. காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதான நோயாளிகளுக்கான நேரடி உயிர்காக்கும் ஆதரவு நிறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அரசியல் ஸ்தாபகம் முழுவதிலுமிருந்து வருகின்ற அதிர்ச்சியூட்டும் கருத்துக்கள், இந்த கொடூரமான செயல்கள் வெகுஜன கொலை நடவடிக்கை என்று சிறப்பாக விவரிக்கப்படக்கூடியவற்றின் ஆரம்பம் மட்டுமே என்பதை தெளிவுபடுத்துகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸுடன் அவசரகால அரசாங்கம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் புதனன்று பேசிய நெதன்யாகு, 'ஒவ்வொரு ஹமாஸ் மனிதனும் இறந்த மனிதன்' என்று கூறினார்.
இஸ்ரேல் மீதான சனிக்கிழமை தாக்குதலுக்கு தலைமை தாங்கிய தேசியவாத போராளி குழு 2006 தேர்தலில் 400,000 க்கும் மேற்பட்ட காஸா மக்களின் ஆதரவைப் பெற்றது, இது நெதன்யாகு தனது அச்சுறுத்தலை நிறைவேற்ற நூறாயிரக்கணக்கானவர்களைக் கொல்ல உத்தரவிட வேண்டியிருக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் காண்ட்ஸ் எந்த வகையிலும் குறைவான இரத்தவெறி கொண்டவர் அல்ல, இது 'போருக்கான நேரம்' என்றும் இஸ்ரேல் 'ஹமாஸை பூமியின் முகத்திலிருந்து துடைத்தெறிய விரும்புகிறது' என்றும் அறிவித்தார்.
இவை ஜேர்மனியில் நாஜி ஆட்சியின் அட்டூழியங்களை எதிரொலிக்கும் அறிக்கைகளாகும், அதன் தலைவர்கள் நியூரம்பேர்க்கில் தூக்கிலிடப்பட்டனர். வார்சோ கெட்டோவின் யூதர்கள் 1943 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாஜி ஆக்கிரமிப்பிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது, அதைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து போலந்து எதிர்ப்பு வெடித்தபோது, ஹிட்லரின் ஆட்சி காஸாவின் அழிவுக்கு ஒப்பான வகையில், நகரத்தை தரைமட்டமாக்கியது. இப்போது காஸா ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.
பைடென் நிர்வாகமும் ஊடகங்களும், படுகொலையை நியாயப்படுத்தி, இஸ்ரேலிய குடிமக்கள் மீதான ஹமாஸின் தாக்குதலை விவரிக்க முடியாத சீற்றமாக சித்தரிக்க முயற்சிக்கின்றன, 'தூய கொடுமை' என்பதை தவிர வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் பல தசாப்தங்களாக இடைவிடாது நடத்தி வந்த அடக்குமுறையால் இந்த கிளர்ச்சி தூண்டப்பட்டது என்பது தான் உண்மையாகும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, உலகெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட மூவாயிரம், முக்கியமாக யூத பொது அறிவுஜீவிகள் 'அறையில் யானை' என்ற தலைப்பின் கீழ் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டனர். அது ஹமாஸின் தாக்குதலுக்கு முந்தைய நிலைமைகளை விவரித்தது. 'நீதித்துறை மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலுக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் பாலஸ்தீனியர்கள் மீதான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கும் இடையிலான நேரடி தொடர்பை அவர்கள் குறிப்பிட்டனர். பாலஸ்தீன மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை, எதிர்ப்பு உள்ளிட்ட அனைத்து
அடிப்படை உரிமைகளும் இல்லை. அவர்கள் தொடர்ச்சியான வன்முறையை எதிர்கொள்கின்றனர்: இந்த ஆண்டு மட்டும், இஸ்ரேலிய படைகள் மேற்குக் கரை மற்றும் காசாவில் 190 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளனர். 590 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டன. குடியேற்றப்பகுதியில் உள்ள கண்காணிப்பாளர்கள் தண்டனை ஏதுமின்றி தீயிட்டுக் கொளுத்துதல், கொள்ளையடித்தல், மற்றும் கொலை செய்வதில் ஈடுபட்டனர்' என்று அவர்கள் விவரித்தனர்.
'இஸ்ரேலிய சட்ட வல்லுநர்கள் விவரித்தபடி, பாலஸ்தீனியர்கள் இனவெறி ஆட்சியின் கீழ் வாழும் வரை இஸ்ரேலில் யூதர்களுக்கு ஜனநாயகம் இருக்க முடியாது. உண்மையில், நீதித்துறை மறுசீரமைப்பின் இறுதி நோக்கமானது, காஸா மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதும், பச்சைக் கோட்டுக்கு அப்பாலும் அதற்குள்ளும் பாலஸ்தீனியர்களுக்கு சம உரிமைகளைப் பறிப்பதும், அதிக நிலங்களை இணைப்பதும் ஆகும். மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து பிரதேசங்களில் இருந்தும் அதன் பாலஸ்தீனிய மக்களை இனரீதியாக துடைத்துக் கட்டுவதாகும்' என்று அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது.
இவை அனைத்தும் இப்போது வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளன. ஒரு முற்றிலும் தவறான, பொய்யான கதை ஜோடிக்கப்பட்டுள்ளது, அதன்படி இஸ்ரேல், நாஜி பாணியிலான பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதல்களுக்கு பலியாகியுள்ளது. உண்மையில் பாலஸ்தீனியர்கள் பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்டு வருவதுடன் தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் மற்றும் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலிய அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் தங்கள் சொந்த இனப்படுகொலை குற்றங்களை நியாயப்படுத்த யூத இன அழிப்பை சுரண்ட முயற்சிக்கின்றனர்.
இஸ்ரேலிய படுகொலைக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவும் ஊக்கமும் உள்ளது. படையெடுப்பு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வியாழனன்று நெதன்யாகுவை சந்தித்து இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை அறிவித்தார். NBC News க்கு அளித்த பேட்டியில் இஸ்ரேல் கடக்கக்கூடிய 'சிவப்பு கோடுகள்' ஏதேனும் உள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, பிளிங்கன் 'எந்த செயல்பாட்டு விவரங்களுக்கும் செல்லப்போவதில்லை, மீண்டும், நாங்கள் அவர்களை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறோம்' என்று பதிலளித்தார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரேல் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அதற்கு முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளார். ஜெருசலேமில் நெதன்யாகுவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில்: 'நான் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மட்டுமல்லாமல், ஒரு யூதராகவும் உங்கள் முன் வருகிறேன்' என்று பிளிங்கன் அறிவித்தார். அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் அவரது உத்தியோகபூர்வ பாத்திரத்துடன், பிளிங்கனின் தனிப்பட்ட மதத்துடன் வெளிப்படையாக தொடர்புபடுத்துவது என்பது அரசியலமைப்பு அடிப்படையிலான மதம் (தேவாலயம்) மற்றும் அரசு பிரிக்கப்பட்டிருப்பது குறித்த அவரது அலட்சியத்தையும் அறியாமையையும் அம்பலப்படுத்துகிறது
நெதன்யாகு ஆட்சியின் குற்றங்களுடன் அனைத்து யூத மக்களையும் தவறாக தொடர்புபடுத்துவதால் அவரது அறிக்கை யூத விரோத பிரச்சாரத்திற்கு ஆதாரத்தை வழங்குகிறது.
அவர் நேர்மையாகப் பேசினால், 'நான் அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக மட்டுமல்லாமல், காஸா அழிப்பு மற்றும் பாலஸ்தீனியர்களை பரந்தளவில் படுகொலை செய்வதற்கு உடந்தையாக இஸ்ரேலுக்கு வருகிறேன்' என்று பிளிங்கன் கூறியிருப்பார்.
பிளிங்கனின் பயணத்தை தொடர்ந்து செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உரை அமைந்தது, பாலஸ்தீன எழுச்சியை 'தூய கலப்படமற்ற கொடுமையின்' வெளிப்பாடு என்று பைடென் கண்டனம் செய்தார். வியாழனன்று பிரஸ்ஸல்ஸில் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் உச்சிமாநாட்டின் போது பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், அமெரிக்காவால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து 'எந்த நிபந்தனைகளும்' விதிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தினார்.
ஏகாதிபத்திய சக்திகள் முன்னெப்போதையும் விட வெளிப்படையாக உலகிற்கு எதிராக ஒரு போரை நடத்தி வரும் நிலையில், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மிச்சமீதங்கள் கூட அகற்றப்பட்டு வருகின்றன. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் இந்த வாரம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் தடை செய்யப்பட்டன, பங்கேற்பாளர்கள் 'பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள்' என்று அதிகாரிகளால் பூதாகரமாக சித்தரிக்கப்பட்டனர்.
கல்லூரி வளாகங்களில், வலதுசாரி சியோனிஸ்டுகள் பயங்கரவாதம் மற்றும் அச்சுறுத்தல்களின் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர். இவர்கள், இஸ்ரேலிய குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர் குழுக்கள் மற்றும் தனிநபர்களுடைய பெயர்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். நேற்று புரூக்ளின் கல்லூரியில் நடந்த பேரணியில், நியூயோர்க் நகர கவுன்சில் உறுப்பினர் இன்னா வெர்னிகோவ், மாணவர்களை அச்சுறுத்துவதற்காக துப்பாக்கியை எடுத்துக் காட்டினார்.
இஸ்ரேலிய குற்றங்களை எதிர்ப்பவர்களை யூத எதிர்ப்பு என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு, இஸ்ரேலிய அரசாங்கம் பாசிஸ்டுகளின் கூட்டத்தால் ஆனது என்று கூறுகிறோம். இதில் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டமார் பென்-க்விரும் அடங்குவார், அவர் வலதுசாரி குடியேற்ற படைகள் ஆயுதம் வாங்குவதற்கு 10,000ம் தாக்குதல் துப்பாக்கிகளை வாங்க தனது அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார். 'அரேபியர்களுக்கு மரணம்' என்று கோஷமிட்டதற்காகவும், ஒரு பயங்கரவாதக் குழுவை ஆதரித்ததற்காகவும் பென்-க்விர் முன்னர் இனவெறி தூண்டுதலுக்காக குற்றவாளியாக்கப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளைப் பொறுத்தவரை, அவை உக்ரேனில் உள்ள பாசிசவாதிகளுடன் அணிசேர்ந்துள்ளன, கடந்த மாதம் நாஜிக்களின் Waffen-SSன் உறுப்பினரான யாரோஸ்லாவ் ஹுங்காவுக்கு கனேடிய பாராளுமன்றம் எழுந்து நின்று கைதட்டி அளித்த மரியாதை மற்றும் அனைத்து G7 நாடுகளின் பிரதிநிதிகளும் வழங்கிய மரியாதைகள் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. ஹுங்கா, நாஜி ஜேர்மனியின் வழிகாட்டுதலின் கீழ் யூதர்களின் படுகொலைக்கு பொறுப்பான உக்ரேனிய Waffen-SS இன் ஒரு மூத்த தலைவராவார்.
காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலை, ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போரின் பின்னணியில், உலகப் போரின் ஆரம்ப கட்டமாக பார்க்க வேண்டும். உலகின் ஏகாதிபத்திய மறுபங்கீடு என்பது நாடுகளுக்கு இடையிலான மோதல்களின் வடிவத்தை மட்டுமல்லாமல், வெகுஜன மக்களுக்கு எதிரான முன்னெப்போதையும் விட நேரடியான மற்றும் வன்முறையான போரின் வடிவத்தை எடுக்கும். அனைத்திற்கும் மேலாக, அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள ஆளும் உயரடுக்குகள் தொடர்ச்சியான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன, அதை அவர்கள் இராணுவ வன்முறை வெடிப்பின் மூலம் திசை திருப்ப முயல்கின்றனர்.
ஊடகங்கள் பொதுமக்களுக்கான கருத்தை முன்வைக்கின்றன என்று ஆளும் வர்க்கம் நம்புகிறது. ஆனால், பாலஸ்தீனியர்களுக்கான ஆதரவு உலகெங்கிலும் உள்ள மக்களிடையே பரவலாக உள்ளது, மேலும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலுக்குள், நெதன்யாகு ஆட்சி, ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதற்குமான உந்துதலில் செயல்படுவதற்கு எதிராக, கடந்த ஆண்டு முழுவதும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து தொடர்ச்சியான எதிர்ப்பை எதிர்கொண்டது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்தக் கோருவதன் மூலம் படுகொலையை நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் தலையீடு செய்ய வேண்டும். இந்த கொலைவெறித் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஒவ்வொரு நகரத்திலும் கல்லூரி வளாகத்திலும் பரந்தளவிலான ஆர்ப்பாட்டங்களையும் போராட்ங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகள் பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் சகிக்க முடியாத நிலைமைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான பரந்த போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதவை. இதற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் சோசலிசத்திற்கான ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகும்.
