அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் போருக்கு எதிரான கருத்துக்களை குற்றமாக்காதே! காஸா மீதான தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு வெகுஜன இயக்கத்தை முன்னெடுப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அமெரிக்காவிலுள்ள சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த மாணவர்கள் மீதான தாக்குதல்களை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. இந்த தாக்குதல்கள், ஏகாதிபத்தியத்தால் ஒரு குற்றத்திற்கு எதிரான பிராமாண்டமான வெகுஜன எதிர்ப்பை ஆழமான வரலாற்றுத் தன்மை வாய்ந்தளவில் அச்சுறுத்துவதற்கும் குற்றமாக்குவதற்குமான ஒரு முயற்சியாகும்.

இந்த மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது, ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்தால் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தாக்குதலுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் ஒரு மையப் பாகமாக மாற வேண்டும்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், 30 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட குழுவானது பாலஸ்தீன ஒற்றுமைக் குழுவால் எழுதப்பட்ட கொள்கை ரீதியான அறிக்கையில் கையெழுத்திட்ட பின்னர் ஒரு மோசமான, அரசு ஆதரவுடன் அவதூறு பிரச்சாரத்தை எதிர்கொள்கின்றனர், இந்த அறிக்கையானது தற்போதைய இரத்தக்களரி மோதலுக்கு இஸ்ரேலின் மிருகத்தனமான, பல தசாப்த கால ஆக்கிரமிப்பை சரியாக குற்றம் சாட்டியது. முன்னாள் ஹார்வர்ட் தலைவரும் பில் கிளின்டனின் கீழ் கருவூல செயலாளருமான லரி சம்மர்ஸ், கடிதத்தில் கையெழுத்திட்ட மாணவர்களின் பெயர்களை பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று கோரினார்.

வியாழனன்று, ஒரு வாகனம் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து, இந்த மாணவர்களில் பலரின் பெயர்கள் மற்றும் படங்களைக் காண்பித்து, அவர்களை 'ஹார்வர்டின் முன்னணி யூத-எதிர்ப்பாளர்கள்' என்று அவதூறு செய்தது. இந்த மாணவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையை பில்லியனரான ஹெட்ஜ்-ஃபண்ட் மேலாளரும் (hedge-fund manager) ஜனநாயகக் கட்சியின் நன்கொடையாளருமான பில் அக்மேன் பகிரங்கமாக டுவிட்டர் / எக்ஸ் (Twitter/X) இல் ஆதரித்தார், அவர் பாசிச கொலையாளி கைல் ரிட்டன்ஹவுஸை 'குடிமை சிந்தனை கொண்ட தேசபக்தர்' என்று அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் (NYU), சட்ட மாணவர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் வழக்குரைஞர் சங்கத்தின் (SBA) தலைவர், ரைனா வொர்க்மேன், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டதற்காக தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட் ஹெட்ஜ்-ஃபண்ட் மற்றும் இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள NYU நிர்வாகமானது, வொர்க்மேனுக்கு எதிரான வலதுசாரி அவதூறுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. பெருநிறுவன சட்ட நிறுவனமான வின்ஸ்டன் (Winston) மற்றும் ஸ்ட்ராவ்ன் (Strawn) அவரது வேலை வாய்ப்பை இரத்து செய்தனர். மேலும் SBA ஆனது வொர்க்மேனை அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இடதுசாரி மாணவர்களுக்கு எதிராக அரசு, பெருநிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களால் தூண்டிவிடப்படும் தாக்குதல் போன்ற சூழல் ஏற்கனவே கலிபோர்னியா லொஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்துள்ளது. பாலஸ்தீன மாணவர்கள் மற்றும் பாலஸ்தீன நீதிக்கான மாணவர் (UCLA - லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகம்) உறுப்பினர்கள் சியோனிஸ்டுகளால் தள்ளப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும், எச்சில்கள் துப்பியதாகவும், கத்திகளால் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். வியாழனன்று நெருக்கடி குறித்த 'பட்டறை' சியோனிஸ்டுகளால் இடைமறிக்கப்பட்டது, அவர்கள் மாணவர்களின் மடிக்கணினிகளைப் பறித்து அவர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தனர்.

நியூயோர்க் நகரின் புரூக்ளினில், புதன்கிழமை இரவு 18 வயதான பாலஸ்தீன இளைஞர் ஒருவர் சியோனிஸ்டுகள் கும்பலால் தாக்கப்பட்டார். வியாழனன்று, புரூக்ளின் கல்லூரியில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில், ட்ரம்ப் ஆதரவாளரும் நியூயார்க் நகர கவுன்சிலருமான இன்னா வெர்னிகோவ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியைக் காட்டினார்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களுக்கான எதிர்ப்பானது, 'யூத விரோதம்' என்ற அவதூறுகளை IYSSE ஆனது நிராகரிக்கிறது. ஹார்வர்ட், NYU மற்றும் UCLA மாணவர்கள், சியோனிசம் மற்றும் அதன் போர்க்குற்றங்களுக்கு முற்றிலும் கொள்கை ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர், இது எப்போதும் உண்மையான இடதுசாரி மற்றும் சோசலிச அரசியலில் பிரதானமாக இருந்து வருகிறது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்டுவரும் இஸ்ரேலிய அரசாங்கம், முழு யூத மக்களுக்காகவும் பேசுகிறது என்ற கூற்றையும் நாங்கள் நிராகரிக்கிறோம். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா மீது படையெடுத்து குண்டுகள் வீசி, ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தூண்டியபோது, அமெரிக்க ஆளும் வர்க்கம் அமெரிக்க தொழிலாளர்களின் நலன்களுக்காக பேசியதை விட நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி ஆட்சி இஸ்ரேலில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக பேசவில்லை. இஸ்ரேல் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களில் கணிசமான பிரிவுகளில், நெதன்யாகு அரசாங்கத்திற்கும் அதன் குற்றவியல் கொள்கைகளுக்கும் பெரும் எதிர்ப்பு உள்ளது.

அமெரிக்காவில் இடது-சாரி மாணவர்களுக்கு எதிரான, தணிக்கை பிரச்சாரம் ஏகாதிபத்திய மையங்களில் ஆளும் வர்க்கம் போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை குற்றமாக்குவதற்கும் அச்சுறுத்துவதற்குமான ஒரு சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும். ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில், அரசாங்கங்கள் பாலஸ்தீன-ஒற்றுமை ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய விரைவாக நகர்ந்தன.

அமெரிக்காவில், அலெக்சாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் உட்பட அமெரிக்காவின் போலி-இடது ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் (DSA) தொடர்புடைய அரசியல்வாதிகளும் பாலஸ்தீனிய-சார்பு ஆர்ப்பாட்டங்களை 'நிறுத்த' அழைப்பு விடுத்துள்ளனர். DSA இதுவரை இந்த யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெயரளவிலான அறிக்கையை கூட வெளியிட மறுத்துவிட்டது.

இந்த மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போருக்கு-எதிரான எதிர்ப்பிற்கு காட்டும் மூர்க்கத்தன்மையானது, உலக மக்களின் கண்களுக்கு முன்னால் நிகழ்த்தப்படும் ஒரு வரலாற்றுத் தன்மை வாய்ந்தளவு குற்றமாகும்.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை மையமாகக் கொண்ட ஒரு பாசிச கும்பலின் தலைமையிலான இஸ்ரேலிய அரசாங்கம், காஸாவின் ஒட்டுமொத்த மக்களையும் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி, முற்றுகையிட்டுள்ளது. வியாழனன்று இரவு, நெதன்யாகு காஸாவிலுள்ள 1.1 மில்லியன் மக்களை — மொத்த மக்கள்தொகையில் பாதியை — வெளியேறுமாறு 24 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்தார். காஸாவிலுள்ள 2.2 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அவர்கள் ஒரு வதைமுகாம் போன்ற நிலைமைகளில் வளர்ந்தவர்கள், அவர்கள் மிக அடிப்படை மனித உரிமைகள் மற்றும் எதிர்காலத்திற்கான உரிமையை இழந்துள்ளனர்.

இந்தப் போரின் நவ-காலனித்துவ மற்றும் இனப்படுகொலைத் தன்மையை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் அப்பட்டமாகக் கூறினார், 'நான் காஸாப் பகுதியை முழுமையாக முற்றுகையிட உத்தரவிட்டுள்ளேன். மின்சாரம் இருக்காது, உணவு இருக்காது, எரிபொருள் இருக்காது, அனைத்தும் மூடப்பட்டிருக்கும். பாலஸ்தீன மக்களை 'விலங்குகள்' மற்றும் 'காட்டுமிராண்டிகள்' என்று குறிப்பிட்டு, கேலண்ட் மற்றும் நெதன்யாகு இருவரும் பாசிச மொழியைப் பயன்படுத்தியுள்ளனர்.

திட்டமிட்ட தரைவழி படையெடுப்பு தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஆறு நாட்களில், காஸாவில் 1,000 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளன, இதனால் ஒரே இரவில் 330,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடிழந்துள்ளனர். 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் குறைந்தது 500 குழந்தைகளும் அடங்குவர்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இப்போது இஸ்ரேலிய அரசாங்கத்தால் இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கின்றன. அவைகள் போர்க்குற்றங்கள் மற்றும் பாசிசக் கொள்கைகளின் குற்றவாளிகளாகவும் ஆதரவாளர்களாகவும் அம்பலப்பட்டுள்ளார்கள்.

காஸாவில் கட்டவிழ்ந்து வரும் போர் மற்றும் அதற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பின் மீதும் ஆளும் வர்க்கத்தின் வெறித்தனமான தாக்குதல்களை அவற்றின் பரந்த அரசியல் மற்றும் வரலாற்று பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இது உலகின் கட்டவிழ்ந்து வரும் ஏகாதிபத்திய மறுபிரிவினையில் ஒரு புதிய முன்னணியாகும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போரிலிருந்து பிரிக்க முடியாதது. ஏற்கனவே, காஸாவில் மோதல் மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது, இஸ்ரேலியப் படைகள் லெபனானில் ஆளில்லா விமானத் தாக்குதல்களையும் சிரியாவில் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளன என்ற அறிக்கைகள் உள்ளன. உக்ரைன் போரைப் போலவே, இது ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் அரசு நிறுவப்பட்டபோது பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கவும், பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலம் மற்றும் வீடுகளிலிருந்து பாரிய அளவில் வெளியேற்றவும் தொடங்கியது. 1967 ஆம் ஆண்டில், மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்து இணைத்துக் கொள்ளத் தொடங்கியது. 2006 முதல், இஸ்ரேல் காஸா மீது ஒரு முற்றுகையை ஏற்படுத்தி, அதை ஒரு 'திறந்தவெளி சிறைச்சாலையாக' மாற்றியுள்ளது. இந்த முழு காலகட்டத்திலும் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மற்றும் அதிவலது சியோனிச குடியேற்றக்காரர்களின் கைகளில் வழக்கமான வன்முறை, கைதுகள், துன்புறுத்தல்கள் மற்றும் கொலைகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த சகிக்க முடியாத நிலைமைகளுக்கு எதிரான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலிய அரசாங்கமும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும், ஆழ்ந்த உள்நாட்டு நெருக்கடிகளால் அதிர்ந்து போயுள்ள நிலையில், பாரிய படுகொலைகள் மூலம் பாலஸ்தீனியர்களின் பிரச்சினையை 'எதிர்கொள்ள' முடிவு செய்துள்ளனர்.

உக்ரேன் மற்றும் இஸ்ரேல் இரண்டிலும், ஏகாதிபத்திய சக்திகள் மிகவும் பிற்போக்கு சக்திகளுடன் அணிசேர்ந்துள்ளன. இஸ்ரேலில் நெதன்யாகுவைச் சுற்றியுள்ள பாசிச கும்பலை ஆதரிக்கும் அதேவேளை, மற்றும் இஸ்ரேலை 'யூத எதிர்ப்பு' என்று அவதூறாக விமர்சிக்கும் நேட்டோ சக்திகள் உக்ரேனிலுள்ள உண்மையான நவ-நாஜிக்களுக்கு நிதியளித்து ஆயுதபாணியாக்கியுள்ளன. சில வாரங்களுக்கு முன்புதான், முழு கனேடிய பாராளுமன்றமும், சிறப்பு விருந்தினர் வோலோடிம் ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, நாஜி போர்க்குற்றவாளியான உக்ரேனிய Waffen-SS உறுப்பினர் யரோஸ்லாவ் ஹுன்காவுக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தது.

பாலஸ்தீன மக்கள் மற்றும் அதை ஆதரிப்பவர்கள் மீதான தாக்குதலின் அசாதாரண மூர்க்கத்தனத்திற்கும் வெட்கங்கெட்ட குற்றத்தன்மைக்கும் மற்றொரு காரணமும் உள்ளது: அதாவது இஸ்ரேலைப் போலவே, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் உள்நாட்டு எதிர்ப்பையும் போர்க்குணத்தையும் எதிர்கொள்கிறது. அமெரிக்காவில், வாகனத்துறை, சுகாதாரம், விநியோகத்துறை மற்றும் கல்வித் துறைகளில் உள்ள தொழிலாளர்களை உள்ளடக்கிய பல தசாப்தங்களில் மிகப்பெரிய வேலைநிறுத்த அலையின் போராட்டத்தால் ஆளும் வர்க்கம் கலக்கமடைந்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: பல்கலைக்கழக வளாகங்களில் போர்-எதிர்ப்புக் கருத்துக்களுக்கு எதிரான தற்போதைய பிரச்சாரத்தின் தர்க்கமானது, ஆளும் வர்க்கத்தின் போர்க் கொள்கைகள் மற்றும் பிரச்சாரங்களுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பின் வெளிப்பாட்டையும் நசுக்குவதற்கு, பெரும் பெருநிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் ஆளும் வர்க்கம் அதன் முழு அரசு இயந்திரத்தையும் இயக்கும் என்பதாகும். எஞ்சியுள்ள ஜனநாயக உரிமைகளை அகற்றுவதற்கும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் போர் மற்றும் ஆளும் வர்க்கத்தின் மற்ற அனைத்து கொள்கைகளுக்கும் எதிரான எதிர்ப்பை அச்சுறுத்துவதற்கும் குற்றமாக்குவதற்கும் இந்த பிரச்சாரம் ஒரு முன்னுதாரணத்தை வழங்குகிறது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். போருக்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்குவதற்கான ஒருங்கிணைந்த பிரச்சாரம் இருந்தபோதிலும், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வெடிக்கின்றன. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு நனவான அரசியல் வேலைத்திட்டம் மற்றும் போராடுவதற்கான முன்னோக்கு வழங்கப்பட வேண்டும்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய மையங்களிலுள்ள வெகுஜனங்களின் ஆதரவு இல்லாமல் காஸா மீதான தாக்குதலை நிறுத்த முடியாது. தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியடைந்துவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் காஸா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அனைத்து சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் நனவான இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கு போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே ஒரு பாரிய புரட்சிகர, சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகும். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் இயக்கமான IYSSE ஆனது அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறது. வரும் வாரங்களில் காஸாவில் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் கூட்டங்களை நடத்த உள்ளோம். யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சாத்தியமான பரந்தளவிலான பங்களிப்பிற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் மற்றும் பின்வரும் கோரிக்கைகளை எழுப்ப இளைஞர்கள், கொள்கைசார் புத்திஜீவிகள் மற்றும் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறோம்:

நெதன்யாகு அரசை வீழ்த்து! காஸா மீதான ஏகாதிபத்திய ஆதரவு சியோனிச தாக்குதலை நிறுத்து!

போரை எதிர்ப்பவர்களை தணிக்கை செய்வது, கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது, குற்றமாக்குவதை செய்யாதே! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்!

ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்திற்காக!

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பை மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) கட்டியெழுப்புங்கள்! சோசலிசத்திற்காக போராடுங்கள்!

Loading