மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நாஜிக்கள் செய்த குற்றங்களுக்கு நிகரான பிரமாண்டமான பரிமாணங்களைக் கொண்ட ஒரு குற்றம் இப்போது உலகின் கண்முன்னே அரங்கேறி வருகிறது. காஸாவிலுள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாக நேரிடும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய அரசாங்கம் உடனடி தரைவழி படையெடுப்புக்கு முன்னதாக அவர்களை திட்டமிட்டு பட்டினிக்கும் மற்றும் தண்ணீரின்றி நீரிழப்புக்கும் உட்படுத்துகிறது.
உலகெங்கிலும், பெருந்திரளான தொழிலாளர்களும் இளைஞர்களும் பாலஸ்தீனிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடூரங்களால் அதிர்ச்சியும் கிளர்ச்சியும் அடைந்துள்ளனர், கடந்த வாரம் உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களின் தலைவிதி இப்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த எதிர்ப்பை தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை நடவடிக்கை மூலம் விரிவுபடுத்துவது அவசரமானது.
நெதன்யாகு ஆட்சியானது காஸாவை பூமிப் பரப்பின் முகத்திலிருந்து துடைத்தெறிய விரும்புகிறது. வடக்கு காஸாவிலுள்ள 1.1 மில்லியன் மக்களை வெளியேற்ற இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமையன்று வழங்கிய காலக்கெடு முடிந்துவிட்டது. நூறாயிரக்கணக்கான மக்கள் தெற்கில் இருந்து தப்பிக்க தீவிரமாக முயன்று வருகின்றனர், அதே நேரத்தில் நூறாயிரக்கணக்கான மக்கள் காஸா நகரில் உள்ளனர்.
நடப்பது காஸாவின் ஒட்டுமொத்த மக்களையும் குறிவைக்கும் ஒரு போர்க் குற்றமாகும். அக்டோபர் 9 ஆம் திகதி தொடங்கிய உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் மீதான முற்றுகைக்கு காஸா உட்படுத்தப்பட்டுள்ளது, இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போர்க் குற்றமாகும். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் தலைவர் பிலிப் லாசாரினி கூறுகையில், “கட்டவிழ்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடியின் அளவும் வேகமும் நெஞ்சை உறைய வைக்கிறது. காஸா வேகமாக நரகக் கூடமாக மாறி வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது.
650,000ம் மக்களுக்கு உயிர்வாழ்வதற்கான மிக அடிப்படைத் தேவையான குடிநீரின் கடுமையான பற்றாக்குறை உள்ளது என்று லாசாரினி கூறினார். பாதுகாப்பான குடிநீரை உற்பத்தி செய்வதற்கான உடனடி எரிபொருள் கிடைக்காமல், “மக்கள் கடுமையான நீரிழப்பால் இறக்கத் தொடங்குவார்கள், அவர்களில் சிறு குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பெண்கள் அடங்குவர். தண்ணீர்தான் இப்போது எஞ்சியிருக்கும் கடைசி உயிர்நாடி” என்றார்.
காஸாவில் சுகாதார அமைப்புமுறை சீர்குலைந்து வருகிறது. ஞாயிறன்று, உலக சுகாதார அமைப்பு (WHO), “வடக்கு காஸாவில் 2,000 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 22 மருத்துவமனைகளை வெளியேற்றுவதற்கான இஸ்ரேலின் தொடர்ச்சியான உத்தரவுகளை, தனது அறிக்கையில் வன்மையாக கண்டிக்கிறது. நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை கட்டாயமாக வெளியேற்றுவது தற்போதைய மனிதாபிமான மற்றும் பொது சுகாதார பேரழிவை மேலும் மோசமாக்கும்”.
“தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் அல்லது உயிர்பிழைப்பதற்கான மருத்துவ உதவியில் தங்கியிருப்பவர்கள் உட்பட பல மோசமான நோய்வாய்ப்பட்ட மற்றும் பலவீனமான நோயாளிகளின் உயிர்கள் அந்தரத்தில் ஊசலாடுகிறது” என்று உலக சுகாதார அமைப்புக் கூறியது. ஹீமோடையாலிசிஸுக்கு (சிறுநீரக கோளாருக்குரிய உதவிக் கருவி) உட்பட்ட நோயாளிகள்; இன்குபேட்டர்களில் (பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ உதவிப் பாதுகாப்பு பெட்டி) புதிதாகப் பிறந்த குழந்தைகள்; கர்ப்பத்தின் சிக்கல்களைக் கொண்ட பெண்கள், மற்றும் இதரவர்கள் அனைவரும் வெளியேற நிர்பந்திக்கப்பட்டால் மற்றும் வெளியேற்றப்படும்போது உயிர்காக்கும் மருத்துவ கவனிப்பிலிருந்து துண்டிக்கப்பட்டால் அவர்களின் நிலை விரைவில் மோசமடைவதையும் அல்லது இறப்பையும் எதிர்கொள்வர்”
வடக்கு காஸாவிலுள்ள மருத்துவமனைகளை காலி செய்ய வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையானது “மரண தண்டனை” விதிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏழு நாட்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 2,215 ஆக உள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர், அதே நேரத்தில் 8,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடைவிடாத குண்டுவீச்சு ஒரு நேரடி படையெடுப்புக்கான வழியை தயார் செய்யும் நோக்கம் கொண்டது. சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய இராணுவம் காஸாவுடனான எல்லையில் நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் “ஒரு குறிப்பிடத்தக்க தரை நடவடிக்கை” மற்றும் “வான், கடல் மற்றும் தரையிலிருந்து ஒரு இணைக்கப்பட்டதும் மற்றும் ஒருங்கிணைந்ததுமான தாக்குதலுக்கு” தயாராகி வருவதாக கூறியது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் இந்த கட்டவிழ்ந்து வரும் இனப்படுகொலைக்கு முற்றிலும் உடந்தையாக உள்ளன. அனைவரும் இஸ்ரேலின் இனப்படுகொலை பிரச்சாரத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் “கோபத்தில் பதிலடி கொடுக்கிறதா” என்று வெள்ளியன்று கேட்கப்பட்டதற்கு, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இவ்வாறு பதிலளித்தார், “இஸ்ரேல் செய்வது பதிலடி அல்ல. இஸ்ரேல் என்ன செய்கிறது அதன் மக்களின் உயிரைப் பாதுகாக்கிறது ... இஸ்ரேல் அனுபவித்த துன்பத்தை எதிர்கொள்ளும் எந்தவொரு நாடும் அதையே செய்யும் என்று நான் நினைக்கிறேன். முந்தைய நாள், இஸ்ரேலால் கடக்க முடியாத “சிவப்பு கோடுகள்” ஏதேனும் உள்ளதா என்று கேட்டதற்கு, பிளிங்கன் வெறுமனே இவ்வாறு பதிலளித்தார், “நாங்கள் அவர்களை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறோம்.”
ஹஃபிங்டன் போஸ்ட் (Huffington Post) மூலம் பெறப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் துறை செய்திகள், “பதற்றத்தை குறைத்தல் / போர்நிறுத்தம், வன்முறை / இரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவருதல்” மற்றும் “அமைதியை மீட்டெடுப்பது” போன்ற சொற்களை பத்திரிகை ஊடகங்களில் பயன்படுத்த வேண்டாம் என்று இராஜதந்திரிகளுக்கு அறிவுறுத்துகின்றன. இஸ்ரேலிய தாக்குதலின் ஆரம்ப நாட்களில், போர்நிறுத்தத்தை பரிந்துரைக்கும் வெளியுறவுத் துறையின் ட்டுவீட்டுகள் நீக்கப்பட்டன.
பைடன் நிர்வாகமானது இனப்படுகொலையை ஊக்குவித்து வருகிறது. காஸா நடவடிக்கைகளில் அதன் நேரடி இராணுவ தலையீட்டின் சமிக்ஞையாக, பென்டகன் சனிக்கிழமையன்று கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் தாக்குதல் குழுவை அனுப்புவதற்கு உத்தரவிட்டது.
வெகுஜன ஊடகங்களின் இடைவிடாத, பொய்யான பிரச்சாரம் இருந்தபோதிலும், உலக மக்களில் பரந்த பெரும்பான்மையினரின் அனுதாபம் பல தசாப்தங்களாக ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான பாலஸ்தீனியர்கள் மீதே உள்ளது.
காஸாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இனப்படுகொலையையும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தின் உடந்தையையும் நிறுத்த ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் வல்லமை அணிதிரட்டப்பட வேண்டும். உலகெங்கிலும் உள்ள நகரங்களிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.
இஸ்ரேல், அதன் போரில் பயன்படுத்தக்கூடிய அனைத்து வளங்களையும் பறிக்க தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகெங்கிலுமுள்ள கப்பல்துறை தொழிலாளர்கள், விமான நிலைய மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் இஸ்ரேலை நோக்கிய எந்தவொரு ஆயுதங்களையும் எடுத்துச்சென்று பயன்படுத்துவதை மறுக்க வேண்டும்.
காஸா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கான இந்த உலகளாவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் பின்வரும் கோரிக்கைகளை எழுப்ப வேண்டும்:
1) அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பதையும் உடந்தையாக இருப்பதையும் நிறுத்த நிர்பந்திக்கப்பட வேண்டும்!
2) உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் பிற அனைத்து அவசியமான தேவைகளும் உடனடியாக பாலஸ்தீனயர்களுக்கு கிடைக்க வேண்டும்!
3) முற்றுகையை கைவிட வேண்டும்!
4) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அனைத்து இராணுவத் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும்!
5) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) உடனடியாக படைகளை விலக்கிக் கொண்டு காஸா எல்லையில் இருந்து தனது அனைத்து படைகளையும் திரும்பப் பெற நிர்பந்திக்கப்பட வேண்டும்!
