மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாய்கிழமை, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கொடூரமான அட்டூழியங்களைச் செய்துள்ளன. அவை, காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாமின் மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டபோது, நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமுற்றனர். ஒரு காலத்தில் பல உயரமான கட்டிடங்களைக் கொண்டிருந்த இந்த முகாமின் பெரும்பகுதி, முற்றிலும் இடிந்து விழுந்ததை புகைப்படங்கள் காட்சிப்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் அரசை உருவாக்கிய போது, தங்கள் நிலத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் பலஸ்தீனியர்களின் சந்ததியினருக்காக கட்டப்பட்ட ஜபாலியா முகாமில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 50 பேர்கள் இறந்துள்ளனர் மற்றும் 150 பேர்கள் காயமடைந்துள்ளனர் என்பதை ஹமாஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். முழு இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். முகாமை அழித்த ஆறு பாரிய குண்டுவெடிப்புகளால் இறந்தவர்களில் பலர் ஆவியாகி அல்லது அடையாளம் காண முடியாத அளவிற்கு துண்டு தூண்டுகளாக கிழித்தெறியப்பட்டனர்.
“நான் சென்று இந்த அழிவுகளைப் பார்த்தேன்... அங்கு இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட வீடுகள், உடல் உறுப்புகள், மரணித்தவர்கள் மற்றும் ஏராளமானோர் காயமடைந்திருந்தனர், நூற்றுக்கணக்கான மரணித்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றி நாம் பேசினால் மிகையாகாது, மக்கள் இன்னும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் எச்சங்களை சுமந்து செல்கிறார்கள்” என்று இடிபாடுகளை தோண்டுவதற்கு உதவிய 41 வயதான ஒருவர் AFP இடம் தெரிவித்தார்.
வெட்கமின்றி இந்த தாக்குதலை ஆதரித்த இஸ்ரேலிய அதிகாரிகள், பாதுகாப்பற்று இருந்த பொதுமக்களின் அகதி முகாமைக் குறிவைத்து நடத்திய இந்த பாரிய படுகொலைத் தாக்குதலில், பல “பயங்கரவாதிகள்” அழிக்கப்பட்டனர் என்று பெருமையாகப் பேசுகின்றனர். இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “இந்த குண்டுத் தாக்குதலில், கொடிய பயங்கரவாதியும், காஸாவில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிரான போரின் முக்கிய தலைவராகவும் இருந்த இப்ராஹிம் பியாரியை அழிக்கக் கூடியதாக இருந்தது” என்று கூறினார். இப்ராஹிம் “ஒழிப்பின் போது, பல பயங்கரவாதிகள் அவருடன் கொல்லப்பட்டனர்” என்றும் ஹகாரி கூறினார்.
ஜபாலியா அகதிகள் முகாம் மீதான குண்டுத்தாக்குதல் என்பது, காஸாவிற்கு எதிரான இஸ்ரேலிய படைகளின் இனப்படுகொலைத் தாக்குதலைக் கண்டித்து, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய எதிர்ப்பு போராட்டங்களுக்கு, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் மற்றும் அவரது நேட்டோ ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் விடையிறுப்பாகும். அவர்களின் செய்தி: உங்கள் எதிர்ப்புகளை நாங்கள் புறக்கணித்து, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை முறைகள் மூலம் போரைத் தொடர்வோம் என்பதாகும்.
இந்த அட்டூழியத்திற்கு முந்தைய நாள்தான், வாஷிங்டனால் அதன் ஐரோப்பிய நேட்டோ நட்பு நாடுகளின் தீவிர உடந்தையுடன் தாக்குதலுக்கு பச்சை விளக்கு காட்டப்பட்டது. காசாவில் 3,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 8,000ம் இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 140-15 வாக்குகளை நிராகரித்தார்.
போரும், பொதுமக்களின் படுகொலைகளும் தொடர வேண்டும் என்று கிர்பி வலியுறுத்தினார்.“தற்போது போர் நிறுத்தம் என்பது, சரியான பதில் என்று நாங்கள் நினைக்கவில்லை ... போர் நிறுத்தம் தற்போது ஹமாஸுக்கு நன்மை பயக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், மேலும் ஹமாஸ் மட்டுமே அதனால் பயனடைகிறது” என்று அவர் கூறினார்.
செவ்வாயன்று, ஜபாலியா அகதி முகாம் மீதான குண்டுவீச்சை ஆதரித்த கிர்பி, குறிப்பாக இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தார். “ஒவ்வொரு நிகழ்வுக்கும் உண்மையான நேரத்தில் நாங்கள் எதிர்வினையாற்றப் போவதில்லை” என்றார். எனினும், அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலில் உள்ள “எங்கள் சக அதிகாரிகளுடன் தினசரி உரையாடல்களில்” ஈடுபடுகின்றனர் என்றும், இது வாஷிங்டனின் பார்வையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுமக்களின் உயிரிழப்புகளை வைத்திருக்கிறது என்றும், “அவர்கள் பொதுமக்களின் இழப்புகளைக் குறைக்க முயற்சிக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது” என்றும் கிர்பி பொய் சொன்னார்.
கிர்பியின் இந்த அறிக்கையானது, காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் மற்றும் நேட்டோ இராணுவக் கூட்டணியின் ஒப்புதலாகும். இது, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய போர்க்குற்றங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இறுதியில் அது மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் ஏகாதிபத்தியத்தின் இலக்குகளை குறிவைக்கிறது. ஏகாதிபத்திய சக்திகள் உலக மக்களை, எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை இதன் மூலம் எச்சரித்து வருகின்றன. இனப்படுகொலைகள், பாரிய படுகொலைகள் மற்றும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை, ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் மேலாதிக்கத்திற்கான எதிர்ப்பை நசுக்குவதற்கான சட்டபூர்வமான கருவிகளாக கருதுகின்றனர்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யாவேவ் கலோண்ட், இஸ்ரேலிய இராணுவத்தின் கொள்கை கண்மூடித்தனமான படுகொலை என்பதை நிரூபித்து, போரின் தொடக்கத்தில் பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று இழிவாக அழைத்தார். 2.3 மில்லியனுக்கும் அதிகமான அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட காஸா பிராந்தியத்திற்கு அனைத்து நீர், எரிபொருள் மற்றும் உணவு விநியோகங்களை அது துண்டித்தது. அல்-அஹ்லி அரபு பாப்டிஸ்ட் மருத்துவமனை போன்ற பொதுமக்கள் இலக்குகள் மீது குண்டுவீசி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை படுகொலை செய்தது. வடக்கு காஸாவில் உள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெற்கு காசாவிற்கு தப்பிச் செல்லுமாறும், இஸ்ரேலிய படைகளால் கடுமையாக குண்டுவீசப்பட்டு பழுதடைந்த சாலைகளைக் கடந்து செல்லுமாறும் இராணுவம் உத்தரவிட்டது.
இஸ்ரேலிய, நேட்டோ மற்றும் எகிப்திய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளின் அறிக்கைகள், இஸ்ரேலிய ஆட்சி பாலஸ்தீனிய மக்களை காஸாவிலிருந்து வெளியேற்றுவதையும், எகிப்திய இராணுவ ஆட்சியானது எஞ்சியிருக்கும் பாலஸ்தீனியர்களை அண்டை நாடான சினாய் தீபகற்பத்தில் உள்ள வதை முகாம்களில் சிறைபிடிப்பதையும் காட்டுகிறது. இந்த குற்றவியல் திட்டத்தின்படி காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
நேற்று, இஸ்ரேலிய உளவுத்துறை அமைச்சக அதிகாரிகள், காஸாவின் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக சினாய் பாலைவனத்துக்கு மாற்றுவதற்கு முன்மொழியும் “கருத்துத் தாள்' என்று நெதன்யாகு அழைத்ததை வெளியிட்டனர். இந்த திட்டங்கள் பற்றி விவாதித்த எகிப்திய அதிகாரிகள், தெற்கு இஸ்ரேலின் தரிசு நிலமான நெகேவ் பாலைவனத்தில் உள்ள வதை முகாம்களில் பாலஸ்தீனியர்களை தங்க வைக்க ஒரு எதிர் முன்மொழிவை செய்ததாக தெரிகிறது.
லண்டனின் பைனான்சியல் டைம்ஸ் ஒரு 'மேற்கத்திய இராஜதந்திரியை' மேற்கோள் காட்டி, 'காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலின் அழுத்தம் இன்னும் எகிப்திய ஆட்சியின் நிலைப்பாட்டை மாற்ற வழிவகுக்கும்' என்று கூறியது. அநாமதேய இராஜதந்திரி ஒருவர் வெளிப்படையாக இஸ்ரேலிய திட்டத்தை ஆதரித்து, 'இது ஒன்றுதான் செய்ய முடியும்... எனவே எகிப்தியர்களை ஏற்றுக்கொள்வதற்கு இப்போது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது' என்று கூறினார்.
காஸா மீதான போருக்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பு தெரிவித்து வரும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: இஸ்ரேலிய இராணுவம் மற்றும் நேட்டோவின் இராணுவ இயந்திரத்தை நாம் எவ்வாறு நிறுத்தி, இனப்படுகொலையை தவிர்க்க முடியும்?
ஜபாலியா அகதிகள் முகாமின் படுகொலையானது ஒரு இரத்தக்களரியாகும். ஆனால், ஏகாதிபத்தியம், இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிராக, ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கத்தை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் கட்டியெழுப்புவதுதான் முன்னோக்கி செல்லும் ஒரே வழி என்பது ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். சியோனிச ஆட்சியுடனோ அல்லது ஏகாதிபத்திய நேட்டோ அரசாங்கங்களுடனோ பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை. அவை வங்கியாளர்கள் மற்றும் ஜெனரல்களின் குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் அரசியல் குற்றவாளிகளால் நடத்தப்படுகின்றன.
இஸ்ரேலிய அரசாங்கமும் அதன் ஏகாதிபத்திய நேட்டோ நட்பு நாடுகளும் இனச் சுத்திகரிப்பு மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை கைவிடுமாறு கெஞ்சும் போராட்டங்கள் தொடர்பாக ஈடுபாடற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். 1991ல் சோவியத் யூனியன் ஸ்ராலினிஸ்டுக்களால் கலைக்கப்பட்டதில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நடந்துவரும் முப்பது வருட கால யுத்தத்தில், ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் மாலி ஆகிய நாடுகளை சூறையாடி, மில்லியன் கணக்கான மக்களை அவர்கள் கொன்றுள்ளனர். ஜபாலியா படுகொலை காட்டுவது போல், அவர்களின் பாரிய கொலைச் செயல்களை அதிகப்படுத்துவதுதான், இனப்படுகொலைக்கு எதிரான தார்மீக அழைப்புகளுக்கு அவர்களின் பதிலாக இருக்கும்.
இனப்படுகொலையைத் தடுக்கக்கூடிய ஒரே சக்தி, தனது உழைப்பின் மூலம் சமூகத்தின் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற தொழிலாளி வர்க்கம் ஆகும். பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களின் ஒரு சர்வதேச இயக்கம், முக்கிய பொருளாதாரங்களை முற்றிலுமாகத் முடக்கி, காஸாவிற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசாங்கங்களை வீழ்த்த முடியும். தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டி வலுப்படுத்தவும், முதலாளிகள் மற்றும் அவர்களது இராணுவ உளவு இயந்திரங்களின் அதிகாரத்தின் மீது நேரடித் தாக்குதலைத் தயாரிக்கவும் ஒரு போராட்டம் மட்டுமே பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதலை நிறுத்த முடியும்.
காஸாவில் இஸ்ரேலியப் போருக்கு எதிரான பாரிய எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான கேள்வி என்னவெனில், ஒரு போர்-எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தை வளர்த்தெடுத்து, ஒரு சோசலிசப் புரட்சி முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்திற்கு சர்வதேச ரீதியாக அதிகார பரிமாற்றத்தைத் தயார் செய்வதாகும்.
