1938 நவம்பர் இனப்படுகொலைகளும் காஸாவில் இனப்படுகொலையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

நவம்பர் இனப்படுகொலைகள் நடந்து எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு (கிரிஸ்டால்நாக்ட் (Kristallnacht) என்றும் குறிப்பிடப்படுகிறது), ஜேர்மனியில் இனப்படுகொலை போன்ற உணர்வுகள் மீண்டும் கிளர்ந்தெழுகின்றன. ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவைகள் வெளிப்படையாக யூதர்களுக்கு எதிராக அல்ல, மாறாக முஸ்லீம்கள் மற்றும் காஸா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை எதிர்க்கும் அனைவருக்கும் எதிரானவையாக உள்ளன. ஆனால் யாரும் ஏமாறக் கூடாது: எங்கெல்லாம் வெளிநாட்டவர் விரோதம் வளர்கிறதோ அங்கெல்லாம் யூத எதிர்ப்பு வெகு தொலைதூரத்தில் இல்லை.

Börneplatz இல் எரிந்துகொண்டிருக்கும் யூத (synagogue) ஆலயம்

நவம்பர் 9, 1938 இரவு நாஜி ஆட்சியால் யூதர்கள் துன்புறுத்தப்பட்டதில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. “இதற்கு முன்னர் ஏராளமான யூதர்கள் கொலை செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர், ஆனால் வதைமுகாம்களில் நடந்த குற்றங்களைத் தவிர, இந்த குற்றங்கள் பெரும்பாலும் பழுப்பு நிற சட்டை அணிந்த ரௌடிகளால் செய்யப்பட்டதானது, அரச அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போதும், அல்லது வேறு பக்கம் திரும்பிக் கொண்ட போதும் அவைகள் பெரும்பாலும் தங்கள் சொந்த கொடுமைப்படுத்தும் விருப்பம் மற்றும் பேராசையால் செயற்படுத்தப்பட்டன. இப்போது ஜேர்மன் அரசாங்கமே ஒரு பெரும் இனப்படுகொலையை ஒழுங்கமைத்து நடத்தியது” என்று வில்லியம் எல். ஷியர் மூன்றாம் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் (The Rise and Fall of the Third Reich) என்ற புத்தகத்தில் எழுதினார்.

ஜேர்மனிய இராஜதந்திரி எர்ன்ஸ்ட் ஃபன் ராத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரிஸில் 17 வயதான ஹெர்ஷல் க்ரின்ஸ்பான் படுகொலை செய்ததை நாஜி ஆட்சியின் உயர் மட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலைக்கான சாக்குப்போக்காக பயன்படுத்தியது. 1,400 க்கும் மேற்பட்ட யூத (synagogues) ஆலயங்கள் எரிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான யூத வணிகங்கள் அழிக்கப்பட்டன, வீடுகள் சூறையாடப்பட்டன, மக்கள் தாக்கப்பட்டனர், கல்லறைகள் சிதைக்கப்பட்டன. சுமார் 30,000 யூதர்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர், சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டார்கள், அதே நேரத்தில் யூதர்களுக்கு கூட்டாக ஒரு பில்லியன் மார்க் அபராதம் விதிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் வீடுகளுக்கான காப்பீட்டுத் தொகைகள் அரசால் வசூலிக்கப்பட்டன. சட்டப்பூர்வமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தங்கள் சொத்துக்களை அதன் மதிப்பை விட மிகக் குறைவான விலைக்கு விற்று கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. நவம்பர் 9 இனப்படுகொலையானது, அதன் பின் ஒரு வருடத்திற்குப் பிறகு தொடங்கிய ஆறு மில்லியன் யூதர்களை அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலைக்கான பாதையை அமைத்தது.

இன்று, மனிதகுலத்திற்கு எதிரான அந்தக் குற்றத்தை ஜேர்மனிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் காஸாவில் பாலஸ்தீனியர்களை அழித்தல் மற்றும் வெளியேற்றும் இந்தப் போர்க்குற்றத்தை நியாயப்படுத்த மேற்கோள் காட்டுகின்றன. இந்த இனப்படுகொலையை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் யூத எதிர்ப்பாளர்கள் என்று கண்டிக்கப்படுகிறார்கள். இது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான மூர்க்கமான மற்றும் வெறுக்கத்தக்க கலவரத்துடன் கைகோர்த்து செல்கிறது. ஜேர்மன் பாராளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளும் அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தளத்தில் ஏற்கனவே கையாளப்பட்ட ஒரு வீடியோ உரையில், பசுமைக் கட்சியின் துணை சான்சிலர் ராபர்ட் ஹாபெக், “யூத-எதிர்ப்பிலிருந்து தெளிவாக விலகி நிற்காவிட்டால்” “இங்கு வாழும் முஸ்லிம்கள்” “வலதுசாரி தீவிரவாத வன்முறையிலிருந்து பாதுகாக்கும் உரிமையை” இழக்க நேரிடும் என்று அச்சுறுத்தினார். புலம்பெயர்ந்தோரை பயமுறுத்த நவ-நாஜிக்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பாக இது உள்ளது.

Der Spiegel இதழில் ஹபெக்கின் அறிக்கை குறித்து எழுதிய கூட்டாட்சியின் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான தாமஸ் பிஷ்ஷர், “பகட்டாரவாரப் பேச்சிற்கு அமைச்சரின் அணுகுமுறை ... பாதுகாப்பு மற்றும் சகிப்புத்தன்மைக்கான உரிமைகோரல்களை இழப்பது மறுசீரமைக்கப்பட்ட இனவாதத்தின் பொதுவான மாறுபாட்டிற்கு சமமாகும்” என்று கருத்துக் கூறினார்.

ஜேர்மன் சான்சிலர் (அதிபர்) ஓலாஃப் ஷோல்ஸ் Der Spiegel இன் முதல் பக்கத்தில் பரவியிருந்த “இறுதியாக நாம் ஒரு பெரிய அளவில் மக்களை நாடுகடத்த வேண்டும்” என்ற முழக்கத்துடன் இனப்படுகொலைச் சூழலைத் தூண்டிவிடுகிறார்.

பவேரிய மாநில முதலமைச்சர் மார்கஸ் சோடர் “ஒருங்கிணைப்பு மற்றும் இணையான சமூகங்கள் குறித்த ஒரு அடிப்படை விவாதத்திற்கு” அழைப்பு விடுக்கிறார். “யூத எதிர்ப்பு” - அதாவது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான - பேரணிகள் “தடை செய்யப்பட வேண்டும் மற்றும் அதில் பங்கேற்பது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்”. இரட்டை குடியுரிமை உள்ளவர்களின் ஜேர்மன் கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட வேண்டும் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் ஒரு விசுவாச பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பல வாரங்களாக, பரபரப்பு செய்தித் பத்திரிகையான Bild வலதுசாரி நெதன்யாகு அரசாங்கத்தின் மிருகத்தனமான கொள்கைகளை விமர்சிப்பவர்கள் அனைவரையும் “யூத வெறுப்பாளர்கள்” என்று அடக்குமுறை மற்றும் நாடுகடத்தலுக்கும் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த வகையான ஆத்தரமூட்டும் தூண்டுதல் பரபரப்பு செய்தியாக மட்டுமல்லாமல், ஊடகச் சூழல் முழுவதும் காணப்படுகிறது.

புகலிடக் கொள்கையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு கட்சியும் - புதிதாக உருவாக்கப்பட்ட சஹ்ரா வாகென்க்னெக்ட் கூட்டணி முதல் AfD கட்சி வரை - ஒன்றுக்கொன்று மிஞ்சும் ஒரு வஞ்சகமான போட்டியில் ஈடுபட்டுள்ளன. பாதுகாப்புக் கோரும் புலம்பெயர்ந்தோர் ஜேர்மனியில் நுழைவதைத் தடுக்க எடுக்கும் எந்த நடவடிக்கையும் மிகவும் மோசமானதாகவும், மிகவும் மனிதாபிமானமற்றதாகவும் மற்றும் மிகவும் கொடூரமானதாகவும் உள்ளது.

பசுமைக் கட்சியின் தலைவர் ரிக்கார்டா லாங் மற்றும் பாடன்-வுர்ட்டெம்பேர்க்கின் பசுமை அமைச்சர் தலைவர் வின்பிரைட் கிரெட்ஸ்மன் ஆகியோர் Tagesspiegel க்கான ஒரு கூட்டுக் கட்டுரையில் ஒரு கடுமையான அகதிக் கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் மற்றும் புகலிட நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்கின்றனர். “போர் மற்றும் துன்புறுத்தலுக்கு உட்படாத” அனைவருக்கும் “தெளிவான விளைவுகள்” இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

செவ்வாயன்று இரவு, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் நாட்டின் புகலிடக் கொள்கையை கடுமையாக்க ஒப்புக்கொண்டன. கூட்டாட்சி மாநிலங்களும் உள்ளூர் அதிகாரிகளும் ஏற்கனவே குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்கு வழங்காத சலுகைகளைக் குறைப்பதன் மூலம் சுமார் ஒரு பில்லியன் யூரோக்களை சேமிக்க திட்டமிட்டுள்ளனர். பணத்திற்கு பதிலாக, புகலிடக் கோரிக்கையாளர்கள் கட்டண அட்டைகள் அல்லது சான்று சீட்டுக்களைப் (vouchers) பெற வேண்டும். மேலும், நைஜீரியா போன்ற பிற நாடுகளுக்கு புகலிட நடைமுறைகளை வெளிபுறத்தில் செய்வது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் (CD) தலைவர் பிரெடரிக் மெர்ஸ் போன்ற பலருக்கு, இந்த நடவடிக்கைகள் கூட போதுமானதாக இல்லை.

யூத எதிர்ப்பும் இஸ்லாமிய வெறுப்பும்

உண்மையென்னவென்றால், காஸாவில் நடக்கும் இனப்படுகொலையும் ஜேர்மனியில் அகதிகளுக்கு எதிரான தற்போதைய பிரச்சாரமும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தால் இழைக்கப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான மிக மோசமான குற்றங்களை சிடுமூஞ்சித்தனத்தின் உச்சத்தின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன - இது வரலாற்றை பொய்மைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா மற்றும் பின்னர் ஜேர்மனியில் நவீன யூத எதிர்ப்பு ஒரு வெகுஜன இயக்கமாக வளர்ந்தமையானது, தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுடன் பிரிக்கவியலாத வகையில் பிணைந்திருந்தது. யூத எதிர்ப்புவாதம் “தேசம்” என்ற பெயரில் விரக்தியடைந்த மத்தியதர வர்க்க அடுக்குகளை ஐக்கியப்படுத்தவும், சோசலிச தொழிலாளர் இயக்கத்திற்கு எதிரான ஒரு அடியாட்களாக அவற்றைப் பயன்படுத்தவும் உதவியது. இன்று அகதிகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு ஆகியவைகள் அதே நோக்கத்தை நிறைவேற்றுகின்றன.

இருபது ஆண்டு காலப்பகுதியில், பிரான்சில் ட்ரேஃபுஸ் விவகாரம் சோசலிச இயக்கத்திற்கு எதிராக மிகவும் பிற்போக்குத்தனமான அரசியல் கூறுகளை கிளறிவிட உதவியது. வியன்னாவில், ஹிட்லரின் முன்மாதிரியான மயோர் கார்ல் லூகர் யூத எதிர்ப்பை அதே நோக்கத்திற்காக பயன்படுத்தினார், அதே நேரத்தில் ரஷ்யாவில் ஜாரிச ஆட்சி தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கத்திற்கு கொடூரமான யூத எதிர்ப்பு படுகொலைகளுடன் எதிர்வினையாற்றியது.

ஜேர்மன் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் ஆழமான நெருக்கடியின் போது ஹிட்லர் இந்த அபிவிருத்தியை அதன் மிக தீவிரமான வடிவத்திற்கு கொண்டு சென்றார். லியோன் ட்ரொட்ஸ்கி தனது மிகச் சிறந்த படைப்பான தேசிய சோசலிசம் என்றால் என்ன என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார்: தேசிய ‘மறுமலர்ச்சி’ முழுக்க முழுக்க நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதியான, வரலாற்றின் சுமையான பகுதியான நடுத்தர வர்க்கத்தினரையே சார்ந்திருந்தது. “பாட்டாளி வர்க்கத்தின் மீதான அதன் பொதுவான விரோதத்தின் மூலம் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை ஒன்றிணைப்பதில்தான் அதன் அரசியல் கலை அடங்கியிருந்தது. விஷயங்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? முதலில் கீழே இருப்பவர்களை அடக்குங்கள். பெருமுதலாளிகளின் முன் கையாலாகாத குட்டி முதலாளித்துவ வர்க்கம், எதிர்காலத்தில் தொழிலாளர்களை அழிப்பதன் மூலம் தனது சமூக கண்ணியத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறது.”

யூதர்களின் தலைவிதியானது முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, தேசிய அரசை வெல்வது மற்றும் தொழிலாள வர்க்கத்தால் ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டியெழுப்புவது ஆகியவற்றுடன் பிரிக்கவியலாத வகையில் பிணைந்திருந்தது. சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச தலைவர்களின் பேரழிவுகரமான கொள்கைகளின் விளைவாக, 1933ல் ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் தோல்வியும் அவர்களின் தலைவிதியைத் தீர்மானித்தது.

அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இன்று மீண்டும் இனப்படுகொலை போன்ற உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன என்றால், அதே காரணங்களுக்காக அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். அவர்களின் ஈவிரக்கமற்ற போர், ஊதியக் குறைப்பு மற்றும் சமூக வெட்டுக் கொள்கையை ஜனநாயக வழிமுறைகளுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது, மாறாக சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களை அணிதிரட்டுவது அவசியமாகிறது. இது நிறுத்தப்படாவிட்டால், உத்தியோகபூர்வ அரசியல் வட்டாரங்களால் தூண்டிவிடப்படும் இனப்படுகொலைகள் மீண்டும் யூதர்களுக்கு எதிராக திசை திருப்பப்படும். ஜேர்மனியில் மிக உயர்ந்த மட்டத்தில் நாஜிக்களின் குற்றங்கள் அற்பமாக்கப்படுவதன் மூலமும், உக்ரேனில் நாஜி ஒத்துழைப்பாளர்கள் மற்றும் யூத எதிர்ப்பாளர்களின் வாரிசுகளுடன் அரசு ஒத்துழைப்பதன் மூலமும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய போர்க் குற்றங்களை ஆதரிப்பதில், ஜேர்மனியும் அமெரிக்காவும் யூத உயிர்களைப் பாதுகாப்பதில் சிறிதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. மாறாக, அவைகள் வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரில் ஒரு புதிய முன்னரங்கையைத் திறக்கின்றன, இதன் மூலம் சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு எதிராக உலக சக்திகளாக தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயல்கின்றன. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளில் தங்கள் இலக்குகளை அடைய முடியாமல் பெரும் பகுதியை நாசமாக்கியுள்ளனர். இப்போது, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஒரு தேக்கநிலையை எதிர்கொண்டுள்ள அவர்கள், ஈரானுக்கு எதிராக மற்றொரு போருக்கு தயாராகி வருகின்றனர்.

இனவாத ஆத்திரமூட்டும் தூண்டுதல் மற்றும் யூத எதிர்ப்பிற்கு எதிரான போராட்டமானது இந்த பைத்தியக்காரத்தனமான போர்க் கொள்கைக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு எதிராக இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன தொழிலாளர்கள் ஒன்றுபடுவது போலவே, ஜேர்மனியிலுள்ள தொழிலாளர்களும் புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தால் மட்டுமே தங்கள் முக்கிய நலன்களைப் பாதுகாக்க முடியும்.

நவம்பர் இனப்படுகொலைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரே பாடமாக இருப்பது, அனைத்து வகையான தேசியவாதத்தையும் இனவாதக் கலவரத்தையும் நிராகரித்து, ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தையாகும்.

Loading