முன்னோக்கு

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மீள் எழுச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது உறவினரின் உடலைப் பார்த்து பாலஸ்தீனியர் ஒருவர் சோகத்துடன் அழும் காட்சி, Sunday, Nov. 5, 2023.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலிய அரசாங்கம், காஸா மீதான அதன் இனப்படுகொலைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை நாள் முழுவதும், இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸா நகரில் உள்ள மருத்துவமனைகளை, அதன் படைகள் குண்டுவீசி தாக்கி எரித்தது. 24 மணி நேரத்தில் இரண்டு சிறுவர் மருத்துவமனைகள் உட்பட ஆறு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது.

அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் முஹம்மது அபு சல்மியா அல் ஜசீராவிடம், “இன்றைய நாள் மருத்துவமனைகளுக்கு எதிரான போர் நாளாகும்” என்று தெரிவித்தார். இதில் ஆயிரக்கணக்கான அகதிகள் தஞ்சம் அடைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் முன் வாயில் மீதான நேரடித் தாக்குதலும் அடங்கும். ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோக்கள், மருத்துவமனைக்கு எதிராக வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதைக் காட்டுகின்றன. இது சர்வதேச சட்டத்தினை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

நெதன்யாகு ஆட்சியின் நடவடிக்கைகள், அமெரிக்க நேட்டோ சக்திகள் மற்றும் குறிப்பாக பைடென் நிர்வாகத்தின் தீவிர ஆதரவைக் கொண்டுள்ளதுடன், மேலும் அவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. போர்நிறுத்தம் மற்றும் நெத்தன்யாகுவின் நடவடிக்கைகளில் ஏதேனும் வரம்புகள் அல்லது நிபந்தனைகள் மீண்டும் மீண்டும் உறுதியாக நிராகரிக்கப்படுகின்றன.

கடந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், போர் நிறுத்தத்திற்கு “எந்த வாய்ப்பும் இல்லை” என்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, இஸ்ரேல் பொதுமக்களை கொல்வது குறித்து, அதற்கு “சிவப்பு கோடுகள்” இல்லை என்று மீண்டும் வலியுறுத்தினார். மேலும், “இப்போதும் அப்படித்தான் இருக்கிறது, வான்வழித் தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதும் உண்மை, அந்த விமானத் தாக்குதல்களில் பொதுமக்கள் இறக்கிறார்கள் என்பதும் உண்மை” என்று குறிப்பிட்டார்.

வெறுக்கத்தக்க அரசியல் மோசடியாளன் வேர்மொன்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் உட்பட, முழு அரசியல் ஸ்தாபனத்தாலும் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நடந்த நிகழ்வுகள் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை தீவிரமயப்படுத்தி வருகின்றன. இது, இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு, ஏகாதிபத்திய அட்டூழியத்தின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்ரேலிய ஆட்சியின் கொலைகார நடவடிக்கைகளுக்கு, அமெரிக்கா மற்றும் நேட்டோவின் உலகளாவிய ஆதரவு, அமெரிக்கா தலைமையிலான 30 ஆண்டுகால முடிவில்லாத போரின் விரிவாக்கம் மற்றும் ஆழமாக்கல் ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியமும், நேட்டோ கூட்டணியும் 1990-91ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதை, அதன் நிகரற்ற இராணுவ வலிமையை பயன்படுத்தி, முன்னாள் காலனித்துவ உலகத்தின் மீது கட்டமைப்புக்களை மீண்டும் திணிக்க ஒரு வாய்ப்பாகக் கண்டன.

1991 இல், வளைகுடாப் போருக்கு விடையிறுக்கும் வகையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏகாதிபத்தியப் போர் மற்றும் காலனித்துவத்திற்கு எதிராக பேர்லின் தொழிலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தது. “ஏகாதிபத்திய போரையும் காலனித்துவத்தையும் எதிர்ப்போம்!” என்ற மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் அறிக்கை, ஈராக்கிற்கு எதிரான ஏகாதிபத்திய கும்பலின் நடவடிக்கைகளை விளக்கியது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பெரிய வரலாற்று மற்றும் அரசியல் பணிகளும் இப்போது அவற்றின் அப்பட்டமான வடிவத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஈராக் மீதான காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சு, மற்றும் அதன் தொழில்துறை உள்கட்டமைப்பின் மெய்நிகர் அழிவு என்பன, ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு புதிய வெடிப்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மில்லியன் கணக்கான மக்களை அடிமைப்படுத்தாமல், அழிக்காமல் முதலாளித்துவம் வாழ முடியாது.

ஈராக்கின் தற்போதைய மற்றும் நடைமுறைப் பிரிவினையானது, ஏகாதிபத்தியவாதிகளால் உலகின் ஒரு புதிய பிரிவினையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. நேற்றைய காலனிகள் மீண்டும் அடிபணிய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் சந்தர்ப்பவாத வக்காலத்து வாங்குபவர்களின் கூற்றுப்படி, கடந்த காலத்தைச் சேர்ந்த வெற்றிகளும் இணைப்புகளும் மீண்டும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

இந்தக் கருத்தை வலியுறுத்தி, 1991 இல் தொழிலாளர் கழகத்தின் (அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) சிறப்பு தேசிய காங்கிரஸுக்கு வழங்கிய ஒரு அறிக்கையில், அப்போதைய தொழிலாளர் கழகத்தின் தேசிய செயலாளரான டேவிட் நோர்த் வளைகுடாப் போரைப் பற்றிய கலந்துரையாடலில் பின்வருமாறு கூறினார் :

வளைகுடாப் போர், உலகின் ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபங்கீட்டுக்கான தொடக்கத்தைக் குறிக்கிறது. 2ம் உலக யுத்தத்துக்கு பிந்தைய காலத்தின் முடிவு என்பது, பின்காலனித்துவ சகாப்தத்தின் முடிவையும் குறிக்கிறது. “சோசலிசத்தின் தோல்வி” என்று பிரகடனம் செய்வதன் மூலம், ஏகாதிபத்திய முதலாளித்துவம், வார்த்தைகளில் இல்லாவிட்டாலும், “சுதந்திரத்தின் தோல்வி” என்று செயல்களிலும் பிரகடனப்படுத்துகிறது.

ஈராக்கிற்கு எதிரான முதல் போரைத் தொடர்ந்து ஏகாதிபத்திய வன்முறை வெடித்தது. 1990கள் முழுவதும், ஏகாதிபத்திய சக்திகள் யூகோஸ்லாவியாவை பகுதிகளாக பிரிப்பதற்கு வடிவமைத்தன, 1998 செர்பியாவிற்கு எதிரான குண்டுவீச்சு தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. பின்னர் அமெரிக்கா செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத்” துவக்கியது, இதில் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மற்றும் ஈராக் மீதான இரண்டாவது போர் ஆகியவை அடங்கும், இதன் விளைவாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா மத்திய கிழக்கு முழுவதும் ஒரு இடைவிடாத படுகொலை, சித்திரவதை மற்றும் கடத்தல் நடவடிக்கையை ஆரம்பித்தது, அதன் மிகப் பயங்கரமான வெளிப்பாடு ஈராக் அபு கிரைப் சிறையில் கைதிகள் மீதான சித்திரவதைகளாகும். இதைத் தொடர்ந்து, ஒபாமா நிர்வாகத்தின் கீழ், லிபியாவிற்கு எதிரான போர் மற்றும் சிரியாவில் சிஐஏ ஆதரவுடனான உள்நாட்டுப் போர் ஆகியன கட்டவிழ்த்துவிடப்பட்டன.

காஸா மக்களுக்கு எதிரான தங்கள் சொந்தக் குற்றங்களை நியாயப்படுத்துவதில், இஸ்ரேலிய அதிகாரிகள் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்” அமெரிக்கா அமைத்த முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டினர். கடந்த கால போர்க்குற்றங்கள் நிகழ்கால போர்க்குற்றங்களை நியாயப்படுத்த, அவை பயன்படுத்தப்படுகின்றன.

அதேவேளை, இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கான வெளிப்படையான ஆதரவு என்பது, எதிர்காலத்திற்கு முன்னுதாரணமாக அமைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் ஈரான் மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகளின் பின்னணியில், ஏகாதிபத்திய சக்திகள் தாங்கள் கடக்காத “சிவப்பு கோடுகள்” இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன.

வெளிநாட்டில் ஆக்கிரமிப்பு போர் அதே நேரத்தில் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர்.

1916 ஆம் ஆண்டு, ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் என்ற அவரது படைப்பில், லெனின், “ஏகாதிபத்தியம் அனைத்து வகையிலும் பிற்போக்கானது” என்று வரையறை செய்தார். மேலும், “உள்நாட்டு அரசியலைப் போலவே போரிலும், நிதி மூலதனம் ஆதிக்கத்தை விரும்புகிறது, சுதந்திரத்திற்காக அல்ல. …ஜனநாயக-குடியரசு மற்றும் பிற்போக்கு-மன்னராட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு இடையே உள்ள வேறுபாடு துல்லியமாக அழிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவை இரண்டும் உயிருடன் அழுகி நாற்றம் கண்டுள்ளன” என்று லெனின் விளக்கினார்.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையானது, அரச அடக்குமுறை மற்றும் தணிக்கையுடன் இணைந்துகொண்டு வெளிப்படையான திருப்பத்தை அடைந்துள்ளது. கடந்த மாதம், இஸ்ரேலின் நடவடிக்கைகளை “யூத எதிர்ப்பு” மற்றும் “பயங்கரவாதிகளுடன் ஒற்றுமை” என்று கூறுவதை எதிர்க்கும் மாணவர்களை குற்றம் சாட்டும் தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸ் அமோகமாக நிறைவேற்றியது. புளோரிடாவில், பாலஸ்தீனிய மாணவர் குழுக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் கொலம்பியா பல்கலைக்கழகம், வெள்ளிக்கிழமை பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் மற்றும் அமைதிக்கான யூத குரல் ஆகிய இரண்டு மாணவர் குழுக்களும் கலைக்கப்படும் என்றும், வளாகத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலிருந்து தடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் அனைத்தும் போராட்டங்களை தடை செய்ய முயற்சித்துள்ளன மற்றும் பாரிய கைதுகளை மேற்கொண்டன. இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக கருத்து தெரிவித்த முஸ்லிம் குடியேற்றவாசிகளை கைது செய்து வெளியேற்றுவோம் என்று ஜேர்மனியின் துணை அதிபர் ரொபர்ட் ஹேபெக் மிரட்டல் விடுத்தார்.

இந்த நடவடிக்கைகள், இஸ்ரேலின் குற்றங்கள் மீதான எதிர்ப்புகளை மட்டும் அல்ல, ஆனால் ஆளும் உயரடுக்கின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் குறிவைக்கிறது. வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தை எதிர்கொண்டு, ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் வர்க்கங்கள் போர் மற்றும் உள்நாட்டு அடக்குமுறைக்கு திரும்புகின்றன.

போரின் வெடிப்பானது, இனப்படுகொலை மற்றும் அரசியல் அடக்குமுறை ஆகியவற்றின் ஒரு பிறழ்ச்சி அல்ல. லெனின் குறிப்பிட்டது போல், ஏகாதிபத்தியம் என்பது ஒரு வெறும் கொள்கை அல்ல. மாறாக, முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டமாகும். எனவே, ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பு என்பது ஒரு புரட்சிகரமான கேள்வியாகும்.

சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வளர்ச்சியடைந்து வரும் போராட்டங்களுடன் போருக்கு எதிரான போராட்டத்தை இணைத்து, தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதற்கு மாறாக, இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பான முதலாளித்துவ அரசாங்கங்களிடம் முறையீடு செய்வது பயனற்ற நடவடிக்கையாகும்.

இந்த போராட்டங்களின் தர்க்கமானது, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி, முதலாளித்துவ தன்னலக்குழுக்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளை கையகப்படுத்தி, உலக அளவில் பொருளாதார வாழ்க்கையை சோசலிச மறுசீரமைப்பு செய்வது ஆகும்.

Loading