ஜேர்மனியின் பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டுதல்கள்: நாஜிக்களைப் போல - "போருக்குத் தயார்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பதினைந்து நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) ஜேர்மனி மீண்டும் “போருக்குத் தயாராக” மற்றும் “தற்காப்புத் திறன் கொண்டதாக” மாற வேண்டும் என்றும், ஜேர்மனிய இராணுவம் (ஆயுதப்படைகள்- Bundeswehr) மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் அதற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

ஒட்டுமொத்த சமூகத்தின் விரிவான மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலின் குறிக்கோள், வெற்று ஆரவார வெளிப்பாடு மட்டுமல்லாமல் நாஜிக்களின் கொள்கைகளுடன் கணிசமாக இணைக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னும், நாஜிக்கள் ஜேர்மன் மக்களுக்கு “போருக்குத் தயார்நிலை” மற்றும் “தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன்” ஆகியவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

பிரச்சார மந்திரி ஜோசப் கோயபல்ஸின் தலையங்கத்துடன் நாஜி வாராந்திர செய்தித்தாள் பேரரசு (“Das Reich”)

ஜூலை 9, 1944 அன்று, வெர்மாக்ட்டின் (ஹிட்லரின் ஆயுதப்படைகள்) தோல்வி ஏற்கனவே தடுக்க முடியாத நிலையில் இருந்தபோது, நாஜி வாராந்திர செய்தித்தாளான பேரரசு (“Das Reich”), “முன்னெப்போதையும் விட போருக்கு மிகவும் தகுதி பெற்றுள்ளது” என்ற தலைப்பை வெளியிட்டது. பிரச்சார மந்திரி ஜோசப் கோயபல்ஸால் எழுதப்பட்ட தலையங்கம், ஜேர்மனியின் “போர்-தயார்நிலையை” மேற்கோள்காட்டி, “தேசத்தின்” அனைத்து சக்திகளும் “வெற்றிக்காக” அணிதிரட்டப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

ஜேர்மன் ஆளும் வர்க்கம் இன்று மீண்டும் இந்த இலக்கை பின்பற்றி வருகிறது. வியாழனன்று, பிஸ்டோரியஸ் மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) இன்ஸ்பெக்டர் ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர் ஆகியோர் 2023 பாதுகாப்பு கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டனர், இது முழுப் போருக்கான ஒரு வரைபடம் என்று மட்டுமே விவரிக்கப்பட முடியும். ஜூன் மாதம் வெளியிடப்பட்ட தேசிய பாதுகாப்பு மூலோபாயம் ஏற்கனவே இந்தத் திசையில் நகர்ந்து கொண்டிருந்தது.

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு நோக்கங்கள் என்று விவரிக்கப்படுவதைப் பின்தொடர்வதில் ஜேர்மன் இராணுவத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டினதும் பரந்த உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்ற எதிர்பார்ப்புடன் சமூகம் மீண்டும் முற்றிலும் போரை நோக்கியே உள்ளது. பிஸ்டோரியஸ் மற்றும் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் (SPD) ஆகியோர் வெள்ளியன்று பேர்லினில் ஜேர்மன் இராணுவ மாநாட்டில் மேலும் போர்-சார்பு உரைகளுடன் அடிக்கோடிட்டுக் காட்டிய 35 பக்க ஆவணத்தின் முக்கிய செய்தி இதுதான்.

“நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்கான நமது திறனுக்கு போருக்குத் தயாராக இருக்கும் ஒரு ஜேர்மனிய இராணுவம் தேவைப்படுகிறது” என்று ஆய்வறிக்கையின் முதல் பகுதியே கூறுகிறது. இதன் பொருள் “அதன் பணியாளர்களும் உபகரணங்களும் அதன் கோரும் நோக்கங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.” இதற்கான அளவுகோல் “அதிக தீவிரம் கொண்ட போரில் வெற்றிபெறும் ஆர்வத்துடன் எல்லா நேரங்களிலும் போராடத் தயாராக இருப்பது” என்பதாகும். “குறைந்தபட்சம் சமமான எதிராளியுடனான” மோதலில் நாம் வெற்றி பெற விரும்பவில்லை என்று ஆவணம் அறிவிக்கிறது.

மற்றொரு முக்கிய நோக்கம்: “நடவடிக்கைக்கான ஒரு பெரியளவு போர்-தயார்நிலையாகும்.” ஜேர்மனிக்கு “ஜேர்மன் மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் தைரியமாக பாதுகாக்கும் உறுதி கொண்ட, உயிருக்கும் உடலுக்கும் உள்ள ஆபத்தை நனவுடன் ஏற்றுக்கொள்ளும்” சிப்பாய்கள் தேவையாகும்.

இந்த அறிக்கைகள் ஒரு எச்சரிக்கையாகும். இரண்டாம் உலகப் போரின் போது, ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் ஐரோப்பாவை இடிபாடுகளாகவும் சாம்பலாகவும் ஆக்கியதுடன், அழித்தொழிப்புப் போர் மற்றும் கூட்டு இனப்படுகொலை ஆகியவற்றுடன் மனித வரலாற்றில் மிக மோசமான குற்றங்களைச் செய்தது. அப்போதிருந்து, போர், வெற்றி மற்றும் போர்க்களத்தில் இறக்கும் விருப்பம் பற்றி இவ்வளவு வெளிப்படையாக பேச அது துணிந்ததில்லை. இப்பொழுது அது ஜேர்மனியை முன்னணி ஐரோப்பிய இராணுவ சக்தியாக மீண்டும் கட்டியெழுப்பவும், ஐரோப்பாவிலேயே ஒரு பெரிய போரை தொடுக்கும் நிலையில் வைக்கவும் உறுதிபூண்டுள்ளது.

“ஐரோப்பாவில் போர் மீண்டும் வந்துவிட்டது. ஜேர்மனியும் அதன் கூட்டணிகளும் மீண்டும் ஒரு இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும்” என்று ஆவணத்தின் முதல் பத்தி கூறுகிறது. இந்தத் “திருப்புமுனை” “அடிப்படையில் ஜேர்மனி மற்றும் இராணுவத்தின் பாத்திரத்தை மாற்றுகிறது. ஐரோப்பாவின் மையத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான நாடு” என்ற முறையில், ஜேர்மனி ஒரு “பொறுப்பை” கொண்டுள்ளது மற்றும் “ஐரோப்பாவில் தடுப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பின் முதுகெலும்பாக இருக்க வேண்டும்.”

அணு ஆயுத சக்தியான ரஷ்யாவை முக்கிய எதிரியாக இந்த ஆய்வறிக்கை அடையாளம் காட்டுகிறது. “சர்வதேச சட்டத்தை மீறி உக்ரேனுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை” தொடர்ந்து, ரஷ்ய கூட்டமைப்பு “அடிப்படை உள்நாட்டு மாற்றம் இல்லாமல் யூரோ-அட்லாண்டிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய நிரந்தர அச்சுறுத்தலாக உள்ளது.”

இது யதார்த்தத்தை தலைகீழாக மாற்றுகிறது. உண்மையில், நேட்டோ தனது ஆக்கிரமிப்பின் மூலம் ரஷ்ய படையெடுப்பை வேண்டுமென்றே தூண்டியது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் இப்போது யுத்தத்தை அதன் நீண்டகால மீள்ஆயுதமயமாக்கல் திட்டங்களை நனவாக்கவும், அதன் வரலாற்றுக் குற்றங்கள் இருந்தபோதிலும், கிழக்கை நோக்கி இராணுவரீதியாக தன்னை திருப்பிக் கொள்ளவும் பயன்படுத்துகிறது. வழிகாட்டுதல் கொள்கைகள் “லித்துவேனியாவில் ஒரு போர் படையணியின் மறுசீரமைப்பை” “புதிய சகாப்தத்தின் கலங்கரை விளக்கத் திட்டம்” என்று விவரிக்கின்றன.

ஜேர்மன் இராணுவ மாநாட்டில் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பேசுகிறார் [Photo by Bundesregierung / Kugler]

ஜேர்மன் இராணுவ மாநாட்டில் ஷோல்ஸ் மேலும் கூறினார்: “இதர பால்டிக் நாடுகளிலும், போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியாவிலும் வான்வெளி பாதுகாப்பிற்கு நாங்கள் பங்களித்து வருகிறோம், தரையில் எங்கள் இருப்பை வலுப்படுத்துகிறோம் மற்றும் கடலில் கூட்டணியின் தடுப்பு திறனையும் வலுப்படுத்துகிறோம்.” இவைகள் அனைத்தும் “ஆரம்பம் மட்டுமே; ஏனெனில் நேட்டோவின் பாதுகாப்புத் திட்டமிடலை நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம்,” “நாம் இன்னும் அதிகமாகச் செய்ய அழைக்கப்படுவோம். ஐரோப்பாவில் நமது புவியியல் நிலை என்பது ஜேர்மனி கூட்டணியின் மைய குவியமாக செயல்படுகிறது என்பதாகும்.”

“நேட்டோ பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்” என்பது ரஷ்யாவுக்கு எதிரான போருக்குக் குறைந்ததல்ல. வில்னியஸில் நடந்த கடந்த நேட்டோ உச்சிமாநாட்டில், கூட்டணி 4,000ம் பக்க போர்த் திட்டத்தை ஏற்றுக்கொண்டது, இது எந்த துருப்புக்கள் எங்கு நிறுத்தப்படும், எந்த ஆயுதங்கள் அவர்களிடம் இருக்கும் என்பதை விரிவாக வரையறுக்கிறது.

மற்றவற்றுடன், நேட்டோ விரைவு எதிர்வினைப் படை 40,000 லிருந்து 300,000 சிப்பாய்களாக அதிகரிக்கப்படும். குறிப்பாக, நேட்டோ திட்டம் “எங்கள் 360 டிகிரி அணுகுமுறைக்கு ஏற்ப அனைத்து கூட்டணி நாடுகளையும் சரியான நேரத்தில் வலுப்படுத்துவதை உறுதி செய்வதை” நோக்கமாகக் கொண்டுள்ளது. “இந்த திட்டங்களுக்கு முழுமையாக நிதியளிப்பதற்கும், அதிக தீவிரம் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகும் பொருட்டு தவறாமல் பயிற்சி செய்வதற்கும்” ஒரு உறுதிப்பாடு இருந்தது.

பாதுகாப்பு கொள்கை வழிகாட்டுதல்கள் அணு ஆயுத விரிவாக்கம் வரை நீட்டிக்கப்படுகின்றன. “தேசிய மற்றும் கூட்டணி பாதுகாப்புக்கு நம்பகமான அணுசக்தி தடுப்பில் பங்கேற்பு தொடர்ந்து தேவைப்படுகிறது” என்று “பாதுகாப்பு கொள்கையின் மூலோபாய முன்னுரிமைகள்” என்ற பிரிவில் அது கூறுகிறது. அணுசக்தி பகிர்வின் மூலம், ஜேர்மனி “கூட்டணிக்குள் அணுஆயுத தடுப்புக்கு அதன் பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறது.”

ஜேர்மனியின் பெரும் சக்தி அபிலாஷைகள் ஐரோப்பா மற்றும் ரஷ்யாவுடன் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. “பாதுகாப்புக் கொள்கை மதிப்பீடு” என்ற பிரிவில், அது பின்வருமாறு கூறுகிறது: “ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து பாதுகாப்பில் எங்கள் கவனம் இருந்தாலும், ஜேர்மனி ஒரே நேரத்தில், பரஸ்பரம் வலுப்படுத்தும் பாதுகாப்புக் கொள்கை சவால்களை எதிர்கொள்கிறது. நெருக்கடிகள், மோதல்கள் மற்றும் பிராந்திய பதட்டங்கள் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆர்க்டிக் மற்றும் இந்தோ-பசிபிக்கில் நமது உடனடி பாதுகாப்பு சூழலை பாதிக்கின்றன.” சீனா “ஒரே நேரத்தில் ஒரு பங்காளி, போட்டியாளர் மற்றும் ஒழுங்குரீதியான போட்டியாளராக இருந்தது.” மேலும் “இணையவெளி, தகவல் மற்றும் விண்வெளி” ஆகியவையும் “மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்”.

உலகெங்கிலும் இராணுவரீதியாக தலையீடு செய்வதற்கான ஜேர்மனிய இராணுவத்தின் கூற்றை இந்த அறிக்கை வெளிப்படையாக வரையறுக்கிறது. ஜேர்மன் பங்களிப்புகளின் “அளவுகோல்” “இராணுவ ஆலோசனைக் குழுக்கள் மற்றும் நடமாடும் பயிற்சிக் குழுக்களை நிலைநிறுத்துவதில் இருந்து விரிவான திறன் வாய்ந்த படைப்பிரிவுகளை நிலைநிறுத்துவது வரை” உள்ளது.

இது வெளிப்படையாக பொருளாதார மற்றும் பூகோள மூலோபாய நலன்களை உள்ளடக்கியது. “பொருளாதார ரீதியாக உலகளவில் வலையமைப்பாக்கப்பட்ட வர்த்தக நாடாக ஜேர்மனிக்கு ... உலகின் பிற பிராந்தியங்களில் ஸ்திரமின்மை மற்றும் கடல் பாதைகளின் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்கள் பாதுகாப்பு மற்றும் செழிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.” ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கை மீண்டும் “பூகோள மூலோபாய வெளிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும்.”

தற்போதைய வழிகாட்டுதல்கள் முந்தைய மூலோபாய ஆவணங்களிலிருந்து வேறுபடுகின்றன, அவைகள் ஜேர்மனி உட்பட-போர் திட்டங்களின் விளைவுகள் குறித்து மிகவும் குறிப்பிட்டவையாகும். அவர்கள் ஒரு போர் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் முழுமையான இராணுவமயமாக்கலுக்கும் அழைப்பு விடுக்கிறார்கள். “வலுவான மற்றும் பாதுகாப்பான பாதுகாப்புத் தொழில்துறை திறனை விரிவுபடுத்துவது, நெருக்கடி மற்றும் போர்க் காலங்களில் இராணுவத்தின் விரைவான, விரிவான மற்றும் நிலையான விநியோகத்திற்கு ஒரு முக்கிய அங்கமாகும்”.

“வெர்ஹாஃப்டிகிட்” (Wehrhaftigkeit - “பாதுகாப்புத் திறன்”) என்ற சொல் “பாதுகாப்பு தொடர்பான அனைத்து பகுதிகளிலும் மற்றும் ஜேர்மன் சமூகத்திலும் நீண்டகால வேண்டுகோளுடன் முழு ஜேர்மனிய இராணுவத்தின் பாதுகாப்பு தயார்நிலை குறித்த உள் அணுகுமுறையை” விவரிக்கிறது. ரிசர்வ் படை உட்பட ஜேர்மன் இராணுவம் “சமூகத்தின் மையத்தில்” உள்ளது மற்றும் “மக்கள் இருக்கும் இடத்தில் உறுதியானதாக” இருக்க வேண்டும். “ஜேர்மனியின் பாதுகாப்பிற்கான அரண்காப்பு” என்பது “ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு பணி” மற்றும் “சமூகத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சுறுசுறுப்பான முன்னாள் படையினர்கள் மற்றும் தியாகிகளின் கலாச்சாரம் ... அது ஒரு நிலையான கடமையாகும்.”

இந்தப் போர் பைத்தியக்காரத்தனத்திற்கு உழைக்கும் மக்கள் விலை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை: பிஸ்டோரியஸின் கூற்றுப்படி, இது மீண்டும் ஜேர்மனி வழியாகவே பாயக்கூடும்; மீள்ஆயுதமயமாக்கலுக்கு நிதியளிக்க சமூக மற்றும் ஊதிய வெட்டுக்கள் மூலம், மற்றும் இதற்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்காக ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்களின் வடிவத்திலுமாக இருக்கும்.

“செயற்பாட்டு தயார்நிலைக்கு வளங்கள் தேவை” மற்றும் “பாதுகாப்புக் கொள்கை” “எதிர்காலத்தில் கடினமான முன்னுரிமை இல்லாமல் நிர்வகிக்க முடியாது” என்று ஆய்வறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில், “ஜேர்மனிய இராணுவத்தின் செயல்பாட்டு தயார்நிலை குறித்த கோரிக்கை ... எந்தவொரு தாமதத்தையும் பொறுத்துக்கொள்ளாது” மற்றும் “நேரத்தை ஒரு முக்கியமான காரணியாக” ஆக்குகிறது.

ஜேர்மனிய ஆளும் வர்க்கம் மீண்டும் போர் தொடுக்கவும் இனப்படுகொலை மற்றும் பிற குற்றங்களைச் செய்யவும் காத்திருக்க முடியாது. “நல்ல வேலையைத் தொடருங்கள். சிக்கலான செயல்முறைகளைக் கூட தைரியமாக அணுகுங்கள், விஷயங்களைச் செய்யுங்கள்,” என்று பேர்லினில் கூடியிருந்த ஜேர்மன் இராணுவத் தலைமைக்கு ஷோல்ஸ் அழைப்பு விடுத்தார். “புதிய சகாப்தத்தைக் கையாள்வது” என்பது “தற்போதைய போரிலிருந்து [உக்ரைன் மற்றும் இஸ்ரேலில்] படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது மற்றும் அதற்கேற்ப எங்கள் தளவாடங்கள் மற்றும் கொள்முதலை மாற்றியமைப்பது ஆகியவை அடங்கும்.”

காஸாவில், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை —தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி முதல் இடது கட்சி வரை அனைத்து பாராளுமன்ற கட்சிகளும் ஆதரிக்கின்றன. பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டுதல்கள் இந்த குற்றவியல் கொள்கையை மிகப் பெரிய அளவில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இதை அனுமதிக்காது மற்றும் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான அதன் போராட்டத்தை விரிவுபடுத்தும். காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக உலகளாவிய வெகுஜன போராட்டங்கள் இதற்கு அடிப்படையாகும். அவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும், தொழிலாள வர்க்கத்தை நோக்கி திசைதிருப்பப்பட வேண்டும் மற்றும் ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

Loading