மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உறவுகளை 'ஸ்திரப்படுத்தும்' முகமூடிக்குப் பின்னால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உச்சிமாநாடு, சீனாவுக்கு எதிரான போர் போன்ற நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை சமிக்ஞை செய்திருப்பதுடன், அதன் பொருளாதாரத்தை முடக்கவும், இராணுவ ரீதியாக அதை சுற்றி வளைக்கவும் முயன்றுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலைக்கு தனது ஆதரவை முடுக்கிவிட்ட நிலையில், அமெரிக்க பூகோள மேலாதிக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தல் என்று வெள்ளை மாளிகையும் பென்டகனும் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ள சீன மக்களுக்கு எதிராக இதேபோன்ற இராணுவக் காட்டுமிராண்டித்தனத்தை திணிக்க தயாராக இருப்பதாக பைடென் நிர்வாகம் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது.
சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) வருடாந்திர கூட்டத்தின் போது பைடெனும் ஜின்பிங்கும் சந்தித்தனர். நான்கு மணி நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில், 'விபத்துக்கள்' மற்றும் 'தவறான புரிதல்களைத்' தவிர்ப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவத்திலிருந்து இராணுவ தொடர்புகளை மீண்டும் தொடங்க தானும் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டதாக பைடன் கூறினார்.
ஆனால் ஜோ பைடென் கடந்த ஜூன் மாதம் அவர் தெரிவித்த கருத்துக்களை இரட்டிப்பாக்கி, ஜி ஜின்பிங்கை 'சர்வாதிகாரி' என்று முத்திரை குத்தினார். இந்தக் கருத்துக்கள், பெருகிவரும் போர் அபாயத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இராணுவ பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான சீனாவின் விருப்பத்தை உறுதிப்படுத்திய ஜி ஜின்பிங், 'தைவானுக்கு ஆயுதம் கொடுப்பதை நிறுத்துமாறு' பைடெனை எச்சரித்தார். அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டுத் தடைகள் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை கடுமையாக சேதப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
ஒரு வருடத்தில் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் நேருக்கு நேர் சந்திப்புக்கு முன்னதாக, பைடென் நிர்வாகம் அதன் அச்சுறுத்தல்கள், கோரிக்கைகள், இறுதி எச்சரிக்கைகள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் சீனாவுக்கு எதிரான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளைத் தூண்டியது.
இவைகள் உயர்தொழில்நுட்ப தொழில்துறை வளர்ச்சிக்கான சீனாவின் அணுகலைத் துண்டிப்பதற்கும், போர் உற்பத்திக்கு இன்றியமையாத பல முக்கியமான கனிமங்களை முறைப்படுத்துவதில் அதன் உலகளாவிய ஏகபோகத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பெருகிவரும் அமெரிக்க உந்துதலைக் குறிக்கின்றன.
மக்கள் தொடர்பு நோக்கங்களுக்காக, ஒரு பேரழிவு மோதலைத் தவிர்க்கிறோம் என்ற பொய்யான கொடியின் கீழ் உச்சிமாநாடு நடத்தப்பட்டது. பைடெனும், ஜி ஜின்பிங்கும் தங்கள் தொடக்க பொதுக் கருத்துக்களில், பேரழிவுகரமான போரின் ஆபத்து குறித்து எச்சரித்தனர்.
இது குறித்து ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா, அமெரிக்கா போன்ற இரு பெரிய நாடுகளுக்கு, ஒருவருக்கொருவர் பின்வாங்குவது ஒரு விருப்பமல்ல. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை மறுவடிவமைப்பது யதார்த்தமற்றது, மேலும் மோதல் மற்றும் எதிர்த்து நிற்பது இரு தரப்பினருக்கும் தாங்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பைடன் கூறியதாவது: போட்டியானது மோதலாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் அமெரிக்கா விரும்புகிறது, இதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம் ... எங்கள் இருவருக்கும் உலகம் அதைத்தான் விரும்புகிறது என்று நான் நம்புகிறேன்.
பைடனின் கணக்கீடுகளில் குறைந்தபட்சம் கருத்தில் கொள்ளப்படுவது சீனாவுடனான ஒரு அணுஆயுதப் போராக இருக்கப்போவதைப் பற்றி அமெரிக்க பொதுமக்களின் அபரிமிதமான எதிர்ப்பைக் காட்டுகிறது. செப்டம்பரில் நடத்தப்பட்ட ஒரு அமெரிக்க கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் 13 சதவீதம் பேர் மட்டுமே சீனாவுடன் ஒரு ஆக்ரோஷமான அணுகுமுறையை விரும்புவதாகவும், வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே மோதல் போக்கை விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய போர்க் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பாரிய அணிதிரள்வுகள், பாலஸ்தீனியர்கள் மீது திணிக்கப்படும் பயங்கரத்திற்கு விடையிறுப்பாக இந்தப் போர்-எதிர்ப்பு உணர்வுகள் ஆழமடைந்துள்ளன என்பதைக் குறிக்கின்றன.
இது அமெரிக்க ஆளும் வர்க்கம் உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடன் செய்ததைப் போலவே, மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் 1898 இல் பிலிப்பைன்ஸ் மீது படையெடுத்ததில் இருந்து ஒவ்வொரு போரிலும் செய்ததைப் போலவே, இரண்டாம் உலகப் போருக்கு முன்னோட்டமாக ஜப்பானுக்கு எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது உட்பட, எந்தவொரு மோதலுக்கும் பெய்ஜிங்கை குற்றம் சாட்டுவது அரசியல் ரீதியாக இன்றியமையாததாக ஆக்குகிறது.
இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டில் பைடெனும் ஜி ஜின்பிங்கும் கடைசியாக சந்தித்ததிலிருந்து அமெரிக்க ஆளும் வர்க்கம் கடந்த ஆண்டில் சீனாவுக்கு எதிரான அதன் தாக்குதல் தொடுப்பதைத் தீவிரப்படுத்தியுள்ளது. சாராம்சத்தில், போர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு, ட்ரம்ப் நிர்வாகத்தால் திணிக்கப்பட்ட ஆண்டுக்கு 370 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன ஏற்றுமதிகள் மீதான தண்டனைக்குரிய வரிகளை விதிப்பதற்கு மேலாக, சீன பொருளாதாரத்தின் கழுத்தை நெரிப்பதற்கான அதன் முயற்சிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. பைடெனின் வெள்ளை மாளிகையானது, சீனாவில் முதலீடு செய்வதற்கு புதிய வரம்புகளை விதித்தது மற்றும் புதுப்பித்த செமிகண்டக்டர் சிப்ஸ் மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை மற்றும் இராணுவ உற்பத்திக்கு அவசியமான உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. இதன் விளைவாக, 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், சீனாவின் சிப் (chip) இறக்குமதி முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் குறைந்துள்ளது. சீனாவுக்கு சிப்களை விநியோகம் செய்யும் மற்றய நாடுகளையும் அச்சுறுத்தும் சமீபத்திய கட்டுப்பாடுகள், உச்சிமாநாட்டிற்கு ஒரு நாள் கழித்து நாளை முதல் அமுலுக்கு வருகின்றன.
பைடென்-ஜின்பிங் சந்திப்புக்கு சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவானது தென் கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுடனும் புதிய இராணுவ கூட்டாண்மைகளை வெளியிட்டது. இது அவர்களை சீனாவின் மூலோபாய சுற்றுவட்டத்திற்கு நெருக்கமாக ஈர்த்தது, பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இதேபோன்ற சமீபத்திய அமெரிக்க உடன்படிக்கைகளான Quad மற்றும் AUKUS கூட்டணிகள் உட்பட இவற்றுடன் சேர்ந்துகொண்டுள்ளன.
தைவான் உட்பட சீனாவானது ஒரே அதிகாரமாக, சீன அரசாங்கத்தை அங்கீகரித்த ஐந்து தசாப்தகால 'ஒரே சீனா' கொள்கையை மேலும் தலைகீழாக மாற்றி, அமெரிக்கா தைவானுக்கு ஆயுதம் வழங்குகிறது. சீனாவின் கடுமையான எதிர்ப்புகளை மீறி, அமெரிக்க இராணுவ தளவாடங்களை வாங்குவதற்காக தீவின் ஆட்சிக்கு 80 மில்லியன் டாலர் மானியத்தில் பைடென் சமீபத்தில் கையெழுத்திட்டார். தைவான் ஏற்கனவே 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்க இராணுவ தளவாடங்களை கொள்வனவு செய்யவுள்ளது, ஆனால், இந்த சமீபத்திய மானியம் வேறுபட்டது. இது கடன் அல்ல, இது ஒரு ஆக்ரோஷமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. முதல் முறையாக, ஒரு அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒரு இடத்திற்கு ஆயுதங்களை அனுப்புகிறது. ஜூலை மாதம், தைவானுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ சேவைகள் மற்றும் உபகரணங்களை விற்க ஒப்புதல் அளிக்க பைடென் விருப்புரிமை அதிகாரங்களைப் பயன்படுத்தினார், மேலும் அத்தகைய மானியங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 10 பில்லியன் டாலர் வரை இருக்கலாம். 1970 களுக்குப் பிறகு முதல் முறையாக இரண்டு பட்டாலியன் தரைப்படைகளை பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப தைவான் தயாராகி வருகிறது.
வளங்கள் நிறைந்த ரஷ்யாவை எதிர்த்துப் போரிடவும் மற்றும் மூலோபாய மத்திய கிழக்கின் மீதான கட்டுப்பாட்டிற்கான ஒரு பரந்த போருக்கு தயாரிப்பு செய்வதற்காக இஸ்ரேலுக்குள்ளும் அமெரிக்கா ஆயுதங்களை கொட்டும் நிலைமைகளின் கீழ், பைடென் நிர்வாகம் பெய்ஜிங்கை ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்றும், காஸாவில் படுகொலையை எதிர்க்க ஈரான் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதை உறுதி செய்யவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் 'தலையீடு' குறித்தும், மின்மயமாக்கல் மற்றும் போருக்கு இன்றியமையாத கிராஃபைட் மற்றும் லித்தியம் போன்ற மூலோபாய கனிமங்களின் உலகளாவிய செயலாக்கத்தில் பெய்ஜிங் வேண்டுமென்றே ஏகபோகம் செய்வதாகவும் பைடென் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் சீனாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தூண்டுவதற்கான சாக்குப்போக்குகளை வழங்கக்கூடும்.
'வலுக்கட்டாயமாக நடப்பதாகவும்' மற்றும் 'அச்சுறுத்தலாக' இருப்பதாகவும் சீனாவை சித்தரிப்பதற்காக, சமீபத்திய பென்டகன் அறிக்கையானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க, நேச நாடுகள் மற்றும் கூட்டணி கப்பல்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பற்ற இடைமறிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறியது. இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை சந்தேகத்திற்கு இடமின்றி மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வான்வெளி மற்றும் சீன பெருநிலப்பகுதிக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில் நடந்திருந்தன, அங்கு அமெரிக்கா கடந்த தசாப்தமாக அதன் இராணுவ பிரசன்னம் மற்றும் ஆத்திரமூட்டும் இராணுவ 'கப்பல் போக்குவரத்து சுதந்திரம்' நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.
பாலியில் நடந்த கடைசி சந்திப்பில், மோசமடைந்து வரும் சீன-அமெரிக்க உறவுக்கு ஒரு 'தளத்தை' அமைக்க பைடெனும் ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர். மாறாக, அமெரிக்கா மோதலை மட்டுமே தீவிரப்படுத்தியது. பாலி உச்சிமாநாட்டிற்கு மூன்று மாதங்களுக்குள், கடந்த பெப்ரவரியில் சீன வான்வழி பலூன்களை ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, சில வாரங்களுக்குள், சீன தொழில்நுட்பத்தின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டன.
ஜியும் சீனாவிலுள்ள முதலாளித்துவ ஆட்சியும் இந்த போர் உந்துதலை முழுமையாக அறிந்துள்ளன. அமெரிக்கா 'எங்களுக்கு எதிராக விரிவான கட்டுப்பாடு, சுற்றிவளைப்பு மற்றும் அடக்குமுறையை' பின்பற்றி வருகிறது என்று மார்ச் உரையில் ஜி ஜின்பிங் அறிவித்தார்.
ஆயினும்கூட, பைடென்-ஜி ஜின்பிங் சந்திப்பின் அபத்தமான ஒளிரும் படத்தை பெய்ஜிங் தீவிரமாக முன்வைக்கிறது. முக்கிய அதிகாரப்பூர்வ ஊடக தளமான சீனா டெய்லி, சீனா-அமெரிக்க உறவு 'வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டிய பின்னர் ஸ்திரப்படுத்தப்பட்டு வருகிறது' என்பதற்கான 'பிரகாசமான அறிகுறிகள்' இருப்பதாக வலியுறுத்தியது. இது சீனா-அமெரிக்க உறவுகளுக்கான ஜின்பிங்கின் 'மூன்று கொள்கைகளை' ஊக்குவித்தது— 'அமைதியான சகவாழ்வு, பரஸ்பர மரியாதை மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு' ஆகியவைகளாகும்.
உண்மையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவை, கொரியா மற்றும் வியட்நாமில் இருந்து ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா மற்றும் உக்ரேன் வரை தொடர்ச்சியான போர்களை நடத்தி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், 'இணைந்து' இருக்க அனுமதிப்பதில் சிறிதும் நோக்கம் கொண்டிருக்கவில்லை.
கூர்மையடைந்து வரும் அமெரிக்க பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தத்தின் கீழ், சீனாவின் பொருளாதாரம் ஒரு சொத்து நெருக்கடி, வீழ்ச்சியடைந்த ஏற்றுமதிகள், அதிக வேலையின்மை மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய முதலீட்டு வெளியேற்றம் ஆகியவற்றால் சிதைந்து வருகிறது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில், சீனா 1998 க்குப் பிறகு முதல் முறையாக எதிர்மறையான அந்நிய நேரடி முதலீட்டை - மைனஸ் 11.8 பில்லியன் டாலர் - பதிவு செய்துள்ளது.
ஜின்பிங்கின் அமெரிக்க பயணத்தில் அமெரிக்க மற்றும் உலகளாவிய பெருநிறுவன தலைவர்களுடன் ஒரு இரவு விருந்து உள்ளது, அவர்கள் எட்டு பேர் கொண்ட மேஜைக்கு 40,000ம் டாலர் வரை செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இலாபகரமான நிலைமைகளை உறுதி செய்வதாக உறுதியளித்து, சீனாவிலிருந்து நிறுவனங்கள் வெளியேறுவதை நிறுத்துமாறு, அது தொடர்ந்து நடக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்த போதிலும் கூட, அவர்களிடம் கெஞ்சுகிறார்.
சீனாவுடனான உறவுகளை ஸ்திரப்படுத்துவதாகக் கூறப்படும் பொய்யான முகத்திற்குப் பின்னால், பைடென்-ஜி சந்திப்பு அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை எந்த விலை கொடுத்தாவது தக்கவைத்துக் கொள்வதற்கான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அது மனிதகுலத்தை அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான மோதலை நோக்கி மூழ்கடித்து வருகிறது, அதே நேரத்தில் சாத்தியமான பேரழிவுக்கு பெய்ஜிங்கை குற்றம் சாட்ட முயற்சிக்கிறது.
