முன்னோக்கு

தெற்கு காஸாவின் வலுக்கட்டாய வெளியேற்றம்: பாலஸ்தீன இனச் சுத்திகரிப்பின் அடுத்த கட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பாலஸ்தீனியர்கள் காஸா பகுதியின் புரேஜில் உள்ள சலா அல்-தின் தெருவில் உள்ள தெற்கு காஸா பகுதிக்கு தப்பி ஓடுகிறார்கள். சனிக்கிழமை, நவம்பர் 11, 2023.

கடந்த வியாழக்கிழமை, கான் யூனிஸ் உட்பட தெற்கு காஸாவின் முக்கிய நகரங்களில் இஸ்ரேலியப் படைகள் துண்டுப் பிரசுரங்களை வீசின. தெற்கு காஸாவின் மக்கள் இடம்பெயர்வு என்பது பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக இருக்கிறது. இது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு நேரத்தில் ஒரு பகுதியாக, பாரிய வெளியேற்றங்கள், படுகொலைகள் மற்றும் பட்டினி ஆகியவற்றின் மூலம் காஸா மக்கள்தொகையை இஸ்ரேல் குறைத்து வருகிறது.

அக்டோபர் 7 தாக்குதல்களை இஸ்ரேல் ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, பாலஸ்தீனத்தில் திட்டமிட்ட முறையில் குடியேற்றம் செய்வதற்கான ஒரு நீண்ட திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது தெளிவாகிறது. இது, வடக்கு காஸாவில் ஆரம்பித்து, இப்போது தெற்கு காஸா வரை நீட்டிக்கப்பட்டு மேற்குக் கரை வரை தொடரும்.

'காஸா நகரத்திற்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள்' என்று இஸ்ரேலிய பிரதமரின் மூத்த ஆலோசகர் மார்க் ரெகெவ் ஸ்கை நியூஸிடம் கூறினார். 'கான் யூனிஸ் ஹமாஸ் நடவடிக்கையின் மையமாகவும் இருக்கிறது. உங்கள் சொந்த பாதுகாப்பிற்காக அந்தப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் சண்டையில் சிக்குவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை' என்று அவர் தெரிவித்தார்.

'காஸா நகரத்திற்கு என்ன நடந்தது' என்பதன் மூலம், வடக்கு காஸாவில் 40 சதவீதமான வீடுகளை தரைமட்டமாக்கி, அல்லது சேதப்படுத்திய மற்றும் அதன் சுகாதார, உணவு விநியோகம் மற்றும் நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை சிதைத்து, தொடர்ச்சியான கார்பெட் குண்டுவீச்சுக்களைப் பற்றி ரெகெவ் குறிப்பிடுகிறார். காஸாவில் உள்ள அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், கோதுமை எந்த விலையிலும் கிடைக்கவில்லை. உணவு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை.

காஸாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி மக்கள் - 1.5 மில்லியன் மக்கள் - உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். சுகாதார அமைப்பின் வீழ்ச்சி காரணமாக ஐந்து நாட்களாக புதுப்பிக்கப்படாத உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 11,000 க்கும் அதிகமாக உள்ளது. அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு மத்தியில், நான்கு குழந்தைகள் உட்பட 40 நோயாளிகள் மின்சாரம் இல்லாததால் இறந்துள்ளனர்.

வரைகலை மூலம் முன்னிலைப்படுத்தப்படும் ரெகேவின் கருத்துக்களில், மூன்றில் ஒரு பகுதியில் வாழ்கின்ற பாலஸ்தீனியர்களை அங்கிருந்து வெளியேறும்படி சொல்லப்படுகிறது. பாலஸ்தீனியர்கள் வடக்கு காஸாவில் இருந்து தெற்கே இடம்பெயர வேண்டும் என்ற முந்தைய கோரிக்கையுடன் இணைந்து, நாட்டின் ஐந்தில் நான்கில் ஒரு பகுதியாவது ஒரு தடையற்ற சூனியப் பிரதேசமாக மாற்றப்படுகிறது. தெற்கு நகரமான ரஃபா மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. ஆனால், பாதுகாப்பான பகுதிகள் கூட இஸ்ரேலிய படைகளால் தொடர்ந்து குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகின்றன.

கடந்த மாதம், மெக்கோமிட் என்ற ஹீப்ரு வெளியீடானது, இஸ்ரேலிய உளவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து கசிந்த ஒரு ஆவணத்தை வெளியிட்டது. இந்த ஆவணம், 'பொதுமக்களை சினாய்க்கு வெளியேற்ற' இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தது. சினாயில், கூடார நகரங்களுக்கு வசிக்கத் தள்ளப்படும் பாலஸ்தீனியர்கள், தமது சொந்த வீடு திரும்ப முடியாது. திரைக்குப் பின்னால், பாலஸ்தீனிய மக்களை சினாய் பாலைவனத்திற்கு வெளியேற்றுவதற்கு அங்கீகாரம் வழங்குமாறு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எகிப்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

ஆனால் இன்று, இஸ்ரேலிய அரசியல்வாதிகள் இந்த திட்டங்களை இரகசியமாக அல்ல, பகிரங்கமாக விவாதித்து வருன்றனர். கடந்த வார இறுதியில், நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் உறுப்பினரான இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினரும் விவசாய அமைச்சருமான அவி டிச்சர், 'நாங்கள் இப்போது நக்பாவை காஸாவில் உருவாக்குகிறோம்' என்று குறிப்பிட்டார். அரேபிய மொழியில் 'பேரழிவு' என்று பொருள்படும் நக்பா, 1948 இல் சுமார் 700,000ம் பாலஸ்தீனிய அரேபியர்களை, அவர்களின் தாயகத்திலிருந்து பாரியளவில் வெளியேற்றியதைக் குறிக்கிறது.

பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பு என்ற நூலில், இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் இலன் பாப்பே, சியோனிச இயக்கம் இஸ்ரேலாக மாற்றும் திட்டத்தை (“டேலட் திட்டம்“) செயல்படுத்துவதற்கு, பாலஸ்தீனிய மக்களை எவ்வாறு திட்டமிட்டு வெளியற்றியது என்பதை விவரிக்கிறார். உத்தியோகபூர்வ இஸ்ரேலிய வரலாறு, பின்னர் பாலஸ்தீனிய மக்கள் 'தாமாகவே' முன்வந்து வெளியேறியதாகக் கூறுகிறது. ஆனால், இது ஒரு அப்பட்டமான பொய்யாகும்.

'உள்ளூர் பாலஸ்தீனிய போராளிகளுடனான மோதல்கள்' இன ரீதியாக சுத்திகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் கருத்தியல் பார்வையை செயல்படுத்துவதற்கான சரியான சூழலையும் சாக்குப்போக்கையும் வழங்கின. சியோனிசக் கொள்கை ஆரம்பத்தில் பிப்ரவரி 1947 இல் பாலஸ்தீனிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில் இருந்தது. மேலும், மார்ச் 1948 இல், ஒட்டுமொத்த நாட்டையும் இனரீதியாக சுத்தப்படுத்தும் ஒரு முயற்சியாக மாற்றப்பட்டது' என்று பாப்பே எழுதுகிறார்.

இந்த திட்டம் பல தசாப்தங்களாக தொடர்கிறது என்று பாப்பே விளக்கினார். 'இயன்றவரை பாலஸ்தீனத்தை சில பாலஸ்தீனியர்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாக எப்பொழுதும் உள்ளது' என்று அவர் 2004 இல் கூறினார். இந்தத் திட்டம்தான் இப்போது அமுல்படுத்தப்படுகிறது.

பாலஸ்தீனியர்களை மீண்டும் 'தாமாகவே' முன்வந்து வெளியேற்ற இஸ்ரேலிய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் செவ்வாயன்று, 'காஸாவிலிருந்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அரேபியர்களை தன்னார்வமாகக் குடியேற்ற' அழைப்பு விடுத்தார். இது 'நல்ல மனிதாபிமான தீர்வு' ஆகும் என்று குறிப்பிட்ட அவர், 'உண்மையில் அவர்களின் நலன்களை விரும்பும் உலக நாடுகளால் அகதிகளை வரவேற்பது… யூதர்கள் மற்றும் அரேபியர்களின் துன்பங்களையும் வலிகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரே தீர்வாகும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை நடவடிக்கைக்கு, பைடென் நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவும், பின்புலமும் உள்ளது. நவம்பர் 9 அன்று, காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான 'சாத்தியம் இல்லை' என்று பைடென் அறிவித்தார். நவம்பர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் கொல்வதற்கு அனுமதிக்கப்படும் குடிமக்களின் எண்ணிக்கைக்கு 'சிவப்பு கோடுகள் இல்லை' என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக வலியுறுத்தியது. பள்ளி, மருத்துவமனை மற்றும் அகதிகள் முகாம் மீதான ஒவ்வொரு குண்டுவீச்சுக்கும் பிறகு, பைடென் நிர்வாகம் இஸ்ரேலுக்கு 'தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை' உள்ளது என்று அறிவித்தது.

தெற்கு காஸாவில் 'சுதந்திரமாக சுடுவதற்கான மண்டலத்தின்' விரிவாக்கம் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு முன்னதாக 'இஸ்ரேலுக்கான அணிவகுப்பு' வாஷிங்கடனில் நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் தலைவர்கள் 'போர் நிறுத்தம் இல்லை!' என்று கோஷமிட்டனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலின் இனப்படுகொலையை மொத்தமாக ஏற்றுக்கொண்டதானது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கும் 'மனித உரிமைகளுக்கும்' தொடர்பும் உள்ளது என்ற பொய்யை எல்லாக் காலத்திற்கும் அம்பலப்படுத்துகிறது. 1990கள் முழுவதும், மற்றும் 1999 இல் செர்பியா மீது குண்டுவீச்சில் உச்சக்கட்டத்தை அடைந்த, பால்கனில் அதன் இராணுவத் தலையீடுகளை நியாயப்படுத்த, அமெரிக்கா 'இனச் சுத்திகரிப்பு' குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தியது. ஆனால், இஸ்ரேலின் இனச் சுத்திகரிப்புக்கு பைடென் நிர்வாகத்தின் திட்டமிட்ட ஊக்குவிப்பானது, 'மனித உரிமைகளுக்கான' போலியான அக்கறை பால்கனை அமெரிக்க மற்றும் நேட்டோ மேலாதிக்கத்தின் கீழ் வைப்பதற்காக யூகோஸ்லாவியாவைக் கலைக்கும் அதன் குறிக்கோளுக்கு ஒரு சாக்குப்போக்கு என்பதைத் தவிர வேறில்லை.

அதே வழியில், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்கள் மற்றும் சீனாவிற்கு எதிரான இராணுவக் குவிப்பு ஆகியவற்றை, அமெரிக்கா அதன் இலக்குகளுக்காக, இனப்படுகொலை என்று குற்றம் சாட்டி வருகிறது. கடந்த ஏப்ரலில், 'உக்ரேனில் இனப்படுகொலையை அறிவிக்க போதுமான ஆதாரங்களை நீங்கள் பார்த்தீர்களா?' என்று பைடெனிடம் கேட்கப்பட்டது. 'ஆம், நான் அதை இனப்படுகொலை என்று அழைத்தேன். உக்ரேனியனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை புட்டின் துடைக்க முயற்சிக்கிறார் என்பது தெட்டத் தெளிவாகிவிட்டது' என்று அவர் குறிப்பிட்டார். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மீது 'இனப்படுகொலை' செய்து வருவதாக, சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் கூற்றுக்கள் அனைத்தும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கான பிரச்சார மூடிமறைப்புகளே தவிர வேறொன்றுமில்லை என அம்பலப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை உலகம் முழுவதும் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நாடுகளில் நூறாயிரக்கணக்கான மக்களின் ஆர்ப்பாட்டங்கள் உட்பட, மனிதன் வாழக்கூடிய ஒவ்வொரு கண்டத்திலும் மில்லியன் கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கினர்.

ஆனால் இந்த வெகுஜன எதிர்ப்புக்கள் இஸ்ரேலின் இனப்படுகொலையை எளிதாக்கும் பைடென் நிர்வாகத்தின் உறுதியற்ற தன்மையை ஆழப்படுத்தியுள்ளன. இந்த வாரம், ஜனநாயக தேசியக் கமிட்டியின் போராட்டக்காரர்கள் குழுவை, கேபிடல் பொலிசார் தாக்கியதில், ஆறு பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில், ட்விட்டர் மற்றும் டிக்டோக் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பத் தளங்கள், இஸ்ரேலிய இனப்படுகொலைக்கான அரசியல் எதிர்ப்பு அறிக்கைகளை அகற்றின.

இதிலிருந்து நாம் பாடங்களை கற்க வேண்டும். இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அரசாங்கங்களின் போக்கை மாற்றுவதை ஒருபோதும் நம்ப முடியாது. இஸ்ரேலிய இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, நிதிய தன்னலக்குழுவின் அதிகாரத்தை தகர்த்து, போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்பு முறையை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாரிய இயக்கத்தை தொழிலாள வர்க்கத்திற்குள் கட்டியெழுப்ப வேண்டும்.

Loading