மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நெதன்யாகு அரசாங்கம் பிராந்தியத்தில் ஒரு பரந்த போருக்கு அழுத்தம் கொடுத்து வருகையில், கடந்த வார இறுதியிலும், திங்களன்றும் இஸ்ரேலிய-லெபனான் எல்லையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்துள்ளன.
“இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பரவலான விரிவாக்கம் மேலும் தீவிரமான போர் அபாயத்தைக் கொண்டு வருகிறது” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுகிறது:
“எல்லைக்கு வடக்கே 12 மைல் தொலைவில் உள்ள லெபனான் நகரமான நபாடியில் உள்ள ஒரு அலுமினிய தொழிற்சாலையை இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் கடந்த சனிக்கிழமை தாக்கின. பழிவாங்கும் துப்பாக்கி சண்டைகள் பழைய போர் மண்டலத்திற்கு அப்பால், இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
“ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்குவதற்கு இஸ்ரேல் இப்போது தொடர்ந்து போர் விமானங்களை அனுப்புவதால், இரு தரப்பும் மேலும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. ஹிஸ்புல்லா பெரிய ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் நிலைநிறுத்தியுள்ளது” என்று கட்டுரை குறிப்பிடுகிறது.
கடந்த வாரம், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “லெபனான் குடிமக்களின் இந்த பொறுப்பற்ற தன்மை மற்றும் ஹமாஸ்-ஐஎஸ்ஐஎஸ்-ன் பாதுகாவலராக இருக்கும் ஹிஸ்புல்லா, இதற்கான இறுதி விலையை ஏற்க வேண்டும், இஸ்ரேலின் வடக்கு எல்லையில் பாதுகாப்பு நிலைமையை மாற்ற இஸ்ரேலிய இராணுவம் செயல்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளது” என்று அச்சுறுத்தினார்.
இஸ்ரேல் ஒரு புதிய தொடர் ஆத்திரமூட்டும் குண்டுவீச்சுக்களை நடத்தியதுக்கு பதிலடியாக, ஹிஸ்புல்லா அரபு அல்-அரம்ஷே மற்றும் பாராம் மற்றும் பிரனிட் ஆகிய இராணுவ தளத்திற்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டது. காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இராணுவ குடியிருப்புகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
இஸ்ரேலிய இராணுவத்தின் பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் டாங்கிகளும், ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன.
அக்டோபர் 7 முதல், லெபனானில் ஹிஸ்புல்லாவின் 74 உறுப்பினர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு இஸ்ரேலிய இராணுவத்தினர் உட்பட ஒன்பது பேர்கள் இஸ்ரேல் தரப்பில் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அன்று, பிரிட்டனின் முன்னணி வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவான சாதம் ஹவுஸ், “ஹமாஸை அழிக்க இஸ்ரேல் நெருங்க நெருங்க, ஹிஸ்புல்லாவுடனான போர் அதிகமாகும்” என்ற தகவலை வெளியிட்டுள்ளது. “இஸ்ரேலிய அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள், குறிப்பாக பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட், எல்லையில் இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது குண்டுவீசியதற்காக ஹிஸ்புல்லாவை இன்னும் ஆக்ரோஷமாக தண்டிக்க விரும்புகிறார்கள்” என்று சிந்தனைக் குழு குறிப்பிட்டது.
தாக்குதலுக்கு தலைமை தாங்குகின்ற கேலன்ட், ஹிஸ்புல்லாவை முன்கூட்டியே தாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் கூறினார். இது, இஸ்ரேலின் போர் அமைச்சரவையில் உள்ள அவரது சகாக்களால் இதுவரை நிராகரிப்பில் உள்ளது. ஆனால், இஸ்ரேலின் வடக்கில் ஒரு போர் தவிர்க்க முடியாதது என்று நம்பும் மூத்த அதிகாரிகள் மத்தியில் அவரது இந்தக் கருத்து பரவலாக உள்ளது.
ஒரு பரந்த போருக்கான இஸ்ரேலின் திட்டங்களை ஒப்புக்கொண்ட கேலன்ட், இஸ்ரேல் அரசுக்கு எதிரான விரோதம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு ஈரானே ஆணிவேர் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறினார். போர் பலமுனைகளில் நடந்து வருகிறது...
“சமீப நாட்களில், ஈராக், சிரியா மற்றும் யேமனில் அதன் பினாமிகள் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான இராணுவக் குழுக்களின் தாக்குதல்களை தீவிரப்படுத்த, ஈரானின் வளர்ந்து வரும் போக்கை பாதுகாப்பு ஸ்தாபனம் அடையாளம் கண்டுள்ளது. நாங்கள் இதனை பின்தொடர்ந்து வருகிறோம், உரிய நேரத்தில், இடம் மற்றும் வலிமையுடன் எவ்வாறு செயல்படுவது என்பதை நாம் அறிவோம்” என்று கேலன்ட் குறிப்பிட்டார்.
ஒரு பிராந்திய போர் வெடிப்பதற்கான மற்றொரு சாத்தியமான கொதி நிலையில் உள்ள இடமாக யேமன் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரானுடன் இணைந்த ஹவுதி போராளிகள் நாட்டின் தெற்கு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரே இந்த கப்பல் “இஸ்ரேலுக்கு சொந்தமானது” என்பதால் குறிவைக்கப்பட்டதாக அறிவித்தார். ஆனால், அது அவ்வாறு இல்லை என்று கூறப்படுகிறது. “செங்கடலிலோ அல்லது நாம் அடையக்கூடிய வேறு எந்த இடத்திலோ இஸ்ரேலிய கப்பலை குறிவைக்க தயங்க மாட்டோம்” என்று ஹூதி படைகள் கூறியுள்ளன.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு “ஈரானிய” தாக்குதலை ஆத்திரமூட்டும் வகையில் கண்டித்த அதேவேளை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈரான் “சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதை” கண்டித்ததோடு, அதன் கூட்டாளி நாடுகளுடன் இணைந்து தகுந்த “அடுத்தகட்ட நடவடிக்கைகளை” எடுக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே இப்பகுதியில் குறிப்பிடத்தக்க கடற்படை அணிகளைக் கொண்டுள்ளதோடு, இஸ்ரேலுக்கு ஏவப்பட்ட ஹூதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இரண்டு முறை இடைமறித்ததாகக் கூறுகிறது.
போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தொடர்கிறது. 5,600 குழந்தைகள் மற்றும் 3,550 பெண்கள் உட்பட 13,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அகதிகள் முகாம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. அல் ஜசீராவின் ஹனி மஹ்மூத் “இந்த தாக்குதல்கள், இந்த நேரத்தில் ஒரு தொடர் போக்காகத் தோன்றுகிறது” என்று கருத்து தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, அக்டோபர் 7 முதல் அதன் பள்ளி கட்டிடங்களில் தஞ்சம் அடைந்த 176 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 800 பேர் காயமடைந்துள்ளனர்.
சமீபத்திய தாக்குதல் இலக்கானது, காஸாவின் வடக்கே அமைந்துள்ள இந்தோனேசிய மருத்துவமனையாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை நடந்த குண்டுவீச்சுக்களில், நோயாளிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் “இந்தோனேசிய மருத்துவமனையின் நேரடி மற்றும் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கள் காரணமாக மரண அபாயத்தில் உள்ளனர்” என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேலிய டாங்கிகள், மருத்துவமனைப் பகுதிகளை சூழ்ந்திருப்பதுடன், மின் ஜெனரேட்டர்கள் மீதான குண்டுவீச்சுக்களால், ஏற்கனவே மின் தடையை ஏற்படுத்தியுள்ளது.
ஜபாலியா மற்றும் நுசிராத் அகதிகள் முகாம்களுக்கு எதிராக மேலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே காஸா நகரத்தையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் வடக்கே பேரழிவிற்குள்ளாக்கிய அதே அளவிலான மரணம் மற்றும் அழிவை தெற்கு காஸாவும் அனுபவிக்கத் தயாராகி வருகிறது. கடந்த வாரம், இஸ்ரேலிய இராணுவம் தெற்கு நகரமான கான் யூனிஸில் (தெற்கு காசாவில் மிகப்பெரிய பகுதியாகும்) வசிப்பவர்களை வெளியேறச் சொன்னது. வடக்கில் இருந்து வெளியேறிய பின்னர் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தற்போது அங்கு தஞ்சமடைந்துள்ளனர், இது நகரத்தின் வழக்கமான மக்கள்தொகையை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமான மக்கள் இப்பகுதிக்கு வந்துள்ளனர்.
தெற்கு காஸா பகுதிக்கு (பாலஸ்தீனியர்களின் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளது) எதிராக ஏற்கனவே தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த தாக்குதல்கள் இப்போது தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தாலும், அது நாம் முன்னோக்கி நகர்வதை தடுக்கப் போவதில்லை” என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா ஐலாண்ட், திட்டமிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
திங்கட்கிழமை காலையில், கான் யூனிஸின் வடமேற்கே உள்ள ஹமாத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். நகரின் கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரத்தில், தனித்தனி இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
காஸாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர். காஸா பகுதியில் உள்ள சிறிய மற்றும் குறுகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நெரிசலில் சிக்கியுள்ளதால், மனிதாபிமான நிலைமைகள் மேலும் மோசமடைந்து வருகின்றன. யூரோ-மத்திய தரைக்கடல் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, 90 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்கள் மற்றும் வசதிகள், மாவு குழிகள், மீன்பிடிப் படகுகள் மற்றும் ஐ.நா நிவாரண மையங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நவம்பர் 7 முதல் எந்த பேக்கரியும் செயல்படவில்லை, அவற்றில் 11 அழிக்கப்பட்டுள்ளன, மற்றவை மாவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றன.
ஐநாவின் கூற்றுப்படி, 44,000 வயிற்றுப்போக்கு சம்பவங்கள் மற்றும் 70,000 கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் UN தங்குமிடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது உண்மையான மொத்த எண்ணிக்கையில் ஒரு பகுதியே ஆகும்.
காஸா குடியிருப்பாளரான ரெனாட் அல்-ஹெலோ என்பவர், அல்-மானிட்டர் பத்திரிகையிடம் “இது பேரழிவு போன்றது. நாங்கள் சோர்வாக இருக்கிறோம். தண்ணீர் இல்லை, உணவு இல்லை. …காஸாவில் எதுவும் மிச்சமில்லை. அழிவு, துன்பம் மற்றும் சித்திரவதை மட்டுமே உள்ளது” என்று கூறினார்.
இஸ்ரேலிய இராணுவம், அதன் பாசிச குடியேற்றக் குண்டர்களின் உதவியுடன், மேற்குக் கரையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அக்டோபர் 7 முதல் அங்கு 200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் (இதற்கு முன்பு 2023ல் கொல்லப்பட்ட 250பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்) மற்றும் 450 குழந்தைகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் வன்முறை அல்லது அடக்குமுறை காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். ஆறு பாலஸ்தீன குடியிருப்பு பகுதிகள் முற்றிலுமாக கைவிடப்பட்டு, இந்த ஆண்டுக்கான மொத்த எண்ணிக்கையை 11 ஆகக் கொண்டு வந்துள்ளன. இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைச் சம்பவங்கள் ஒரு நாளைக்கு மூன்றில் இருந்து ஏழாக இரட்டிப்பாகியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் முழு சமூகங்களையும் முற்றுகையிட்டுள்ளது. ஹெப்ரோனில், 39,000ம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் மற்றும் 900 இஸ்ரேலிய குடியேறிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள H2 மாவட்டம், 20 ஆண்டுகளாக கடுமையான முடக்கத்தின் கீழ் உள்ளது, பாலஸ்தீனியர்கள் பெரும்பாலும் துப்பாக்கி முனையில் தங்கள் வீடுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். ரமல்லாவுக்கு அருகில் உள்ள புத்ருஸில் உள்ள ஒரு மசூதியில் தொழுகைக் கூட்டம் மீது ஸ்டன் கையெறி குண்டு வீசிய இஸ்ரேலிய ராணுவத்தினன் ஒருவனின் தாக்குதல் வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.
அக்டோபர் 7 முதல், மேற்குக் கரையில் சுமார் 2,800 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 300 சிறுவர்கள் மற்றும் 72 பெண்கள் உட்பட மொத்தம் 7,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய அதிகாரசபை கைதிகள் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது. சமீபத்திய வாரங்களில் குறைந்தபட்சம் நான்கு பேர் காவலில் இறந்துள்ளனர் என்றும் நூற்றுக்கணக்கானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான மருத்துவ சான்றுகள் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில், ராய்ட்டர்ஸால் சரிபார்க்கப்பட்ட ஒரு வீடியோ, ஹெப்ரோனில் முகமூடி அணிந்த இஸ்ரேலிய இராணுவத்தினர்கள், பாலஸ்தீனியர் ஒருவரை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் துப்பாக்கிகளால் அடித்து தாக்கி கைது செய்வதை டிக்டோக் ஒளிபரப்பில் காட்டப்படுகிறது.
இராணுவத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய இராணுவ விமானம் நப்லஸ்சில் இலக்கைத் தாக்கியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இரண்டாவது இன்டிபாடாவிற்குப் பிறகு இத்தாக்குதல் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது.
