முன்னோக்கு

காஸா இனப்படுகொலை பரந்த அளவில் காட்சிக்கு வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸா மீதான இஸ்ரேலின் இரண்டு மாத கால குண்டுவீச்சுக்கு பின்பான, முதல் மூன்று நாட்கள் போர் இடைநிறுத்தத்துக்கு பிறகு, உலகின் மிகப்பெரிய குற்றம் நடந்துவரும் இடத்தின் காட்சியை, காஸாவின் பொதுமக்களை திட்டமிட்டு படுகொலை செய்ததற்கான ஆதாரங்களை, திரைப்படக் படக்குழுவினர் ஆவணப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம், காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் “இடைநிறுத்தப்பட்டால், பத்திரிகையாளர்கள் காஸாவிற்குள் அதிக அளவில் செல்வதற்கும், அங்குள்ள பேரழிவுகள் குறித்து மேலும் வெளிச்சம் போட்டு, இஸ்ரேல் மீதான பொதுக் கருத்தைப் பற்றி அறிக்கை செய்வதற்கும் வாய்ப்பளிக்கும்” என்று வெள்ளை மாளிகை “கவலை” தெரிவித்ததாக பொலிட்டிகோ பத்திரிகை தெரிவித்துள்ளது.

நோயாளிகள் உள்ளே சிக்கிக் கொண்ட, இடிபாடுகளுடன் இருக்கும் இந்தோனேசிய மருத்துவமனை

அதைத்தான் அவர்கள் செய்தார்கள். இந்த வார இறுதியில் அல் ஜசீராவின் கள அறிக்கையானது, காஸாவின் இந்தோனேசிய மருத்துவமனையில் நடந்த காட்சியை விவரித்தது: “இறந்தவர்களின் துர்நாற்றம் மக்களின் மூக்கை மூட வைக்கிறது, குழந்தைகள் உட்பட கருகிய மற்றும் சிதைந்த உடல்கள் அறையின் ஒரு மூலையில் குவிந்துள்ளன. புதைகுழி தோண்டுவதற்காக வெளியில் சென்றவர்களை இஸ்ரேலிய குறிபார்த்து சுடுபவர்கள் குறிவைத்ததால் உடல்கள் அடக்கம் செய்யப்படவில்லை. தெருக்கள், பள்ளிகள், வீடுகள், கடைகள், அனைத்தும் இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிந்து போயின”.

பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி மதிப்பிடுகின்றனர் என்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் பொய்யை இந்த அறிக்கைகள் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளன. உண்மையில், பைடென் நிர்வாகம் இப்போது உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை ஒரு குறிப்பிடத்தக்க அளவில் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்று ஒப்புக்கொள்கிறது.

காஸாவில் சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. சுகாதார சேவைகள் வீழ்ச்சியடைந்ததால் இறந்தவர்களை எண்ணுவது சாத்தியமில்லை. எவ்வாறாயினும், கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க தகவல் அமைச்சகத்தின் சமீபத்திய அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கை, 6,000ம் குழந்தைகள் மற்றும் 4,000ம் பெண்கள் உட்பட 14,352ம் பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனிய திரைப்படத் தயாரிப்பாளர் பிசான் ஓவ்டா, காஸாவிலிருந்து வெளியிட்ட சமூக ஊடக அறிக்கைகள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களைக் கவர்ந்து, யதார்த்தத்தை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன: “நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய காஸாவின் இழப்பு எண்ணிக்கை: 50 நாட்களில் 20,000ம் பேர் கொல்லப்பட்டனர் - அவர்களில் 7,000 பேர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டுள்ளனர் - அவர்களில் 8,000ம் குழந்தைகள் – இவர்கள் அனைவரும் பொதுமக்கள்”.

காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, 233,000ம் வீடுகள் அல்லது காஸாவில் ஏறக்குறைய பாதி வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன. குண்டுகள் அல்லது ஏவுகணைகள் 266 பாடசாலைகளை தாக்கியுள்ளன, அவற்றில் 67 பாடசாலைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், 205 சுகாதார பணியாளர்களையும், 64 பத்திரிகையாளர்களையும் கொன்றுள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான இறப்புகளின் அளவாகும்.

ஒரு பாலஸ்தீனிய தாயான ஹியாம் குதிஹ், காஸா பகுதியின் கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள குசாயா கிராமத்தில், இஸ்ரேலிய குண்டுவீச்சில் அழிக்கப்பட்ட தனது குடும்ப கட்டிடத்தின் முன் சமையல் செய்கிறார். Sunday, Nov. 26, 2023.  [AP Photo/Adel Hana]

கடந்த ஞாயிற்றுக்கிழமை கார்டியனில் வெளிவந்த ஒரு கட்டுரை, இஸ்ரேல் 1,000ம் முதல் 2,000ம் ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாகக் கூறுகிறது. இது உண்மையாக இருந்தாலும், கொல்லப்பட்ட ஒவ்வொரு போராளிக்கும் ஈடாக, இஸ்ரேல் மூன்று முதல் ஆறு குழந்தைகளைக் கொன்றுள்ளது, மேலும் கொல்லப்பட்டவர்களில் 85 முதல் 92 சதவீதம் பேர் பொதுமக்களாவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நியூயோர்க் டைம்ஸ், காஸா போரில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பாரிய இறப்பு எண்ணிக்கை 21 ஆம் நூற்றாண்டில் முன்னெப்போதும் இல்லாதது என்று விளக்கி முதல் பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

“காஸா பகுதியில் பொதுமக்களின் மரணம் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் நவீன மோதலின் தவிர்க்க முடியாத கூறுபாடு இது என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் கடந்த கால மோதல்கள் மற்றும் விபத்து மற்றும் ஆயுத நிபுணர்களுடனான நேர்காணல்கள், இஸ்ரேலியர்களின் இந்த தாக்குதல் வேறுபட்டது என்று கூறுகின்றன” என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

“ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கிட்டத்தட்ட இரண்டு வருட ரஷ்ய தாக்குதல்களுக்குப் பிறகு, உக்ரேனில் கொல்லப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏற்கனவே காஸாவில் கொல்லப்பட்டுள்ளதாக” டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான எதிர்த்து போரிடும் போராளிகள் ஆண்களாக இருந்தாலும் கூட, காஸாவில் பதிவாகும் அனைத்து இறப்புகளில் 70 சதவீதமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று டைம்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. உதாரணமாக, “இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான கடந்தகால மோதல்களில், காஸாவில் பதிவான இறப்புகளில் 60 சதவீதம் பேர் ஆண்கள்” என்று டைம்ஸ் எழுதுகிறது.

இஸ்ரேல் 2,000ம் இறாத்தல் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது என்பது, 21 ஆம் நூற்றாண்டின் முந்தைய போர்களில் காணப்பட்ட எதையும் சிறிதாக்குகிறது என்று கட்டுரை குறிப்பிடுகிறது. “காஸாவில் இஸ்ரேலால் வீசப்பட்ட வெடிகுண்டுகளில் சுமார் 90 சதவீதம் 1,000ம் முதல் 2,000ம் பவுண்டுகள் வரை எடையுள்ள செயற்கைக்கோளால் வழிகாட்டப்படும் குண்டுகள்” என்று, ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக, “இந்த நூற்றாண்டின் போரின் போது, ​​​​அமெரிக்க இராணுவ அதிகாரிகள், ஈராக்கில் உள்ள மொசூல், மற்றும் சிரியாவில் உள்ள ரக்கா போன்ற நகர்ப்புறங்களிலுள்ள பெரும்பாலான இலக்குகளுக்கு, இஸ்லாமிய அரசை எதிர்த்துப் போரிடும் போது, மிகவும் பொதுவாக வானிலிருந்து அமெரிக்கா வீசிய குண்டுகள்தான் (500 இறாத்தல் குண்டுகள்) மிகப் பெரியது என்று அடிக்கடி நம்பினர்” என்று டைம்ஸ் குறிப்பிட்டது.

டைம்ஸ் வெளியிட்ட இந்தக் கட்டுரையானது, அனைத்தையும் போலவே, அமெரிக்க அரசின் நலன்களைப் பாதுகாப்பதற்காக கவனமாக சரிபார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைப்பதன் மூலம் மட்டுமே விளக்கக்கூடிய புள்ளிவிபரங்களை டைம்ஸ் முன்வைக்கும் அதே வேளையில், பாலஸ்தீனிய குடிமக்களை கொல்வதே தங்கள் நோக்கம் என்று திரும்பத் திரும்ப கூறிய இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கைகளுடன் இந்த நடவடிக்கைகளை இணைப்பதை தவிர்ப்பதில் டைம்ஸ் கவனமாக இருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், அக்டோபர் 7 தாக்குதலுக்கு காஸாவின் முழு மக்களும் பொறுப்பு என்று அறிவித்தார்: “இதற்கு ஒரு முழு தேசமே பொறுப்பு... பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை, இதில் ஈடுபடவில்லை என்ற இந்தப் பேச்சு உண்மையல்ல. இது முற்றிலும் உண்மை இல்லை” என்று குறிப்பிட்டார்.

இது மறைமுகமாக அவர்களை முறையான இலக்குகளாக ஆக்குகிறதா என்று ஹெர்சாக்கிடம் கேட்டபோது, ​​ “உன்னுடைய மோசமான சமையலறையில் ஏவுகணை வைத்திருந்து, அதை என் மீது சுட விரும்பினால், நான் என்னை தற்காத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறேனா? ” என்று அவர் பதிலளித்தார்.

கடந்த மாதம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, “ஆண்களையும் பெண்களையும், சிறுவர்களையும், கைக்குழந்தைகளையும், கால்நடைகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொல்லும்படி” கட்டளையிடும் விவிலியப் பகுதியின்படி, “அமலேக் உங்களுக்குச் செய்ததை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அறிவித்தார்.

“நாங்கள் மனித விலங்குகளுடன் போரிடுகிறோம், அதன்படி செயல்படுகிறோம்” என்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கடந்த மாதம் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் நியூயோர்க் அலுவலகத்தின் முன்னாள் இயக்குனர் கிரேக் மொகிபர் விளக்குவது போல்: இஸ்ரேலிய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் வெளிப்படையான நோக்கத்தின் அறிக்கைகள் என்பன,

இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்பதில் சந்தேகம் அல்லது விவாதத்திற்கு இடமில்லை.

இதனை டைம்ஸின் மொழியைப் பயன்படுத்தி வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொதுமக்களின் இறப்புகளின் அளவைப் பொருத்தவரை, “இஸ்ரேலின் தாக்குதல் முந்தைய போர்களில் இருந்து வேறுபட்டுள்ளது” மட்டுமல்ல, இஸ்ரேலிய அதிகாரிகளின் விருப்பத்தில், முடிந்தவரை பல பொதுமக்களைக் கொல்லும் இலக்கை தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் பைடென் நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. காஸா மீது வீசிப்படும் 2000ம் இறாத்தல்கள் எடையுள்ள குண்டுகள் அனைத்தும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை மற்றும் பென்டகனால் வழங்கப்பட்டவை ஆகும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்ணோட்டத்தில், போர் “இடைநிறுத்தத்தின்” குறிக்கோள்களில் ஒன்று, இஸ்ரேலிய இராணுவத்திற்கு மீண்டும் ஆயுதங்களை வழங்கியதாகும், இதை பைடென் நிர்வாகம் ஆர்வத்துடன் செயல்படுத்தியுள்ளது.

டைம்ஸ் பத்திரிகையானது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து, காஸா மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதலை விலக்க முயற்சிக்கும் அதே வேளையில், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களின் நீட்டிப்பையும், விரிவாக்கத்தையும் குறிக்கிறது. இந்தப் போர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதோடு, சித்திரவதை, கடத்தல் மற்றும் வன்புணர்வு ஆகியவற்றை அரச கொள்கையாகப் பயன்படுத்தப்பட்டது.

இந்த பரந்த குற்றங்களுக்காக, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிகாரியோ அல்லது இராணுவ அதிகாரியோ குற்றம் சாட்டப்படவில்லை. இன்று, காஸாவின் அழிவின் காட்சிகள் எடுத்துக்காட்டுவது போல், அமெரிக்கா மற்றும் உலக ஏகாதிபத்தியம் பாரிய அளவிலான குற்றங்களைச் செய்து வருவதுடன், எதிர்காலத்திற்கு இன்னும் பாரிய அளவிலான குற்றங்களை செய்வதற்கு தயார் செய்தும் வருகிறது.

காஸாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாகி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்தப் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள், இஸ்ரேலிய அரசு மற்றும் இராணுவ அதிகாரிகள் மட்டுமல்ல, வாஷிங்டன், பாரிஸ், லண்டன் மற்றும் பேர்லினில் உள்ள தலைவர்களும் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கிய கோரிக்கையாக இருக்க வேண்டும்.

Loading