மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
“காஸாவில் மனிதாபிமான பேரழிவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது” என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்களன்று கூறினார், முற்றுகையிடப்பட்ட 2.2 மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியானது மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் உள்ளது. தெற்கு காஸா மீது இன்னும் இரக்கமற்ற தாக்குதலுக்கு தயாரிப்புகளை செய்ய இஸ்ரேல் அதன் தாக்குதலில் நான்கு நாள் “இடைநிறுத்தத்தை” பயன்படுத்துகிறது— இது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
“இன்னும் சில நாட்களே உள்ளன. நாங்கள் சண்டைக்குத் திரும்பும்போது, அதே சக்தியைப் பயன்படுத்துவோம் மற்றும் பல ... மேலும் நாங்கள் [காஸா] அப் பகுதி முழுவதும் போரிடுவோம்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் திங்களன்று படையினர்களிடம் கூறினார் என்று CNN தெரிவித்துள்ளது.
திங்களன்று, காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம், இந்த இனப்படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது, சண்டை “இடைநிறுத்தத்தின்” போது டசின் கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் புதையுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 6,160 குழந்தைகள் மற்றும் 4,000 பெண்கள் அடங்குவர், மேலும் 33,000 பேர் காயமடைந்துள்ளனர். கூடுதலாக, 4,700 குழந்தைகள் உட்பட மேலும் 7,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் — பெரும்பாலும் இடிபாடடைந்த கட்டிடங்களில் புதையுண்டுள்ளனர். காணாமல் போனவர்களையும் சேர்த்தால் 10,860 குழந்தைகள் உட்பட பலியானவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து 207 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது 77 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன், 266 பாடசாலைகள் அழிக்கப்பட்டதுடன், 67 பாடசாலைகள் முழுமையாக சேவையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டது.
“காஸாவில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீதமானவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டது. “காஸா பகுதி முழுவதும், 234,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் 46,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது மொத்த வீட்டு குடியிருப்புகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகும்” என்று ஷெல்டர் கிளஸ்டரின் ஒரு அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையானது, “காஸாவில் வீடுகள் மற்றும் பொது உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் பேரழிவுகரமான தாக்கத்தை நிவர்த்தி செய்ய சில நாட்கள் இடைநிறுத்தம் போதாது. உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகள், வீட்டுவசதி மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
“காஸா நகரம் மற்றும் வடக்கு காஸாவில், விரிவான குண்டுவீச்சு அனைத்து கட்டிடங்களிலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் சாலைகள் மற்றும் மின்சார அமைப்புகள் மற்றும் விநியோக வலையமைப்புகள் மற்றும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், குழாய்கள் மற்றும் வடிகால் கால்வாய்கள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளன. தாக்குதல்களின் ஒட்டுமொத்த விளைவானது செயல்பாட்டு சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கான அணுகலைத் தடுக்கிறது, இது வாழ்க்கையைத் தக்கவைப்பதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை கடுமையாக சமரசம் செய்கிறது என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது”
இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் இனப்படுகொலை பேச்சுக்களை மட்டுமே தீவிரப்படுத்தி வருகின்றனர். திங்களன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தனது தாக்குதலை ஊக்குவிப்பதற்காக உலகின் மிகப் பெரிய பணக்காரரும், இனவாதம் மற்றும் யூத எதிர்ப்பின் இழிபுகழ் பெற்ற ஆதரவாளருமான எலான் மஸ்க்கிற்கு விருந்தளித்தார்.
“பொதுமக்களை கொலை செய்ய வலியுறுத்துபவர்களை கொல்வதை தவிர வேறு வழியில்லை. அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை” என்று மஸ்க் இந்த பயணத்தின் போது கூறினார். எலான் மஸ்க்கின் வருகைக்கு இஸ்ரேலுக்குள் கூட கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸின் தலைமை ஆசிரியர் எஸ்தர் சாலமன் பின்வருமாறு எழுதினார், “அப்பட்டமான யூத எதிர்ப்பு வெளியீட்டாளர் எலான் மஸ்க் இஸ்ரேலில் விரும்பத்தகாத தனிமனிதராக இருக்க வேண்டும்” என்று எழுதினார். “அதற்கு பதிலாக, நெதன்யாகு - நேர்மையற்ற முகஸ்துதியின் புதிய ஆழங்களை நிரப்புகிறார் - ஹமாஸால் அழிக்கப்பட்ட கிபுட்சிம் என்ற இடத்திற்கு ஒரு மக்கள் தொடர்பு கொள்ளும் விஜயத்தை பரிசளிக்கிறார். இருவரும் அயோக்கியத்தனம், வஞ்சகம், பித்தலாட்டம் கொண்ட நபர்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்”
அவரது வருகைக்கு முன், மஸ்க் பகிரங்கமாக “பெரும் இடம்பெயர்வுக் கோட்பாட்டை” ஆதரிக்கும் ட்விட்டர் பதிவை ஆதரித்தார், ‘யூத சமூகங்கள் வெள்ளையர்களுக்கு எதிராக அதே வகையான இயங்கியல் வெறுப்பை ஊக்குவித்து வருகின்றன, மக்கள் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்’ என்று வலியுறுத்தினார்.
“போர் இடைநிறுத்தம்” காஸாவுக்கு மட்டுமே பொருந்தும். மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவமும் அதிவலது குடியேற்றக்காரர்களும் பாலஸ்தீனியர்கள் மீது தங்கள் தாக்குதல்களைத் தொடர்கின்றனர். அக்டோபர் 7 முதல், மேற்குக் கரையில் 59 சிறுவர்கள் உட்பட சுமார் 231 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது 60 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் 160 சுகாதார மருத்துவ வசதி நிலையங்கள் அழிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். “ஆக்கிரமிப்பின் முதல் நாளில் மருத்துவ பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரத்தை துண்டித்து சுகாதார அமைப்பின் கழுத்தை நெரித்த பின்னர் இஸ்ரேலிய படைகளால் நேரடி இலக்கு நடவடிக்கைக்கு நாங்கள் உட்படுத்தப்பட்டோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை மீண்டும் தொடங்குவதால் ஏற்படும் அரசியல் வீழ்ச்சிக்கான தயாரிப்புகளை பைடென் நிர்வாகம் செய்து வருகிறது. “இஸ்ரேல்-காஸா மீதான உள்நாட்டு பிளவுகளுடன் வெள்ளை மாளிகை போராடுகிறது” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், வாஷிங்டன் போஸ்ட் பின்வரும் அப்பட்டமான ஒப்புதலுடன் முடிக்கிறது: அதாவது “இன்னும், பைடென் அதிகாரிகள் பெருகிய முறையில் வேதனையான இக்கட்டான நிலையில் உள்ளனர்.” முதல் நாளிலிருந்தே அவர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால், இஸ்ரேலியர்களிடம் “காஸாவிலிருந்து நிறைய பாலஸ்தீனியர்களுக்கு தீங்கு விளைவிக்காத, கொல்லாத மற்றும் வெளியேற்றாத ஒரு மூலோபாயத்தைக் கொண்டிருக்கவில்லை” என்று ஒரு வெளிப்புற ஆலோசகர் கூறினார். “அவர்கள் தெற்கே சென்று அதையே செய்ய வேண்டும். தெற்கிலுள்ள 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை நீங்கள் எவ்வாறு செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.
நிச்சயமாக, இது மக்கள் தொடர்புக் கண்ணோட்டத்தில் மட்டுமே ஒரு “பிரச்சினை” ஆகும். இஸ்ரேலிய அதிகாரிகள் காஸா மக்களை அவர்களுடைய நிலத்தில் வைத்து கொலை செய்யவோ அல்லது வெளியேற்றவோ கோருவதாக தெளிவுபடுத்தியுள்ளனர், அதே நேரத்தில் வெள்ளை மாளிகையானது, இஸ்ரேலிய இராணுவம் படுகொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் எண்ணிக்கைக்கு “சிவப்பு கோடுகள்” என்று எதுவுமில்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
