முன்னோக்கு

"மெதுவாக கொல்லுதல்": காஸா இனப்படுகொலையில் இஸ்ரேல் நோயை ஆயுதமாக பயன்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

நவம்பர் 22, 2023 புதன்கிழமையன்று இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டு தெற்கு காஸாப் பகுதியிலுள்ள கான் யூனிஸ் நகரிலுள்ள ஒரு மனித புதைகுழியில் புதைக்கப்படுவதற்கு வைக்கப்பட்டுள்ளன, அங்கு பாலஸ்தீனியர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். [AP Photo/Mohammed Dahman]


கடந்த திங்களன்று, உலக சுகாதார அமைப்பானது (WHO) ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டது: அதாவது இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு 20,000 க்கும் மேற்பட்ட காஸா மக்கள் கொல்லப்பட்டும், அல்லது காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும், வருகின்ற காலத்தில் தொற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “இந்த சுகாதார அமைப்புமுறையை மீண்டும் ஒன்றிணைக்க முடியாவிட்டால் குண்டுவீச்சால் இறப்பதை விட நோயால் இறப்பதை நாங்கள் காண்போம்” என்று தெரிவித்தார்.

இரண்டு மாதங்களாக, இஸ்ரேல் திட்டமிட்டு காஸாவின் மருத்துவமனை அமைப்பை அழித்தொழித்துள்ளது. இதுவரை, 207 சுகாதார ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 56 ஆம்புலன்ஸ்கள் தாக்கப்பட்டுள்ளன. 26 மருத்துவமனைகளும், 55 சுகாதார மையங்களும் செயல்படுவதை நிறுத்தியுள்ளன.

சமீபத்திய கொடூரமான காட்சியில், பாலஸ்தீனிய மருத்துவ ஊழியர்கள் துப்பாக்கி முனையில் அவர்களைக் கைவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அல்-நாசர் மருத்துவமனையின் மருத்துவமனை படுக்கைகளில் குறைப்பிரசவக் குழந்தைகள் இறந்து அழுகிய நிலையில் விடப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாலஸ்தீன சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா கூறுகையில், “ஆக்கிரமிப்பின் முதல் நாளில் மருத்துவ பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரத்தை துண்டித்து சுகாதார அமைப்பை கழுத்தை நெரித்த பின்னர் இஸ்ரேலியப் படைகளின் நேரடி இலக்கு நடவடிக்கைக்கு நாங்கள் உட்படுத்தப்பட்டுள்ளோம்” என்று கூறினார்.

காஸாவின் சுகாதார அமைப்பின் அழிவு, உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் மீதான இஸ்ரேலின் முற்றுகை மற்றும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி மக்களின் பாரிய இடப்பெயர்வு ஆகியவற்றால் மக்களின் பட்டினி மற்றும் உடலில் நீரிழப்பு வறட்சி போன்ற பேரழிவுகரமான விளைவுகளை அதிகரிக்கிறது.

கடந்த வாரம் அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில், உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஹாரிஸ், காஸாவிலுள்ள மருத்துவ நிலைமைகள் “பெருந்துயரத்தில் குவிந்து கிடக்கின்றன” என்று விவரித்தார்.

“இது பல வழிகளில் பேரழிவை ஏற்படுத்துகிறது. பயங்கரமாக நசுக்கப்பட்ட காயங்கள், தீக்காயங்கள், துண்டிக்கப்பட்ட கைகால்கள், குண்டுவெடிப்பால் ஏற்படும் பல சிக்கலான எலும்பு முறிவுகள் ஆகியவற்றினால் தேவைகள் அதிகரிக்கும்போது, வெகு குறைவான மருத்துவமனைகள் செயல்படுவதால் மருத்துவமனைக்கான விநியோகம் குறைந்து கொண்டே வருகிறது” என்று அவர் கூறினார்.

“மக்கள் மிகவும் நெரிசலாக இருப்பதால், அவர்கள் மிகவும் அப்படிப்பட்ட மோசமான நிலையில் இருப்பதால், அவர்களுக்கு உணவு இல்லாததால், அவர்கள் தங்களைக் கழுவவோ அல்லது சுத்தமான தண்ணீரைக் குடிக்கவோ முடியாது. தொற்று நோய்களில், குறிப்பாக வயிற்றுப்போக்கு நோய் அதிவேகமாக அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். இது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட 31 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பெரியவர்களில்: நீங்கள் எதிர்பார்ப்பதை விட 104 மடங்கு அதிகமாகவுள்ளது.” இரத்தப்பேதி 14 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலைமைகள் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. அவர்களின் உள்நோக்கம் கொண்ட தன்மையை இஸ்ரேலிய அதிகாரிகள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த வாரம், இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா ஐலாண்ட் ஒரு கட்டுரையை வெளியிட்டார், அதில் அவர் தடுக்கக்கூடிய நோயால் முடிந்தவரை பல காஸா குடிமக்கள் மருத்துவ நிலைமைகளை உருவாக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்தை வலியுறுத்தினர்.

ஐலாண்ட் எழுதினார்:

காஸாவின் “வறுமையான” பெண்கள் யார்? அவர்கள் அனைவரும் ஹமாஸ் கொலையாளிகளின் தாய்மார்கள், சகோதரிகள் அல்லது மனைவிகள்...

காஸாவில் மனிதாபிமான பேரழிவு மற்றும் கடுமையான தொற்று நோய்கள் குறித்து சர்வதேச சமூகம் எச்சரிக்கிறது. எவ்வளவு கடினமாக இருந்தாலும் இதிலிருந்து நாம் பின்வாங்கக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, காஸாப் பகுதியின் தெற்கில் கடுமையான தொற்று நோய்கள் வெற்றியை நெருக்கமாகக் கொண்டுவரும் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர்களிடையே உயிரிழப்புகளைக் குறைக்கும்.

தொற்று நோயின் மூலம் மரணத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்துவது இஸ்ரேலின் நடவடிக்கைகளின் ஒரு குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிர, வெறும் துணை விளைபொருளாக இருக்கக்கூடாது என்று ஐலாண்ட் வாதிடுகிறார். அதன் நோக்கம் “அதிகமான ஹமாஸ் போராளிகளைக் கொல்வது” அல்ல, மாறாக “அவர்களின் குடும்பங்களுக்கு மீளமுடியாத தீங்குக்கு” உள்ளாக்குவதாகும்.

இத்தகைய அசுரத்தனமான கூற்றுகள் ஒரு பைத்தியக்காரனின் வெறும் கூக்குரல்களாகத் தோன்றும். உண்மையில், வெகுஜன நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும் நிலைமைகளுக்கு ஒரு மக்களை வேண்டுமென்றே அடிபணியச் செய்வது யூத இனப்படுகொலை (ஹோலோகாஸ்ட்) உட்பட கடந்த கால வரலாற்று இனப்படுகொலைகளின் ஒரு முக்கிய அங்கமுமாகும்பாலஸ்தீனியர்களிடமிருந்து உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீரை இஸ்ரேல் வேண்டுமென்றே நிறுத்தியதற்கும், வார்சோ ஒதுக்குப்புற தனிமைப்படுத்திய கெட்டோவில் யூதர்களை நாஜி ஆட்சி நடத்திய விதம் குறித்த விளக்கங்களுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் அச்சு ஆட்சி என்ற தனது வரலாற்று புத்தகத்தில், “இனப்படுகொலை” என்ற வார்த்தையை அதன் சமகால புரிதலில் அறிமுகப்படுத்திய சட்ட வல்லுநர் ரஃபேல் லெம்கின், வார்சோ ஒதுக்குப்புற தனிமைப்படுத்திய கெட்டோவில் உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் மீதான முற்றுகையை நாஜிக்கள் அதன் கைதிகளைக் கொல்வதற்கான திட்டமிட்ட வழிமுறையாக எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை பின்வருமாறு விளக்கினார்:

“விரும்பாத தேசிய குழுக்கள் ... ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் பாதுகாப்பதற்கான அடிப்படைத் தேவைகளை இழக்கின்றன. ... அதன் பின்னர் கெட்டோவிலுள்ள யூதர்களுக்கு எரிபொருள் எதுவும் கிடைக்கவில்லை”.

மேலும், கெட்டோவிலுள்ள யூதர்கள் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குடியிருக்கும் மோசமான நிலைமைகளின் கீழ் ஒன்றாக நெருசலாக குடியிருக்கத் தள்ளப்பட்டுள்ளனர், மேலும் பொது பூங்காக்களின் பயன்பாடு மறுக்கப்படுவதன் மூலம் அவர்கள் சுத்தமான காற்றுக்கான உரிமையையும் இழக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள், குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், பல்வேறு நோய்களின் வளர்ச்சிக்கு காரணமாகின்றன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சிறப்பு ஆலோசகர் பாயம் அகவன் 2021 இல் இவ்வாறு  எழுதினார்:

ஒதுக்குப்புற தனிமைப்படுத்திய கெட்டோக்களில் நோய் மற்றும் பட்டினியால் அழிக்கப்படும் சித்திரவதை முகாம்களுக்கான களமாக மாறியிருந்தது. தைபஸ் போன்ற நோய்களால் கெட்டோக்களில் 700,000 யூதர்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்கள் “அவர்களுடைய அசுத்தத்தில் அழிவதற்காக” கைவிடப்பட்டனர். வார்சோ கெட்டோவில் “ஜேர்மானியர்கள் முறையான சிகிச்சைகளை தடுத்த போதிலும், தைபஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாக மதிப்பிடப்பட்டது [... ] தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் செயல்படுத்தவும் அனுமதிக்க மறுத்தது.”

வானம் ஏன் இருண்டு போகவில்லை? என்ற புத்தகத்தில், வரலாற்றாசிரியர் அர்னோ ஜே. மேயர் சித்திரவதை முகாம் கைதிகளின் நிலைமைகளை பின்வருமாறு விவரித்தார்:

அரைப் பட்டினியில், நடைமுறையில் மருத்துவ கவனிப்பு இல்லாமல், பலவீனமானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறிப்பாக ஆபத்தில் இருந்தனர், ஏனெனில் பயணத்தின் முடிவில் ஆஷ்விட்ஸ் முழுவதும் ஒரு பேரழிவுகரமான தைபஸ் தொற்று நோயின் பிடியில் இருந்தது. இதன் விளைவாக விவரிக்க முடியாத இறப்பு விகிதம்...

பலவீனமான மற்றும் நோய்வாய்ப்பட்ட யூதர்களையும், ஜிப்சிகளையும் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துகள் குறித்த முழு விழிப்புணர்வோடு ஆஷ்விட்ஸு முகாமிற்கு கொண்டு செல்ல நாஜி தலைவர்கள் முடிவு செய்தனர், மேலும் கொள்ளை தொற்று நோய்களின் ஆபத்து உட்பட அங்குள்ள கொடிய நிலைமைகளை அலட்சியப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்பதால் அவர்கள் அதைத் தொடர்ந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையானது “இனப்படுகொலைக்கான செயல்களை” மக்கள் “குழுவின் உடல் பிழைப்புக்குத் தேவையான மற்றும் சுத்தமான நீர், உணவு மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற மீதமுள்ள மக்களுக்கு கிடைக்கக்கூடிய வளங்களை வேண்டுமென்றே பறித்தல்” மற்றும் “சரியான குடியிருப்பு, உடை மற்றும் சுகாதாரம் அல்லது அதிகப்படியான வேலை அல்லது உடல் உழைப்பு போன்ற மெல்லக் கொல்லுவதற்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளை உருவாக்குதல்” ஆகியவற்றை இது உள்ளடக்கியது என்று வரையறுக்கிறது.

“அறுவடைகளைப் பறிமுதல் செய்தல், உணவுப் பொருட்களை முற்றுகையிடுதல், முகாம்களில் தடுத்து வைத்தல், வலுக்கட்டாயமாக இடம்பெயர்தல் அல்லது வாழத்தகுதியற்ற சூழலுக்கு வெளியேற்றுதல் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையைத் தக்கவைப்பதற்கான வழிவகைகளை இழப்பது திணிக்கப்படலாம்” என்று அது குறிப்பிடுகிறது.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையின் சரியான விளக்கமாக இந்த மொழி உள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று நோயின் புதிய உலகளாவிய எழுச்சிக்கு மத்தியில் காஸாவின் சுகாதார அமைப்புமுறையின் அழிவு நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது- இது நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான சுகாதார பராமரிப்பு இல்லாத நிலையில் அதிவேகமாக பரவும் மிகவும் ஆபத்தான ஒரு நோயாகும்.

உலகின் ஆளும் வர்க்கங்கள் கோவிட் -19 பெருந்தொற்று நோயை மனித உயிர்கள் மீதான படுகொலை அலட்சியத்துடன் எதிர்கொண்டன, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த நோயை “வயதானவர்களைக் கையாள்வதற்கான இயற்கையின் வழி” என்று பாராட்டினார். காஸாவில், இக்கருத்துக்களில் வெளிப்பட்ட மனித உயிர்கள் மீதான சமூக விரோத அலட்சியம் ஒரு முழு அளவிலான இனப்படுகொலையாக உருமாற்றம் அடைந்துள்ளது.

காஸாவின் பொது சுகாதார உள்கட்டமைப்பை இஸ்ரேல் அரசாங்கம் திட்டமிட்டு அழித்ததையும், அதன் மக்களை பட்டினிக்கு உள்ளாக்குவதையும் கண்டித்து பைடென் நிர்வாகத்தின் ஒரு உறுப்பினர் கூட ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிடவில்லை. அல்-அஹ்லி அரபு மருத்துவமனையின் மீது இஸ்ரேல் குண்டு வீசி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றபோது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் பாலஸ்தீனியர்கள் மீது குற்றம் சாட்டினார். இஸ்ரேல் கொல்ல அனுமதிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையையோ அல்லது அது செய்ய அனுமதிக்கப்படும் போர்க்குற்றங்களின் அளவையோ கட்டுப்படுத்த “சிவப்பு கோடுகள்” எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.

முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் 20 ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய சக்திகள் செய்த பரந்த குற்றங்கள், அவற்றில் மிக மோசமான யூத இனப்படுகொலை (ஹோலோகாஸ்ட்), ஒரு விதிவிலக்கு என்றும், இது போன்ற ஒரு தீய தனிநபர்களின் நடவடிக்கைகள் மீண்டும் ஒருபோதும் தோன்றாது என்றும் வாதிட்டனர்.

புதிய நூற்றாண்டின் இருபத்து மூன்று ஆண்டுகளில், நாஜிக்கள் தங்கள் “இறுதித் தீர்வை” நிறைவேற்றிய பல வழிமுறைகள் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் காஸாவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த யதார்த்தம் நிகழ்காலத்தை மட்டுமல்ல, கடந்த காலத்தையும் பகுப்பாய்வு செய்கிறது. யூத இனப்படுகொலை (ஹோலோகாஸ்ட்) மற்றும் நாஜிசம் ஆகியவை வரலாற்று விபத்துக்களின் விளைவாக இருக்கவில்லை, மாறாக நவீன ஏகாதிபத்தியத்தின் “மிக உயர்ந்த கட்டத்தில்” முதலாளித்துவ அமைப்புமுறையின் இன்றியமையாத காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தின, இதையே லியோன் ட்ரொட்ஸ்கி அதனை “மரண ஓலம்” என்று அழைத்தார்.

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு எதிராக மில்லியன்கணக்கான மக்கள் வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு நெதன்யாகுவோ அல்லது அரசாங்கங்களோ மட்டுமே நிதியளித்து ஆயுதம் வழங்கவில்லை. இந்த மாபெரும் குற்றத்திற்கு முழு முதலாளித்துவ சமூக அமைப்புமுறை ஒழுங்குதான் காரணமாக இருக்கிறது.

Loading