இந்த கிரகத்தின் மிகப் பழமையான குற்றஞ்சாட்டப்படாத போர்க் குற்றவாளியான ஹென்றி கிஸ்ஸிங்கர், நவம்பர் 29 புதன்கிழமை, கனெக்டிகட்டில் உள்ள அவரது வீட்டில் இறநதுள்ளார். அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து 12 ஜனாதிபதிகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தாலும், கிஸ்ஸிங்கர் 1969 முதல் 1975 வரை நிக்சன் மற்றும் போர்டு நிர்வாகத்தின்போது, அவர் செய்த மற்றும் மேற்பார்வையிட்ட குற்றங்களுக்காக உலக மக்களால் மிகவும் வெறுக்கப்படுகிறார். இந்த நிர்வாகங்களின் கீழ் வெளியுறவுக் கொள்கையை, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இயக்குநராகவும், பின்னர் வெளியுறவுத்துறை செயலாளராகவும் இருந்து கட்டுப்படுத்திய அவர், தனது பதவிக்காலத்தின் பெரும்பகுதியில், இந்த இரண்டு பதவிகளையும் வகித்ததோடு, அந்த பதவியை வகித்த ஒரே அமெரிக்க அரசாங்க அதிகாரியும் ஆனார்.
உலக சோசலிச வலைத் தளம் கிஸ்ஸிங்கரின் தொழில் வாழ்க்கையைப் பற்றி இன்னும் ஆழமான பகுப்பாய்வை வெளியிடும். ஆனால், மே 29, 2023 அன்று வெளியிட்ட முன்னோக்கை நாங்கள் இன்று மீண்டும் வெளியிடுகிறோம். பாரிய வெகுஜன கொலைகாரனும் ஏகாதிபத்திய மூலோபாயவாதியுமான கிஸ்ஸிங்கர் 100 வயதை எட்டியபோது, அவர் பெருநிறுவன ஊடகங்களில் பரவலாக அப்போது கொண்டாடப்பட்டார்.
________
நான் செல்லும் வழியில் கொலையாளியை சந்தித்தேன்
அவர் காசல்ரே (பிரிட்டனில் அரசியல் மேதையாக இருந்தவர்) போன்ற முகமூடியை அணிந்திருந்தார்
அவர் பார்ப்பதற்கு மிகவும் மென்மையாக இருந்தார், இருப்பினும் அச்சம் தருவதாக
ஏழு மோப்பம் பிடிக்கும் வேட்டை நாய்கள் அவரைப் பின்தொடர்ந்தன.
அனைத்தும் கொழுத்திருந்தன; அவை நலமாகவும் இருக்கலாம்
ரசிக்கக்கூடிய கவர்ச்சியுடன் இருக்கின்றன,
ஒன்றின் பின் ஒன்றாக மற்றும் இரண்டின் பின் இரண்டாக,
அவர் மனித இதயங்களை அவை மெல்வதற்கு தூக்கி வீசினார்
அவர் தனது பரந்த மேலங்கியிலிருந்து அதை எடுத்தார்
- பேர்சி பைஷே ஷெல்லி, அராஜகத்தின் முகமூடி (WSWS ஆல் மொழிபெயர்க்கப்பட்ட பகுதி)
ஷெல்லி காலத்திய பிற்போக்கான பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலாளர் காஸ்ட்ரெ பிரபுக்கு (Lord Castlereagh) எதிராக, ஷெல்லியின் மேற்குறிப்பிட்ட வரிகள், மே 27, வெள்ளிக்கிழமை, 100 ஆவது வயதடைந்த, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹென்றி கிஸ்ஸிங்கருக்கும் சம அளவில் பொருந்தும் என்று தாராளவாத யூத பத்திரிகை Forward இல் வெளியான ஒரு கருத்துரை கூறுகிறது.
இது, மனித சுதந்திரம் மற்றும் சமூகப் புரட்சியின் இரண்டு எதிரிகளைக் குறித்த நியாயமான ஒப்பீடு என்பதற்கும் மேலதிகமானதாகும். பிரிட்டிஷ் பேரரசைப் பாதுகாத்த காஸ்ட்ரெ பிரபு, அதன் காலனி நாடுகளில் குறிப்பாக அயர்லாந்தில் புரட்சியை ஒடுக்கவும், பிரெஞ்சு புரட்சியின் மரபு மற்றும் அதன் செல்வாக்கை அழிக்கவும் முயன்றார்.
கிஸ்ஸிங்கர் அவருடைய நீண்ட வாழ்நாளை அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை பாதுகாப்பதற்காகவும், ரஷ்யப் புரட்சியின் மரபு மற்றும் செல்வாக்கை அழிக்கவும் அர்ப்பணித்துள்ளார். அவர் ஜேர்மன் யூதராகப் பிறந்து, யூத இனப்படுகொலையின் போது அவரது குடும்பம் அமெரிக்காவுக்குத் தப்பித்து வந்திருந்தாலும், அவர் ஹிட்லரை ஆதரித்து உத்வேகப்படுத்திய சக்திகளுடனும், ஹிட்லரைப் பின்பற்றிய உலகெங்கிலுமான பாசிச மற்றும் எதேச்சதிகார ஆட்சிகளுடனும் தன்னை அணி சேர்த்துக் கொண்டார்.
கிஸ்ஸிங்கர் ஒருமுறை எரிச்சலூட்டும் விதமாக குறிப்பிட்டது போல — அந்த வாசகம் அவரின் அடையாள முத்திரையாக ஆனதுடன், முதலாளித்துவ அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் உள்ள அவர் அபிமானிகளிடையே “புத்திக்கூர்மையான வாசகம்” என்று கொண்டாடப்பட்டது — “என் பிறப்பு தற்செயலான விபத்தாக இல்லாமல் இருந்திருந்தால், நான் யூத-எதிர்ப்புவாதியாக இருந்திருப்பேன்,” என்றார்.
1975 இல் அங்காராவில் நடந்த துருக்கிய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் கிஸ்ஸிங்கர் கூறுகையில், காங்கிரஸ் சபை வாக்கெடுப்பு அமெரிக்க உதவியைத் தடுத்த பின்னரும், கூட்டாளிகள் துருக்கிக்கு முக்கிய இராணுவ வினியோகங்களை வழங்க நிக்சன் ஏற்பாடு செய்திருக்கலாம் என்று அறிவுறுத்தியதும், அமெரிக்க தூதர் “அது சட்டவிரோதமானது,” என்று கூறினார்.
கிஸ்ஸிங்கர் பதிலளித்தார், “தகவல் சுதந்திரச் சட்டம் வருவதற்கு முன்னர், நான் கூட்டங்களில் பேசும் போது, ‘நாம் சட்டவிரோதமானதை உடனடியாக செய்கிறோம், அரசியலமைப்புக்கு உட்படாதது சற்று கால தாமதமாகிறது,’ என்று கூறுவது உண்டு. [சிரிப்பொலி] ஆனால் தகவல் சுதந்திரச் சட்டம் வந்ததில் இருந்து, இது போன்ற விஷயங்களைக் கூற பயமாக இருக்கிறது,” என்றார்.
இந்தக் கூட்டத்தின் இரகசிய எழுத்தாக்கம், 36 ஆண்டுகளுக்குப் பின்னர், 2011 இல் விக்கிலீக்ஸால் மட்டுமே வெளியிடப்பட்டது.
கிஸ்ஸிங்கரின் குற்றங்கள்
தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உலகளாவிய புரட்சிகர எழுச்சியின் முக்கியக் காலகட்டமான, 1969 இல் இருந்து 1976 வரை, கிஸ்ஸிங்கர், தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும் பின்னர் வெளியுறவுத்துறைச் செயலராகவும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு நேரடியாகப் பொறுப்பேற்றிருந்தார். இராணுவ பலம் கொண்டோ அல்லது அரசியல் ரீதியில் அடிபணிய செய்யப்பட்ட விதத்திலோ அல்லது இரத்தக் கறைப்படிந்த சர்வாதிகாரங்களுக்கு முட்டுக்கொடுத்ததன் மூலமாகவோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிட்ட ஒவ்வொரு நாட்டிலும், அவர் படுமோசமான பாத்திரம் ஆற்றினார்.
அமெரிக்கக் கொள்கை, கிஸ்ஸிங்கரின் வழிகாட்டுதலில் அந்தக் காலக்கட்டத்தில், வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் பேராவது கொல்லப்பட்டனர், இவர்களில் பெரும்பான்மையினர் அமெரிக்கக் குண்டுகளால் கொல்லப்பட்டனர், அமெரிக்க நேபாம் நெருப்பு குண்டுகளால் எரிக்கப்பட்டனர், அல்லது ஆரஞ்சு விஷமருந்து (Agent Orange) போன்ற அமெரிக்க இரசாயனங்களால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டனர். கம்யூனிசத்திற்கு எதிராக, அமெரிக்கா ‘சுதந்திரம்’ மற்றும் ‘ஜனநாயகத்தை’ பாதுகாப்பதாக நிக்சனும் கிஸ்ஸிங்கரும் வழக்கமான பொய்களைக் ஒப்பித்துக் கொண்டிருந்த போது, பலர் சர்வசாதாரணமாக அமெரிக்கத் துருப்புக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
‘வியட்நாமயப்படுத்தும்’ கொள்கையை (Vietnamization) அறிவித்த நிக்சன் நிர்வாகம், வடக்கு வியட்நாம் மற்றும் தேசிய விடுதலை முன்னணி உடனான பேச்சுவார்த்தைகளின் நீண்டகால செயல்முறையைத் தொடங்கியது. இந்த ஏழாண்டுகள் நெடுகிலும், கட்டாய இராணுவச் சேவையில் சேர்க்கப்பட்டிருந்த தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த ஏறக்குறைய அனைத்து அமெரிக்க சிப்பாய்களும் தொடர்ந்து இறந்து போனார்கள். இறப்பு எண்ணிக்கையில் மற்றொரு 30,000 பேர் கூடுதலாகச் சேர்ந்தனர்.
தென்கிழக்கு ஆசியாவில் நடந்த போர்க்குற்றங்கள் எண்ணற்றவை என்றாலும், கம்போடியா மற்றும் லாவோஸ் மீதான இரகசிய குண்டுவீச்சு, கெமர் ரூஜ் (Khmer Rouge) மற்றும் பொல் பாட் (Pol Pot) முன்னணிக்கு வர களம் அமைத்த கம்போடியா மீதான 1970 படையெடுப்பு, வடக்கு வியட்நாமின் முக்கிய நகர மையங்களான ஹனாய் மற்றும் ஹைபோங் (Haiphong) மீதான “கிறிஸ்துமஸ் குண்டுவீச்சு” ஆகியவை மிக முக்கியமான போர்க்குற்றங்களில் உள்ளடங்கும்.
கிஸ்ஸிங்கருக்கும், பாரிஸ் பேச்சுவார்த்தையில் வட வியட்நாமிய தலைமை பேச்சுவார்த்தையாளராக இருந்த லு டக் தோவுக்கும் (Le Duc Tho) 1973 இல், அமைதிக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. பாரிய போராட்டங்கள் இருக்கலாம் என்று அஞ்சி, கிஸ்ஸிங்கர் அவர் விருதைப் பெற நார்வேக்கு செல்லவில்லை. லு டக் தோவும் அவர் விருதை மறுத்து விட்டார்.
இலத்தீன் அமெரிக்காவில், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் மற்றும் சர்வாதிகாரங்களை ஏற்படுத்தும் ஓர் அலை கிஸ்ஸிங்கர் மேற்பார்வையில் நடந்தது. சிலியில் செப்டம்பர் 1973 இல், அகஸ்டோ பினோசே (Augusto Pinochet) சி.ஐ.ஏ ஆதரவுடன் சால்வடொர் அலெண்டேயின் (Salvador Allende) சீர்திருத்தவாத ஆட்சியை இராணுவ ரீதியில் தூக்கியெறியத் தொடங்கிய நடவடிக்கை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அது அலெண்டேயின் மரணத்திலும், பத்தாயிரக் கணக்கான சிலி தொழிலாளர்கள் மற்றும் அரசியல் நடவடிக்கையாளர்களின் படுகொலைகளிலும் போய் முடிந்தது.
அலெண்டே வெற்றி பெற்ற 1970 சிலி தேர்தல்களுக்கு முன்னர், 40 உயர்மட்ட இரகசியக் குழுவின் கூட்டத்தில், “ஒரு நாடு அதன் சொந்த மக்களின் பொறுப்பற்றத்தனத்தால், கம்யூனிச நாடாக ஆவதை நாம் ஏன் ஒதுங்கி இருந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று சிலி குறித்து கிஸ்ஸிங்கர் கூறிய இந்தக் கருத்து அவருடைய மிகவும் கேவலமான மற்றும் அதிகமாக சுட்டிக்காட்டப்படும் கருத்துக்களில் ஒன்றாகும். ‘சிலி இராணுவம் சிலியை ஒரு சர்வாதிகார ஆட்சியிலிருந்தும், அமெரிக்காவை ஓர் எதிரியிடமிருந்தும் காப்பாற்றி இருந்தது,’ என்று இரத்தக்களரியான 1973 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் அவர் எழுதினார்.
அதேபோன்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் ஆர்ஜென்டினா, உருகுவே மற்றும் பொலிவியாவில் தொடர்ந்து நடத்தப்பட்டன. இந்த சர்வாதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்த புரட்சியாளர்களையும் எல்லா வகையான இடதுசாரிகளையும் கொல்லவும் வேட்டையாடவும் அப்பிராந்தியத்தின் இரகசிய பொலிஸ் மற்றும் அமெரிக்க சி.ஐ.ஏ இன் ஒரு கூட்டு நடவடிக்கையான ஆபரேஷன் கான்டொர் (Operation Condor) நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, பிரேசில் மற்றும் பராகுவேயில் நீண்டகாலமாக இருந்து வந்த இராணுவ ஆட்சிகளின் படைகளுடன் ஒன்று சேர்ந்தனர்.
இதேயளவுக்கு உலகின் பிற பகுதிகளில் நடந்த பிற்போக்கான சம்பவங்களிலும் கிஸ்ஸிங்கர் சம்பந்தப்பட்டுள்ளார்: 1975 இல் கிழக்கு திமோர் மீதான இந்தோனேசிய படையெடுப்பு; 1971 இல் பங்களாதேஷ் இராணுவ படுகொலை; ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், சவுதி அரேபியா மற்றும் ஈரான் சர்வாதிகார ஆட்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு மற்றும் உதவி; அங்கோலா மற்றும் மொசாம்பிக்கின் தேசியவாத ஆட்சிகளுக்கு எதிரான அதிதீவிர வலதுசாரி கிளர்ச்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கொஹ் விட்லாமின் (Gough Whitlam) தொழிற்கட்சி அரசாங்கத்தை அகற்றிய கான்பெர்ரா ஆட்சிக்கவிழ்ப்புச் சதிக்கு அமெரிக்காவின் பின்புல ஆதரவு ஆகியவை ஆகும்.
மத்திய கிழக்கில், 1973 அரபு-இஸ்ரேல் போரின் போது, சியோனிச அரசுக்கு பெரும் இராணுவ உபகரணங்களை வாரி வழங்கி, இஸ்ரேலின் இராணுவத் தோல்வியைக் கிஸ்ஸிங்கர் தடுக்க உதவினார். பின்னர் பனிப்போரின் போது சோவியத் யூனியனின் ஆதரவு அரசாக இருப்பதற்குப் பதிலாக, அமெரிக்க ஆதரவு அரசாக கட்சி மாறுவதற்காக அன்வர் சதாக்கின் எகிப்திய ஆட்சிக்கு இலஞ்சம் வழங்கினார்.
கிஸ்ஸிங்கரின் மரபு
ஸ்ராலினிச ஆட்சியின் கீழ், சோவியத் ஒன்றியமும் சீனாவும் உலகளாவிய செல்வாக்கிற்காக ஒன்றோடொன்று போட்டியிட்டு கொண்டிருந்த போது, இது சீனாவின் மன்சூரியா மற்றும் சோவியத்தின் தொலைதூர கிழக்கில் எல்லையோர இராணுவ மோதல்களாகவும் கூட வெடித்த ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ்விரண்டு அதிகாரித்துவப் பொலிஸ் அரசுகளுக்கு இடையிலான பிளவைச் சாதகமாக்கிக் கொண்ட கொள்கைக்காக, உலக பூகோள அரசியல் உலகில், கிஸ்ஸிங்கர் மிகவும் பிரபலமாகப் பார்க்கப்படுகிறார்.
தென்கிழக்கு ஆசியாவிலும் மற்றும் உலகெங்கிலுமான புரட்சிகர போராட்டங்களுக்கு எதிராக ஸ்ராலினிஸ்டுகளின் உதவியைப் பெறுவதற்கு, ஒரே நேரத்தில், மாஸ்கோவுடன் சமரசத்தைத் தழுவியதற்கும் மற்றும் பல தசாப்தங்களாக பெய்ஜிங்கை அங்கீகரிக்காமல் வைத்திருந்த அமெரிக்க கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததற்குமான கிஸ்ஸிங்கரின் மத்திய வேட்கையாக இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்திய வட்டாரங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட இந்தக் கொள்கை தான், பல தசாப்தங்களுக்குப் பின்னர் அவர் பதவியிலிருந்து வெளியேறிய பின்னரும் தொடர்ந்து கிஸ்ஸிங்கரின் செல்வாக்கை நிலைத்திருக்க செய்தது.
நிக்சன்-ஃபோர்டு நிர்வாகம் அதன் எட்டாண்டு கால பதவி காலத்தை நிறைவு செய்து, ஜனநாயகக் கட்சியின் ஜிம்மி கார்ட்டர் வெள்ளை மாளிகையில் நுழைந்த போது, அவர் ‘மனித உரிமைகள்’ பாதுகாப்பை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாக மாற்றுவதாகப் பகிரங்கமாக சூளுரைத்தார். இது, கிஸ்ஸிங்கரின் குற்றங்களது துர்நாற்றத்தைத் துடைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனால் புறவடிவத்தைத் தவிர வேறெதுவும் மாறவில்லை, இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள், ‘மனிதாபிமான’ அக்கறைகள் பற்றிய சிடுமூஞ்சித்தனமான கருத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு சிஐஏ, பென்டகன் மற்றும் வெளியுறவுத்துறையின் நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக இருக்கின்றன.
அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில், நிக்சன்-ஃபோர்டு நிர்வாகத்தில் இருந்த கிஸ்ஸிங்கரின் கூட்டாளிகள் அமெரிக்கப் போர்க் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளடங்குகிறார்கள். கிஸ்ஸிங்கர் வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த போது, பின்னர் ஜனாதிபதியான ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் சிஐஏ இயக்குனராக இருந்தார். வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியும் பின்னர் பாதுகாப்புத்துறைச் செயலருமான டொனால்ட் ரம்ஸ்ஃபீல்டு 2001 இல் பென்டகனுக்குத் திரும்பியதுடன், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீடுகளை அவர் மேற்பார்வை செய்தார். வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக ரம்ஸ்ஃபீல்டை அடுத்து வந்த ரிச்சர்டு செனி, 2001 இல் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் துணை அதிபராக இருந்ததுடன், அந்த நிர்வாகத்தில் முக்கியமான போர்வெறியராக இருந்தார்.
நியூ யோர்க் மற்றும் வாஷிங்டனில் 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியின் துணை தலைவரும் முன்னாள் செனட்டருமான ஜோர்ஜ் மிட்செல் உடன் விசாரணை நடத்த, ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், கிஸ்ஸிங்கரை இருகட்சி விசாரணைக் குழுவுக்குத் தலைவராக நியமித்தார். காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சியினர் இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டனர் என்றாலும், அந்த விசாரணைக் குழு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே மக்கள் போராட்டங்கள் அதை மதிப்பிழக்கச் செய்ய அச்சுறுத்தியதால், கிஸ்ஸிங்கர் அந்தப் பதவிலிருந்து விலக வேண்டியிருந்தது.
அந்த நேரத்தில் WSWS குறிப்பிட்டதைப் போல, “இந்த விசாரணைக் குழுவுக்குத் தலைவராக கிஸ்ஸிங்கரைத் தேர்ந்தெடுத்திருப்பது, செப்டம்பர் 11 தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் நிறைய விஷயங்களை மறைக்க வேண்டியிருப்பதை ஆமோதிப்பதற்கு நிகராக உள்ளது, காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் புஷ் நிர்வாகம், உண்மையைப் புதைக்க உறுதியாக உள்ளது.”
சர்வதேச அளவில் கிஸ்ஸிங்கரின் அவமதிப்பு அதிகரித்து வந்ததையும் நாம் சுட்டிக் காட்டினோம்:
கிஸ்ஸிங்கர் இனி ஐரோப்பாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் சுதந்திரமாக பயணிக்க முடியாது. மனித உரிமைப் போராட்டங்கள் காரணமாக கடந்தாண்டு பிரேசில் பயணத்தை அவர் இரத்து செய்ய வேண்டியிருந்தது. சிலியில் அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரத்தால் கொலை செய்யப்பட்ட ஒரு பிரெஞ்சு பிரஜை தொடர்பான வழக்கில், அவர் பாரிஸிற்கு பயணித்த போது பிரெஞ்சு பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். சிலியின் இராணுவத் தளபதியான ஜெனரல் ரெனே ஷ்னைடரின் படுகொலை ஜெனரல் அகஸ்டோ பினோசேயின் சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்த நிலையில், அதில் கிஸ்ஸிங்கர் வகித்தப் பாத்திரத்திற்காக சிலி மற்றும் அமெரிக்காவில் அவர் மீது வழக்குகள் உள்ளன.
வாஷிங்டன் போஸ்ட் ஞாயிற்றுக்கிழமை அதன் ஸ்டையில் பகுதியின் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டவாறு, இந்த மானக்கேடு இணையத்தில் வெளியாகி உள்ளது. கிஸ்ஸிங்கரின் தவிர்க்க முடியாத மரணத்தைக் கொண்டாடவும், அவர் வெளியுறவுத்துறையின் தலைமையில் இருந்த போது பிறந்தும் இருக்காத மில்லியன் கணக்கான இளைஞர்கள் அவருடைய குற்றங்கள் மீது கொண்டுள்ள அதிகளவிலான வெறுப்பை மற்றும் துவேஷத்தைக் காட்டுவதற்காக பரந்தளவில் சமூக ஊடகங்களில் தயாரிப்புகள் செய்யப்படும் தயாரிப்புகளை அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டி இருந்தது.
அவருடைய முன்வரலாறை, எந்த விதத்தில் சுத்தப்படுத்திக் காட்டினாலும் கூட, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி, கிஸ்ஸிங்கரின் 100 ஆண்டு கால வாழ்வு மீது கருத்துரைப்பதில் பெரும்பாலும் ஊடகங்கள் பதற்றமடைந்துள்ளன. இந்த விஷயத்தில் நியூ யோர்க் டைம்ஸ் இதுவரை ஒரு கட்டுரை கூட எழுதவில்லை என்பது குறிப்பாக குற்ற உணர்வுடன் கூடிய குறிப்பிடத்தக்க மவுனமாக உள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை எந்தளவுக்கு வலதுக்கு நகர்ந்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. சில வேளைகளில் குறிப்பாக சீனா விவகாரத்தில் கிஸ்ஸிங்கர் தேவையற்ற அமெரிக்க ஆக்ரோஷத்தை “மிதமாக” விமர்சிப்பவராக மேற்கோளிடப்படுகிறார், அவர் உக்ரேனிய போருக்கு வெறித்தனமான ஆதரவாளர் ஆவார். அவருடைய On China என்ற 2012 தொகுப்பில், முதலாம் உலகப் போருக்கு முந்தையக் காலப்பகுதியில் வளர்ந்து வந்த ஜேர்மனியை நோக்கி ஏகாதிபத்திய பிரிட்டன் செய்ததைப் போலவே, அமெரிக்கா அதே கொள்கையை ஏற்று வருகிறது, அந்தக் கொள்கை தான் பகிரங்கமான தவிர்க்கவியலாத இராணுவ மோதலுக்கு இட்டுச் சென்றது என்று எச்சரித்திருந்தார்.
ஆனால், அவரது அரசியலின் ஆழமான பிற்போக்குத்தன்மையில் எந்த சந்தேகமும் இல்லை. 1985 இல், மேற்கு ஜேர்மனியின் பிட்பேர்க்கில் உள்ள வாஃபென்-எஸ்எஸ் இராணுவ கல்லறைக்கு ரொனால்ட் ரீகன் சென்று, மலர்வளையம் வைத்ததை அவர் பகிரங்கமாக ஆதரித்தார்.
1973 இல், சோவியத் ஒன்றிய யூதர்கள் இஸ்ரேலில் வந்து குடியேற முடியும் என்ற நம்பிக்கையோடு, சோவியத் யூதர்கள் சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற அனுமதிப்பது பற்றிய பிரச்சினையில் கிஸ்ஸிங்கருக்கு அழுத்தமளித்த இஸ்ரேலிய பிரதம மந்திரி கொல்டா மெய்ர் (Golda Meir) உடனான ஒரு சந்திப்புக்குப் பின்னர், அவர் ரிச்சர்டு நிக்சனுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். 2010 இல் பகிரங்கமாக வெளியிடப்பட்ட அந்த டேப்பில், கிஸ்ஸிங்கர் கூறுகையில், ‘சோவியத் ஒன்றியத்தில் இருந்து யூதர்களை வெளியேற்றுவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நோக்கம் அல்ல, யூதர்களை அவர்கள் சோவியத் ஒன்றிய எரிவாயு கிடங்குகளில் போட்டாலும், அது அமெரிக்காவின் கவலை இல்லை. ஒருவேளை ஒரு மனிதாபிமான கவலையாக வேண்டுமானால் இருக்கலாம்,” என்றார்.
ஹார்வர்ட்டில் வெளியுறவுக் கொள்கையின் ஒரு கல்வித்துறைசார் ‘நிபுணராக’ இருந்த போது 1961 இல் அவர் வெளியிட்ட மிகவும் ஆரம்ப கால படைப்பு ஒன்றில், அவருடைய உலகப் பார்வையைத் தொகுத்தளிக்கிறார்: “அதன் நிலையான காலக்கட்டத்தில் இருந்து, அது முகங்கொடுக்கும் ஒரு புரட்சிகர காலகட்ட கூர்மையான யதார்த்தம் வரையில், ஏக்கத்தில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்வதைத் தவிர இந்த சுதந்திர உலகம் எதிர்கொண்டிருக்கும் அவசரப் பணி வேறொன்றுமில்லை,” என்று குறிப்பிட்டார்.
இந்த வெறுப்பையும் புரட்சியின் மீதான பயத்தையும், அதை நசுக்குவதற்காக ஒவ்வொரு குற்றத்திற்கும் அடியில் உள்ள உறுதிப்பாட்டையும், நூற்றாண்டு கால கிஸ்ஸிங்கரிடமும் — ஜோன் எஃப். கென்னடியில் இருந்து ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜோ பைடென் வரையில் அவரைக் கலந்தாலோசித்த எண்ணற்ற ஏகாதிபத்திய அரசியல்வாதிகளிடமும் காண முடிகிறது.
கிஸ்ஸிங்கரின் குற்றத்தன்மை குறிப்பாக வெளிப்படையான தன்மையைக் கொண்டிருந்தாலும், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடுத்தடுத்த அபிவிருத்தியில் தொடர்ந்து ஆழமடைந்து ஒரு தரநிலையை அமைத்துள்ளது. அவருடைய இந்த 100 ஆம் ஆண்டு, மனிதகுலத்தையே அணுஆயுத பேரழிவின் விளிம்புக்குக் கொண்டு வந்துள்ள, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் விரிவாக்கத்துடன் ஏதோ விதத்தில் பொருந்தி வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்றைய பிரதிநிதிகளைப் பொறுத்த வரை, ‘ஒரு புரட்சிகர காலக்கட்டத்தின் அப்பட்டமான யதார்த்தத்தை’ எதிர்கொண்டுள்ள அவர்கள், அதைக் கட்டுப்படுத்த எதையும் செய்ய இயலாதவர்களாக உள்ளனர்.
