ஹெலன் ஹால்யார்ட் (1950-2023), தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஹெலன் ஹால்யார்ட், அக்டோபர் 2022.

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஒரு முன்னணி தலைமை உறுப்பினரான ஹெலன் ஹால்யார்ட் நவம்பர் 28, 2023 அன்று தனது 73 வயதில் திடீரென காலமானர்.

ஹெலன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்காகப் போராடினார். 1971 இல் வேர்க்கர்ஸ் லீக்கின் (Workers League) இளைஞர் இயக்கமான இளம் சோசலிஸ்டுகளில் (Young Socialists) இணைந்துகொண்ட அவர், விரைவிலேயே கட்சியிலும் இணைந்து கொண்டார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைவதற்கான அவரது முடிவு மிகவும் நனவான அரசியல் ஈடுபாடாகும், இது சிவில் உரிமைப் போராட்டங்கள் மற்றும் வியட்நாமில் போருக்கு எதிரான இயக்கத்தின் ஒருங்கிணைந்த தாக்கத்தின் கீழ் அவரது அரசியல் தீவிரமயமாக்கலின் விளைவாக இருந்தது.

ஹெலன் ஆரம்பத்தில் மூன்றாம் உலக விடுதலை முன்னணி (Third World Liberation Front) எனப்படும் ஒரு தீவிர இளைஞர் குழுவில் சேர்ந்திருந்தார். ஆனால், முழு தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு புரட்சிகர முன்னோக்குத்தான் தேவை என்று விரைவாக முடிவு செய்தார். அவர், கறுப்பின அல்லது 'மூன்றாம் உலக' தேசியவாதத்தின் முன்னோக்கை நிராகரித்து உடைத்துக் கொண்டு, ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் முன்னோக்கை நாடினார். இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் மட்டுமே போராடப்பட்ட ஒரு முன்னோக்கு ஆகும், இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதுடன், அந்த நேரத்தில் அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் அதன் இளைஞர் குழுவான இளம் சோசலிஸ்டுகள் (இப்போது சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு) ஆகியவை மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டன.

ஹெலன் ஆகஸ்ட் 1985 இல் டெட்ராய்ட் மேயருக்குப் போட்டியிட்டபோது ஒரு வேலைவாய்ப்புக்கான பேரணியில் பிரச்சாரம் செய்கிறார்

கட்சியில் இணைந்த முதல் நாட்களிலிருந்தே, அவரது ஆற்றல், உறுதிப்பாடு மற்றும் அரசியல் தீவிரத்தன்மை ஆகியவைகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஹெலன் வேர்க்கர்ஸ் லீக்கின் மத்திய குழுவிற்கும் இளம் சோசலிஸ்டுகளின் தேசிய செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 1974 இல், ஹெலன் வேர்க்கர்ஸ் லீக்கின் வரலாற்றில் பொதுப்பணி அலுவலக பதவிக்கான முதல் வேட்பாளரானார், நியூயோர்க்கின் 12 வது மாவட்டத்தில் காங்கிரசுக்காக போட்டியிட்டார், இது பெட்ஃபோர்ட்-ஸ்டுய்வெசண்ட் மற்றும் புரூக்ளினின் அருகிலுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது.

அவரது தொடக்கப் பிரச்சார அறிவிப்பு இவ்வாறு தொடங்கியது:

நான் பிரவுன்ஸ்வில்லில் பிறந்து பெட்ஃபோர்ட்-ஸ்டுய்வெசண்டில் வளர்ந்தேன். நான் வசித்த பகுதிகளில், கேட்ஸ் மற்றும் ஸ்டூவெசண்ட் அருகில், இப்போது வெறும் காலி இடங்கள் அல்லது மிகவும் பழைய குடியிருப்பு வீடுகள் மட்டுமே உள்ளன. நான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளி 57 இல் கல்வி கற்றேன், பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். புரூக்ளினின் பெட்ஃபோர்ட்-ஸ்டுய்வெசண்ட் பிரிவானது, நாட்டின் மிக மோசமான கல்வி நிலையை நீங்கள் காணலாம். கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன, மேலும் பள்ளிகளின் வசதிகளுக்கான நிதிகள் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளன.

தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ இரு-கட்சி அமைப்புமுறையில் இருந்து அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்கவும், நிக்சன் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டிற்கும் எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை முன்னேடுக்க வேண்டியதன் அவசியத்தின் மீது பிரச்சாரத்தின் கவனம் இருந்தது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிக்சன் மீது தொழிலாளர்களுக்கு இருக்கும் பெரும் வெறுப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் அதற்கு ஒரு அரசியல் திசையைக் கொடுப்பதற்குமே நாங்கள் போராடுகிறோம். இந்த வெறுப்பு நிக்சன் மீது மட்டுமல்ல, ஜனநாயகக் கட்சியினருக்கும் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம், மோசமான வீட்டுவசதி, ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு எந்தக் கட்சியும் எந்த மாற்றீட்டையும் வழங்க முடியாது. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருநிறுவனங்களை அம்பலப்படுத்துவதற்காகவே நான் போட்டியிடுகிறேன்.

1972ல் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முதல் கறுப்பினப் பெண்மணியாக, தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தவரும், பதவியிலிருந்தவருமான ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஷெர்லி சீஷோமுக்கு, 23 வயதான ட்ரொட்ஸ்கிஸ்ட்டான ஹெலன் சவால் விடுத்தார்.

சீஷோம் பதவியிலிருந்த காலத்தில், பெட்ஃபோர்ட்-ஸ்டுய்வெசந்தில் நிலைமைகள் இன்னும் மோசமடைந்துள்ளன. அவரும் ஜனநாயகக் கட்சியினரும் மிகவும் தீவிரமாக ஆதரித்த அனைத்து வறுமைத் திட்டங்களும், மாதிரி நகரங்கள் உட்பட, கிட்டத்தட்ட முற்றிலுமாக மறைந்துவிட்டன.

எமது பிரச்சாரம் ... வேலைவாய்ப்புகளுக்கோ அல்லது சிறந்த நிலைமைகளுக்கோ எதிரான போராட்டமல்ல, மாறாக உண்மையில் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய தலைமையை கட்டியெழுப்புவதற்கானதாகும். முதலாளித்துவ அமைப்புமுறையின் இந்த முறிவை சோசலிசக் கொள்கைகள் மூலம் எதிர்கொள்ள நமது இயக்கத்தால் மட்டுமே முடியும். இந்த அமைப்புமுறையை சீர்திருத்த முடியும் என்ற பிரமைகள் எங்களுக்கு இல்லை. அதனால்தான் ஒரு தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான எமது போராட்டம் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான ஒரு படியாகும்.

அந்தக் காலகட்டத்தில், 1930 களில் CIO (தொழில்துறை அமைப்புகளின் காங்கிரஸ்) தொழிற்சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலாளர் கட்சியை கட்டியெழுப்புவதன் மூலம் வெகுஜன தொழிலாள வர்க்க இயக்கம் ஒரு அரசியல் வடிவத்தை எடுக்க வேண்டும் என்று ட்ரொட்ஸ்கியின் அழைப்பை வேர்க்கர்ஸ் லீக் முன்னெடுத்தது. பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அரசுக்கு முற்றிலும் அடிபணிந்த, பெருநிறுவன நிறுவனங்களாக தொழிற்சங்கங்கள் மாற்றப்பட்ட பின்னர், வேர்க்கர்ஸ் லீக்கை சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றுவதன் மூலமும், தொழிலாளர் கட்சி கோரிக்கையை திரும்பப் பெறுவதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன் உடனடி பணியாக முன்னிறுத்துவதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான அதன் போராட்டத்தின் வடிவத்தை மாற்றியது. தோழர் ஹெலன் இந்த மாற்றத்தை முழுமையாக ஆதரித்து அதற்காக போராடினார்.

ரிம் வோல்ஃபோர்த் உடனான மோதல்

ஹெலனின் அரசியல் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனை ரிம் வோல்ஃபோர்த், வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து விலகியதைத் தொடர்ந்து வந்தது. ஜனவரி 1973 இல் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் உடைந்ததால், வேர்க்கர்ஸ் லீக்கின் முதல் தேசிய செயலாளராக இருந்த வோல்ஃபோர்த் மேலும் நோக்குநிலை திசைவிலகலுக்குட்பட்டார்.

மார்க்சிச தத்துவம் மற்றும் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகள் குறித்த முழுமையான அறிவு இல்லாத போதிலும், வோல்ஃபோர்த் தனது துணையான நான்சி ஃபீல்ட்ஸை வேர்க்கர்ஸ் லீக்கின் பயனுள்ள இணைத் தலைவர் பாத்திரத்திற்கு உயர்த்தினார். 1973 ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து 1974 கோடைகாலம் வரை, வோல்ஃபோர்த் மற்றும் ஃபீல்ட்ஸ் வேர்க்கர்ஸ் லீக்கிற்குள் ஒரு நாசகார நடவடிக்கையை மேற்கொண்டனர். அதே நேரத்தில், வேர்க்கர்ஸ் லீக்கிற்கும் அனைத்துலகக் குழுவிற்கும், ஃபீல்ட்ஸ் ஒரு உயர்மட்ட சிஐஏ முகவருடனான நெருக்கமான குடும்ப உறவுகளை வைத்திருப்பதை அவர்கள் மறைத்தனர்.

1974 ஆகஸ்டில் இந்த அதிர்ச்சியூட்டும் பாதுகாப்பு மீறல் பற்றி அறிந்த வேர்க்கர்ஸ் லீக்கின் மத்தியக் குழுவானது, வோல்ஃபோர்த்தை தேசிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதுடன், விசாரணை முடியும் வரை ஃபீல்ட்ஸை இடைநீக்கம் செய்தது. இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தனர், கட்சியை விட்டு வெளியேறினர், இயக்கத்தின் பாதுகாப்பு குறித்த எந்தவொரு அக்கறையையும் கண்டித்தனர், மேலும் 1964 இல் வோல்ஃபோர்த் உடைத்துக் கொண்டு வந்திருந்த சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) அவர்கள் மீண்டும் இணைந்தனர்.

ஹெலன் ஹால்யார்ட் அந்த மத்தியக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உறுதியான நோக்குநிலைக்கான அரசியல் போராட்டத்தை ஆதரித்ததோடு, வோல்ஃபோர்த் உடனான மோதலின் மையமாக இருந்த பப்லோவாதிகளின் ட்ரொட்ஸ்கிச-விரோத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை புதுப்பிப்பதையும் ஆதரித்தார்.

ஹெலன் வோல்ஃபோர்த்தின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போக்கில் மிகவும் குறிப்பிடத்தக்க அரசியல் வளர்ச்சியை ஏற்படுத்தினார், கட்சியின் மையத் தலைவராக உருவெடுத்தார். 1975 மே மாதம் நடைபெற்ற அனைத்துலகக் குழுவின் ஆறாவது மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். வோல்ஃபோர்த் மற்றும் பின்னர் சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் தலைவரான ஜோசப் ஹான்சன் ஆகியோர் அரச ஊடுருவல் மற்றும் கண்காணிப்புக்கு எதிரான பாதுகாப்பு குறித்த அக்கறையை 'சித்தப்பிரமை' என்று கண்டித்த பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் பற்றிய விசாரணையைத் தொடங்க மாநாடு வாக்களித்தது.

ஹெலன் ஒரு தேசியத் தலைவர் மட்டுமன்றி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஒரு உலகக் கட்சியாக அபிவிருத்தி செய்வதில் ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒரு சர்வதேசத் தலைவராகவும் இருந்தார். அவர் பரந்த அளவில் பயணம் செய்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பல தலைவர்களுடன் பரிச்சயமானார். பிரிட்டிஷ் பிரிவில் சிறிது காலம் பணியாற்றிய அவர், வெளிநாடுகளில் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டார்.

அவரது அரசியல் நடவடிக்கையின் ஆரம்ப ஆண்டுகளில், ஹெலன் நியூயோர்க் நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தார். குறிப்பாக புரூக்ளின் கடற்படை யார்டு தொழிலாளர்கள் மற்றும் புரூக்ளின் யூனியன் கேஸில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள், அங்கு வேர்க்கர்ஸ் லீக் தொழிற்துறை தொழிலாளர்களை அடைவதற்கான அதன் முயற்சிகளில் கவனம் செலுத்தியது. கட்சிக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

கேரி டைலர் வழக்கு

அவரது மிக முக்கியமான தலையீடுகளில் ஒன்று, சமீபத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட டெஸ்ட்ரெஹான் உயர்நிலைப் பள்ளியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வெள்ளைக் கும்பல் தாக்கிய சம்பவத்தின் போது, லூசியானாவில் 13 வயது வெள்ளை இளைஞரை சுட்டுக் கொன்றதற்காக 16 வயதில் தவறாக குற்றம் சாட்டப்பட்ட கேரி டைலருக்கு அனைத்து வெள்ளையின நடுவர் மன்றம் குற்றவாளி என மரண தண்டனை விதித்தது. இந்த வழக்கு ஹெலனினது குறிப்பிடத்தக்க தலையீடுகளில் ஒன்றாக இருந்தது.

இளம் சோசலிஸ்டுகள் இந்த வழக்கை அமெரிக்கா முழுவதும் விளம்பரப்படுத்தி, பத்தாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இந்த வழக்கை விளக்கும் சிறு அறிக்கையின் நகல்களையும் விநியோகித்தனர், மேலும் பல மில்லியன்கணக்கான தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளின் ஆதரவைப் பெற்றனர்.

டெட்ராய்ட்டில் ஜூன் 5, 1976 அன்று நடந்த இளம் சோசலிஸ்டுகளின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் ஹெலன் உரையாற்றுகிறார்

இந்தப் பிரச்சார நடவடிக்கையானது 1976 ஆம் ஆண்டில் ஹார்லெம் வழியாக ஒரு அணிவகுப்பில் முடிவடைந்தது, இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். ஹெலன் மற்றும் 1977 அக்டோபரில் ஒரு அரசியல் படுகொலையில் இறந்த வேர்க்கர்ஸ் லீக்கின் ஒரு முன்னணி தலைமை உறுப்பினரான ரொம் ஹெனெஹான் ஆகியோர் இந்த பிரச்சாரத்தை வழிநடத்தினர். ஹெலன் டைலர் குடும்பத்துடன், குறிப்பாக கேரியின் தாயார் ஜுவானிட்டாவுடன் நெருக்கமான உறவை உருவாக்கினார். ஹெலன் டெஸ்ட்ரெஹானில் அவரைச் சந்தித்தார், ஜூனிட்டா டைலர் டெட்ராய்ட்டுக்கு இளம் சோசலிஸ்டுகள் மாநாட்டிற்காக வந்தார், அங்கு கேரி டைலரின் பாதுகாப்பு முக்கிய மையக் குவிப்பாக இருந்தது.

1976 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை மறுசீரமைப்பதன் மூலம் தீர்ப்பை வழங்கியது. ஆனால் லூசியானாவில் உள்ளதைப் போன்ற கட்டாய தண்டனைச் சட்டங்களை இரத்து செய்தது, கேரி மரண தண்டனையிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், அவரது அசல் தண்டனை அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றம் கண்டறிந்த போதிலும், அவர் 41 ஆண்டுகள் சிறையில் இருந்தார். கேரி போன்ற இளவயது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டில்தான் அவர் விடுவிக்கப்பட்டார்.

வேர்க்கர்ஸ் லீக் தனது அமைப்பு மையத்தை 1978-79ல் நியூயோர்க் நகரத்திலிருந்து டெட்ராய்டுக்கு மாற்றியது, ஹெலன் டெட்ராய்ட்டுக்கு குடிபெயர்ந்தார். GM, ஃபோர்டு மற்றும் கிறைஸ்லர் மற்றும் தொழிற்துறை தொழிலாளர்களின் பிற பிரிவுகளிடையே சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வரவேற்றார். அவர் விரைவில் டெட்ராய்ட் பகுதி முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார் மற்றும் மதிக்கப்பட்டார்.

கட்சியானது துணைச் தேசிய செயலாளர் பதவியை உருவாக்கியபோது, அதை நிரப்ப ஹெலன் பக்கம் திரும்புவது இயல்பானதே. இந்தத் தலைமைப் பாத்திரத்திற்கு எல்லையற்ற மற்றும் தளராத ஆற்றல், கட்சிக் காரியாளர்களுடன் ஆழ்ந்த பரிச்சயம், கட்சியின் வேலைத்திட்டம் மற்றும் அரசியல் மரபு பற்றிய முழுமையான அறிவு, அரசியல் முதிர்ச்சி மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் ஒரு மொத்தப் பண்பும் தேவைப்பட்டது. இந்தக் குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்த ஹெலன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் அன்றாட பணிகளை முன்னின்று நடத்தினார்.

பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவர்களான ஜெர்ரி ஹீலி, மைக்கேல் பண்டா மற்றும் கிளிஃப் ஸ்லோட்டர் ஆகியோரால் ட்ரொட்ஸ்கிசம் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில் கட்சியானது, ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்த 1980 களில் இது மிகவும் முக்கியமானதாக இருந்தது. 1963ல் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியானது (SWP) பப்லோவாதிகளுடன் கொள்கையற்ற மறுஒருங்கிணைப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரித்தானிய பிரிவு, 1980 களின் போக்கில் கூர்மையாக வலது பக்கம் நகர்ந்தது.

வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலாளரான டேவிட் நோர்த், 1982ல் மார்க்சிசத்துடனான ஹீலியின் முறிவு பற்றிய ஆரம்ப விமர்சனத்தை முன்வைத்ததுடன், 1985-86ல் அனைத்துலகக் குழுவிற்குள் பிளவு ஏற்பட்டபோது, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அப்பட்டமாக கைவிடலுக்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை வழிநடத்தினார். இந்தப் போராட்டம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ட்ரொட்ஸ்கிச பெரும்பான்மையினரின் வெற்றியிலும், புரட்சிகர அரசியலைக் கைவிட்ட ஹீலி, பண்டா மற்றும் ஸ்லோட்டர் ஆகியோரின் தோல்வியிலும் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஹெலன் இந்த அரசியல் போராட்டத்தை ஆதரித்தார், அது அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச கொள்கைகளுக்கான வேர்க்கர்ஸ் லீக்கின் போராட்டத்தின் உந்து சக்தியாக மாறியது. துணை தேசியச் செயலாளர் என்ற முறையில், ஹெலன் எப்போதும் கட்சியின் நாடித்துடிப்பில் விரலை வைத்திருந்தார். கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அன்றாடப் பிரச்சினைகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், புதிய உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, தோழர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எதிர்கொள்ள அவர் அஞ்சவில்லை.

அரசியல் தரங்களைக் குறைப்பதன் மூலமாக அல்ல, மாறாக அந்த தருணத்தின் புரட்சிகர சாத்தியக்கூறுகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் அவர் அதைச் செய்தார். ஒருபோதும் அவர் மனச்சோர்வடைந்ததில்லை. சிரமங்களை முழுமையாக யதார்த்தமாக மதிப்பீடு செய்தார், அவற்றை ஒதுக்கி வைக்கவில்லை, ஆனால் சமரசம் செய்வதை விட அவற்றை எதிர்த்துப் போராடினார், அது ஒரு தொழிலாளியை நன்கொடை அளிக்கச் செய்வது அல்லது ஒரு கட்சி உறுப்பினரின் பணியின் அளவை அரசியல் சூழ்நிலைக்குத் தேவையான அளவுக்கு உயர்த்துவதைச் செய்வதாக இருந்தது. கல்வியூட்டுதல் மற்றும் முன்மாதிரி மூலமாக அவர் இவைகளை மெய்ப்பித்துக் காட்டினார்.

ஜூலை 8, 2023 அன்று டெட்ராய்ட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கேரியின் கலைப் படைப்புகளில் ஒன்றின் முன் நிற்கும் கேரி டைலர், ஜெர்ரி வைட் மற்றும் லாரி போர்ட்டர் ஆகியோருடன் ஹெலன்.

கட்சி வேட்பாளராக ஹெலன்

ஒரு பொறுமையான ஆனால் விடாப்பிடியான போராட்டத்தை நடத்துவதற்கான ஹெலனின் திறன் அவரது அனைத்து பணிகளிலும் ஒரு நிலையான அம்சமாக இருந்தது. அனைத்து இனங்கள், பாலினங்கள், வயதுகள் மற்றும் அனுபவங்களைப் பற்றி எவருடனும், குறிப்பாக தொழிலாளர்களுடனும் அவரால் பேச முடியும். இது அவரை கட்சியின் ஒரு வலிமையான மக்கள் பிரதிநிதியாக ஆக்கியது, மேலும் அவர் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் காங்கிரசுக்கான தேர்தல் பிரச்சாரங்களிலும், 1984 இல் துணை ஜனாதிபதி பதவிக்கும் இந்த முக்கியமான பணியை மேற்கொண்டார், இது முதல் முறையாக வேர்க்கர்ஸ் லீக் ஒரு தேசியளவில் போட்டியிட்டு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டது. ஜனாதிபதி வேட்பாளராக நியூயோர்க் நகரைச் சேர்ந்த ஒரு சோசலிச போக்குவரத்து ஊழியரான எட் வின் இருந்தார், அவர் கேரி டைலருக்கு ஆதரவான பிரச்சாரத்தின் போது கட்சியில் சேர்ந்திருந்தார். 1985 ஆம் ஆண்டில், ஹெலன் டெட்ராய்ட் மேயர் பதவிக்கு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.

ஹெலனுடன் எட் வின் மற்றும் இளம் சோசலிஸ்டுகள் 1984 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ரிவர் ரூஜ் ஃபோர்டு ஆலையிலுள்ள மேம்பாலத்தின் கீழ் பிரச்சாரம் செய்கின்றனர்.

1992ல் ஹெலன் அமெரிக்க ஜனாதிபதிக்கான வேர்க்கர்ஸ் லீக் வேட்பாளராக போட்டியிட்டார். சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற முதல் ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும், இது பப்லோவாத திருத்தல்வாத முன்னோக்கின் வரலாற்று திவால்நிலையை நிரூபித்தது. பப்லோவும் மண்டேலும் கூறியது போல, ஸ்ராலினிசம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் மற்றும் தோற்கடிக்கும் திறன் கொண்ட ஒரு முற்போக்கான சக்தியாக இருக்கவில்லை. மாறாக, அது முதலாவது தொழிலாளர் அரசிற்குள் ஏகாதிபத்தியத்தின் முகவராக இருந்தது, அதன் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிலும் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதிலும் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதுதான் வேர்க்கர்ஸ் லீக் அதன் வரலாறு முழுவதும் போராடியதாகும்.

ஹெலன் ஒரு தொழிற்சாலைத் தொழிலாளியுடன் பேசுகிறார், பிப்ரவரி, 1992.

உலக முதலாளித்துவத்தின் கோட்பாட்டாளர்கள் மற்றும் வக்காலத்து வாங்குவோர்கள் கூறுவது போல 'வரலாற்றின் முடிவை' பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பதிலாக, சோவியத் ஒன்றியத்தின் சரிவானது ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் மீள்உருவாக்கம் செய்வதற்கான பாதையைத் திறந்து விட, பாரசீக வளைகுடாப் போர் தொடங்கியது. இதில் அமெரிக்கா ஈராக்கிய இராணுவத்தின் பெரும்பகுதியை அழித்து குவைத்தை மீண்டும் கைப்பற்றியது. ஆனால், முழு அளவிலான பாக்தாத் மீது நேரடி இராணுவ நகர்வை தொடங்குவதை தவிர்த்தது. இது சோவியத் ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படுவதற்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது, இருப்பினும் முடிவு தெளிவாகத் தெரிந்தது.

இந்த மாபெரும் வரலாற்றுக் கேள்விகளானது 1992 ஆண்டில் வேர்க்கர்ஸ் லீக் பிரச்சாரத்தை வடிவமைத்தன, இது எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச கட்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அனைத்துலகக் குழுவையும் கட்டியெழுப்ப முற்படும் ஒரு சர்வதேச பிரச்சாரமாக இருந்தது. தோழர் ஹெலன் வேர்க்கர்ஸ் லீக் பிரச்சாரத்தை ஐரோப்பா, தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எடுத்துச் சென்றார். அன்றைய இலையுதிர் காலப் பிரச்சாரத்தில், அவர் உரையாற்றிய மிகப் பெரிய கூட்டங்கள் இலங்கையில் இருந்தன என்பதில் அவர் குறிப்பாக பெருமிதம் கொண்டார், அங்கு அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவால் கொழும்பு மற்றும் கண்டியில் ஒன்றுதிரட்டப்பட்ட ஆதரவாளர்களிடம் பேசினார்.

ஹெலன் ஹால்யார்ட் தனது 1992 ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சார உலக சுற்றுப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உரையாற்றுகிறார், நவம்பர் 1992.

வேர்க்கர்ஸ் லீக் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஹெலன் நெருக்கமாக ஈடுபட்டிருந்தார். டெட்ராய்டில் பயங்கரமான வீட்டுவசதி மற்றும் வறுமையை அம்பலப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 1993 மேக் அவென்யூ தீவிபத்து விசாரணையான, ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏழு குழந்தைகள் கொல்லப்பட்ட பின்னர் பொது வசதிகளின் முடக்கங்களின் கொடிய தாக்கமும் இதில் அடங்கும், மேலும் அவர்களின் பெற்றோர்கள் நகர நிர்வாகத்தால் பலிகடாக்களாக்கப்பட வழக்குத் தொடரப்பட்டது. டெட்ராய்டை நீண்டகாலமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் மீது குற்றம் சாட்டிய குடிமக்கள் விசாரணைக்கு தலைமை தாங்கிய ஆறு ஆணையர்களில் ஹெலனும் ஒருவராக இருந்தார், மேலும் தீவிபத்தின் உடனடி காரணமான பொது வசதி பயன்பாட்டு நிறுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மின்சாரம், வெப்பம் மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசியங்களை அனைவருக்கும் அடிப்படை மனித உரிமைகளாக வழங்கவும் கோரிக்கைகளை விடுத்தார்.

வேர்க்கர்ஸ் லீக் முதல் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் வரை

1995ல், சோசலிச சமத்துவக் கட்சியைத் தொடங்குவதற்கான முடிவை வேர்க்கர்ஸ் லீக் எடுத்தது. இந்தப் பரிணாமம் பெயரை மாற்றுவதை விட அதிகமாக சம்மந்தப்பட்டிருந்தது, ஆனால் தொழிற்சங்கங்கள் தங்கள் அதிகாரத்துவ தலைவர்களை அம்பலப்படுத்த கோரிக்கைகள் வைப்பதில் கட்சி கவனம் செலுத்திய காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. பழைய அமைப்புக்களை சீர்திருத்தம் செய்யவோ அல்லது சாமானியர்களின் அடித்தளத்திலிருந்து வரும் அழுத்தங்களுக்கு அவை பதிலளிக்கவோ இயலாததாகிவிட்டதாக தொழிலாளர்களிடம் சோசலிச சமத்துவக் கட்சி கூறியது. அவைகள் ஜனநாயகக் கட்சியின் மூலம் பரப்பப்பட்ட முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கட்டளைகள் மற்றும் தேவைகளுக்கு மட்டுமே பதிலளிக்கும் அதிகாரத்துவ கூண்டுகள் ஆகும். அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தொழிலாளர்கள் புதிய அமைப்புக்களை கட்டியெழுப்புவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய வேண்டியிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், கணினி தொழில்நுட்பத்தின் பரவல் மற்றும் இணையத்தின் வளர்ச்சி ஆகியவற்றால் வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கு விடையிறுப்பாக, சோசலிச சமத்துவக் கட்சியும் அனைத்துலகக் குழுவிலுள்ள அதன் சகோதரக் கட்சிகளும் உலக சோசலிச வலைத் தளம் என்ற ஒரு கூட்டு உலகளாவிய வெளியீட்டைத் தொடங்கின. பல்வேறு பிரிவுகளால் தனித்தனியாக வெளியிடப்பட்ட அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை மாற்றியமைத்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒவ்வொரு பிரிவின் அரசியல் மற்றும் தலையாயப் பணிகளால் இது நிலைநிறுத்தப்பட்டது. உலக சோசலிச வலைத் தளம், உலகில் மிகவும் பரவலாக வாசிக்கப்படும் சோசலிச வெளியீடாகவும், ட்ரொட்ஸ்கிசத்தின் அதிகாரப்பூர்வ குரலாகவும் மாறியுள்ளது. அது, அதன் கடுமையான எதிரிகளால் கூட அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தோழர் ஹெலன் பெரும் பங்காற்றினார். அவர் 2008 வரை துணைச் தேசிய செயலாளராக இருந்தார், 2003 இல் ஈராக் போருக்கு எதிரான பாரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தலையீடுகள் உட்பட நடைமுறை அரசியல் பணிகளின் பெரும் பகுதியை வழிநடத்தினார். அரசியல் கைதிகளைப் பாதுகாப்பதில் தனது உறுதிப்பாட்டை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தினார், முமியா அபு-ஜமால் வழக்கில் விரிவாகவும், கறுப்பின தேசியவாதம் மற்றும் சிவில் உரிமைப் போராட்டத்தின் வரலாறு குறித்தும் இன்னும் பரந்தளவில் எழுதினார்.

2008ல், அதிகரித்து வந்த உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட ஹெலன், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரசில் துணைச் தேசிய செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார், ஆனால் அவர் கட்சியின் தேசிய குழுவில் இருந்து தொடர்ந்து அரசியல் தலைமைத்துவத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தார்.

2020 ஆம் ஆண்டில் கோவிட் -19 பெருந்தொற்று நோய் வெடித்த பிறகு, தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் மட்டுமே, ஹெலன் பொது அரசியல் பணிகளில் தனது சுறுசுறுப்பான பங்கேற்பைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இருப்பினும், அவர் தொடர்ந்து தொலைதூர முறையில் சந்திப்புகளை ஏற்படுத்தி கல்வியூட்டல் மற்றும் நிதி திரட்டலில் பங்கேற்றார், அங்கும் அவர் சிறந்து விளங்கினார்.

ஒரு ஆளுமை என்ற முறையில், 1917 அக்டோபர் புரட்சியின் பின்னர் உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த ஆப்பிரிக்க அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சிறந்த மரபுகளை ஹெலன் பிரதிபலித்தார். 1920 களின் ஹார்லெம் மறுமலர்ச்சியால் (Harlem Renaissance) உருவாக்கப்பட்ட இலக்கியங்களில் அவர் மிகவும் உள்வாங்கப்பட்டவராகவும், நன்கு கற்றுத்தேர்ந்தவராகவும், ரஷ்யப் புரட்சியால் பெரிதும் ஈர்க்கப்பட்டவராகவும், கறுப்பின அறிவுஜீவிகளிடையேயான பிற்கால வளர்ச்சிகளை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். கலிபோர்னியாவின் ஓக்லாந்திலுள்ள பள்ளி வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'கறுப்பின மொழி' என்று கூறப்படும் 'எபோனிக்ஸ்' குறித்த கட்டுரை போன்ற அவரது சொந்த பங்களிப்புகள், தேசியவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட கலாச்சார பிற்போக்குத்தனத்திற்கு தனது எதிர்ப்பை தெளிவாக வெளிப்படுத்தின. (பார்க்கவும் : எபோனிக்ஸ் மற்றும் இனவாத அரசியலின் ஆபத்து: ஒரு சோசலிசப் பார்வை, ஏப்ரல் 21, 1997.)

1970 களின் முற்பகுதியில் ட்ரொட்ஸ்கிசத்திற்காக வென்றெடுக்கப்பட்ட தன்னைப் போன்றவர்களுக்கும், அரசியலில் புதிதாக நுழைந்தவர்களுக்கும், குறிப்பாக ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாதத்தின் துரோகங்களில் இருந்து தப்பிய நான்காம் அகிலத்தின் பழைய உறுப்பினர்களுக்கும் ஹெலன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் காரியாளர்கள் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டிருந்தார்.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் வாழ்நாள் முழுவதும் முன்னணி பங்கேற்பாளர்களாக இருந்தவர்களும், 1930கள் மற்றும் 1940களில் பெரும் தொழிலாளர் போராட்டங்களின் அனுபவசாலிகளும், சோசலிச தொழிலாளர் கட்சியின் மிகச் சில உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் புரூஸ்ட், அவரது கணவர் பில் ஆகியோர்களுடனான ஹெலனின் உறவே இதனை குறிப்பாக நிரூபிக்கிறது. 1997 ஆம் ஆண்டில் அப்போது 76 வயதான ஜீன் தனது இறுதி உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது, ஹெலன் தனது கவனிப்பை ஏற்க மினியாபோலிஸுக்கு பல மாதங்கள் சென்றார். பின்னர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலான ஜீனின் வாழ்நாள் செயல்பாட்டை நினைவுகூரும் வகையில், இரட்டை நகரங்களில் அவருக்கு நடத்தப்பட்ட நினைவேந்தல் கூட்டத்தை ஹெலன் ஏற்பாடு செய்தார்.

டெட்ராய்டில் சோவியத் வரலாற்றாசிரியர் வாடிம் ரோகோவினுடன் ஹெலன், பிப்ரவரி 22, 1995.

சோவியத் இராஜதந்திரியும் ட்ரொட்ஸ்கியுடன் நெருக்கமான ஒத்துழைப்பாளருமாக இருந்த அடோல்ஃப் ஜோப்பின் (Adolph Joffe) மகளான நடேஷ்டா ஜோஃப்விடமும் ஹெலன் இதே அணுகுமுறையைக் கொண்டிருந்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1927 இல் அடோல்ப் ஜோஃப் தற்கொலை செய்து கொண்டார். நடேஷ்டா ஜோஃப், தனது நினைவுக் குறிப்பு நூலான பின்னோக்கிய காலம், எனது வாழ்க்கை, எனது விதி, எனது சகாப்தம் (Back in Time, My Life, My Fate, My Epoch) என்பதனை, 1993 ஆம் ஆண்டு, மெஹ்ரிங் பதிப்பகம் வெளியிட்ட நேரத்தில், அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார். ஸ்ராலினுக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியத்தில் இடது எதிர்ப்பு அணியில் உயிருடன் எஞ்சியிருந்த உறுப்பினரால் எழுதப்பட்ட ஒரே நினைவுக் குறிப்பு இதுவாகும்.

ஹெலனும், சோசலிச சமத்துவக் கட்சியும் நியூயோர்க் நகரில் இந்த நூல் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்த பின்னர், 'ஆசிரியர் என். ஜோஃப் அவர்களின் மரியாதையுடனும் நன்றியுடனும்' என்ற வாக்கியத்தை நூலில் பொறித்து, கையெழுத்திட்ட பிரதியை நடேஷ்டா ஜோஃப், ஹெலனுக்கு வழங்கினார். ஹெலன் தனது பல புத்தகங்களில் இந்த தொகுதியை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து ஒரு இடத்தில் வைத்திருந்தார்.

முடிவாக, ஹெலன் எப்போதும் தெளிவாகவும் வலுவாகவும் பேசுவதைப் போல, அவரே அவரைக் குறித்து பேச அனுமதிப்பது நல்லது. 2007 மார்ச் 31-ஏப்ரல் 1 அன்று மிச்சிகனிலுள்ள ஆன் ஆர்பரில் SEP மற்றும் IYSSE ஆகியவை இணைந்து நடத்திய போருக்கு எதிரான அவசரகால மாநாட்டில், அவர் பின்வரும் உரையை பங்களிப்பாக வழங்கினார்:

ஹெலன் ஹால்யார்ட்

எமது நீண்டகால மூலோபாயம் குறித்தும், அது எமது தற்போதைய செயற்பாடுகளுடன் தொடர்புடையது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. நமது நீண்டகால மூலோபாயம் முதலாளித்துவத்தை ஒழித்து ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதாகும். வேலையின்மைக்கு எதிரான போராட்டம், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம் பற்றி நீங்கள் பேசினாலும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஒடுக்குமுறை நிலைமைகளுக்கு எளிதான பதில்கள் இல்லை. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலுக்கு வெளியே எந்தப் பதில்களும் இல்லை.

முதலாளித்துவ சமூகத்திற்குள்ளேயே தொழிலாள வர்க்கம் மட்டுமே, அதன் உற்பத்திச் சாதனங்களுடனான உறவின் காரணமாக, தேசிய அரசின் பாதுகாப்புடன் பிணைக்கப்படவில்லை. சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் உற்பத்திச் சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் உழைக்கும் மக்கள் மாபெரும் ஆற்றலைக் கொண்டுள்ளனர், அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது நமது கடமையாகும். ஏனைய பேச்சாளர்கள் கூறியது போல, இதற்கு முந்தைய போராட்டங்களின் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும். 20 ஆம் நூற்றாண்டின் போக்கில் வெகுஜன மக்களின் மூலோபாய அனுபவங்களிலிருந்து நாம் படிப்பினைகளைப் பெற வேண்டும்.

நான் அரசியல் வாழ்க்கைக்கு வந்தபோது, அமெரிக்காவில் நடந்த பாரிய சிவில் உரிமைப் போராட்டங்களின் போதுதான் பல்லாயிரக்கணக்கான கறுப்பின இளையோர்களை தீவிரமயமாக்கியதுடன், வறுமை, வேலையின்மை மற்றும் இனவாத நிலைமைகளுக்கு எதிராக அவர்களைக் கொண்டு வந்தது. இனவாத மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை ஆகிய இரண்டின் நிலைமைகளையும் மாற்றுவதற்காக அவர்கள் இந்த இயக்கத்தில் பங்கெடுத்தனர்.

சிவில் உரிமைகளுக்கான இயக்கத்தை வழிநடத்திய குட்டி முதலாளித்துவத் தலைமையானது, இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தற்போதுள்ள முதலாளித்துவத்தின் பொருளாதார அமைப்புமுறையில் அதன் மூலத்திலிருந்து பிரித்தது. இந்த அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் அல்ல, அதை சீர்திருத்துவதன் மூலம் விஷயங்களை மாற்ற முடியும் என்று அவர்கள் கூறினர். இந்த முன்னோக்கின் தாக்கம் தெளிவாக உள்ளது. உறுதியான நடவடிக்கைக் கொள்கையின் பயனாளிகள் யார்?

கடந்த 30 ஆண்டுகளில், கறுப்பின மக்களில் ஒரு பாரிய அடுக்குகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறிய அடுக்கு தன்னை வளப்படுத்திக் கொண்டு, தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புகளில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. இந்த அடுக்கில் மிகவும் வலதுசாரி அரசியல் பிரமுகர்களான கொண்டலீசா ரைஸ், கிளாரன்ஸ் தோமஸ் மற்றும் கொலின் பவல் ஆகியோர் அடங்குவர். அதே நேரத்தில் உள் நகரங்களில் கறுப்பின தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நிலைமைகள் அப்படியே உள்ளன மற்றும் சில சந்தர்ப்பங்களில் முந்தைய காலத்தை விட மோசமாக உள்ளன. இந்த சமத்துவமின்மை என்பது, இந்த சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக நிலைமைகளை நிவர்த்தி செய்யாமல் சமத்துவமின்மைக்கு எதிராக ஒருவர் போராட முடியும் என்ற முன்னோக்கின் விளைபொருளாகும்.

நடைமுறை மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வுகள் பற்றிய பிரச்சினை இந்த மாநாட்டில் எழுப்பப்பட்டுள்ளது, இதற்கு பதிலளிக்கும் போது, பிரச்சினைகளுக்கு ஒரே நடைமுறைத் தீர்வு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல்தான் என்பதைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது. இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் தவிர்க்கவியலாமல் வெகுஜன உழைக்கும் மக்களின் வரலாற்று நலன்களை காட்டிக் கொடுப்பதற்கு இட்டுச் செல்லும்.

இந்த தீர்மானத்தில் நாம் கூறுகிறோம், 'இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதில், சர்வதேச அளவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை அடித்தளமாகக் கொள்ள வேண்டும். அரசியல் ஸ்தாபகத்தின் பாதுகாப்பான வழிகளில் ஏதோ ஒரு வகையில் வெகுஜன எதிர்ப்பை வழிநடத்த முற்படும் கட்சிகள் மற்றும் போக்குகளுடன் மோதலுக்கு போக வேண்டும்.' இது தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதில் தீர்மானத்தின் ஏனைய பிரிவுகளுடன் உள்வாங்கப்பட வேண்டிய மிக முக்கியமான கருத்தாக்கமாகும்.

இந்த முன்னோக்கிற்காகத்தான் ஹெலன் ஹால்யார்ட் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதற்காகத்தான் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் தொடர்ந்து போராடி வருகின்றன.

Loading