மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின், 96 வயதான உறுப்பினரான பார்பரா ஸ்லோட்டர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் நீண்டகாலம் தீவிரமான செயலூக்கமுள்ள உறுப்பினர் ஆவர். சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் டிசம்பர் 3 ஞாயிறன்று நடத்திய ஹெலன் ஹால்யார்டு நினைவேந்தல் கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு.
தோழி ஹெலனின் வாழ்க்கைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். மற்றத் தோழர்கள் கூறியது போல, தோழர் ஹெலன் ஒரு தனித்துவமான ஒருவர்— அரை நூற்றாண்டுக்கும் மேலாக, தனது முதிர்ந்த வயது வாழ்க்கை முழுவதையும் செலவழித்த, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்ப அயராது போராடிய ஒரு பெண் ஆவார்.
மற்றய தோழர்கள் கூறியது போல, முதலில் கியூபப் புரட்சியாலும், பின்னர் சிவில் உரிமைகள் இயக்கத்தாலும், வியட்நாம் போருக்கு எதிரான எதிர்ப்பாலும் தீவிரமயமாக்கப்பட்ட ஒரு தலைமுறையின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். முதலாளித்துவ தேசியவாதத்திற்கு அடிபணிந்த நூறாயிரக்கணக்கானவர்களைப் போலல்லாமல், மில்லியன் கணக்கானவர்கள் போலல்லாமல், ஆனால் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டவுடனேயே அவர் புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கு அர்ப்பணிப்புடன் இருந்தார்.
சோசலிச தொழிலாளர் கட்சியானது பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு அடிபணிந்ததன் பேரழிவுகரமான விளைவுகள் காரணமாக, அந்த நேரத்தில் இயக்கம் மிகவும் சிறியதாக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் ஹெலன் வேலைத்திட்டம், முன்னோக்குகள் மற்றும் வரலாற்றுப் போராட்டத்தின் பதிவு ஆகியவற்றில் அக்கறை கொண்டிருந்தார். முழு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போராட்டம் இல்லாமல் கறுப்பின தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் விடுதலை இருக்க முடியாது என்பதை அவர் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார்.
1930 களில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களுடன் ஒரு உயிருள்ள இணைப்பை உருவாக்கிய பில் (Bill) மற்றும் ஜீன் புரூஸ்ட் (Jean Brust) ஆகியோரிடமிருந்து அவர் நிறைய கற்றுக்கொண்டார். எனவே ஹெலன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தின் அடித்தளத்திற்குச் சென்ற அந்த போராட்டத்தின் தொடர்ச்சியின் ஒரு பாகமானார். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் இந்த புதிய எழுச்சியின் போது எங்கள் இயக்கத்தில் சேர்ந்துள்ள இளம் காரியாளர்களுக்கு கல்வியூட்டுவதில் ஹெலனும் இதேபோன்ற பங்கைக் கொண்டிருந்தார்.
அவர் விரைவில் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் இளம் சோசலிஸ்டுகள் இரண்டிலும் தலைமைப் பாத்திரத்தை ஏற்றார். செய்யாத குற்றத்திற்காக 41 ஆண்டுகள் சிறையில் இருந்த கேரி டைலருக்கு விடுதலை செய்யக் கோரும் சர்வதேச பிரச்சாரத்தின் உந்து சக்தியாக இருந்தார்.
வோல்ஃ போர்த்திற்கு எதிரான போராட்டத்திலும் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் பற்றிய விசாரணையிலும் அவர் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தார். இந்த அனுபவங்கள், 1982 மற்றும் 1986 க்கு இடையில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவை அம்பலப்படுத்துவதில் ஒரு சுயாதீனமான பாத்திரத்தை வகிக்க வேர்க்கர்ஸ் லீக்கை தயாரிப்பு செய்ததில் ஒரு இன்றியமையாத பகுதியாகும்.
வேர்க்கர்ஸ் லீக்கின் வரலாற்றில் ஹெலன் வகித்த முக்கிய பங்கைப் பற்றி மற்றய தோழர்கள் உருக்கமாக பேசியுள்ளனர். 1984 ஆம் ஆண்டில் எட் வின்னுடன் (Ed Winn) இணைந்து அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பெரும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டபோது அவர் ஒரு பெரிய தலைவராக வளர்ந்தார். 1992 ஆம் ஆண்டில், தோழர் பிரெட் மசெலிஸுடன் சேர்ந்து வேர்க்கர்ஸ் லீக்கின் ஜனாதிபதி வேட்பாளராக நின்றார்.
டெட்ராய்ட் வாகனத் தொழிற்சாலைகளுக்கு வெளியே கட்சியின் செய்தித்தாளை விற்பது முதல், வேர்க்கர்ஸ் லீக்கை வாக்குச்சீட்டில் கொண்டுவருவதற்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களைச் சேகரிப்பது, தொடர்புகளைப் பார்வையிடுவது, தொழிலாளர் குழுக்களுடன் பேசுவது, புதிய இளம் காரியாளர்களுக்குக் கல்வியூட்டுவது, சர்வதேசக் கூட்டங்களில் உரையாற்றுவது என ஒவ்வொரு பணியையும் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புடன் அவர் அதே முழுமையுடன் மேற்கொண்டார் என்பதை எனது சொந்த அனுபவத்திலிருந்து நான் அறிவேன்.
தொழிலாளர் தோழர்கள் அவரை நேசித்தனர் மற்றும் பாராட்டினர், ஏனென்றால் கட்சி 'பொறுமையாக விளக்க வேண்டியதன்' அவசியம் குறித்த ட்ரொட்ஸ்கியின் ஆலோசனைக்கு அவர் அர்ப்பணிப்புடன் இருந்தார்.
1986 இல் பிளவு ஏற்பட்ட பின்னர் ஹெலனை நான் சந்தித்தேன், அப்போது சர்வதேச காரியாளர்கள் வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் முகாம்களில் சந்தித்து விவாதிப்பது சாத்தியமானது. அந்த முகாம்களில் இருந்து எனது குறிப்புகள் என்னிடம் உள்ளன, குறிப்பாக வேர்க்கர்ஸ் லீக் உறுப்பினர்களிடமிருந்து விவாதத்தின் நிலை உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. ஹீலி ஒரு குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதியாகச் சீரழிந்துவிட்டவர் என்று வர்ணிக்கப்படுவது மட்டுமல்ல, அப்போது உருவாகிக் கொண்டிருந்த சமூக சக்திகளில் அவரது சீரழிவுக்கு விளக்கம் தேடுவதும்தான் அது. தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதில் அனைத்து நம்பிக்கையையும் இழந்த ஒரு மனிதராக ஹீலி இருந்தார்.
அந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உண்மையிலேயே ஐக்கியப்பட்ட அனைத்துலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் ஒரு பாரிய முன்னேற்றத்தை முன்னெடுக்க முடிந்தது. அந்தப் போராட்டத்தில் தோழர் ஹெலன் முக்கியப் பங்காற்றினார். சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) முன்னணி காரியாளர்களுடன் கலந்துரையாடுவதற்காக அவர் பல சந்தர்ப்பங்களில் இங்கிலாந்துக்கு பயணம் செய்தார்.
டெட்ராய்ட்டுக்குப் பல முறை சென்றபோது ஹெலனை நான் மிகவும் நெருக்கமாக அறிந்து கொண்டேன். அமெரிக்காவுக்குச் செல்லும்போது அவர் இணைந்து கொண்ட சர்வதேசத் தோழர்களின் நீண்ட வரிசையில் நானும் ஒரு அங்கம் என்பதை நான் அப்போது உணரவில்லை, நான் உட்பட யாரும் விரும்பத்தகாதவர்கள் என்ற சிறு அறிகுறியைக் கூட உணராமல் பார்த்துக் கொண்டார். அவர் அரசியல் பிரச்சினைகளில் உறுதியாகவும் சமரசமற்றவராகவும் இருந்தார், ஆனால் தனிப்பட்ட உறவுகளில் மிகவும் கனிவாகவும் பரிவுடனும் இருந்தார். ஒரு முறை அவருடன் நீண்ட காலம் தங்கியிருந்தபோது, கீல்வாதத்தால் நான் மோசமாக அவதிப்பட்டேன். அவரது கருணையும் அக்கறையும் முன்மாதிரியாக இருந்தன. தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார்.
சரியான சூழ்நிலைகளில் அவர் சுற்றியிருப்பவர்களுடன் மிகவும் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார். டெட்ராய்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்தது அவரது கிண்டலான நியூயோர்க் நகைச்சுவை உணர்வை அகற்றவில்லை.
நாங்கள் ஜாஸ் இசையின் மீதான ஈர்ப்பைப் பகிர்ந்து கொண்டோம், கட்சி அலுவலகங்கள் ஹம்ட்ராம்க்கில் இருந்தபோது அவர் என்னை ஒரு சிறிய ஜாஸ் கிளப்புக்கு அழைத்துச் சென்றார், அங்கு தெற்கிலிருந்து வந்த ஒரு ஓய்வு பெற்ற ஆட்டோ தொழிலாளி ஜாஸ் பியானோ வாசிப்பார். பின்னர் டெட்ராய்டிலுள்ள மற்ற ஜாஸ் கிளப்புகளுக்குச் சென்றோம்.
டெட்ராய்ட் ஒபேரா ஹவுஸில் நினா சிமோனின் கடைசி பொது நிகழ்ச்சி என்று நான் கருதும் அதில் தோழர் பரியுடன் நாங்கள் கலந்து கொண்டோம்.
ஒரு முறை ஹெலன் மிகவும் நேசித்த தன் அம்மாவுக்குச் சொந்தமான ஒரு ஜோடி காதணிகளை எனக்குக் கொடுத்தார். ஆழமான மற்றும் நீடித்த நட்பின் சமிக்ஞையாக நான் அவற்றை எடுத்துக் கொண்டேன், அவற்றை எப்போதும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.
ஹெலன் பற்றி போலித்தனமோ, பொய்மையோ எதுவும் இல்லை. அவர் சிந்திப்பதைச் சொல்பவர், நீங்களும் அதையே செய்வீர்கள் என்று எதிர்பார்ப்பார். அமெரிக்காவில் நீங்கள் சொல்வது போல, அல்லது பிரிட்டனில் நாம் சொல்வது போல, ஹெலன் உண்மையாக இருந்தார், அவர் அனைத்து வகையிலும் அர்பணிப்புள்ள ஒரு புரட்சிகரத் தலைவர். அவர் தனது முதிர்ந்த வயது வாழ்க்கை முழுவதையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்காக அர்ப்பணித்தார்.
முடிவாக, அவரது மறைவு துன்பகரமானது, சோகமானது மற்றும் அகாலமானது என்று நான் நினைக்கிறேன், இந்த புதிய, முன்னெப்போதும் இல்லாத புரட்சிகர சூழ்நிலையில் நம் முன்னேறி வரும் போராட்டங்களுக்கு அவர் இன்னும் நிறைய கொடுக்க வேண்டியிருந்தது.
தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச தன்மையானது சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. வறுமை, ஒடுக்குமுறை மற்றும் போருக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் ஹெலனின் முன்மாதிரியைப் பின்பற்றி, ஐக்கியத்திற்கான போராட்டத்திற்கும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும், சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கும் நமது எஞ்சிய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.