மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
“டிசம்பர் 20, 2023 திகதி வரலாற்றில் இடம்பெறும்” என்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தலைவர் ரொபேர்ட்டா மெட்சோலா கூறினார், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் இறுதியாக கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு பொது ஐரோப்பிய புகலிட முறையை (CEAS) சீர்திருத்த ஒப்புக்கொண்டனர். அவர் “புலம்பெயர்வு மற்றும் புகலிடம் தொடர்பான உடன்படிக்கையுடன் நாங்கள் தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்தியதில் மிகவும் பெருமிதம் கொண்டோம்” என்று கூறினார்.
இந்த நாள் உண்மையில் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் தேசிய அரசாங்கங்களும் அதிவலதின் அகதி-விரோத திட்டத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட நாளாக வரலாற்றில் இடம்பெறும். ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட “தீர்வுகளை” அமுல்படுத்துவது என்பது தஞ்சம் கோரும் உரிமையை ஒழித்தல், ஐரோப்பாவை கோட்டை அரணாக விரிவாக்குதல், பாரிய நாடுகடத்தல் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை வதைமுகாம்கள் போன்ற நாடுகடத்தல் தடுப்பு மையங்களில் தடுத்து வைத்தல் என்பதைக் குறிக்கிறது.
மெட்சோலா இந்த உடன்படிக்கையை அறிவித்த உடனேயே, அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியானது X/Twitter இல் இவ்வாறு மகிழ்ச்சியடைந்தது:
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக இன்னும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றமும் ஐரோப்பிய கவுன்சிலும் இப்போது ஒப்புக் கொண்டுள்ளன. கட்டுப்பாடுகள், விதிவிலக்கு இல்லாமல் பாஸ்போர்ட் இல்லாத அனைத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லாத குடிமக்களையும் பதிவு செய்தல் மற்றும் பாதுகாப்பான நாடுகளிலிருந்து குடியேறியவர்களை விரைவில் நாடு கடத்துவதற்கு வெளிப்புற எல்லைகளில் நேரடியாக புகலிட தடுப்பு மையங்களை நிர்மாணித்தல். இவைகள் அனைத்திற்கும் AfD ஆனது நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வருகிறது.
திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானவைகள் மற்றும் ஐரோப்பிய வரலாற்றின் இருண்ட காலங்களை நினைவூட்டுகின்றன. இந்த உடன்பாட்டின் மூலம், “ஒரு ஐரோப்பிய தடுப்பு முகாம்களின் அழிவுகரமான பார்வை ... உண்மையாகிவிடும்” என்று அகதிகள் அமைப்பான புரோ அசில் (Pro Asyl) எழுதுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்பின் (Amnesty International) ஐரோப்பிய நிறுவனங்களுக்கான அலுவலகத்தின் இயக்குநர் ஈவ் கெடி பின்வருமாறு எச்சரிக்கிறார்:
இந்த உடன்படிக்கையானது பல தசாப்தங்களுக்கு ஐரோப்பிய புகலிட சட்டத்தை பின்னோக்கி தள்ளும். இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோரும் ஒரு நபரின் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் துன்பம் அதிகரிக்கிறது.
இதர விஷயங்களுடன், எதிர்காலத்தில் அகதிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் நேரடியாக தடுத்து வைக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. டிசம்பர் 21 அன்று, ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் வெளியிட்ட செய்தி அறிக்கைக் குறிப்பில், புகலிட நடைமுறைகள் ஒழுங்குமுறை (APR) என்று அழைக்கப்படுவது “புகலிடத்திற்கான விண்ணப்பங்கள் ஆதாரமற்றதா அல்லது ஏற்றுக்கொள்ள முடியாததா என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் விரைவாக மதிப்பிடுவதை” நோக்கமாகக் கொண்ட ஒரு “கட்டாய எல்லை நடைமுறையை” அறிமுகப்படுத்தும் என்று கூறுகிறது.
இந்த புகலிட எல்லை நடைமுறைகளுக்கு உட்பட்ட நபர்கள் “உறுப்பு நாட்டின் எல்லைக்குள் நுழைய அங்கீகரிக்கப்படவில்லை.” அதற்கு பதிலாக, அவர்கள் “கண்காணிக்கப்படும் இடத்தில் அதிகாரிகளின் வசம் இருக்க வேண்டும்” மற்றும் “தடுப்புக்காவலில் வைக்கப்படலாம்.”
உறுதியான வார்த்தைகளில் இதன் பொருள் என்ன என்பது தெளிவாகிறது. அகதிகள் முள்வேலிகளால் சூழப்பட்ட தடுப்பு மையங்களில் அடைக்கப்படுவார்கள், ஐரோப்பாவின் வெளிப்புற எல்லைகளில் ஏற்கனவே உள்ளது போல, அங்கு அவர்கள் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்.
அந்தச் செய்தி அறிக்கைக் குறிப்பில், ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளை “வரவேற்பு மற்றும் மனித வளங்களின் அடிப்படையில், (குறிப்பாக, 30,000 தடுப்புக்காவல் இடங்கள்) எல்லை நடைமுறையை மேற்கொள்ள எந்த நேரத்திலும் அனுமதிக்கவும், மற்றும் அடையாளம் காணப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளை திருப்பியனுப்பும் முடிவுகளை செயல்படுத்தவும் போதுமான திறனை” உருவாக்குமாறு அழைப்பு விடுக்கிறது.
மத்திய தரைக்கடல் வழியாக தங்கள் கொடிய கடற்பயணத்திலிருந்து தப்பிப்பிழைக்கும் அனைத்து அகதிகளும் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய செய்தி அறிக்கைக் குறிப்பின்படி, ஒரு அகதி “சட்டவிரோத எல்லை கடத்தல் தொடர்பாக சந்தேகத்தைத் தொடர்ந்து வெளிப்புற எல்லை கடக்கும் இடத்தில் விண்ணப்பம் செய்யும்போது மற்றும் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு இறங்கும்போது” எல்லை நடைமுறை பயன்படுத்தப்படும்.
பாதுகாப்பு கோரும் மூன்று குழுக்களுக்கு இந்த எல்லை நடைமுறைகளின் பயன்பாடு “கட்டாயமானது”:
“அங்கீகார விகிதம் 20 சதவீதத்திற்கும் குறைவாக” உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆதரவில்லாமல் தனியே வரும் சிறார்கள் உட்பட மக்கள் “தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கிற்கு ஒரு அச்சுறுத்தல்” என்று கருதப்படுகிறவர்கள்.
“தவறான தகவல்களைக் கொண்டு அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாகவோ அல்லது தகவல்களை மறைத்ததன் மூலமோ” குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்பு கோரும் நபர்கள்.
குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு கூட விதிவிலக்குகள் இல்லை என்ற உண்மையை புரோ அசில் (Pro Asyl) அமைப்பானது “குறிப்பாக வதைகள்” என்று விவரிக்கிறது. இது “இறுதியில் சிறார்களை மாதக்கணக்கில் தடுத்து வைப்பதை அர்த்தப்படுத்துகிறது, இது குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஐ.நா உடன்படிக்கைக்கு முரணானது” ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வையில், அகதிகள் பாதுகாப்பு தேவைப்படும் உரிமைகளைக் கொண்டவர்கள் அல்ல, மாறாக கண்காணிக்கப்பட வேண்டிய, நாடுகடத்தப்பட வேண்டிய மற்றும் ஒழிக்கப்பட வேண்டிய சாத்தியமான எதிரிகள் ஆவர்.
“ஒப்பந்தத்தின் மற்றொரு தூண் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை” என்று ஐரோப்பிய ஒன்றியம் பெருமிதம் கொள்கிறது. அதன் நோக்கம் “வெளிப்புற எல்லைகளில் மக்கள் மீதான சோதனைகளை வலுப்படுத்துவதாகும்.” இது “சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது போன்ற சரியான செயல்முறை தொடங்கப்படுவதையும் உறுதி செய்கிறது.” சோதனைகளில் “அடையாளம் காணல் மற்றும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள், அத்துடன் யூரோடாக் தரவுத்தளத்தில் (Eurodac database) கைரேகை மற்றும் பதிவு” ஆகியவைகளும் அடங்கும்.
கூடுதலாக, “புலம்பெயர்ந்தோர் அரசியல் நோக்கங்களுக்காக கருவியாக்கப்படும்போது, அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் உறுப்பு நாடுகளையும் சீர்குலைக்க முயற்சிக்க புலம்பெயர்ந்தவர்களின் வருகையை பயன்படுத்தும் வெளிநாட்டு அரசு நடவடிக்கையாளர்களுக்கு” பொருந்தும் விதிகளையும் புதிய சட்டம் உள்ளடக்கியுள்ளது. இந்த விடயத்தில், அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களையும் தங்கள் எல்லைகளில் தடுத்து வைக்க உறுப்பு நாடுகள் அனுமதிக்கப்படும்.
இது ஓர்வெல்லியன் புதிய மொழியாக (வார்த்தைகளின் அர்த்தத்தை வேண்டுமென்றே மறைத்து, திரித்து, அல்லது தலைகீழாக மாற்றும் மொழி) யதார்த்தத்தை தலைகீழாக மாற்றுகிறது. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியம்தான் அகதிகளை பல வழிகளிலும் கொலைகார விளைவுகளுடனும் “கருவியாக” ஆக்குகிறது. ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் நவகாலனித்துவ போர்கள் மூலம் முழு நாடுகளையும் அழித்து வருவதைத் தொடர்ந்து, முன்னணி ஐரோப்பிய நேட்டோ சக்திகளும் அமெரிக்காவும் மற்றவர்களைத் தடுப்பதற்கும் அவர்களை “ஐரோப்பா கோட்டையிலிருந்து” விலக்கி வைப்பதற்கும் அகதிகளை இறப்பதற்கு அனுமதிக்க முடிவு செய்துள்ளன. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2014 முதல் இதுவரை 28,000 க்கும் மேற்பட்டவர்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இந்த 2023ம் ஆண்டானது, 2020 க்குப் பிறகு 2,500 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் மிகவும் கொடியதாக இருந்திருக்கிறது.
இப்போது, கடந்த கால போர்களை “மனிதாபிமான” தலையீடுகள் என்று சிடுமூஞ்சித்தனமாக நியாயப்படுத்திய அதே ஐரோப்பிய அரசாங்கங்கள் இன்னும் பெரிய இரத்தக்களரியை ஏற்பாடு செய்கின்றன. அவர்கள் ஏற்கனவே நூறாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய கிழக்கில் அவர்கள் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை வெளிப்படையாக ஆதரிப்பதோடு, ஈரான் மற்றும் அதன் கூட்டணிகளுக்கு எதிராக ஒரு பரந்த போருக்கு தயாரிப்பு செய்து வருகின்றனர், இது முழு பிராந்தியத்தையும் ஒரு நரகமாக மாற்றும்.
அகதிகளுக்கு எதிரான பயங்கரவாதமும், போர் தீவிரமடைதலும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. ஆளும் வர்க்கங்கள் தங்கள் ஏகாதிபத்திய போர் நோக்கங்களை எவ்வளவு ஆக்ரோஷமாக பின்பற்றுகின்றன மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனவோ, அந்த அளவிற்கு உள்நாட்டில் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை நசுக்குவதற்கு அவைகள் சர்வாதிகாரத்தையும் பாசிசத்தையும் அதிகம் நம்பியுள்ளன. அவர்களின் இடைவிடாத போராட்டத்தின் மூலம், அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அகதிகளையும் புலம்பெயர்ந்தவர்களையும் ஆழமான சமூக நெருக்கடிக்கு பலிகடாக்களாக்க முயல்கின்றன, அதே நேரத்தில் தீவிர வலதுசாரிகளை வலுப்படுத்தியும் வருகின்றன.
அகதிகள் மீதான தாக்குதல்கள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு விரிவான தாக்குதலின் முன்னோட்டமாகும். சமீபத்திய வாரங்களில், காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜன போராட்டங்களை நசுக்க ஐரோப்பா முழுவதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜேர்மனியில், குறிப்பாக, இந்த நிகழ்முறை நன்கு முன்னேறியுள்ளது: அதாவது ஆர்ப்பாட்டங்கள் மீதான தடைகள், விமர்சன கலைஞர்கள் மீதான தாக்குதல்கள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு எதிரான மிருகத்தனமான பொலிஸ் நடவடிக்கைகள் மற்றும் இடதுசாரி குழுக்கள் மீதான சோதனைகள் ஆகியவை இப்போது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆகியுள்ளது.
இந்த பிற்போக்குத்தனமான தாக்குதல் பெயரளவில் “இடது” மற்றும் தாராளவாத கட்சிகளால், குறிப்பாக உந்தப்படுகிறது.
ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சியினரும் (SPD) அரசாங்கத்திலுள்ள பசுமைக் கட்சியினரும் போர்-சார்பு, எதேச்சதிகார தாக்குதலை ஒழுங்கமைத்து, புகலிடச் சட்டங்கள் கடுமையாக்கப்படுவதைக் கொண்டாடி வருகின்றனர். “இவ்வாறு நாங்கள் ஒழுங்கற்ற புலம்பெயர்வைக் கட்டுப்படுத்துகிறோம் மற்றும் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சுமையைக் குறைக்கிறோம்—ஜேர்மனி உட்பட”, என்று ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் (SPD) X/Twitter இல் எழுதினார். இந்த ஒப்பந்தம் “மிக முக்கியமான முடிவு” என்று அவர் கூறினார்.
பசுமைக் கட்சியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்போக்கும் இந்த உடன்படிக்கையை வரவேற்று, ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்த உடன்படிக்கையை “அவசரமாகத் தேவைப்பட்டதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதாகவும்” விவரித்தார்.
பிரான்சில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான குடியேற்றச் சட்டங்களில் ஒன்றை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுப்பதற்காக மரின் லு பென்னின் அதிவலது தேசிய பேரணிக் (RN) கட்சியுடன் திறம்பட ஒரு கூட்டணியை அமைத்துள்ளார். நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த நடவடிக்கைகள் இனவாதத்துடன் முழுமையாக உட்செலுத்தப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் புலம்பெயர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு சமூக நலன்களை அணுகுவதைத் தடுக்கிறது, மேலும் பிரான்சில் பிறந்து வளர்ந்த இளைஞர்கள் கூட 18 வயதில் தானாகவே பிரெஞ்சு குடியுரிமையைப் பெற மாட்டார்கள்.
ஐரோப்பிய போலி-இடதுகள்தான் இந்த கொள்கைக்கு வழிவகுத்து கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, பொது ஐரோப்பிய புகலிட அமைப்பு (CEAS) சீர்திருத்தமானது, ஸ்பானிய PSOE/Sumar கூட்டணியின் தலைமையின் கீழ் வரையப்பட்டது. இது, தற்போது ஐரோப்பிய கவுன்சில் தலைமைப் பதவியை வகிப்பதுடன், போலி-இடது பொடெமோஸ் கட்சியால் தொடர்ந்தும் ஆதரிக்கப்படுகிறது.
பல விஷயங்களில், மாட்ரிட், பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவை கிரேக்கத்தில் போலி-இடது சிரிசா அரசாங்கத்தை ஒரு முன்மாதிரியாக பயன்படுத்தின. சிரிசா 2015 மற்றும் 2019 க்கு இடையில் தீவிர வலதான சுயாதீன கிரேக்கர்கள் (அனெல்) என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து குடியேற்றக் கொள்கையை பாரியளவில் இறுக்கியதுடன், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தால் செயல்படுத்தப்படுவதைப் போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. மோரியா (Moria) வதைமுகாம் போன்ற “தீவிர தடுப்பு மையங்களில்” அகதிகளை அடைத்து வைப்பது, சட்டவிரோத விரட்டுதல்கள் மற்றும் ஏஜியன் கடலில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
ஜூன் 6-9, 2024 வரை நடைபெறும் ஐரோப்பிய தேர்தல்களுக்கு முன்னர் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ள ஐரோப்பிய தஞ்சம் கோரும் உடன்படிக்கை மில்லியன் கணக்கானவர்களை அச்சுறுத்துகிறது. ஆனால், அது தெளிவையும் உருவாக்குகிறது. அகதிகளுக்கு எதிரான பயங்கரவாதக் கொள்கையை ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஆதரிக்கின்றன என்ற உண்மையானது, தொழிலாளர்களும் இளைஞர்களும் வெறுமனே ஏதாவது ஒரு அரசாங்கத்துடன் மட்டுமல்ல, மாறாக முழு ஆளும் வர்க்கத்தையும் அதன் சமூக அமைப்புமுறையையும் எதிர்கொள்ளுகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
ஐரோப்பிய முதலாளித்துவத்தை சீர்திருத்த முடியாது. அது ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தால் ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei ஜேர்மனி) மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள அதன் சகோதர அமைப்புக்களும் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் ஐரோப்பிய தொழிலாளர்களின் அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஆயுதபாணியாக்கவும், ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் மற்றும் பூகோள அளவிலும் நான்காம் அகிலத்தை புதிய அரசியல் தலைமையாக கட்டியெழுப்பவும் பயன்படுத்தும். இதன் மூலமே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும், போரும் இனப்படுகொலையும் நிறுத்தப்பட முடியும், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனம் முடிவுக்கு கொண்டுவரப்பட முடியும்.