யுத்தத்தினால் நாசக்கப்பட்ட இலங்கையின் வடக்கில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றது

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் டெங்கு அபாயம் தற்போது அதிகரித்து வருகிறது. மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு குழந்தை மற்றும் ஒரு பல்கலைக்கழக மாணவர் உட்பட ஐந்து பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலையை சேர்ந்த 31 வயது சிந்துஜன், முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை மரணித்துள்ளனர். இந்த ஆண்டு முதல் இரண்டு வாரத்துக்குள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவியான 25 வயதுடைய குணரத்தினம் சுபீனா, அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சாருஜன் என்ற 23 வயது இளைஞன் மற்றும் மானிப்பாய் தவடியைச் சேர்ந்த 11 மாதக் குழந்தை மருதன் கிருத்திஸ் ஆகியோர் மரணித்துள்ளனர். இதேவேளை, இனந்தெரியாத காய்ச்சலினால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 வயதுடைய பிரசங்கர் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உறுப்பினர் டெங்கு விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டுகிறார்

2023 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 2505 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு மேலும் 1000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி முதலாம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 1276 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த நிலைமைகளை சமாளிக்க மேலும் இரண்டு தற்காலிக வார்டுகள் திறக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறிய அவர், பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

டிசம்பரில் யாழ். போதனா வைத்தியசாலையில் கடுமையான டெங்கு காய்ச்சல் காரணமாக 943 பேர் சிகிச்சை பெற்றதுடன் நாளொன்றுக்கு 60-80 நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதோடு சராசரியாக 150 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

2023 இல் டெங்குவின் தாக்கம் நாடு முழுவதும் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதத்தில் இதுவரை 87,570 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் மட்டும் 18,517 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 62 வலயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். (தேசிய டெங்கு கட்டுப்பாடு பிரிவு 31)

இந்த புத்தாண்டிலும் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இலங்கையில் நாளொன்றுக்கு 335 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால, “ஆசிய பிராந்தியத்தில் இலங்கையும் தாய்லாந்தும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் சிகிச்சை செய்வதிலும் முன்னணியில் உள்ளன” என்று பொய்யாகப் பெருமை பேசுகிறார்.

இந்தியாவில் டெங்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது, ஒரு மாதத்தில் 1000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலுக்கு மத்தியில், நாட்டின் சுகாதார அதிகாரிகள், பொதுமக்களின் அலட்சியமே தொற்றுநோய்க்குக் காரணம் எனக் கூறி, தொற்றுநோய்களுக்கான முழுப் பொறுப்பையும் பொதுமக்கள் மீது சுமத்தி, அரசாங்கத்தை பாதுகாக்கின்றனர்.

நோயின்றியும் நாட்டை தூய்மையாகவும் வைத்திருப்பது அரசின் கடமையாகும். வடிகால் அமைப்புத் திட்டங்கள் அமைக்கப்படாத காரணத்தினால், தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கால்வாய்கள் சரியாக இயங்கவில்லை. இதனால், டெங்கு மற்றும் பிற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்த சூழலில், டெங்கு நோய் பரவுவதற்கு முக்கிய காரணமான நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக உள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சுற்றாடல் சுகாதார நடவடிக்கைகளில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்ற அரசு கட்டிடங்களில் சுகாதாரம் இன்னும் மோசமாக உள்ளது. அவை நோய் பரப்பும் மையங்களாகவும் உள்ளன.

அரசாங்கத்தின் வருமான வரி அதிகரிப்பினால், மற்றய உயர் பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளைப் போலவே, மருத்துவர்களும், செவிலியர்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, சுகாதாரத்துறை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நாட்டை ஆட்சி செய்துவந்த அரசாங்கங்களால், மேற்கொள்ளப்பட்டுவந்த பல தசாப்தகால சமூக வெட்டுக்கள் பொது சுகாதார சேவையை சரிவின் விளிம்பிற்கு கொண்டுவந்து விட்டுள்ளன. அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் மேற்கொண்ட கொடூரமான சிக்கன வேலைத்திட்டம் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிவதால் நோயாளிகள் தரையிலும் கதிரைகளிலும் அமர்ந்துள்ளனர். படுக்கைகள் வழங்கப்படவில்லை, என, அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நோயாளிகள் சிலர் கூறியுள்ளனர்.

மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்துகளால் நோயாளிகள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவி குணரத்தினம் சுபீனா டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமிய வைத்தியசாலையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வலி நிவாரணியான பனடோல் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டன, என நோயாளி ஒருவர் நமது நிருபரிடம் கூறினார்.

வடக்கில் பல ஆரம்ப மற்றும் பிராந்திய வைத்தியசாலைகள் காணப்படுகின்ற போதிலும், அவை மக்களுக்கு போதிய சேவைகளை வழங்குவதற்கு போதிய வசதிகளுடன் செயற்படுவதில்லை. எனவே அனைத்து வகை நோயாளர்களையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய நிலமை காணப்படுகின்றது.

உதாரணமாக ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் நிலை குறித்து ஊழியர் ஒருவர் பின்வருமாறு கூறுகிறார். “நயினாதீவு, புங்குடுதீவு, வேலணை, காரைநகர், அனலைதீவு போன்ற தீவுகளிலுள்ள பிராந்திய வைத்தியசாலைகளுக்கும் மண்டைதீவு, எழுவைத்தீவு போன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைதான் பிரதான வைத்தியசாலையாகும்.

அந்த மருத்துவமனைக்கு 46 தாதியர்கள் தேவை; ஆனால், இங்கு 18 தாதியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். 76 சாதாரண பணியாளர்கள் தேவை. ஆனால் இங்கு 24 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த மருத்துவமனையில் தொற்றுநோய் ஆய்வகப் பிரிவுக்கு 4 பேர் தேவை ஆனால் இங்கு ஒருவர் மட்டுமே அந்த பிரிவில் பணிபுரிகிறார். அந்த ஊழியரின் விடுமுறைக் காலத்தில் இரத்தப் பரிசோதனை செய்வதில் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அப்போது, சாவகச்சேரி, கோப்பாய் பகுதிகளுக்கு இரத்தப் பரிசோதனைக்காக இரத்தம் அனுப்பப்படுகிறது.

தாதியர்கள் தங்குவதற்கான இடவசதி போதுமானதாக இல்லை. ஒரு அறையில், இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து தங்கும் நிலை உள்ளது. தாதியர்களுக்கு உடை மாற்றும் வசதியும் இல்லை. மேலும், இங்கு மருந்து தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்குரிய மருந்துகளுக்கு கூடுதலாக தட்டுப்பாடு உள்ளது” என அவர் கூறினார்.

காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு சென்ற நோயாளி ஒருவர் கூறியதாவது: “என்னுடைய சிகிச்சைக்காக இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதற்காக காரைநகர் வைத்தியசாலைக்குச் சென்றேன். அங்கு எனது இரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இயந்திரம் பழுதடைந்த காரணத்தினால் இரத்த மாதிரி சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனது பரிசோதனை முடிவுகளைப் பெறுவதற்காக, நான் காரைநகர் வைத்தியசாலைக்குச் சென்றபோது, எனது உட்பட 27 பேரின் அறிக்கைகள் எங்கோ தொலைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்படியான நிலமையில், நாங்கள் எப்படி சிகிச்சை பெற்றுக்கொள்வது?”.

இந்த அபிவிருத்திகள், உலக சோசலிச வலைத் தளத்தின் புத்தாண்டு அறிக்கையில், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் புத்தாண்டில் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும் என்ற அதன் வழிகாட்டுதலின் துல்லியத்தை உறுதிப்படுத்துகிறது. “வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கான மிக அடிப்படை உரிமைகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கான பல நூற்றாண்டுகள் நீடித்த போராட்டம் உட்பட ஆழமான சமூகப் பிரச்சினைகள் இந்தப் போராட்டத்தின் மையத்தில் உள்ளன.”

Loading