மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜோர்டானில் ஈராக் போராளிகளால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஞாயிற்றுக்கிழமை மூன்று அமெரிக்க சிப்பாய்கள் இறந்ததை சாதகமாக பயன்படுத்தி, அமெரிக்கா மத்திய கிழக்கு முழுவதும் ஒரு பரந்த, நீடித்த இராணுவத் தாக்குதலை திட்டமிடுகிறது.
பைடென் நிர்வாகத்தின் திட்டமிட்ட தாக்குதல்கள் “வாரங்களாக” நீடிக்கும் ஒரு “தாக்குதலாக” இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக NBC நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் “ஈரானுக்கு வெளியே உள்ள ஈரானிய இலக்குகளும்” அடங்கும் என்று NBC செய்தி தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் NBC இன் அறிக்கையை உறுதிப்படுத்தினார். “அமெரிக்காவின் பதிலடி ஒரு முறை மட்டும் அல்ல... நீங்கள் பார்க்கும் முதல் விஷயம் கடைசியாக விஷயமாக இருக்காது” என்று குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ விரிவாக்கம் மற்றும் காஸாவில் இனப்படுகொலைக்கான அமெரிக்க ஆதரவை பெரிதும் எதிர்க்கும் அமெரிக்க பொதுமக்களிடம் தெரிவிக்கவோ அல்லது ஒப்புதல் பெறவோ, எந்த முயற்சியும் இல்லாமல் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த திங்களன்று, “தலைமைத் தளபதி, தேர்தல்கள் அல்லது தேர்தல் நாட்காட்டியைப் பற்றி கவலைப்படுவதில்லை” என்று கிர்பி அறிவித்ததன் மூலம் இந்த யதார்த்தத்தை தெளிவுபடுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி, “ஈரானுக்குள் நடக்கும் எந்த தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம், நாங்கள் போரை எதிர்பார்க்கவில்லை, ஆனால் போருக்கு அஞ்சவில்லை” என்று குறிப்பிட்டார்.
திங்களன்று, ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங்கிடம் “இது இப்போது யேமன், ஈராக், சிரியா மற்றும் இப்போது ஜோர்டானில் உள்ள அமெரிக்காவிற்கும் ஈரானிய பினாமிகளுக்கும் இடையே ஒரு பிராந்திய யுத்தமாக இருகறது அல்லவா?” என்று கேட்கப்பட்டது.
“எந்த வகையிலும் பிராந்தியத்தில் பதற்றம் அதிகமாக இருப்பதை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. அக்டோபர் 17 முதல் (sic), அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்களை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம், எனவே பதட்டங்கள் அதிகமாக இருப்பதை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை, இந்த ஈரானிய ஆதரவு குழுக்கள் எங்கள் இராணுவ உறுப்பினர்களைக் கொல்லும் நோக்கத்துடன் குறிவைக்கின்றன” என்று அவர் பதிலளித்தார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸை புதன்கிழமை சந்தித்து, மத்திய கிழக்கு முழுவதும் கூட்டு தாக்குதல்கள் என்று எதிர்பார்க்கப்படுவது பற்றி விவாதித்தார். இந்த நடவடிக்கையில் பங்கேற்பதற்காக செங்கடலுக்குள் விமானம் தாங்கி கப்பலை அனுப்ப இங்கிலாந்து தயாராகி வருவதாக இங்கிலாந்தின் டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
புதன்கிழமையன்று, அமெரிக்க இராணுவம் யேமனில் தனது சமீபத்திய தாக்குதலை US F 18 Super Hornets மூலம் ட்ரோன் ஏவுதளங்கள் என்று அமெரிக்கா கூறியதன் மீது குண்டுகளை வீசியது.
மத்திய கிழக்கு முழுவதும் போரில் ஆழமான அமெரிக்க ஈடுபாடு, அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெட்கக்கேடான போர்க்குற்றங்களைச் செய்து வருகிறது.
செவ்வாயன்று, இஸ்ரேலிய இராணுவத்தின் உறுப்பினர்கள், மருத்துவ ஊழியர்கள் போல் உடையணிந்து, வட மேற்குக் கரையில் உள்ள இபின் சினா மருத்துவமனைக்குள் ஊடுருவினர். அவர்கள், மருத்துவமனை படுக்கையில் இருந்த ஒருவர் உட்பட மூன்று பேரை கோரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் நஜி நஜால் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், இராணுவ சிப்பாய்கள் “அறையில் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த மூன்று பேரையும் . … அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் வைத்து நேரடியாக அவர்களின் தலையில் தோட்டாக்களை செலுத்தி, உறையும் இரத்த வெள்ளத்தில் அவர்களை கொன்றனர்”.
நிராயுதபாணிகளை கொலைசெய்தல் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் மீதான தாக்குதல் உட்பட பல நிலைகளில் இது ஒரு அப்பட்டமான போர்க்குற்றமாகும்.
“இஸ்ரேலிய படைகள் ஒரு மோசமான குற்றத்தை செய்துள்ளன. அதில் இந்தக் குற்றங்களில் பாதுகாக்கப்பட்ட சிவில் மருத்துவமனையைத் தாக்குவதும் அடங்கும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் போன்ற உடை அணிந்து துரோகக் குற்றத்தைச் செய்தல், மேற்கூறிய குற்றங்களுக்காக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய நேரத்தில், பலத்த காயமடைந்த நபர் உட்பட யாருக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத நபர்களுக்கு எதிராக சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனையை நிறைவேற்றுதல், அத்துடன் மருத்துவ பணியாளர்களை சித்திரவதை செய்து துன்புறுத்துதல்” ஆகியவை, சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன என்று ஒரு அறிக்கையில், யூரோ-மெட் மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.
புதன்கிழமையன்று, வடக்கு காஸாவில் உள்ள பள்ளி ஒன்றில் 30 பாலஸ்தீனியர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பலர் கட்டப்பட்ட நிலையில் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டிருந்தனர். அவர்கள் கூட்டு மரணதண்டனைக்கு இஸ்ரேலியப் படைகளால் உள்ளாக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எமது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு ஆட்சியின் தொடர்ச்சியான குற்றங்கள் நாளுக்கு நாள் வெளிவருகின்றன, அதில் சமீபத்தியது பாலஸ்தீனிய கைதிகள் சங்கத்தால் ஆவணப்படுத்தப்பட்டது மற்றும் பாலஸ்தீனிய குடிமக்களால் சுமார் 30 பாலஸ்தீனியர்களின் மரணதண்டனைகள் பற்றி அறிக்கை செய்யப்பட்டன, அவர்களின் உடல்கள் கைவிலங்கு மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வடக்கு காஸாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் வீசப்பட்டிருந்தன” என்று கூறப்பட்டுள்ளது.
இது, ஆக்கிரமிப்பு இராணுவம் பொதுமக்களுக்கு எதிராக படுகொலைகளை நடத்தியதை சுட்டிக்காட்டுகிறது, அவர்களை மிருகத்தனமாக நடத்திய பின்னர், அவர்களுக்கு அந்த இடத்தில் வைத்தே மரணதண்டனைகளை வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
இஸ்ரேலின் தொடர் முற்றுகையால், காஸாவில் பஞ்சம் மோசமடைந்து வரும் நிலையில், காஸாவில் உள்ள மிகப்பெரிய மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீனிய அகதிகள் அமைப்பு (UNRWA) மூடப்பட வேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
“UNRWA வின் பணி முடிவுக்கு வர வேண்டும் என்பதை சர்வதேச சமூகமும் ஐ.நாவும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது, காஸா பிரச்சனையை நாம் நினைத்தபடி தீர்க்க வேண்டுமானால் அந்த அமைப்பு மூடப்பட வேண்டும்” என்று நெதன்யாகு கூறினார்.
அன்றைய தினம், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காஸாவில் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் UNRWA தான் முதுகெலும்பு என்று கூறினார்.
நெதன்யாகுவின் கருத்துக்கள், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் UNRWA விற்கு நிதியுதவி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, காஸாவின் மக்கள் மீது இஸ்ரேலின் பாரிய பட்டினிக்கு அவர்கள் உடந்தையாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மனித உரிமைகள் கண்காணிப்பகம், UNRWA க்கான உதவித் தடையைத் திரும்பப் பெறுமாறு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததோடு, இந்த நடவடிக்கை காஸாவில் பஞ்சத்தை விரைவுபடுத்தும் என்று அறிவித்தது.
காஸாவின் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உடனடி உயிர்காக்கும் உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை வழங்கக்கூடிய ஐ.நா. அமைப்பபின் நிதியை நிறுத்தி வைப்பது என்பது, பஞ்சத்தின் அபாயம் என்று உலகின் முன்னணி வல்லுநர்கள் விடுத்த எச்சரிக்கைக்கு, அக்கறையற்ற அலட்சியம் காட்டப்படுகின்றன என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் அக்ஷயா குமார் தெரிவித்தார்.
புதன்கிழமையன்று, உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குநர் மைக்கேல் ரியான், “இது பட்டினியால் வாடும் மக்கள்தொகை, இது விளிம்பிற்குத் தள்ளப்படும் மக்கள்தொகை, அவர்கள் இந்த மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல” என்று அறிவித்தார்.
