மோடி தலைமையிலான கூட்டணியில் ஒரு முக்கிய கூட்டாளி இணைந்ததால் எதிர்க்கட்சியான இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி குழப்பத்தில் உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான பீகாரில், கடந்த 28ந் திகதி ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் ஜனதா தளம் (ஐக்கியம்) மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு (பாஜக) இடையிலான கூட்டணி உறுதியாக்கப்பட்டுள்ளது.

பீகார் முதலமைச்சர் பதவியை முதலில் ராஜினாமா செய்த நிதீஷ் குமார், அந்த மாநிலத்தின் மகா கூட்டணி (Mahagathbandhan) அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளார். இந்த அரசாங்கம், மூன்று ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள் உட்பட இந்தியா (I.N.D.I.A.) தேர்தல் கட்சிகளின் கூட்டணி உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது அல்லது ஆதரிக்கப்பட்டது. பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் ஒப்புக்கொண்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, ஜனதா தளம் (ஐக்கியம்) மற்றும் பாஜக மற்றும் பீகாரைத் தளமாகக் கொண்ட கூட்டணிக் கட்சிகளால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி அரசாங்கத்தின் தலைவராக நிதிஷ்குமார் தானே பதவியேற்றுக் கொண்டார். புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, நிதிஷ் குமாருக்கு இப்போது பாஜகவைச் சேர்ந்த இரண்டு துணை முதல்வர்கள் உள்ளனர்.

நிதிஷ் குமாரும் ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியும் கால் நூற்றாண்டுக்கும் மேலாக தீவிர வலதுசாரி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வந்துள்ளது. நிதிஷ் குமாரின் கட்சி விசுவாச தாவல்கள் மிகவும் இழிவானவையாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தின் மூலம் ஒரு தசாப்தத்தில் நான்காவது முறையாக அவர் பாஜக ஆதிக்கம் செலுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே குதிரை தாவல்கள் செய்துள்ளார் – அதனால் அவர் பல்து ராம் (Paltu Ram -கட்சி மாறி அல்லது குத்துக்கரண நிபுணர்) என்று அழைக்கப்படுகிறார். எவ்வாறாயினும், கடந்த 25 ஆண்டுகளாக ஜனதா தளம் (ஐக்கியம்) மற்றும் பாஜக ஆகியவை பீகார் அரசாங்கத்திலும் தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் கூட்டாளிகளாக இருந்துள்ளன என்பதை வலியுறுத்த வேண்டும்.

பிப்ரவரி 2023, 11வது கட்சி மாநாட்டில் சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா (நடுவில்-இடது), நிதீஷ் குமாருடன் (நடுவிலிருந்து வலதுபக்கம்), RJD தலைவர் தேஜாஸ்வி யாதவ், இடது பக்கத்தில் மற்றும் வலது பக்கமாக சல்மான் குர்ஷித். [Photo: NewsClick]

2002 இல் குஜராத் முஸ்லீம் எதிர்ப்பு படுகொலைகளை தூண்டிவிட்ட, அம்மாநில முதலமைச்சராக இருந்த மோடியை 2013 இல், தனது பிரதமர் வேட்பாளராக பாஜக      தேர்ந்தெடுத்தது குறித்து கோபம் கொண்ட  நிதிஷ் குமார், தனது ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக்கிக்கொண்டார். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, முன்னர் பாபர் மசூதி இருந்த இடத்தில், இந்து மேலாதிக்க அரசை அமைப்பதற்கான ஒரு முக்கிய படியாக, மோடி ஒரு இந்து தேசியவாத ஆலயத்தைத் திறந்து வைத்த சில நாட்களுக்குப் பிறகு, நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் தனது கூட்டுறவை புதுப்பித்துக் கொண்டார்.

கடந்த கோடையில் இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியானது  ஒரு உறுதிபெற்றிருந்தபோதும் பீகார் முதல்வர் பாஜகவுடன் புதுப்பிக்கப்பட்ட கூட்டணிக்கான கதவை மூடவில்லை என்பதற்கான சமிக்கைகளை அனுப்பியுள்ளார். இந்தியாவின் முதலாவது பாஜக / தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமரான அடல் வாஜ்பாயின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தியதும் இதில் அடங்கும்.

ஆயினும்கூட, ஜனதா தளம் (ஐக்கியம்) இன் விலகல், அல்லது இன்னும் சரியாக சொன்னால் பாஜக பக்கமாக அது திரும்பியிருப்பது என்பது, 2024 தேசியத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியை (Indian National Developmental Inclusive Alliance, I.N.D.I.A.) குழப்பத்தில் தள்ளியிருக்கிறது. இது இந்தியாவின் இரண்டு முக்கிய ஸ்ராலினிசக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், மற்றும் பழைய, சிறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகியவற்றின் பிற்போக்குத்தனமான அரசியலை மீண்டுமொரு தடவை அழிவுகரமான முறையில் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியின் முக்கிய பங்கு

இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) இன் முக்கிய உருவாக்கம் செய்தவர்களில் நிதிஷ் குமாரும் அவரது ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியும் இருந்துள்ளது. மேலும் கடந்த வார இறுதியில் அவர்கள் வேறு ஒரு உத்தியை பின்பற்ற வருகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும் வரை, போலிக் “கம்யூனிஸ்ட்” கட்சிகளான, சிபிஎம், சிபிஐ, மற்றும் சிபிஐ (எம்-எல்) உட்பட அவர்களது முன்னாள் இந்தியா (I.N.D.I.A.) கூட்டாளிகளால் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டது. 

சில முக்கிய இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) தலைவர்கள், நிதிஷ் குமாரை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அந்த பதவி இன்றுவரை ஒரு பகுதியாக கூட நிரப்பப்படாமல் உள்ளது, ஏனெனில் அந்த இடத்தை எடுத்துக் கொள்பவர் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வருவார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

நிதிஷ் குமாரும் மற்றும் இப்போது செயலிழந்த மகா கூட்டணி (Mahagathbandhan) அரசாங்கத்தின் கொள்கைகள், குறிப்பாக சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அல்லது உறுதியான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான அதன் முயற்சிகள், இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) இன் “சமூக நீதி” வேலைத்திட்டத்தின் சின்னமாக முன்னிறுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக வீழ்ச்சி கண்டு வருகிறது. ஆனால் 2014 வரை, அது இந்திய முதலாளித்துவத்தின் விரும்பப்பட்ட தேசிய அரசாங்கக் கட்சியாக இருந்து வந்தது, இதில் 1991க்குப் பிந்தைய அமெரிக்கத் தலைமையிலான உலக முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கில் இந்தியாவின் முழுமையான ஒருங்கிணைப்பின் ஈட்டிமுனையாகவும் மற்றும் இந்திய-அமெரிக்க இராணுவ – மூலோபாய கூட்டணியில் முக்கிய சிற்பியாகவும் சேவை செய்தது. 

இருப்பினும், 2014 முதல், இரண்டு பின்னிப்பிணைந்த செயல்முறைகள் காரணமாக காங்கிரஸ் ஒன்றன்பின் ஒன்றாக தேர்தல் தோல்வியை சந்தித்துள்ளது. அதன் ஊழல் மற்றும் பல தசாப்தங்களாக வலதுசாரி முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை செயல்படுத்தி வந்த காரணத்தினால் காங்கிரஸ் வெகுஜன மக்கள் அதிருப்தியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், முதலாளித்துவம் இந்துமத வலுவான மனிதன் மோடி மற்றும் பாஜகவைச் சுற்றி அணி திரண்டு தங்களின் சிக்கன நடவடிக்கை, தனியார்மயமாக்கல், மற்றும் கட்டுப்பாடுகள் தளர்வு போன்றவற்றை ஈவிரக்கமின்றி செயல்படுத்துவதற்கும், உலக அரங்கில் தங்கள் பெரும் வல்லரசாகும் நலன்களை முன்னெடுத்து செல்வதற்குமான அவர்களின் சிறந்த வாகனமாக கருதினார்கள். தற்போது இந்தியாவின் 28 மாநிலங்களில் மூன்றில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது.

காங்கிரஸ் கட்சி தனது சொந்த அரசியல் பலவீனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, 2024 ஆம் ஆண்டு மக்களவைக்கு (இந்திய நாடாளுமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கீழ் சபைக்கு) பாஜக- எதிர்ப்புக் கூட்டணியை அமைப்பதற்கான முதல் தொடக்கத்தை ஆரம்பிக்க நிதிஷ்குமாரை அனுமதித்தது. கடந்த ஜூன் மாதம், பீகாரின் தலைநகரான பாட்னாவில்  எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அவர் கூட்டினார், அதிலிருந்து இந்தியா (I.N.D.I.A.) என்ற கூட்டணி வேகமாக உருவானது.

பீகாரின் மகா கூட்டணி (Mahagathbandhan), இந்தியா கூட்டணிக்கு ஒரு முன்மாதிரியாகக் கருதப்பட்டது, ஏனெனில் அரசியல் சக்திகளின் வெளித்தோற்றமான பண்புகள் காரணமாக அது ஒரு “பாஜக எதிர்ப்பு” தளத்தில் ஒன்று சேர்த்தது. இது இரண்டு சக்திவாய்ந்த பிராந்திய சாதி அடிப்படையிலான கட்சிகளை உள்ளடக்கியது, அவற்றில் ஒன்று முன்பு பாஜக/தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ஜனதா தளம் (ஐக்கியம்) மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இணைந்திருந்தது- அத்துடன் காங்கிரஸ் கட்சி மற்றும் பாரம்பரிய “இடது” கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ மற்றும் 2020 மாநிலத் தேர்தலில் பீகார் சட்டசபையில் 12 இடங்களை வென்ற ஒரு மாவோயிஸ்ட் குழுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை உம் அடங்கும். இது தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் காங்கிரஸின் கூட்டணியுடன் இயங்குகிறது.

ஜூன் 23, 2023 அன்று பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் மாநாட்டிற்கு முந்தைய வாரங்களில், 1947ல் இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் விரிவான “சாதிக் கணக்கெடுப்பை” முடிப்பதில் நிதிஷ் குமாரும் அவரது மகா கூட்டணி ( Mahagathbandhan) அரசாங்கமும் எந்தவொரு மாநிலமும் செய்யாத ஒன்றை செய்து காட்டுவதில் அவர்களது ஆற்றலை ஒன்றுசேர்த்தனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு மக்களை சாதி அல்லது துணைச் சாதிகளாகப் பிரித்து, மற்றும் சாதி அடிப்படையில் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பின் விபரங்களைத் தொகுத்து வழங்கியது, இது ஸ்ராலினிஸ்டுகள் உட்பட, “இந்து ஒற்றுமை” என்ற பாஜகவின் பிரகடனங்களை எதிர் கொள்வதற்கான ஒரு தலைசிறந்த பதிலடித் தாக்குதல் எனப் பரவலாகப் பாராட்டப்பட்டது. 

சாதி அடிப்படையிலான “சமூக நீதி” செயல்திட்டத்திற்கான அழைப்புகள், அதன் தொடக்கத்திலிருந்தே இந்தியா கூட்டணியின் (I.N.D.I.A) அரசியல் சொல்லாட்சிகளுக்கு மையமாக இருந்து வருகிறது. இதன் மூலம், இந்தியாவின் இடஒதுக்கீடு உறுதியான  கொள்கையை மேலும் விரிவுபடுத்துவதற்கான உந்துதலை வழங்கும் என்று அவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள், இதன் கீழ் அரசாங்க வேலைகள் மற்றும் பல்கலைக்கழக இடங்களில் சில வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட அல்லது விரும்பத்தகாத சாதி மற்றும் பழங்குடி மக்களுக்கு “ஒதுக்கீடு” செய்யப்படுகின்றன. 

முதலில், இது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் “பிரித்து ஆளும்” கொள்கையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது, “இடஒதுக்கீடு” என்பதற்கு உண்மையில் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் எந்த சம்பந்தமும் கிடையாது. உண்மையில் இது இந்திய முதலாளித்துவத்திற்கு முட்டுக் கொடுப்பதற்கான ஒரு பொறிமுறையாகும். வெடிக்கும் நிலையிலிலுள்ள சமூக கோபத்தையும் வெகுஜன வேலையின்மை மற்றும் வறுமையின் மீதான விரக்தியையும் சமூக அவலத்தை இன்னும் “சமமான” பகிர்ந்தளிப்பதாக ஒடுக்கப்பட்டவர்களிடையே பிரிவை ஏற்படுத்தும் போராட்டமாக மாற்றவும் மற்றும் சாதிய அடிப்படையிலான அரசியலின் போட்டி சாதிக் குழுக்களின் “தலைவர்கள்” மற்றும் சித்தாந்தவாதிகளாக பணியாற்றக்கூடிய சலுகை பெற்ற குட்டி முதலாளித்துவ அடுக்குகளை வளர்ப்பதற்கு ஆளும் வர்க்கத்திற்கான ஒரு வழிமுறையாகும் இது சேவையாற்றுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின் உச்சத்தில் இருந்ததைப் போலவே இன்று இந்தியா சமூக ரீதியாக குழுக்களாகப் பிரிவினைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே யதார்த்தம். இந்திய பணக்காரர்களில் 1 சதவீதத்தினர் நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமானதற்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். அதே சமயம் கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவிகிதமான 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெறும் 3 சதவீதத்திற்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். இந்திய முதலாளித்துவத்தால் தூண்டப்பட்ட அனைத்து சாதி, மத-வகுப்பு மற்றும் இனப் பிளவுகளுக்கு எதிராகவும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் கிராமப்புற உழைப்பாளர்களை அதன் பின்னால் அணிதிரட்டுவதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தின் போராட்ட ஒற்றுமையை உருவாக்குவதன் மூலமும் மட்டுமே, மக்களை வறுமையில் இருந்து விடுவித்து உயர்த்த முடியும் மற்றும்  அவர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதும் சாத்தியமாகும்.

இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட ஐந்து மாதங்களில் மோடி மற்றும் அவரது பாஜகவுக்கு எதிராக, அது முன்னேறிய ஒரே பொது மேடையில் “சமூக நீதிக்கான” அதன் போலியான, சாதி அடிப்படையிலான வேண்டுகோள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பாஜகவின் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சமூகப் பொருளாதார செயல்திட்டத்துடன் இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) இன் அங்கத்தினர்களுக்கு எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது, மேலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக இருக்கும் சீன-எதிர்ப்பு இந்திய-அமெரிக்க பூகோள மூலோபாயக் கூட்டாண்மைக்கு அது தன்னை அர்ப்பணித்துள்ளது என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாஜக/தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் ஜனதா தளம் (ஐக்கியம்) திரும்பியுள்ள நிலையில், பாஜகவின் இந்து மேலாதிக்க முறையீடுகளுக்கு எதிராக “சாதியப் போராட்டத்தைத்” தூண்டிவிடுவதற்கான இந்தியக் கூட்டணியின் சிதைந்து கிடக்கும் பிற்போக்குத்தனமான திட்டமானது, முதல் முறை அல்ல. சமீப ஆண்டுகளில், பாஜக, பல தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதி குழுக்களிடையே சாதிவெறி, சாதி அடிப்படையிலான அரசியல் நடவடிக்கைகளால் வளர்க்கப்பட்ட வெறுப்புகளையும் பிளவுகளையும் மற்றும்  இடஒதுக்கீடு முறை ஆகியவற்றையும் பயன்படுத்தி, அரசியல் அமைப்புக்குள் தனது போட்டியாளர்களுக்கு எதிராக சாதிய சீட்டை விளையாடுவதில் திறமை வாய்ந்ததாக அடிக்கடி நிரூபித்துள்ளது. 

ஸ்ராலினிஸ்டுகளின் பதில்

முன்கணிக்க கூடியதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு (NDA), ஜனதா தளம் (ஐக்கியம்) தாவியது குறித்து ஸ்ராலினிஸ்டுகள் அதனை “துரோகம்” மற்றும் “சந்தர்ப்பவாதம்” என்றவாறாக கோபமான கண்டனங்களுடன் பதிலளித்துள்ளனர். அவர்களின் சொந்த அரசியல் குருட்டுத்தனத்தை ஒப்புக்கொள்ளும் வகையில், சிபிஎம் அதன் சமீபத்திய மக்கள் ஜனநாயகம் இதழில் “இதழில் “பின்னோக்கிப் பார்த்தால், இந்தியா (I.N.D.I.A) குழு (நிதீஷ் குமாரை) ஒருங்கிணைப்பாளராக மாற்றாதது அதிர்ஷ்டம்” என்று குறிப்பிட்டுள்ளது”. சிபிஐ (எம்-எல்) விடுதலை அதன் இணையதளத்தில் ஒரு தலையங்கப் பகுதியில், “நிதீஷ் குமாரின் விட்டுப்போகல்... ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான பெரும் துரோகச் செயலாக மட்டுமே பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது.

இவை அனைத்தும் தங்கள் சொந்த தடங்களை மறைப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகும். நிதீஷ் குமாரை “துரோகம்” செய்து விட்டார் என்று குற்றம் சாட்டுவது, ஆடுகளை தின்பதற்காக ஓநாயை கண்டனம் செய்வது போன்றதாகும். 

உண்மை என்னவென்றால், பல தசாப்தங்களாக, சிபிஎம், சிபிஐ மற்றும் சமீபகாலமாக சிபிஐ (எம்எல்) விடுதலை ஆகியவை பாஜகவுடன் தற்காலிகமாக முரண்படும் எந்தக் கட்சியும், எவ்வளவு வலதுசாரியாக இருந்தாலும், “மதச்சார்பற்ற ஜனநாயக” சக்தியாகப் போற்றத் தயாராக உள்ளன. அதன் காரணமாக, அவர்கள் நிதீஷ் குமார் மற்றும் அவரது ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியால் “காட்டிக்கொடுக்கப்படுவதாக” பலமுறை தெரிந்து வைத்திருக்கின்றன, தற்போது இந்தியா (I.N.D.I.A) தேர்தல் கூட்டணியில் பாசிச சிவசேனா உட்பட அனைத்து விதமான வலதுசாரி கட்சிகளும்  உள்ளன.

மேலும், இந்தியா (I.N.D.I.A) கூட்டை உருவாக்குவதில் ஜனதா தளம் (ஐக்கியம்) முன்னணிப் பாத்திரத்தை ஏற்று, அதன் மூலம் பாஜக தோல்வியடையுமாயின், இந்திய முதலாளித்துவத்திற்கு மாற்று வலதுசாரி அரசாங்கத்தை வழங்குவதற்கான அரசியல் நிலப்பரப்பைத் தயாரிப்பதில் சிபிஐ (எம்-எல்) விடுதலை முக்கியப் பங்காற்றியது என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த பிப்ரவரியில் பாட்னாவில் நடைபெற்ற அதன் 11வது கட்சி மாநாட்டில், பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சி சக்திகளையும் ஒன்றிணைக்கும் பெயரில் பொது பேரணியை நடத்தியது. அதில் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் சிபிஐ (எம்-எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவுடன் மேடையில் இருந்தனர்.    

இவை அனைத்தும் வெறுக்கத்தக்கதாகத் தோன்றினாலும், இது இந்திய ஸ்ராலினிசத்தின் பிற்போக்கு அரசியலின் சமீபத்திய கசப்பான விளைவு மட்டுமே, அதன் மாவோயிஸ்ட் திரிபுகள் உட்பட. பல தசாப்தங்களாக, முதலாளித்துவ அமைப்பின் ஒரு பகுதியாகச் செயல்பட்டுவரும் ஸ்ராலினிஸ்டுகள், வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வருகின்றனர். அதே நேரத்தில் இந்துத்துவா பாஜக பாசிஸ்டுகளை எதிர்ப்பது என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தொடங்கி முதலாளித்துவ கட்சிகளுடன் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப்போட பயன்படுத்துகின்றனர். 

உலகெங்கிலும் உள்ளதைப் போலவே இந்தியாவிலும், பாசிசத்தை அழுகிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ ஒழுங்கிற்கு முட்டுக் கொடுப்பதன் மூலம் தோற்கடிக்க முடியாது. மாறாக, சிக்கன நடவடிக்கை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும், சமூக சமத்துவத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும். 

Loading