சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கு தனது அரசாங்கத்திற்கு உதவுமாறு இலங்கை ஜனாதிபதி பாராளுமன்ற எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசாங்கத்தின் புத்தாண்டு கொள்கை அறிக்கையை பெப்ரவரி 7 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் வெளியிட்டார். 2022 ஜூலையில் ஜனாதிபதியாக பதவி உயர்த்தப்பட்டதில் இருந்து தனது நிர்வாகம் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கூறிக்கொண்ட விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதில் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளையும் தன்னுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் கொழும்பில் புதிய பாராளுமன்ற அமர்வை 7 பெப்ரவரி 2024 புதன்கிழமை ஆரம்பித்து வைக்க வந்த போது. இடதுபுறம் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவும் வலதுபுறம் பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோகணதீரவும் நடந்து செல்கின்றனர்.  [AP Photo/Eranga Jayawardena]

விக்கிரமசிங்க, 'ஒரு நெருக்கடியை சமாளிக்கும் செயல்முறையைத் தொடங்குவது, மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதை விட தனக்குள்ளேயே தொடங்க வேண்டும்,” என்று அறிவித்து உரையைத் தொடங்கினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளும் அவரது நிர்வாகத்தாலும் முந்தைய இலங்கை அரசாங்கங்களாலும் சுமத்தப்பட்ட பரிதாபகரமான நிலைமைகளில் இருந்து தப்புவதற்கு தங்கள் சொந்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த கொடூரமான சமூக தாக்குதல்கள் தொடரும் என்பதைத் அவர் தெளிவுபடுத்தினார்.

2022 ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது நிர்வாகத்தை வெளியேற்றுவதற்கு வழிவகுத்த, அந்த ஆண்டு பெப்ரவரியில் இலங்கையில் நிலவிய நிலைமைகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2023 பெப்ரவரியில் இருந்து 'நாட்டின் நிலைமைகளில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றத்திற்காக' கொழும்பை 'பாராட்டிய,' இலங்கை வந்திருந்த சர்வதேச நாணய நிதிய குழுவின் கருத்துக்களை விக்கிரமசிங்க மேற்கோள் காட்டினார்.

யாருக்காக 'பாராட்டத்தக்கது'? நாட்டின் பெரும்பான்மையான மக்கள், உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு அல்ல, மாறாக பெரும் பணக்காரர்களின் ஒரு சிறிய உயரடுக்கு, உயர்-மத்தியதர வர்க்கம் மற்றும் உலக மூலதனத்தின் பிரிவுகளுக்கே ஆகும்.

கடந்த 12 மாதங்களில் விக்கிரமசிங்கவின் “முன்னேற்றம்” பற்றிய குறிகாட்டிகள், பணவீக்கம் கடந்த ஆண்டு 50.6 சதவீதத்தில் இருந்து இன்று அதே காலகட்டத்தில் 6.4 சதவீதமாக குறைந்துள்ளதுமை, மற்றும் உணவுப் பற்றாக்குறை 54.4 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக குறைந்துள்ளமை, மற்றும் 2022 இல் அடிப்படை வரவுசெலவுப் பற்றாக்குறை 3.7 சதவீதத்தில் இருந்து 2023 இல் அடிப்படை உபரிமதிப்பில் “குறிப்பிடத்தக்க திருப்பம்” ஏற்பட்டுள்ளமையும் அடங்கும்.

2022ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீத பற்றாக்குறையில் இருந்து, 2023 இன் இறுதியில் கொடுப்பனவு நிலுவையில் உபரியை 'அடைவதை' பற்றி ஜனாதிபதி பெருமிதம் கொண்டார். இது '1977 இல் இருந்து காணப்படாத ஒரு மைல்கல்' என்று அவர் கூறினார். 12 ஏப்ரல் 2022 அன்று அந்நியச் செலாவணி கையிருப்புகள் பூஜ்ஜியத்தை நெருங்கியதையும் அவர் மேற்கோள் காட்டினார். அப்போதைய இராஜபக்ஷ அரசாங்கம் கடன் திருப்பிச் செலுத்த முடியா நிலையை அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. தற்போது கையிருப்பு 4.4 பில்லியன் டொலராக உள்ளது என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவின் 'முன்னேற்ற' குறிகாட்டிகளுக்கும், இலங்கையின் பெரும்பான்மையான மக்கள், உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் வாழ்க்கை நிலைமைகளுடன் எந்த தொடர்பும் இல்லை. பணவீக்கம் குறைந்திருக்கலாம் ஆனால் அது தொடர்கிறது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட உயர் விலைகளின் ஒட்டுமொத்த தாக்கத்துடன், மில்லியன் கணக்கான இலங்கை பிரஜைகளின் வாழ்க்கைச் செலவு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, தொழிலாளர்களின் உண்மையான ஊதியத்தை பெருமளவில் குறைத்து அவர்களை மேலும் வறுமையில் தள்ளியுள்ளது.

அரசாங்கத்தின் அடிப்படை வரவு செலவுத் திட்ட உபரியின் 'சாதனை' பொதுச் செலவு வெட்டுக்கள் மூலமே எட்டப்பட்டது. வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைப்பது மற்றும் இறக்குமதியில் கடுமையான வெட்டுக்கள், மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை உருவாக்குவதன் மூலமே அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

'சரிந்து போன பொருளாதாரங்களின் மீட்சியானது பொதுவாக நீண்ட கால சவால்கள் மற்றும் கஷ்டங்கள் நிறைந்தது' என்று பிரகடனம் செய்த விக்கிரமசிங்க, 'மற்ற நாடுகளைப் போலல்லாமல், நீடித்த சிரமங்கள் மற்றும் வலிகளைத் தவிர்த்து, நமது பொருளாதாரத்தை விரைவாகப் புத்துயிர் பெறச் செய்துள்ளோம்' என்றார். 

பெரும் செல்வந்தர்கள் 'தாங்கும் சிரமங்களையும் வலிகளையும்' முறியடித்தாலும், உழைக்கும் மக்களுக்கு அப்படி இல்லை. கூட்டுத்தாபன வரிகள் குறைந்த மட்டத்தில் வைக்கப்பட்ட போதிலும், வருமான வரி, பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் பல்வேறு இறக்குமதி வரிகளுடன் உழைக்கும் மக்கள் மீது அதிகப்படியான செலவுகள் சுமத்தப்பட்டுள்ளன. எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் உரம் உட்பட 97 அத்தியாவசியப் பொருட்களுக்கு இறங்குமுகவரி (குறைந்த வருமானம் பெறுவோரிடம் அதிக வரி அறவிடுதல்) திணிக்கப்பட்டதன் மூலம் ஜனவரி முதல் பெறுமதி சேர் வரி 15 இல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் உழைக்கும் மக்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதும் கூட கடுமையான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

'தற்போது வெளிநாடுகள் மற்றும் வெளி வணிக தளங்களில் இருந்து பெற்ற எந்த கடனையும் திருப்பி செலுத்தவில்லை என்றாலும், வரவிருக்கும் மறுசீரமைப்பானது கடனை திருப்பிச் செலுத்துவதை நோக்கிய மாற்றத்தையே குறிக்கிறது. இந்தக் கடமைகளை நிறைவேற்ற, ரூபாய் மற்றும் டொலர் இரண்டும் இன்றியமையாதது” என்று ஜனாதிபதி அறிவித்தார்.

கடந்த செப்டம்பரில் இலங்கையின் மொத்த கடன் சுமை 91 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாகவும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு வருடாந்தம் 3 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் விக்கிரமசிங்க கூறினார். அரசாங்கத்தின் மொத்த வருடாந்தச் செலவினங்களில் 38 வீதம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கே செல்கிறது, என்று அவர் கூறினார்.

இந்த பாரிய கடன் சுமையானது தனது அரசாங்கம் 'முன்னேற்றம் அடைந்து வருகிறது' என்ற விக்கிரமசிங்கவின் கூற்றுக்களை முற்றிலும் அம்பலப்படுத்துகிறது. மிக முக்கியமாக, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 'அத்தியாவசியமானவை' என்று அவர் கூறும் 'ரூபாய் மற்றும் டொலர்கள்' உழைக்கும் மக்களிடம் இருந்து இன்னும் கடுமையான சர்வதேச நாணய நிதிய கொள்கைகள் மூலமே பிரித்து எடுக்கப்படும். சர்வதேச நாணய நிதியம், 'கொடூரமான பரிசோதனை' என்று விவரித்தது இந்த நடவடிக்கைகளையே ஆகும்.

வேலைகள், ஊதியங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் ஆகியவற்றில் வெட்டுக்கள் மூலம் பொதுச் செலவினங்களை மேலும் குறைப்பதன் ஊடகவே ரூபாய்கள் சேகரிக்கப்படும். அரச நிறுவனங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம் டாலர்கள் திரட்டப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளுக்கு இணங்க, சுமார் 430 அரசுக்கு சொந்தமான நிறுவனஙகள் தனியார்மயமாக்கல் / மறுகட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் விளைவாக சுமார் அரை மில்லியன் வேலைகள் அழிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற பயன்பாட்டுச் செலவுகளை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் ஏற்கனவே தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன.

உற்பத்தித்திறனை அதிகரிப்பது என்ற சாக்குப்போக்கின் கீழ், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களுக்கு விவசாயத் துறையைத் திறக்கும் திட்டங்களை விக்கிரமசிங்க வெளியிட்டார். ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் போன்ற பல்வேறு அரசாங்க நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் இலட்சக்கணக்கான ஏக்கர் தோட்டங்கள் ' உற்பத்தி இல்லாதவையாக உள்ளதுடன் இது வளங்களை கணிசமான விரயத்திற்கு இட்டுச் செல்கிறது' என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார். இந்த நிலத்தை 'வெளிநாட்டு தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகள் உட்பட உள்நாட்டு தொழில்முனைவோருக்கு நீண்ட கால வணிக சாகுபடிக்காக குத்தகைக்கு விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது,' என்று அவர் மேலும் கூறினார்.

விக்கிரமசிங்கவின் உரையின் கடைசிப் பகுதியானது, ஸ்தாபன பாராளுமன்றக் கட்சிகளை, குறிப்பாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.) இடமும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த அவரது அரசாங்கத்திற்குச் உதவுமாறு வலியுறுத்துவதில் கவனம் செலுத்தியது.

'இந்தச் சவாலை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் போது மட்டுமே நமது பயணம் வேகம் பெற முடியும்' என்று அவர் அறிவித்தார். இது, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் அதிகரித்து வரும் கொடூரமான தாக்குதல்களுக்கு விரோதமாக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்க கூட்டாக நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்பு ஆகும்.

ஜனவரி தொடக்கத்தில், பல்லாயிரக்கணக்கான இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) தொழிலாளர்கள் அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை உத்தரவுகள் மற்றும் பிற அடக்குமுறை நடவடிக்கைகளை மீறினார்கள். நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக நாடு தழுவிய மூன்று நாள் சுகயீன விடுமுறை பிரச்சாரத்தில் அவர்கள் பங்கேற்றனர். விசேட கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரி இலட்சக்கணக்கான அரச சுகாதார ஊழியர்கள் இந்த ஆண்டு மூன்று முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் வேலை நிறுத்தங்களை தகர்க்க 1,000 இராணுவ சிப்பாய்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பியது.

விக்கிரமசிங்க அரசாங்கமும் முழு இலங்கை ஆளும் வர்க்கத்தினரும், இந்த வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க இயக்கம், 2022 ஏப்ரல்-ஜூலையில் வெடித்த, இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற்றிய பாரிய எழுச்சியாக தலை தூக்கும் என்று பீதியடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு விக்கிரமசிங்க விடுக்கும் வேண்டுகோள், அவர்கள் தங்கள் உறுப்பினர்களை அமைதிப்படுத்தி, இந்த வகையான அரசாங்க எதிர்ப்பு இயக்கம் தோன்றுவதைத் தடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

அரசாங்கத்தின் மீதான பாராளுமன்ற எதிர்க்கட்சியின் விமர்சனங்கள், 'தனிப்பட்ட நபர்களின், பதவி நோக்கங்களுக்காக' மற்றும் 'நாட்டின் நலனில் தனிப்பட்ட ஆதாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்தே தோன்றுகிறது' என்று அறிவித்த அவர், நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

எதிர்க்கட்சிகளான ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.க்கு, விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்துடன் அடிப்படை வேறுபாடுகள் ஏதும் இல்லாத அதே நேரம், அவை சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளன. இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தங்கியிருக்கும் தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கும் திறமையற்றது என்பதே அவர்களின் கவலையாகும்.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீதான போலியான விமர்சனத்தின் மூலம் உழைக்கும் மக்களையும் கிராமப்புற உழைப்பாளிகளையும் ஏமாற்றும் முயற்சியில், ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யும் அடுத்த தேர்தலில் அதிகாரத்திற்கு வரவும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் தங்கள் சொந்த வழிமுறைகளைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்பார்க்கின்றன.

எவ்வாறாயினும், இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுடன் இணைத்துள்ள கடுமையான நிபந்தனைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்க மாட்டோம் என்று சர்வதேச நாணய நிதியம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. அடுத்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் தாக்குதல்களையே தொடர்ந்து செயல்படுத்துவார்கள்.

முதலாளித்துவ எதிர்க் கட்சிகளில் உள்ள தனது போட்டியாளர்களுக்கு மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகள் இல்லை என்பதை நன்கு அறிந்த விக்கிரமசிங்க, பாராளுமன்ற எதிர்க்கட்சிகளுக்கு அவர்களின் வேலைத்திட்டத்தை கோடிட்டுக் காட்டுமாறு பலமுறை சவால் விடுத்துள்ளார். “நாங்கள் தற்போது பயன்படுத்துவதை விட மாற்று முறைகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை முன் கொண்டு வாருங்கள். அவற்றை முழுமையாக ஆராய்ந்து விவாதிப்போம்” என்று பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

இராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீ,ல.பொ.ஜ.மு. 'கடந்தகால விரோதங்களை ஒதுக்கிவிட்டு ஒருமித்த கருத்தை எட்டியதற்காக' அதைப் பாராட்டிய விக்கிரமசிங்க, 'ஏன் ஐக்கிய மக்கள் சக்தி இதை பின்பற்ற முடியாது?' என்று தனது சொந்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த ஐ.ம.ச.யின் தோற்றத்தை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார்.

2015-19 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் போது ஜே.வி.பி 'எங்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்தது' என்பதை நினைவுபடுத்திய அவர், 'எங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஜேவிபி ஏன் ஒன்றிணைய முடியாது?' என்று கேட்டார்.

விக்கிரமசிங்கவின் கொள்கை அறிக்கையும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொது சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கான அவரது அடக்குமுறை பதிலும், அவரது அரசாங்கம் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதலை தீவிரப்படுத்தும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஐ.ம.ச., ஜே.வி.பி. மற்றும் ஏனைய பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள அதேநேரம், அவை தேர்ந்தெடுக்கப்பட்டால் அதே ஆளும் வர்க்க தாக்குதலை முன்னெடுத்துச் செல்லும்.

இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள, தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவ உயரடுக்கிற்கு எதிராக போராடுவதற்கு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை உருவாக்க, அதன் சொந்த ஜனநாயக கட்டுப்பாட்டில் செயல்படும் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும். சோசலிச சர்வதேசவாதத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும்.

Loading