நவ-பாசிசவாத வாக்குகள் பெருகுகையில், போர்த்துக்கல் தேர்தலில் வலதுசாரி சமூக-ஜனநாயகக் கட்சி (PSD) வெற்றி பெறுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நவ-பாசிச செகா (Chega) கட்சிக்கான வாக்குகள் பெருகிய நிலையில், போர்த்துக்கல்லின் வலதுசாரி சமூக-ஜனநாயகக் கட்சி (PSD) நேற்றிரவு நடந்த போர்த்துக்கல் தேர்தல்களில் மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பு ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கு (PS) ஒரு மகத்தான தோல்வியாக இருந்தது, அது 2022 முதல் அது வைத்திருந்த 230 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்தில் 117 பிரதிநிதிகளின் அறுதிப் பெரும்பான்மையை இழந்தது.

மார்ச் 11, 2024 திங்கட்கிழமை, லிஸ்பனில் போர்த்துக்கல் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறிய பின்னர் கொண்டாடும் தனது ஆதரவாளர்களின் ஆராவாரத்தை ஜனநாயக கூட்டணியின் தலைவர் லூயிஸ் மாண்டினீக்ரோ கேட்கிறார். [AP Photo/Armando Franca]

சமூக ஜனநாயகக் கட்சி 29.8 சதவீத வாக்குகளையும், PS 28.7 சதவீத வாக்குகளையும், செகா (Chega)18.2 சதவீத வாக்குகளையும் பெற்றன. வலதுசாரி தாராளவாத முன்முயற்சி (IL) 4.9 சதவீத வாக்குகளையும், நடுத்தர வர்க்க பப்லோவாத இடது முகாம் (BE) 4.4 சதவீத வாக்குகளையும், ஸ்ராலினிச தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி (CDU) 3.2 சதவீத வாக்குகளையும் பெற்றன. கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, PS 41 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தது, முக்கிய மாற்றம் மகத்தான வாக்குகள் PS இல் இருந்து சேகாவிற்கு மாறியதுதான். அது 7ல் இருந்து 18 சதவிகிதமாக தனது வாக்குகளை உயர்த்தியது.

நேற்றிரவு நிலவரப்படி, நாட்டுக்கு வெளியிலிருக்கும் போர்த்துகீசிய இடங்கள் உட்பட 11 இடங்கள் இன்னும் ஒதுக்கப்படாத நிலையில், எந்த அரசாங்க கூட்டணி உருவாகும் என்பது தெளிவாக இல்லை. PSD பாராளுமன்றத்தில் 77 இடங்களையும், PS 75 இடங்களையும், செகா 46 இடங்களையும், IL 8 இடங்களையும், BE 5 இடங்களையும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் 3 இடங்களையும் கைப்பற்றின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, சோசலிஸ்ட் கட்சி அதிகாரிகள் தாங்கள் எதிர்க்கட்சியில் இருப்போம் என்று அறிவித்தனர், இதனால் அடுத்த அரசாங்கம் ஒரு வலதுசாரி அரசாங்கமாக இருக்கும், ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியும் முன்னதாக சேகாவுடன் ஒரு கூட்டணி அமைப்பதை நிராகரித்திருந்தது.

எவ்வாறிருந்த போதிலும், 1974 கார்னேஷன் புரட்சியில் பாசிசவாத சர்வாதிகாரி அன்டோனியோ டி ஒலிவேரா சலாசர் கவிழ்க்கப்பட்டதற்குப் பின்னர், முதல்முறையாக, ஒரு போர்த்துகீசிய தேர்தல் அதிவலது சக்திகள் ஒரு மத்திய பாத்திரம் வகிக்கும் ஒரு வலதுசாரி கூட்டணிக்கு ஒரு வெற்றியை உருவாக்கி உள்ளது என்பது வெளிப்படையாக உள்ளது.

இது, சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் நடுத்தர வர்க்க, போலி-இடது கூட்டாளிகளான BE மற்றும் ஸ்ராலினிச போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி (PCP) ஆற்றிய பிற்போக்குத்தனமான பாத்திரத்தின் விளைபொருளாகும். 2015 முதலாக, ஆழ்ந்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் திணித்தும், கோவிட்-19 உடன் பாரிய தொற்றுநோய்க்கான கொள்கைகளைத் திணித்தும், உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோ போரை ஆதரித்தும் என தொழிலாள வர்க்கத்தை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய அடுத்தடுத்து வந்த சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்களை போலி-இடது கட்சிகள் ஆதரித்தன. தேசியளவிலான சரக்கு ஊர்தி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்கு இராணுவத்திற்கு அழைப்பு விடுப்பது உட்பட, போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை தடை செய்ய சோசலிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் முயன்றதுடன், வக்கிரமாக தொழிலாளர்களை தாக்கியது.

பெருவணிக சோசலிஸ்ட் கட்சியும் அதன் போலி-இடது கூட்டாளிகளும் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான மற்றும் தீர்மானகரமான எதிரிகளாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும், தொழிலாள வர்க்கத்தில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு ஒரு ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு இல்லாமல், போலி-இடது கட்சிகள் மீதான ஆழ்ந்த கோபத்தையும் கசப்புணர்வையும் சுரண்டுவதற்கு எஞ்சியிருக்கும் அரசியல் சக்தி நவ-பாசிசவாதமாகும்.

BE அதிகாரி பெபியன் ஃபிகுயெரெடோ தோல்விக்கான பழியை 2022 தேர்தல்களுக்குப் பிந்தைய PS இன் சாதனையின் மீது சுமத்தினார். அதில் BE மற்றும் PCP வாக்குகள் சரிந்தன மற்றும் PS அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. “இரண்டு வருட முழுமையான PS பெரும்பான்மை அரசாங்கம் நாட்டின் மீது வலது பக்கமாக ஒரு ஆழமான திருப்பத்தை சுமத்தியது, இடது பிளாக் இந்த பிரச்சாரத்தில் ஒவ்வொரு நாளும் முன்மொழிவுகள், மாற்றுகள் மற்றும் போர்த்துக்கலுக்கு மற்றொரு எதிர்காலத்தை வழங்குவது மற்றும் முழுமையான பெரும்பான்மை தோல்வியுற்ற வலுவான, ஐக்கியமான நாட்டை உருவாக்குவது சாத்தியமாகும் என்ற யோசனையுடன் எதிர்க்க முயன்றது” என்று ஃபிகுயெரெடோ கூறினார்.

சோசலிஸ்ட் கட்சி ஆட்சி செய்வதற்கு BE மற்றும் PCP இன் ஆதரவு இனியும் இயந்திர ரீதியாக அவசியமில்லை என்ற பின்னர், வலதை நோக்கிய கூர்மையான மாற்றம் 2022 இல் தொடங்கியது என்ற ஃபிகுயெரெடோவின் கூற்று ஒரு அரசியல் பொய்யாகும். யதார்த்தத்தில், தொழிலாளர்கள் மீதான மிகவும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் பலவும் (ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள், சரக்கு ஊர்தி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தியது, மற்றும் கோவிட்-19 நோய்தொற்று கொள்கை) 2022 க்கு முன்னதாகவே நடத்தப்பட்டன, அப்போது சோசலிஸ்ட் கட்சி அப்போதும் BE மற்றும் PCP உடனான அதன் ஜெரிங்கோன்கா (”முரண்பாடு”) கூட்டணியில் உத்தியோகபூர்வமாக இருந்தது. வசதியான மத்தியதர வர்க்க கல்வியாளர்களும் BE இன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் தொழிலாளர்களின் முன்னால் சமூகப் பிற்போக்குத்தனத்தின் கருவிகளாக அம்பலப்படுத்தப்படுகின்றனர்.

இந்த சமீபத்திய தேர்தலுக்கு முன்னதாக கூட, ஃபிகுயெரெடோவின் சொந்த ஒப்புதலின்படி சோசலிஸ்ட் கட்சி வன்முறையான வலதுசாரி கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த சமயத்திலும் கூட, உயர்மட்ட BE அதிகாரிகள் அதனுடன் கூட்டணி சேர முயன்றனர். உண்மையில், 2024 தேர்தல்களுக்கு சற்று முன்னர், BE தலைவர் மரியானா மோர்டாகுவா அறிவிக்கையில், சோசலிஸ்ட் கட்சி உடன் “ஒரு உடன்படிக்கை செய்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக” அறிவித்ததுடன், சோசலிஸ்ட் கட்சி உடனான அவரது கட்சியின் ஜெரிங்கோன்கா கூட்டணியைப் பாராட்டி, “நாம் 2015 இல் முக்கியமான ஒன்றைச் செய்தோம்,” என்று அறிவித்தார்.

BE போன்ற பிற்போக்குத்தனமான, போலி-இடது கட்சிகளின் பொய்களும் பாசாங்குத்தனமும் பெருந்திரளான மக்களை சீற்றமடையச் செய்கின்றன. நவ-பாசிசவாதிகள் அந்த கோபத்தை சுரண்டிக்கொள்ள விடப்பட்டுள்ளனர் —இந்த கோபத்திற்கு போர்த்துகீசிய அரசியல் ஸ்தாபகத்திற்குள் எந்த இடதுசாரி வெளிப்பாட்டையும் காணவில்லை.

வெளியேறவிருக்கும் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி அன்டோனியோ கோஸ்டா, தேர்தல் முடிவு “வழக்கத்திற்கு மாறானது” என்று கூறி, தொழிலாளர்களை வறியவர்களாக்கிய பணவீக்க உயர்வைக் குற்றஞ்சாட்டி அதை நிராகரிக்க முயன்றார்: “இது பொதுவான மகிழ்ச்சியின்மையின் ஒரு உணர்வை உருவாக்கியது.” “செகாவின் எழுச்சியில் கட்டமைப்பு ரீதியானது என்ன, தேர்தல்களில் இருந்து என்ன வெளிப்படுகிறது என்பதை நாம் காணக்கூடிய ஒரு ஆழமான வழக்கத்திற்கு மாறான சூழலைக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள” அவர் அழைப்புவிடுத்தார். அதிவலதின் வளர்ச்சியை ஒரு “எதிர்ப்பு வாக்களிப்பை” மட்டுமே பிரதிபலிக்கிறது என்று கூறி அவர் நிராகரித்தார்.

உண்மையில், போர்த்துக்கலில் மட்டுமல்லாது ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கம் உட்பட மக்களிடையே அதிகரித்து வரும் கோபத்தை சுரண்டிக் கொண்டு, ஆளும் வர்க்கத்தால் அதிவலது கட்சிகள் முன்னிறுத்தப்படுகின்றன. செகாவின் எழுச்சி ஸ்பெயினில் வோக்ஸ், பிரான்சில் தேசிய பேரணி, இத்தாலிய சகோதரர்கள் மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீடு ஆகியவற்றுடன் கைகோர்த்து செல்கிறது. இது அனைத்திற்கும் மேலாக, 20 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய பாசிசவாதத்தின் பாரம்பரியத்தில் இந்த கட்சிகளின் வரலாற்று வேர்கள் ஐரோப்பா எங்கிலும் மற்றும் அதற்கு அப்பாலும் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தால் கோரப்பட்ட போர் மற்றும் எதேச்சதிகார ஆட்சி கொள்கைகளை ஊக்குவிப்பதற்கு அவற்றை மிகவும் பொருத்தமானதாக ஆக்குகின்றன.

சலாசரின் எஸ்டாடோ நோவோவின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1976 இல் போர்த்துகீசிய குடியரசின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனரல் அன்டோனியோ டோஸ் சாண்டோஸ் ரமல்ஹோ எனெஸ் (António dos Santos Ramalho Eanes), உலக நிலைமை மோசமாக உள்ளது என்று அப்பட்டமாக எச்சரித்தார் மற்றும் போர்த்துகீசிய மக்களுக்கு பேரழிவு ஏற்படும் என்று கணித்திருந்தார். “உலகம் ஒரு மோசமான நிலையில் உள்ளது மற்றும் மோசமடைய அச்சுறுத்தி வருகின்ற நிலையில், இந்த தேர்தல்கள் குறிப்பாக முக்கியமானவை என்று நான் நம்புகிறேன்,” என்று ரமல்ஹோ ஏனெஸ் அறிவித்தார். “பொருளாதார பிரச்சினைகள், நிதியியல் பிரச்சினைகள், பணவீக்கத்தை கடவுள் தடுக்கட்டும், நமக்கு உண்மையில் அது தேவையில்லை, இராணுவ பிரச்சினைகளும் கூட” என்று அவர் மேற்கோளிட்டார்.

“நாம் எமது நாட்டை, அதன் பொருளாதாரத்தை, போர்த்துகீசிய மக்களின் வாழ்க்கையை அத்தகைய நிலைமைக்கு தயார் செய்ய வேண்டும்” என்று அவர் வாக்களிக்கச் செல்லும்போது பத்திரிகையாளர்களிடம் கூறினார். “போர்த்துகீசிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்” என்று அவர் கணித்தார்.

தேர்தல் வாக்களிப்பின் போது, ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா, “வெளிநாட்டில் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்தி” வாக்களிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். “எதிர்காலத்தில் அங்கு என்ன நடக்கும்” என்பது “மீதமுள்ள அனைத்தையும் தீர்மானிக்கும்” என்று சூசா கூறினார். “அமெரிக்க தேர்தல்கள், ஐரோப்பிய தேர்தல்கள், உக்ரேன் போர், மத்திய கிழக்கு, செங்கடல் பதட்டங்கள், உலகப் பொருளாதாரம், மற்றும் சமீபத்தில் விலைவாசி மற்றும் வட்டி விகிதங்களின் உயர்வுகளுக்கு அவை எதைக் குறிக்கும்” என்று அவர் தீர்க்கமான கேள்விகளை பட்டியலிட்டார்.

அவரது உத்தியோகபூர்வ இல்லமான பெலெம் அரண்மனையில் இருந்து பேசிய சூசா, இந்த கவலைகள் “ஏறக்குறைய மௌனமாக்கப்பட்டுள்ளன அல்லது அமைதியாக மட்டுமே பேசப்படுகின்றன,” மற்றும் “ஒவ்வொருவராலும் சிந்திக்கப்படுகின்றன ஆனால் வெகு சிலரால் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டன” என்று அறிவித்தார்.

அரசியல் ஸ்தாபனம் தீர்க்கமான உலகப் பிரச்சினைகளை (போர், காசா இனப்படுகொலை, வாழ்க்கைத் தரங்களின் சரிவு மற்றும் சமூக சமத்துவமின்மையின் வெடிப்பு எழுச்சி) தேர்தல்களில் இருந்து விலக்கி வைத்தது என்று போர்த்துக்கல் ஜனாதிபதி ஒப்புக்கொண்டதற்கு இது சமமாகும். தலைநகர் லிஸ்பனில் காஸா இனப்படுகொலைக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் போராடிய போதும் கூட, போலி-இடதுகள், சோசலிஸ்ட் கட்சி, அத்துடன் வலதுசாரி கட்சிகள் அனைத்தும் உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் நேட்டோ கூட்டணியின் ஆக்ரோஷமான கொள்கைகளுடன் அணி சேர்ந்து கொண்டன.

போர், இனப்படுகொலை, அதிவலது ஆட்சி மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் முதலாளித்துவம் தொடர்ந்து மூழ்கி வருகிறது. இந்த நெருக்கடியை போர்த்துக்கல் அல்லது வேறெந்த நாட்டின் தேசிய எல்லைகளுக்குள்ளும் தடுத்து நிறுத்த முடியாது. போலி-இடதுகளுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எதிர்ப்பின் அடிப்படையில், ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச, புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே முன்னோக்கிய பாதையாகும்.

Loading