ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி ஐரோப்பிய தேர்தல்களில் போட்டியிட அங்கீகாரம் பெற்றுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வெள்ளியன்று, ஜேர்மன் கூட்டாட்சி தேர்தல் கமிட்டி, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை (SGP) ஐரோப்பிய தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அங்கீகரித்துள்ளது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி, அவசியமான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்ததையும், பதிவு செய்த வாக்காளர்களிடம் இருந்து 4,000 க்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட ஆதரவு கையெழுத்துக்களை சமர்ப்பித்திருந்ததையும் அந்தக் குழு சரிபார்த்த பின்பு, SGP தேர்தலில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை தவிர, மேலும் 34 கட்சிகள் வாக்குச்சீட்டில் உள்ளன. தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பித்த பத்து கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

மார்ச் 29, 2024 அன்று கூட்டாட்சி தேர்தல் குழுவின் கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் கிறிஸ்தோப் வாண்ட்ரியர். [Photo: Phoenix Livestream]

“தேர்தலில் போட்டியிடுவதற்கான எங்களது அங்கீகாரம் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் முன்னணி வேட்பாளருமான கிறிஸ்தோப் வாண்ட்ரியர், இது தொடர்பான கூட்டத்திற்குப் பின்னர் தெரிவித்தார். “காஸா இனப்படுகொலையையும், பைத்தியக்காரத்தனமான போர் கொள்கையையும், மோசமடைந்து வரும் சமூக சீரழிவையும் எதிர்க்கின்ற மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கிற்காக போராடுகின்ற ஒரே கட்சி SGP மட்டுமே ஆகும். போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தைக் கட்டியெழுப்ப நாங்கள் இந்த தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.

தேர்தல் அங்கீகார நடைமுறை ஆழமாக ஜனநாயக விரோதமானது. கூட்டாட்சி தேர்தல் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ஸ்தாபக கட்சிகளின் பிரதிநிதிகள் (அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியான AfD உட்பட) ஆவர். தங்கள் அரசியல் எதிரிகளும் போட்டியாளர்களும் தாங்களே பங்கேற்கும் ஒரு தேர்தலில் நிற்க முடியுமா என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

சட்டப்படி, முறையான தேவைகள் மட்டுமே ஆராயப்பட வேண்டும். அதிகாரத்துவ தடைகள் அதிகம், மற்றும் கூட்டாட்சி தேர்தல் ஆணையர் கூறியது போல் சோதனைகள் “கடுமையானவை”. அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும். தங்கள் சட்டவிதிகள், வேலைத்திட்டம், ஒப்புதல் பிரகடனம் மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட வேட்பாளருக்கும் தகுதி சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் கட்சி நிர்வாகக் குழுவின் ஜனநாயக தேர்தலுக்கான சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் உறுப்பினர்கள் தேர்தல் முன்மொழிவில் கையெழுத்திட்டு சரியான நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பல கட்சிகள், நிறுவனமயமான கட்சிகள் கூட, தங்கள் வேட்பாளர்களில் சிலர் அங்கீகாரம் பெறத் தவறியதைக் கண்டன.

நிறுவனமயமற்ற கட்சிகளுக்கு குறிப்பாக தடைகள் அதிகம். இத்தேர்தலுக்காக அவர்கள் கூட்டாட்சி அரசிற்கு 2,000 கையெழுத்துக்கள் வரை கொடுக்க வேண்டும் அல்லது அனைத்து கூட்டாட்சி அரசுகளுக்கும் கூட்டுப் பட்டியலுக்கு 4,000ம் கையெழுத்துக்களை அளிக்க வேண்டும்.

கையெழுத்தை வழங்கும் ஒவ்வொருவரும் தங்கள் முழுப் பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். பின்னர் ஒவ்வொரு கையொப்பமும் உள்ளூர் தேர்தல் அலுவலகத்தால் தனித்தனியாக சரிபார்க்கப்படும். கையொப்பமிட்டவர் உண்மையில் வாக்களிக்க அங்கீகரிக்கப்பட்டவரா மற்றும் ஏற்கனவே மற்றொரு கட்சிக்கு கையெழுத்திடவில்லையா என்பதையும் தேர்தல் அதிகாரிகள் சரிபார்க்கிறார்கள். அனைத்து கையொப்பங்களும், அசல் சான்றிதழ்களுடன், மேலும் சரிபார்ப்புக்காக கூட்டாட்சி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கூட்டாட்சித் தேர்தல் குழுக் கூட்டத்தில் இந்த ஜனநாயக விரோத நடைமுறைக்கு எதிராக வன்ட்ரீயர் கடுமையாகப் பேசினார். அவர் சொன்னார்:

காஸா இனப்படுகொலை, ரஷ்யாவுக்கு எதிரான போர் கொள்கை மற்றும் சமூக சீரழிவுக்கு எதிரான மிகப்பெரும் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, இதை எதிர்க்கும் எவரொருவரையும் வாக்குச்சீட்டில் இருந்து விலக்கி வைக்க அங்கே ஒரு பக்கச்சார்பு உள்ளது. ஆகவே, நாம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதும் ஐரோப்பிய தேர்தல்களில் நிற்பதும் எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வான்ட்ரீயர் இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, நேரடி ஒளிபரப்பின் போது கேட்க முடியாதபடி அவரது ஒலிவாங்கி அணைக்கப்பட்டிருந்தது. அப்போது, “நாங்கள் இங்கே ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கவில்லை,” என்று கூட்டாட்சி தேர்தல் ஆணையர் டாக்டர் ரூத் பிராண்ட், இந்த ஜனநாயக விரோத நடைமுறை குறித்த வாண்ட்ரியரின் விமர்சனத்தை நியாயப்படுத்தும் முயற்சியில் கூறினார். மற்ற இடதுசாரி கட்சிகளின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளும் இந்த நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில் இருந்து தடுக்கப்பட்டனர்.

இந்த ஜனநாயகவிரோத நடைமுறையானது, தேர்தல்களில் SGP பங்கெடுப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதில் SGP அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் பாசிசவாத அபாயத்தையும் தீர்மானமாக எதிர்த்து வருகிறது. அதன் தேர்தல் அறிக்கையில், ஆளும் வர்க்கம் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மன் டாங்கிகளை அனுப்புவதன் மூலமாகவும், இனப்படுகொலையை அரசு கொள்கையாக இயல்பாக்குவதன் மூலமாகவும், ஹிட்லருக்குப் பின்னர் பார்த்திராத மட்டத்திற்கு இராணுவப் படைகளை ஆயுதமயமாக்குவதன் மூலமாகவும் அதன் பாசிசவாத பாரம்பரியங்களைத் தொடர்கிறது என்று SGP எச்சரிக்கை விடுக்கிறது.

SGP யின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு அறிவிக்கிறது:

இந்த வெறுக்கத்தக்க கொள்கைக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை அடக்குவதற்காக, கூட்டணி அரசு பாசிசத்தின் அந்துப்பூச்சியை உடுத்தி வருகிறது. இது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்புணர்வை தூண்டி அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழிக்கிறது. அதிதீவிர வலதுசாரியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சிக்கு ஆதரவளிக்கப்படுகிறது. மற்றும் பொலிஸ், இரகசிய சேவைகள் மற்றும் இராணுவத்திற்குள்ளும் அதிவலதுசாரி தீவிரவாத பயங்கரவாத வலைப்பின்னல்கள் உயர் அதிகாரிகளால் பாதுகாக்கப்படுகின்றன.

ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களின் நச்சு தேசியவாதம் ஒரு சக்திவாய்ந்த சர்வதேச இயக்கத்தால் எதிர்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் சமீபத்திய வாரங்களில் காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் பிரச்சாரம் இருந்தபோதிலும், இன்று தொழிலாள வர்க்கம் எவ்வளவு வலுவான மற்றும் பூகோளரீதியான வலையமைப்பில் உள்ளது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது. இந்த இயக்கம் விரிவடைந்து, சோசலிச முன்னோக்கினால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

Loading