சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் திங்களன்று மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலினால் ஈரானிய தூதரகப் பகுதி அழிக்கப்பட்டதோடு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) இரண்டு மூத்த ஜெனரல்கள் மற்றும் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய தாக்குதல் ஒரு அப்பட்டமான போர் நடவடிக்கை ஆகும். இது சந்தேகத்திற்கு இடமின்றி வாஷிங்டனுடன் கலந்துரையாடப்பட்டு, மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஒரு பரந்த மோதலைத் தூண்டும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஏப்ரல் 1, 2024 திங்கட்கிழமை, ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் உள்ள ஃபெலஸ்டின் (பாலஸ்தீன) சதுக்கத்தில் மறைந்த ஈரானிய புரட்சிகர காவலர் ஜெனரல் காசிம் சுலைமானியின் சுவரொட்டியை ஈரானிய எதிர்ப்பாளர்கள் அசைக்கின்றனர், சிரியாவில் ஈரானின் துணைத் தூதரகத்தை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் தகர்த்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். [AP Photo/Vahid Salemi]

இஸ்ரேல் நீண்டகாலமாக லெபனான், சிரியா இன்னும் பரந்த முறையில் சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறும் வகையில் அப்பட்டமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களில், அது லெபனான் மற்றும் சிரியா இரண்டிலும் அதன் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா தலைவர்கள் மற்றும் உயர்மட்ட IRGC தளபதிகளையும் கொன்றுள்ளது. எவ்வாறாயினும், ஒரு வெளிநாட்டில் உள்ள தூதரகங்கள் சர்வதேச மரபின்படி நியமிக்கப்படுவதால், இஸ்ரேல் ஈரானிய பிராந்தியத்தை நேரடியாக தாக்குவது இதுவே முதல் முறையாகும்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், 2016 வரை லெபனான் மற்றும் சிரியாவில் IRGC யின் சர்வதேச பிரிவான குட்ஸ் படைக்கு தலைமை தாங்கிய இராணுவ ஆலோசகர் ஜெனரல் முகமது ரேசா ஜாஹெடியும் அடங்குவார். தூதரகத்தை தரைமட்டமாக்கிய இந்த தாக்குதலில், ஜாஹ்தியின் துணை ஜெனரல் முகமது ஹாதி ஹாஜி ரஹிமி மற்றும் சிரியா மற்றும் லெபனானில் உள்ள குட்ஸ் படையின் பொது ஊழியர்களின் தலைவர் ஜெனரல் ஹொசைன் அமிரோலா ஆகியோரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் இராஜதந்திரிகளும் இராணுவ ஆலோசகர்களும் அடங்குவர். தூதரகத்திற்கு பாதுகாப்பு அளித்த இரண்டு சிரிய பொலிசார் உட்பட பலர் காயமடைந்தனர். சிரியாவுக்கான தெஹ்ரானின் தூதர் ஹொசைன் அக்பரி ஈரானிய தூதரகத்தின் தூதரக பிரிவில் வசித்து வருகிறார்.

இந்த தாக்குதலுக்கு சிரியாவும், ஈரானும் கண்டனம் தெரிவித்தன. சிரிய வெளியுறவு மந்திரி பைசல் மெக்டாட் இந்த தாக்குதலை “கடுமையாக கண்டித்தார்”. மேலும், “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அமைப்பு ஈரானுக்கும் சிரியாவுக்கும் இடையிலான உறவுகளை பாதிக்க முடியாது” என்று அவர் தெரிவித்தார். “இந்த ஆக்கிரமிப்பு தாக்குதல் அனைத்து இராஜதந்திர விதிமுறைகளையும் சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறியதாக நாங்கள் கருதுகிறோம்” என்று ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியான் அறிவித்தார்.

ஆறு ஏவுகணைகளை ஏவிய இஸ்ரேலிய எஃப் -35 போர் விமானங்களால் நடத்தப்பட்ட “கொடூரமான செயல்” என்று ஈரானின் தூதர் அக்பரி இந்த தாக்குதல்பற்றி குறிப்பிட்டார். “முதன்முறையாக, ஈரானின் கொடியை ஏந்திய இஸ்லாமிய குடியரசின் தூதரகத்தின் உத்தியோகபூர்வ கட்டிடத்தை குறிவைக்க சியோனிச ஆட்சி துணிந்துள்ளது,” என்று கூறிய அவர், ஈரானின் பதிலடி “பொருத்தமான நேரத்திலும் இடத்திலும்” மற்றும் “அதே அளவு மற்றும் கடுமையான முறையிலும்” வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கும் இஸ்ரேல், இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் அது தாக்குதலை நடத்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை — அதன் ஆதரவாளரான அமெரிக்காவைத் தவிர, அவ்வாறு செய்வதற்கான நோக்கத்தையும் வழிவகையையும் கொண்ட ஒரே நாடு அது மட்டுமே. தூதரகத்தை தாக்குவதற்கான இஸ்ரேலின் திட்டம் குறித்து வாஷிங்டனுக்கு தெரிவிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, பென்டகன் பத்திரிகை செயலாளர் சப்ரினா சிங் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மத்திய கிழக்கு முழுவதிலும் வியத்தகு முறையில் போரை விரிவாக்க அச்சுறுத்தும் ஒரு தாக்குதலை அமெரிக்காவுடன் விவாதிக்காமல் இருப்பது இஸ்ரேலை பொறுத்த வரையில் நம்புவதற்கு கடினமாக உள்ளது. உண்மையில், இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கலெண்ட் கடந்த வாரம் அமெரிக்காவில் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோட் ஓஸ்டினை சந்தித்தபோது, ஒரு பரந்த மோதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்பதற்கான வலுவான குறிப்புக்கள் உள்ளன. பேச்சுக்களுக்கு முன்பு, இஸ்ரேலிய “தளங்கள், தளவாடங்கள் ஆகியவற்றைப் பெறும் திறன்” பற்றியும், தெற்கு லெபனானில் ஈரானிய ஆதரவுடைய ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக ஒரு புதிய போர் முன்னரங்கைத் திறப்பது பற்றியும் தான் விவாதிக்க இருப்பதாக கெலண்ட் குறிப்புக் காட்டினார்.

இப்பேச்சுக்களுக்கு பின்னர், அமெரிக்கா ஒரு புதிய ஆயுதக் கப்பல் ஒன்றை போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதன் மூலம், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காஸாவில் உள்ள ரபா நகரத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மட்டும் இல்லாமல் ஒரு பரந்த பிராந்திய மோதலுக்கும் அமெரிக்கா பச்சை விளக்கைக் காட்டியுள்ளது. இந்த ஆயுதங்களில் 1,800 பாரிய 2,000 இறாத்தல் குண்டுகள் அடங்கும். இந்த குண்டுகள், முழு நகரத் தொகுதிகளையும் தரைமட்டமாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவை ஆகும்.

பேரழிவு தரும் அவசரச் சட்டம் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டது பற்றி கேட்கப்பட்டபோது, ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அந்த முடிவை நியாயப்படுத்தும் வகையில் இஸ்ரேலியர்கள் “நன்கு ஆயுதமேந்திய எதிரிக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ளும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்... ஈரான், ஹிஸ்புல்லா போல...” என்று குறிப்பிட்டார். இஸ்ரேலுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்ற அபத்தமான போலிக்காரணத்தைக் கூறி காஸா மீதான இனப்படுகொலைப் போரை நியாயப்படுத்திய அமெரிக்கா, அதே அடிப்படையில் ஈரான் மீது போர் தொடுக்கத் தேவையான ஆயுதங்களை இஸ்ரேலிடம் கொடுக்கிறது.

ஈரானின் தூதரகம் மீதான திங்களன்று நடந்த தாக்குதல் மற்றும் மூத்த ஈரானிய தளபதிகள் படுகொலை செய்யப்பட்டது ஆகியவை தெஹ்ரானை பதிலடி நிர்பந்திக்கக்கூடும். ஈரானிடம் இருந்து வரும் எந்தவொரு விடையிறுப்பும் “ஈரானிய ஆக்கிரமிப்பு” என்று முத்திரையிடப்படும் என்பதோடு, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் தெஹ்ரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிரான அவற்றின் ஆக்ரோஷத்தைத் தொடர்வதற்கான ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தப்படும். இஸ்ரேலுடன் சேர்ந்து, அமெரிக்கா ஏற்கனவே யேமனில் ஈரானுடன் தொடர்புடைய ஹவுதி போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது. மற்றும் பிப்ரவரியில் ஜோர்டானில் ஒரு அமெரிக்க புறக்காவல் நிலையத்தில் மூன்று அமெரிக்க படையினர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது.

இஸ்ரேல் ஏற்கனவே சிரியாவில் உள்ள ஈரானிய இராணுவ ஆலோசகர்களை தொடர்ச்சியான தாக்குதல்களில் கொன்றுள்ளது. இதில் உயர்மட்ட IRGC தளபதி Seyed Razi Mousavi டிசம்பர் மாதம் டமாஸ்கஸ் புறநகர்ப்பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு குறைந்தபட்சம் மூன்று இஸ்ரேலிய தாக்குதல்களாவது ஈரானுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், ஜனவரியில் டமாஸ்கஸில் நடந்த தாக்குதலில் குறைந்தபட்சம் ஐந்து ஆலோசகர்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், கடந்த வாரம் ஈராக்கிய எல்லைக்கு அருகே டீர் எல்-ஜோரில் நடந்த தாக்குதலில் ஒரு ஆலோசகர் கொல்லப்பட்டார்.

கடந்த வாரம் இஸ்ரேல், அலெப்போ நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள இலக்குகள் மீதான வான்வழித் தாக்குதல்கள் உட்பட, சிரியாவிற்குள் அதன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அலெப்போ தாக்குதலில் சிரிய படைகளில் அதிகபட்சமாக 36 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதில் 6 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய இராணுவம், கடந்த மாதம் காஸா மீதான இஸ்ரேலிய போர் தொடங்கியதில் இருந்து சிரியாவிலும் லெபனானிலும் 4,500க்கும் மேற்பட்ட ஹெஸ்பொல்லா இலக்குகளைத் தாக்கியதாக அறிவித்துள்ளது. பல தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்களை கொன்றதாக அது கூறியது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பெருகிவரும் மோதல் நடந்துவரும் நிலையில், எல்லைப் பகுதியை ஒரு போர்ப்பகுதியாக மாற்றிக் கொண்டு, இஸ்ரேலிய போர் விமானங்கள் வடக்கு லெபனானுக்குள் இருக்கும் இடங்களையும் தாக்கி வருகின்றன.

எவ்வாறிருப்பினும், டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான சமீபத்திய வான்வழித் தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஒரு மோதலைத் தவிர்க்கவும் மற்றும் அதன் கூட்டிலுள்ள போராளிகளைக் கட்டுப்படுத்தவும் ஈரான் முனைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், இஸ்ரேல் பின்வாங்குவதற்கு முற்றிலும் மாறாக, இந்த நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பரந்த மோதலை விரிவாக்க முற்பட்டுள்ளது.

“ஈரான் நடைமுறையளவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் நம்புகிறது. மேலும், ஈரானையும் ஹிஸ்புல்லாவையும் கணிசமாக தரமிழக்கச் செய்வதற்காக ஒரு போர் அபாயத்தை எடுக்க தயாராக உள்ளது” என்று மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச பயிலகத்தின் மூத்த ஆய்வாளர் எமில் ஹோகயெம் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

உண்மையில் இஸ்ரேல் மட்டும் அல்ல, இஸ்ரேலை அரசியல், நிதிய, இராணுவ ரீதியாக முழுமையாக ஆதரித்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் ஈரானுக்கு எதிராக பேரழிவு தரும் மோதலைத் தூண்ட முற்படுகிறது. ஏற்கனவே உக்ரேனில் அணு ஆயுதமேந்திய ரஷ்யாவுடன் விரிவடைந்து வரும் போரிலும், மற்றும் சீனாவுடனான போருக்கான முன்னேறிய தயாரிப்புகளிலும் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, மத்திய கிழக்கு மீதான கட்டுப்பாட்டை அபிவிருத்தி அடைந்து வரும் உலகளாவிய மோதலின் ஒரு முக்கிய கூறுபாடாக கருதுவதுடன், அதன் இலக்குக்கு ஈரான் அகற்றப்பட வேண்டிய முக்கிய தடையாக கருதுகிறது.

Loading