முன்னோக்கு

உலக மத்திய சமையலறை உதவித் தொழிலாளர்கள் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய படுகொலை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த திங்கட்கிழமை இரவு, காஸாவில் உள்ள உலக மத்திய சமையலறை (World Central Kitchen) அமைப்பைச் சேர்ந்த சர்வதேச உதவித் தொழிலாளர்களின் வாகனத் தொடரணி மீது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய மூன்று வான்வழித் தாக்குதல்களில், ஏழு தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட உதவித் தொழிலாளர்கள், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலந்து மற்றும் பாலஸ்தீனத்தின் குடிமக்கள் ஆவர்.

இந்த தாக்குதல்கள் துல்லியமாக, வாகனங்களின் கூரைகளை நேரடியாக குறிவைத்து, வான்வழியாக குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இந்த வாகனங்கள் மனிதாபிமான பணியாளர்களுக்கு உரியது என்று தெளிவாக அடையாளம் காட்டும் பெரிய சின்னங்களைக் கொண்டிருக்கின்றன.

ஏப்ரல் 1, 2024 அன்று காஸாவில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு நபர் இரத்தக் கறை படிந்த பிரித்தானிய, போலந்து மற்றும் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்களைக் காட்டுகிறார். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட உலக மத்திய சமையலறைத் தொழிலாளர்களில் மூன்று பிரித்தானிய குடிமக்கள் உட்பட, போலந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டவர்கள், ஒரு கனடிய-அமெரிக்க இரட்டை குடியுரிமை உள்ளவர் மற்றும் ஒரு பாலஸ்தீனியர் ஆவர். [AP Photo/Abdel Kareem Hana]

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் செய்தித் தொடர்பாளர்கள், வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட மூன்று வான்வழித் தாக்குதல்களும் “தவறு” மற்றும் “தவறாக அடையாளம் காணப்பட்டதன்” விளைவு என்று அபத்தமான முறையில் கூறினர். ஆனால், ஊடகங்களில் எதிரொலித்த இந்தக் கூற்றுக்கள், இந்த தாக்குதல்கள் கவனமாக குறிவைக்கப்பட்டன என்பதற்கான பெருகிவரும் சான்றுகளுக்கு முன்னால் செயலற்றுப்போயின.

ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், உலக மத்திய சமையலறை அமைப்பின் நிறுவனர் ஜோஸ் ஆண்ட்ரேஸ், தொழிலாளர்கள் திட்டமிட்ட முறையில், ஒரு வாகனத்தில் இருந்து அடுத்த வாகனத்துக்கு குறிவைத்து தாக்கப்பட்டார்கள் என்று குறிப்பிட்டார். அத்தோடு, இந்த தாக்குதல்கள் தற்செயலானவை என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூற்றுக்களை நிராகரித்த ஆண்ட்ரேஸ், திட்டவட்டமாக இல்லை என்று மறுத்து கூறினார்.

இந்த தாக்குதலின் இலக்கு, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் விளக்குவது போல், “நன்கொடையாளர்கள் திரும்ப அழைக்கப்படும்போது, காஸாவில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து பட்டினியால் வாடுவதை” உறுதி செய்வதாகும்.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) விடுத்த ஒரு அறிக்கை, “இதுபோன்ற வருந்தத்தக்க சம்பவங்கள் பற்றிய விவரிப்புகளை நாங்கள் ஏற்கவில்லை. … உலக மத்திய சமையலறை மற்றும் MSF இன் வாகன அணிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு என்ன நடந்தது என்பது மனிதாபிமானிகள், சுகாதாரப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.நா. பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் மீதான வேண்டுமென்றே தாக்குதல்களின் அதே வடிவத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், நாங்கள் இந்தக் கூற்றை ஏற்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலிய உதவிப் பணியாளர்கள் மீதான தொடர்ச்சியான கொலைகளில் சமீபத்தியவை மட்டுமே ஆகும். இதுவரை, இவர்களில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், உணவு விநியோக மையங்களில், உணவைப் பெற முயலும் பசிபட்டினியால் வாடும் மக்கள் மீதான “மாவுப் படுகொலைகளை” இஸ்ரேல் திட்டமிட்டு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

ஆறு மாத இஸ்ரேலிய முற்றுகைக்குப் பிறகு, காஸாவின் ஒட்டுமொத்த மக்களும் பட்டினியை எதிர்கொள்கின்றனர். மேலும், ஐக்கிய நாடுகள் சபையும் உலக வங்கியும் பஞ்சம் நெருங்கிவிட்டதாக எச்சரித்துள்ளன. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்கனவே டசின் கணக்கான குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும் பஞ்சத்தால் ஏற்படும் மரணங்கள், குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட விரைவில் அதிகமாகும் என்று மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.

உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு பைடென் நிர்வாகத்தின் பதில், இஸ்ரேலை பாதுகாப்பதும், இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்பதை மறுப்பதும், படுகொலை பற்றிய எந்த சர்வதேச விசாரணையையும் நிராகரிப்பதும் ஆகும்.

“உதவிப் பணியாளர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் காஸா மீதான ஜனாதிபதியின் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா” என்று புதன்கிழமை கேட்டபோது, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜோன்-பியர் “எந்த மாற்றமும் இல்லை” என்று கூறினார்.

அதே நாளில் முந்தைய அறிக்கையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, “ஹமாஸின் அச்சுறுத்தலை அகற்றுவதற்காக இஸ்ரேல் மேற்கொள்ளும் போரில், அமெரிக்க ஆதரவிலிருந்து அது தொடர்ந்து பயனடையும் என்ற உண்மையை நாங்கள் மறைக்கவில்லை” என்று கூறினார்.

கடந்த வியாழன்று, நெதன்யாகுவுடனான அரை மணி நேர தொலைபேசி உரையாடலை, படுகொலையின் இராஜதந்திர வீழ்ச்சியைக் கையாள்வதுக்கு பைடென் அர்ப்பணித்தார். “பொதுமக்களின் தீங்கு, மனிதாபிமான துன்பங்கள் மற்றும் உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய இஸ்ரேல் குறிப்பிட்ட, உறுதியான மற்றும் அளவிடக்கூடிய நடவடிக்கைகளை அறிவித்து செயல்படுத்த வேண்டியது அவசியம்” என்று பைடென் இந்த உரையாடலில் தெளிவுபடுத்தியதாக பொதுத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் உடனடியாக அமெரிக்க ஊடகங்களால் ஒரு பெரிய கொள்கை மாற்றம் என்று முத்திரை குத்தப்பட்டன. ஆனால், அடுத்தடுத்த செய்தியாளர் சந்திப்பில், வெள்ளை மாளிகை அதிகாரிகள் எதுவும் மாறவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினர். “ஹமாஸ் மட்டுமின்றி, பலவிதமான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் திறனுக்காகவும் அமெரிக்காவின் ஆதரவு இரும்புக் கவசமாகவே உள்ளது” என்பதை பைடென், இஸ்ரேலிய பிரதமரிடம் மிகத் தெளிவாகக் கூறியதாக ஜோன் கிர்பி கூறினார். இந்த தொலைபேசி அழைப்பு ஒரு “இறுதி எச்சரிக்கையா” என்று கேட்டபோது, ​​​​கரீன் ஜோன்-பியர் “இல்லை” என்று கூறினார்.

இதனை வேறுவிதமாகக் கூறினால், பைடெனின் “கோரிக்கைகள்” காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு நிதியுதவி, ஆயுதம் வழங்குதல் மற்றும் அதனை பாதுகாத்தல் மற்றும் உதவிப் பணியாளர்களின் கொலைக்கு காரணமான இராணுவத் தளபதிகள் மற்றும் சிவிலியன் கொள்கை வகுப்பாளர்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் அமெரிக்கக் கொள்கையை மூடிமறைக்கும் நோக்கத்துடன் இருந்தது.

நெதன்யாகு ஆட்சியின் குற்றச் செயல்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஏனெனில், காஸா இனப்படுகொலையானது மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு முறையான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ தாக்குதலின் ஒரு பகுதியாக இருக்கிறது. இது பிராந்தியத்தின் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் தகர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அக்டோபர் 7 முதல், அமெரிக்கா இஸ்ரேலுக்கு 100 தனித்தனி ஆயுத ஏற்றுமதிகளை வழங்கியுள்ளது, இவை அனைத்தும் காங்கிரஸின் அங்கீகாரம் மற்றும் ஒப்புதலுக்கு தேவையான வரம்புக்கு கீழே இருக்கும். கடந்த வாரம், அல்-ஷிஃபா மருத்துவமனையில் 400 க்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு, அமெரிக்காவின் பதில், மற்றொரு தொகுதி 1,800 2,000ம் இறாத்தல் எடைகொண்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பியதாகும். திங்களன்று, இஸ்ரேல் உலக மத்திய சமையலறை உதவித் தொழிலாளர்களை படுகொலை செய்த அதேநாளில், பைடென் நிர்வாகம் ஆயிரக்கணக்கான குண்டுகளை அதற்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது.

இப்போது ஆறு மாதங்கள் ஆகின்ற காஸா மீதான இனப்படுகொலை, ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் குற்றமயமாக்கலில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இதில் திட்டமிட்ட படுகொலை, பட்டினி மற்றும் இனப்படுகொலை ஆகியவை வழக்கமாகப் பயன்படுத்தப்படும் முறைகளாக இயல்பாக்கப்படுகின்றன.

உலக மத்திய சமையலறை உதவி தொழிலாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்த அதே வாரத்தில், இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் குழு, அக்டோபர் 7 முதல் ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுத்த குண்டு வீச்சுக்களுக்கான இலக்குகளைத் தேர்ந்தெடுக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்பான “லாவெண்டர்” கருவி இருப்பதை வெளிப்படுத்தியது.

சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்கான இலக்குகளாக ஆயிரக்கணக்கான காஸா மக்களைக் குறிக்க இந்த கருவி பயன்படுத்தப்படுகிறது. இலக்கு வைக்கப்பட்ட நபர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் இருப்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு அருகிலுள்ளவர்கள் மீதும் குண்டுகளை வீசுமாறு இஸ்ரேலிய விமானப்படைக்கு இந்தக் கருவி உத்தரவு பிறப்பிக்கிறது. ஒவ்வொரு தாக்குதலும், இலக்கு வைக்கப்பட்ட ஒவ்வொரு நபருடன் சேர்த்து 20 அருகிலுள்ளவர்களை கொல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சில சந்தர்ப்பங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குக்கு அருகிலுள்ள 100 பேர்கள் வரை கொல்ல அனுமதிக்கப்படுகிறது.

அரை நூற்றாண்டு காலமாக, இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகள் வாஷிங்டனால் அமெரிக்கக் கொள்கைக்கு முன்னுதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிக முக்கியமான உதாரணம் “இலக்கு வைக்கப்பட்ட கொலைகள்” அல்லது அரசினால் ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலைகளின் கோட்பாடு ஆகும். இது, அமெரிக்காவால் தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இஸ்ரேலால் உருவாக்கப்பட்டது.

ஆகவே, இன்று காஸாவிலுள்ள மக்களுக்கு எதிராக இஸ்ரேல் என்ன செய்கிறதோ, அதை அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் எதிர்காலத்தில் செய்வார்கள். தற்போதைய இனப்படுகொலையில் சியோனிச ஆட்சியின் நடவடிக்கைகள், கலகக்கார நகர்ப்புற மக்களுக்கு எதிராக, பாரிய பசி பட்டினியுடன் இணைந்து பாரிய அளவில் போர்க்குற்றங்களைச் செய்வதற்கு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு முன்னுதாரணமாக பயன்படுத்தப்படும்.

போரின் வெடிப்பு, இனப்படுகொலை மற்றும் அரசியல் அடக்குமுறை ஆகியவை ஒரு பிறழ்ச்சி அல்ல. லெனின் சுட்டிக் காட்டியது போல், ஏகாதிபத்தியம் வெறுமனே ஒரு கொள்கை அல்ல மாறாக முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டமாகும். எனவே, ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு என்பது ஒரு புரட்சிகரமான கேள்வியாகும். இது ஒரு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக முதலாளித்துவத்தை, சோசலிசத்தால் பதிலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

காஸா இனப்படுகொலையை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம் மற்றும் தனிப்பட்ட முதலாளித்துவ அரசாங்கங்கள் ஆகியவற்றில் முறையீடு செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. இது, இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பான முதலாளித்துவ அரசாங்கங்களின் போக்கை மாற்றுமாறு அழைப்பு விடுப்பதல்ல. மாறாக, சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களுடன், போருக்கு எதிரான போராட்டத்தை ஒன்றிணைப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவது அவசியமாகும்.

Loading