உக்ரேன் போரில் நூற்றுக்கணக்கான விரக்தியடைந்த இலங்கையர்கள் கூலிப்படையாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் விளைவாக மோசமடைந்து வரும் வறுமை மற்றும் வேலையின்மை, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வேலை தேடி வெளிநாடுகளுக்கு இடம்பெயரத் தள்ளியுள்ளது. இவர்களில் பலர் மோசடிக்காரர்களுக்கு பலியாகியுள்ளதாகவும், இது பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அண்மைய ஊடக அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

2020 ஜூலை 8, 2020 அன்று மத்திய கிழக்கில் இருந்து அனைத்து இலங்கைத் தொழிலாளர்களையும் அரசாங்கம் திரும்ப அழைத்து வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர். இடது மற்றும் மையத்தில் உள்ள சுலோக அட்டைகளில் “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறக்கின்றனர், ஆனால் அரசாங்கம் அமைதியாக உள்ளது” மற்றும் வலதுபுறத்தில் “அரசாங்கம் தொழிலாளர்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” [AP Photo/Eranga Jayawardena]

நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தின் கூலிப்படையினராக பணியாற்றி வருவதாக அல்-ஜசீரா சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள், “ஒரு மாதத்திற்கு 3,000ம் (900,000 இலங்கை ரூபாய்க்கும் மேல்) அமெரிக்க டொலர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமைக்கான வாய்ப்பு ஆகியவற்றால் ரஷ்யாவின் சலுகையால் போரில் ஈர்க்கப்பட்டனர்” என்று செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

கொழும்பை தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகை, மார்ச் 31 அன்று, சுமார் 100 முன்னாள் இலங்கை இராணுவ சிப்பாய்கள் உக்ரேனிய வெளிநாட்டு படையணியில் இணைந்துள்ள அதேவேளை, நூற்றுக்கணக்கானவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான இரத்தக்களரி அமெரிக்க-நேட்டோ போரின் இரு பக்கங்களிலும் இலங்கை பொதுமக்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தக் கூலிப்படையினர் இலங்கையில் பதிவு செய்யப்படாத வேலை வழங்கும் நிறுவனங்களால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, சுற்றுலா விசாவில் போலந்து மற்றும் ஜோர்ஜியா வழியாக நுழைகின்றனர். முன்னாள் இலங்கை இராணுவத்தினர் போர்க்களத்தில் பணியாற்ற வேண்டும் என்று வேலை வழங்கும் முகமைகள் தெரிவிக்கின்றன. எவ்வாறிருப்பினும், போலந்து, ஜார்ஜியா மற்றும் உக்ரேனில் சிவிலியன் வேலைகளுக்கு அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் என்று பொய்யாகக் கூறப்பட்டு, உக்ரேனுக்கு வந்தவுடன் போர் முன்னரங்கிற்கு அனுப்பப்படுகிறார்கள்.

கடவத்தையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தியதற்காக அந்த மாதம் இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) நிஹால் தல்துவா டெய்லி மிரருக்கு மார்ச் 26 அன்று தெரிவித்தார். உக்ரேனில் மோதல் பகுதிகளுக்கு 55 இலங்கையர்களைக் கொண்ட குழுவை கடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

உக்ரேனுக்கு கடத்தப்பட்டவர்களில் இருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் அயல் நாடுகளுக்கு தப்பிச் சென்றதாகவும், 17 பேர் இலங்கைக்கு திரும்பியதாகவும் தல்துவ கூறினார். மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஒவ்வொரு நபருக்கும் ரூபா 250,000 முதல் 500,000 வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

அல்-ஜசீராவின் கூற்றுப்படி, கடந்த சில மாதங்களில் உக்ரேன் போரில் குறைந்தது ஐந்து இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இருந்து வெளியேறிய அன்ட்ரூ ரனீஷ் ஹேவகே உட்பட மூவர் பக்முத்தில் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டனர். மற்ற இருவரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. கடந்த வாரம், 27 வயதான நிபுன சில்வா உக்ரேனிய படைகளின் ட்ரோன் தாக்குதலில் இறந்தார், மேலும் காயமடைந்த சில்வாவை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது மற்றொரு இலங்கையரான சேனக பண்டார காயமடைந்தார்.

கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களுக்கு காப்பீடு இல்லை மற்றும் எந்த இழப்பீடும் கிடையாது. இலங்கை அரசாங்கமும் அதன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும், அவர்கள் தொடர்பான எந்தவொரு பொறுப்பிலிருந்தும் அல்லது அவர்களது குடும்பங்களின் தலைவிதி பற்றிய பொறுப்பில் இருந்து கைகழுவுவதன் மூலம், அவர்களது நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என பிரகடனம் செய்கின்றன.

வேலையின்மை, அவநம்பிக்கை மற்றும் வறுமையிலுள்ள இந்த முன்னாள் சிப்பாய்கள் மற்றும் பொதுமக்களை உக்ரேனில் போர் வலயங்களில் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நிர்ப்பந்திக்கப்படும் அதேவேளை, இதே சமூக முன்னெடுப்புகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள் பத்தாயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்களை இராணுவத்தில் சேரத் தள்ளியது.

இந்த இளைஞர்கள் “தாய்நாட்டைக் காப்பாற்ற” இணைந்துகொண்ட “ஹீரோக்கள்” என்ற கொழும்பின் கூற்றுக்களுக்கு மாறாக, பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியாக கட்டாய இராணுவ சேவையில் சேர்ந்தவர்களாவர். அவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்ட தங்கள் குடும்பங்களுக்கு உதவ கையெழுத்திட்டனர் மற்றும் கொல்லப்பட்டால் அல்லது காயமடைந்தால் அவர்களுக்கு நிதி இழப்பீடு வழங்கப்படும் என்று நம்பினர். புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த கால கொடூரமான இனவாத யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர் அல்லது அங்கவீனர்களாக்கப்பட்டனர். மோதலின் போது 30,000 க்கும் அதிகமானோர் இராணுவத்தைவிட்டு ஓடினர். அவர்களில் சிலர் குற்றவியல் பாதாள உலகில் சேர்ந்தனர் அல்லது பணத்திற்காக வாடகைக் கொலையாளிகளாக மாறினர்.

உக்ரேன் போருக்கு கூலிப்படையினராக, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளில் இருந்தும் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள். உக்ரேனில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நைஜீரியா, அல்ஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 103 கூலிப்படையினரை ரஷ்ய இராணுவம் கொன்றதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு நியூஸ் 24 செய்தி வெளியிட்டது.

கடந்த மாத தொடக்கத்தில், இந்திய மற்றும் நேபாள நாட்டினர் சட்டவிரோத கும்பல்களால் ரஷ்ய இராணுவத்திற்கு கடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்குமாறு புட்டின் அரசுக்கு புது தில்லி கோரிக்கை விடுத்துள்ளது.

இன்னும் பரந்தளவில், சட்டவிரோத வேலை வழங்கும் நிறுவனங்களால் மத்திய கிழக்கிற்கு கடத்தப்பட்ட வேலைக்கான விசா இல்லாத இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமை பேரழிவுகரமானதாகும்.

கடந்த மாதம் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகை, தற்போது 20,000 இலங்கையர்கள் விசா இல்லாமல் குவைத்தில் பணிபுரிவதாகவும், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் சுற்றுலா விசாவில் வந்து டுபாயில் சிக்கித் தவிப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளது. பல இலங்கை தொழிலாளர்களால் வேலைக்கான விசா பெறுவதற்கும் சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி புலம்பெயர்வதற்கும் தேவையான கணிசமான தொகையை கொடுக்க முடியாதுள்ளனர்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், அனைத்து வகையான சுற்றுலா விசாக்களையும் மாற்றுவதை அரசாங்கம் நிறுத்தியதை அடுத்து, ஓமானில் பல நூறு இலங்கைத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். வறுமையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏனைய புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்கள் இப்போது ஓமானில் வீதிகளில் வசித்து வருகின்றனர்.

சிக்கித் தவிக்கும் இந்த தொழிலாளர்களை இலங்கை அரசாங்கம் முற்றிலுமாக கைவிட்டுள்ள அதே வேளை, அவர்கள் அனுப்பும் பணம் மிகவும் அவசியமான வெளிநாட்டு நாணயத்தை வழங்குவதால் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுமாறு இலங்கை தொழிலாளர்களுக்கு அது தொடர்ந்தும் அழைப்பு விடுக்கின்றது. இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு குறிப்பிட்டது போல், “அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான ஆதாரமாக இருக்கும் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள், கடந்த இரண்டு தசாப்தங்களாக, சராசரியாக ஆண்டு வர்த்தக பற்றாக்குறையில் சுமார் 80 சதவீதத்தை ஈடுகட்டியுள்ளன.”

கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, 2022 ஜனவரி முதல் 2023 செப்டம்பர் வரை 535,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளைப் பெற்றுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சுபாங்கி ஹேரத் டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையர்கள் “ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கை மற்றும் இந்த நாட்டில் அரசியல் எதிர்காலத்தை காணத் தவறி” புலம்பெயர்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

மக்கள் படிக்கிறார்கள் மற்றும் கடினமாக உழைக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், “நாட்டில் ஒருவித கண்ணியமான வேலையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வேலையின்மை மட்டம் அதிகரிப்பதைக் காணும்போது, நல்ல ஊதியம் பெறும் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு வேலையிலும் அவர்கள் உள்வாங்கப்பட முடியாது என்று அவர்கள் உணரும்போது, அவர்கள் எங்காவது சென்று ஒரு அற்ப சம்பளத்திற்கு கூட வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதை நீங்கள் இலங்கை ரூபாய்களாக மாற்றும்போது அது அதிகமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் வெளியேறும் அதேவேளை, 2022 ஆம் ஆண்டில் தினமும் குறைந்தது ஒரு இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளியாவது இறந்துள்ளதாக கடந்த மாதம் சண்டே டைம்ஸ் வெளிப்படுத்தியது. “389 இயற்கை மரணங்கள், தற்கொலை மூலம் 30 இறப்புகள், மூன்று கொலைகள், சாலை போக்குவரத்து விபத்துகளில் 36 இறப்புகள், 29 பிற விபத்துகள் மற்றும் 20 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தரவுகள், “இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான துயரங்களை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை. பல இறப்புகள் பதிவாகாமல் போய்விடுகின்றன. இறந்த சிலர் ஆவணமற்ற தொழிலாளர்கள், அவர்களின் இறுதி சடங்குகள் பெரும்பாலும் நிதி திரட்டும் நெருங்கிய நண்பர்களால் அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர் குழுக்களால் செய்யப்படுகின்றன. இல்லையெனில், எச்சங்கள் அந்தந்த அரசாங்கங்களால் கையாளப்படுகின்றன.

தெற்காசியா, ஆபிரிக்கா மற்றும் பிற வளர்ச்சியடையாத பிராந்தியங்களில் உள்ள அதன் சகாக்களைப் போலவே, விக்கிரமசிங்க அரசாங்கமும் அதன் முன்னோடிகளும் தங்கள் புலம்பெயர்ந்த குடிமக்களின் வெளிநாட்டு நாணயங்களை பெறுவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர். மேலும் இவர்கள், இந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை மற்றும் வாழ்வா சாவா பிரச்சினைகள் குறித்து முற்றிலும் அலட்சியமாக உள்ளனர்.

Loading