இஸ்ரேலுடனான துருக்கியின் வர்த்தகத்தை நிறுத்தக் கோரிய டசின் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், இஸ்தான்புல்லில் வன்முறையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த சனிக்கிழமையன்று, மத்திய இஸ்தான்புல்லில் உள்ள இஸ்திக்லால் தெருவில் “பாலஸ்தீனத்திற்காக ஆயிரம் இளைஞர்கள்” என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பின் போது 43 பேரை அடித்து தாக்கியும், பின்னர் கைவிலங்கு போட்டும் போலீசார் கைது செய்தனர். காஸா இனப்படுகொலைக்கு எதிராகவும், துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடரும் வர்த்தகத்துக்கு எதிராகவும் இந்த போராட்ட அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதேபோன்று, துருக்கியின் இன்னொரு நகரான கொன்யாவில் “கொலைகாரன் இஸ்ரேல், AKP அதன் ஒத்துழைப்பாளர்” என்ற முழக்கங்களுடன் ஒரு போராட்ட எதிர்ப்பு அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது.

“பாலஸ்தீனத்திற்காக ஆயிரம் இளைஞர்கள்” குழுவின் உறுப்பினர்கள் இஸ்ரேலின் போர் இயந்திரத்திற்கு உணவளிக்கும் தற்போதைய வர்த்தகத்திற்கு எதிராக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சிக்கான (AKP) தேர்தல் பேரணிகளில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோது, பொலிசாரின் வன்முறையில் கைது செய்யப்பட்டனர்.

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் ஆதரவாளர்கள் இஸ்தான்புல்லில் போராட்டம் நடத்தினர். துருக்கி, Friday, April 5, 2024. [AP Photo/Khalil Hamra]

இந்தக் குழுவினர், X/Twitter இல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தக் கைதுகள் மற்றும் பொலிசாரால் தவறாக நடத்தப்பட்ட காட்சிகளைப் பகிர்ந்து கொண்டதோடு, துருக்கிய பொலிஸ் இஸ்ரேலிய இராணுவத்தினரைப் போல நடந்துகொள்வதாகக் கூறினர். “அடித்து தாக்கப்பட்டு முதுகுக்குப் பின்னால் கைவிலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது நண்பர்கள், வாகனத்தில் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையிலும் மேலும் சித்திரவதைக்கு உள்ளாகினர்! பெருநிறுவனங்கள் உங்களைப் பாதுகாக்காது அல்லது அவர்களுக்கு சேவை செய்யும் அரச வன்முறை எங்களை அச்சுறுத்த முடியாது. #StopTradewith இஸ்ரேல்”என்று அவர்களின் அறிக்கை தெரிவிக்கிறது.

இஸ்ரேலுடனான வர்த்தகத்தை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை, அரசாங்கத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதோடு, புறக்கணிக்கப்பட்டும் உள்ளது. பெரும்பான்மையான மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சியோனிச எதிர்ப்பு உணர்வுகளைக் கொண்டிருக்கின்ற துருக்கியில், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைகளுக்கு மத்தியில் அரசாங்கம், இஸ்ரேலுடன் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடர்வது சீற்றத்தைத் தூண்டியுள்ளது. கடந்த மார்ச் 31 நடந்த தேர்தலில் எர்டோகனின் AKP கட்சி மில்லியன் கணக்கான வாக்குகளை இழந்ததற்கு இந்த எதிர்ப்பு ஒரு காரணியாக இருந்தது.

அக்டோபர் 7 க்குப் பிறகு, எர்டோகன் அரசாங்கத்தின் முதல் எதிர்வினை, எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கான முடிவாகும். இஸ்ரேலிய அரசையும், ஹமாஸையும் சமமாகச் செயல்படுவது போல் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவந்து போர் நிறுத்தத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது. ஈரான் சம்பந்தப்பட்ட ஒரு பிராந்தியப் போர், அதன் சொந்த நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதுதான் போர் விரிவாக்கம் பற்றிய துருக்கியின் கவலையாக இருந்தது.

காஸாவில் போர் என்ற போலிக்காரணத்தின் கீழ், மத்திய கிழக்கில் பெரிய அளவிலான அமெரிக்க இராணுவத்தை கட்டியெழுப்புவது என்பது, மத்திய கிழக்கில் அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போருக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக இருக்கிறது. சர்வதேச சட்டத்தின் கீழ் ஈரானிய பிரதேசமாக கருதப்படுகின்ற சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தை இஸ்ரேல் கடந்த வாரம் தாக்கியபோது, ஈரானுடனான போருக்கான ஆத்திரமூட்டல்கள் அதிகரித்தன.

உலக சோசலிச வலைத் தளம் முன்னர் ஈரானுக்கு எதிரான போர் தயாரிப்புகள் பற்றிய துருக்கியின் கவலைகளை பின்வருமாறு பகுப்பாய்வு செய்தது:

அடானாவில் உள்ள இன்சிர்லிக் விமானத் தளம் மற்றும் மலாத்யாவில் உள்ள குரேசிக் ரேடார் தளம் உட்பட பல அமெரிக்க மற்றும் நேட்டோ தளங்களை துருக்கி கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் போர் ஏற்பட்டால், இந்தத் தளங்கள் போர் மண்டலங்களாக மாறும்.

துருக்கியும் ஈரானும் குர்திஷ் பிரச்சனையை பகிர்ந்து கொள்கின்றன. மத்திய கிழக்கில் ஒரு போரில் வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் வெற்றி பெறுவது குர்திஷ் அரசை உருவாக்க வழிவகுக்கும் என்று துருக்கிய முதலாளித்துவம் அஞ்சுகிறது. சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு எதிரான நேட்டோவின் ஆட்சி மாற்றப் போரின் போது, ​​குர்திஷ் தேசியவாதிகள் வாஷிங்டனின் முக்கிய பினாமி படையாக மாறினர்.

எனினும், இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல்கள் துருக்கியிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடமிருந்து கோபமான பதிலைத் தூண்டியுள்ளது. பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, எர்டோகன் இஸ்ரேலை கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கத் தொடங்கினார், நேட்டோ நட்பு நாடுகளை விமர்சித்தார் மற்றும் ஹமாஸுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.

எனினும், எர்டோகனின் வாய்வீச்சுக்களின் பிரதிபலிப்பு மற்றும் அதனுடன் இணைந்த போலியான புறக்கணிப்பு பிரச்சாரம் என்பன, இஸ்ரேலை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக பொதுமக்களின் கோபத்தை அடக்குவதை நோக்கமாகக் கொண்டது என்பது தெளிவாகிறது. எர்டோகன் இஸ்ரேலைக் கண்டித்தபோதும், 75 ஆண்டுகால சியோனிச திட்டத்தின் விளைபொருளான இஸ்ரேல் அரசுடன் அல்லாமல், நெதன்யாகு அரசாங்கத்துடனான தனது கருத்து வேறுபாட்டை அவர் அறிவித்தார்.

இனப்படுகொலையின் போது, துருக்கி இஸ்ரேலுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருவது குறித்து ஊடகவியலாளர் மெடின் சிஹான் வெளியிட்ட தகவல்கள் அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தை உறுதிப்படுத்தியுள்ளன. சிஹான் கடல் போக்குவரத்து குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மற்றும் இணையதளங்களைப் பயன்படுத்தினார், இவை அனைத்தும் பொதுவில் கிடைக்கின்றன. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஐந்து மாத போரின் போது இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தகம் 2.5 பில்லியன் டாலர்களை எட்டியது. துருக்கிய புள்ளியியல் நிறுவனத்தின் கூற்றுப்படி, பிப்ரவரியில் இஸ்ரேலுக்கான ஏற்றுமதி 27 சதவீதமும், இஸ்ரேலில் இருந்து இறக்குமதி 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.

டெல் அவிவின் போர் இயந்திரத்திற்கு எரிபொருளான எஃகு மற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் துருக்கியில் இருந்து வருவதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன. துருக்கியில் இருந்து இஸ்ரேல் 65 சதவீத எஃகு இறக்குமதி செய்கிறது. முக்கிய அஜர்பைஜான் எண்ணெய் துருக்கிய துறைமுகங்கள் வழியாக இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகிறது. சிமென்ட், இரசாயனங்கள், துப்பாக்கி குண்டுகள், முள்வேலிகள் மற்றும் ஆயுத உதிரிப் பாகங்கள் கூட துருக்கிய துறைமுகங்கள் வழியாக செல்கின்றன.

பல உற்பத்தி பொருட்களை வாங்குபவர்கள் இஸ்ரேலிய இராணுவத்துடன் நேரடியாக வேலை செய்யும் விநியோகஸ்தர்கள் என்று கண்டறியப்பட்டது. கணிசமான எண்ணிக்கையிலான துருக்கிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆயுத தளவாட நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களிடம் உள்ளன. எர்டோகனின் மகனுக்குச் சொந்தமான கப்பல் நிறுவனம் கூட அக்டோபர் 7க்குப் பிறகு இஸ்ரேலில் இருந்து ஏற்றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக அரசுக்குச் சொந்தமான சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு Boron தாதுவை அனுப்புவது தெரியவந்தது.

இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக, எர்டோகன் ஒரு ஏகாதிபத்திய சார்பு மற்றும் சியோனிச சார்பு அரசியல்வாதி என்பதை இவை அனைத்தும் வெளிப்படுத்தின, இதில் AKP 2002க்குப் பிறகு, முதல் முறையாக தேர்தலில் முதலிடத்தைப் பெறத் தவறிவிட்டது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்புக்கு கூடுதலாக, காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை குறித்த அரசாங்கத்தின் பாசாங்குத்தனமான நிலைப்பாடு, உள்ளூர் தேர்தல்களில் அதன் குறிப்பிடத்தக்க தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

காஸா இனப்படுகொலையின் மீதான கோபத்தை சுரண்டிக்கொண்ட ஒரே கட்சி புதிய இஸ்லாமிய நலன்புரி கட்சி (YRP) மட்டுமே ஆகும். தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் இஸ்ரேலுடனான வர்த்தகத்தை குறைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து, YRP தனது வாக்குகளை 2.8 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாக அதிகரித்து மூன்றாவது பெரிய கட்சியாக மாறியது.

தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னர், கட்சித் தலைவர் ஃபாத்திஹ் எர்பகான் இஸ்தான்புல்லில் AKP வேட்பாளரை ஆதரிப்பதற்கான நிபந்தனைகளை அறிவித்தார்: “இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாகவும், இஸ்ரேலுக்கான ஏற்றுமதியை குறைக்கவும், இஸ்ரேலை பாதுகாத்துவரும் மலாத்யாவில் உள்ள [நேட்டோ] Kürecik ரேடார் தளத்தை மூடவும், 20,000ம் துருக்கிய லிராக்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தவும் அரசாங்கம் அறிவித்தால், நாங்கள் இஸ்தான்புல்லில் எங்கள் வேட்பாளரை திரும்பப் பெற இன்று தயாராக இருக்கிறோம்” என்று அறிவித்தார்.

அரசாங்கத்தின் மீதான YRP கட்சியின் விமர்சனம் ஒரு பாசாங்குத்தனமான சூழ்ச்சியாகும். 2023 ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில், எர்டோகன் தலைமையிலான மக்கள் கூட்டணிக்கு YRP ஆதரவளித்தது. மேலும், முன்னாள் பிரதம மந்திரி நெக்மெட்டின் எர்பகானின் பாரம்பரியத்தை YRP தொடர்கிறது. பதவியில் இருந்த காலத்தில் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தியிருந்த எர்பகான், அவருடைய முந்தைய வாக்குறுதிகள் அனைத்தையும் மறுத்தார்.

எர்டோகன் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வர்த்தகம் தொடர்வதற்கான காரணம் என்ன? பல வர்ணனையாளர்கள் துருக்கிய பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது மற்றும் சரிவின் விளிம்பில் உள்ளது, உண்மையான பணவீக்கம் 125 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், உண்மையான காரணம் ஏகாதிபத்தியத்துடன் துருக்கிய ஆளும் வர்க்கத்தின் நெருங்கிய உறவுகளில் உள்ளது.

2002ல் இருந்து எர்டோகன் பெருமளவில் கடைப்பிடித்து வரும் பாரம்பரியக் கொள்கையானது, மக்களின் பாலஸ்தீனிய சார்பு உணர்வுகளுக்கும், ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு மற்றும் சியோனிச சார்பு தன்மைக்கும் இடையே சூழ்ச்சிகளை செய்து வருவதாக இருந்தது. 1948 இல், இஸ்ரேலின் உருவாக்கத்தை அங்கீகரித்த முதல் முஸ்லீம் பெரும்பான்மை நாடாக இருந்த துருக்கி, அடுத்த தசாப்தங்களில் அதன் ஆளும் உயரடுக்குகள், இஸ்ரேலின் குற்றங்களை வாய்வீச்சுடன் கண்டித்தது. ஆனால், அடிப்படையில் மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அழிவுகரமான கொள்கைகளுக்கு ஏற்ப அது செயல்பட்டு வந்தது.

இதனால்தான் எர்டோகன் மற்றும் எதிர்க்கட்சியான கெமாலிஸ்ட் குடியரசு மக்கள் கட்சி (CHP) இருவரும் ஸ்வீடனின் நேட்டோ அங்கத்துவத்தை அங்கீகரித்தனர். அதே நேரத்தில், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளின் ஆதரவுடன் தொடர்கிறது.

துருக்கிய ஆளும் வர்க்கமும், அதன் அரசியல் ஸ்தாபனமும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையிலும், ஈரானுக்கு எதிரான ஒரு ஏகாதிபத்திய போரிலும் தங்கள் உடந்தையை வெளிப்படுத்தியுள்ளன.

“பாலஸ்தீனத்திற்காக ஆயிரம் இளைஞர்கள்” என்ற குழுவிற்கு எதிரான வன்முறை மற்றும் அரச பயங்கரவாதம் என்பன, இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு முறையீடு செய்வதன் மூலம் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதைக் காட்டுகிறது. காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை, அதன் உள்ளூர் தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் வைக்கும் ஒரே இடதுசாரி அரசியல் போக்கான சோசலிச சமத்துவக் குழு, ஒரு அறிக்கையில் கூறியது போல், இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான போராட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, அதன் இலக்கு முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருக்க வேண்டும்.

Loading