முன்னோக்கு

"எதிர்காலத்தின் இராணுவம்": ஜேர்மனி தனது இராணுவத்தை ஒட்டுமொத்தப் போருக்காக மறுகட்டமைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த ஜனவரி மாத இறுதியில், ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ் (சமூக ஜனநாயகவாதி, SPD) பல நேர்காணல்களில், ஜேர்மனி அணுவாயுத திறன்கொண்ட ரஷ்யாவுடன் நேரடி போருக்கு தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார். “அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்கள்” நம்மை “ஆயுதபாணியாக்குவதற்கும்” ஜேர்மனியை மீண்டும் “போருக்குத் தகுதியடையச்” செய்வதற்கும் தீவிரமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய காலகட்டமாக இதனை அவர் குறிப்பிட்டார்.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் லிதுவேனியாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கிரிஃபின் புயல் 2023 பயிற்சியில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகிறார். [AP Photo/Mindaugas Kulbis]

கடந்த வியாழனன்று பிஸ்டோரியஸால் அறிவிக்கப்பட்ட ஆயுதப்படைகளின் புதிய கட்டமைப்பின் மூலம், இந்த பைத்தியக்காரத்தனமான போர்த் திட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த திட்டங்களை முன்வைக்கும் போது, இதன் ஆபத்து பற்றிய எந்த ரகசியத்தையும் பிஸ்டோரியஸ் மறைக்கவில்லை. ஜேர்மன் இராணுவம், முதன்முதலாக வெளிநாட்டில் உள்ள உலகளாவிய பணிகளுக்கு ஏற்ற ஒரு அமைப்பில் இருந்து, ஒட்டமொத்த போரை நடத்தும் திறன் கொண்ட இராணுவப் படையாக மாற்றப்படுகிறது. பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுக்கு பிஸ்டோரியஸ் எழுதிய கடிதம் பின்வருமாறு:

போர்த்திறன் என்ற மிக முக்கியமான இலக்கிலிருந்து பெறக்கூடிய வழிகாட்டும் கொள்கைகளின்படி, ஒட்டுமொத்த இராணுவமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். அவை, வளர்ச்சித் திறன், அளவிடுதல், மாறும் வலிமை, டிஜிட்டல் மயமாக்கல் (எதிர்கால தொழில்நுட்பம், செயல்பாட்டு கட்டளை) தகவல் மேன்மை, போர் வழங்கல் ஆகியவைகளாகும்.

“எதிர்காலத்தின் இராணுவம்” என்ற தலைப்பில் வெளியான 34-பக்க ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ள மைய நடவடிக்கைகள், “தேசியளவில் செயல்படுவதற்கான திட்டமிடல் மற்றும் பணிகளின் கட்டளைக்கான” தரம்வாய்ந்த மத்திய கட்டளை கட்டமைப்பை உருவாக்குதல் என்பன அடங்கும். இந்த நோக்கத்திற்காக, தற்போதுள்ள பிராந்திய கட்டளை மையம் (உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு) மற்றும் செயல்பாட்டுக் கட்டளை மையம் (வெளிநாட்டில் நடவடிக்கைகளுக்கு) ஆகியவை இராணுவத்தின் கூட்டு செயல்பாட்டுக் கட்டளையகமாக இணைக்கப்படும்.

இந்த நடவடிக்கையின் பொருளானது, இரண்டு உலகப் போர்களில் ஜேர்மன் இராணுவத் தளபதிகள் ஆற்றிய குற்றப் பாத்திரத்தைத் தொடர்ந்து, 1945 இன் போட்ஸ்டாம் உடன்படிக்கைகளால் தடைசெய்யப்பட்ட இராணுவ அதிகாரிகளின் குழுவினரை மீண்டும் கட்டமைத்தல் என்பதாகும். இப்போது, அது மறைமுகமாக மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேற்கு ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய அரசியலமைப்பில் பொதிக்கப்பட்டிருந்த இராணுவத்தின் மீதான சிவிலியன் கட்டுப்பாடு அகற்றப்பட்டு, பழைய போர் மற்றும் பெரும் வல்லரசு அபிலாஷைகளுக்குத் ஜேர்மன் ஏகாதிபத்தியம் திரும்புகிறது.

“தற்போதைய நிலையில் ஒப்பிடும்போது, ​​ஆயுதப் படைகளின் புதிய இலக்கு கட்டமைப்பு கணிசமாக அளவில் சிக்கல் குறைந்தது மற்றும் அவசர காலங்களில் செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் கட்டளை ஆகியவற்றில் தெளிவாக கவனம் செலுத்துகிறது” என்று ஆவணம் கூறுகிறது. “ஒரு போரை நடத்துவதற்கும், துருப்புக்களை தொடர்ந்து வலுவூட்டுவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் திறன் கொண்ட ஒரு கட்டளை மையத்தை நிறுவுவதே” இதன் குறிக்கோள் ஆகும்.

மேலும், “எதிர்கால இராணுவத்தின்” போர்த் திறனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக”, ஆயுதப்படைகளின் கிளைகளின் பங்கை அதிகரிக்க வேண்டும். இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் பாரம்பரிய இராணுவப் படைகளுக்கு கூடுதலாக, தற்போதுள்ள சைபர்/தகவல் விண்வெளி (CIR) பகுதி நான்காவது ஆயுதப் படையாக நிறுவப்படும். CIR ஆனது, ஆயுதப் படைகளின் டிஜிட்டல் மயமாக்கலில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்ல, மாறாக “பாதுகாப்பற்ற செயல்பாட்டாளர்களின் கலப்பின தந்திரங்களை அடையாளம் காணவும் ... முடிந்தவரை சீக்கிரம் அவர்களுக்கு எதிர்வினையாற்றக்” கூடியதுமாகும்.

இதனை வேறுவார்த்தைகளில் கூறினால், ட்ரோன் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில் முன்னணியில் இருக்க இராணுவம் தயாராகி வருகிறது. இத்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பாரிய படுகொலைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையில் வெளிப்படையாகத் தெரிகிறது. AI மற்றும் CIR மீதான முக்கியத்துவம், போருக்கான வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்குவது மற்றும் ரஷ்யாவின் “இரு வழிப் போர்முறைக்கு” எதிரான போர் என்ற போர்வையில், ஜனநாயக உரிமைகள் மற்றும் இணையத்தின் மீதான கட்டுப்பாட்டின் மீதான தாக்குதல்களை பெருமளவில் விரிவுபடுத்துவது ஆகும்.

கடந்த காலத்தைப் போலவே, வெளிநாட்டில் மேற்கொள்ளப்படும் போர்க் கொள்கைக்கு, உள்நாட்டில் மொத்த இராணுவ ஆட்சியை நிறுவ வேண்டும். இது முன்னர் பல்வேறு கூட்டாட்சி மாநில கட்டளை மையங்களால் நிர்வகிக்கப்பட்ட பிராந்திய ரீதியில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகள், “’போரிடுவதற்கு ஒழுங்கமைத்தல்’ என்ற கோட்பாட்டின்படி முறையாக இராணுவத்திற்கு மாற்றப்படுகின்றன”. நிறுவன சிவிலியன் பகுதிகளும் இந்த அடிப்படைக் கொள்கையை பின்பற்றி நேரடியாக சீரமைக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இருப்புக்களின் விரிவான அணிதிரட்டலுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், கட்டாய இராணுவ சேவையை (கட்டாயப்படுத்துதல்) திட்டமிட்டு மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும் பொருந்தும்.

நடைமுறையில் இதன் பொருள் என்ன என்பதை இன்று உக்ரேனில் காணலாம். நேட்டோவின் வேண்டுகோளின்படி, செலன்ஸ்கியின் ஆட்சி ஏற்கனவே போர் முன் அரங்கில் நூறாயிரக்கணக்கான மக்களை தியாகம் செய்துள்ளது மற்றும் தற்போது அரை மில்லியனுக்கும் கூடுதலான படையினர்களை அணிதிரட்ட ஒரு சட்டத்தை தயாரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, முன்பதிவு செய்பவர்களை அழைப்பதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பு 27லிருந்து 25 ஆக குறைக்கப்பட்டது. அதே சமயம், ஆட்களை வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்துவதற்கு கிரிமினல் முறைகள் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன.

நேட்டோ தனது 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய அதே நாளில் பிஸ்டோரியஸ் இராணுவக் கட்டமைப்பு சீர்திருத்தத்தை அறிவித்தார். மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போரின் பாரிய விரிவாக்கத்திற்கு பிரஸ்ஸல்ஸில் நடந்த கூட்டத்தைப் பயன்படுத்தினார். ஜேர்மன் இராணுவம் தற்போது லிதுவேனியாவில் 5,000 போர் துருப்புக்களை நிரந்தரமாக நிறுத்துவதற்கு தயாராகி வருகிறது.

“எதிர்காலத்தின் இராணுவத்தின்” ஆவணமும் ரஷ்யாவை முக்கிய எதிரியாக அடையாளப்படுத்துகிறது. இராணுவத்தை பொறுத்தவரை, “பாதுகாப்புக் கொள்கையில் ஒரு திருப்புமுனை” என்பது “அதன் இன்றைய நடவடிக்கையின் முக்கிய நோக்கம் மீண்டும் ஒருமுறை அரசின் தாக்குதல்களைத் தடுக்கும் மற்றும் தற்காத்துக் கொள்ளும் திறன்” என்பதனைக் குறிக்கிறது. இன்று, “சர்வதேச சட்ட ஒழுங்கை நசுக்கும் ரஷ்யா போன்ற அரசுகளின் தாக்குதல்களை உறுதியுடன் எதிர்ப்பதை” இது குறிக்கிறது.

ரஷ்யாவின் “தாக்குதலுக்கு” எதிரான “பாதுகாப்பு” என்ற பிரச்சாரம் யதார்த்தத்தை தலைகீழாக மாற்றுகிறது மற்றும் முந்தைய ஜேர்மன் போருடன் நேரடியாக பிணைக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களில் ஜேர்மன் ஆக்கிரமிப்புப் போர்கள் (30 மில்லியன் சோவியத் குடிமக்களின் உயிர்களை அழித்த, சோவியத் யூனியனுக்கு எதிரான அழிப்புப் போர் உட்பட) ஜேர்மன் சாம்ராஜ்யத்திலும், ஹிட்லரின் கீழும் ஆளும் வர்க்கத்தால் அதே வாதங்களுடன் நியாயப்படுத்தப்பட்டன.

இன்று, ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் ஆக்கிரமிப்பாளராக ஆகியுள்ளது. ரஷ்யாவின் முறையான இராணுவச் சுற்றி வளைப்பு மற்றும் பெப்ரவரி 2014 இல் கியேவில் ரஷ்ய-எதிர்ப்பு சதி மூலம், ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் பிற முக்கிய நேட்டோ சக்திகள் முதலில் புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான தலையீட்டைத் தூண்டின. போர் முன்னரங்கில் உக்ரேனிய துருப்புக்களின் உடனடி வீழ்ச்சியை தடுக்கவும், அவர்களின் போர் நோக்கங்களை நிறைவேற்றவும் அவர்கள் இப்போது மோதலை அதிகரிக்கிறார்கள். அத்தோடு, நாட்டின் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக உக்ரேனில் மாஸ்கோவை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்கும், வளங்கள் நிறைந்த மற்றும் மூலோபாய ரீதியாக, பூகோள முக்கியத்துவம் வாய்ந்த மத்திய யூரேசிய நிலப்பரப்பை ஒட்டுமொத்தமாக அடிபணியச் செய்வதற்கும் மோதலை அதிகரிக்கிறார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி, (Sozialistische Gleichheitspartei SGP) 2014 இல், முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் இராணுவவாதத்தை நோக்கி திரும்புவதாக பேர்லினில் இருந்த அரசாங்கம் அறிவித்த பின்னர், 2014 இல், இதன் பின்னணியில் உள்ள புறநிலை உந்து சக்திகளை ஆய்வு செய்து பின்வருமாறு எச்சரித்தது:

போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரம் (ஜேர்மனி, நாஜிகளின் கொடூரமான குற்றங்களில் இருந்து கற்றுக் கொண்டது, “மேற்கு நாடுகளுக்கு வந்துவிட்டது”, அமைதியான வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டது மற்றும் ஒரு நிலையான ஜனநாயகமாக வளர்ந்தது) பொய் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மன் ஏகாதிபத்தியம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் அனைத்து ஆக்கிரமிப்புடன் வரலாற்று ரீதியாக வெளிப்பட்டதன் மூலம் மீண்டும் அதன் உண்மையான நிறங்களைக் காட்டுகிறது.

இதுவே, இப்போது அதன் அனைத்து தொலைநோக்கு விளைவுகளுடன் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கில், பேர்லின் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கிறது. இது முழு மத்திய கிழக்கையும் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணியச் செய்வதுடன், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான போர்த் தாக்குதலின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த பைத்தியக்காரத்தனத்தின் மீது சோசலிச சமத்துவக் கட்சி போரை அறிவிக்கிறது. உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய பரிணாமத்தை நிறுத்துவதற்கான ஒரே வழி, போர் மற்றும் அதன் மூல காரணமான முதலாளித்துவ இலாப அமைப்புக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நனவான சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதுதாகும். இதனால் தான், அடுத்த ஐரோப்பிய தேர்தலில் நமது சகோதர கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாம் போராடுகிறோம்.

Loading